புதன், 9 செப்டம்பர், 2015

மனசு பேசுகிறது: சிவாஜிக்கு மணி மண்டபம் தேவையா?


க்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா என்பதுதான் இன்னைக்குமுக்கியமான விவாதமா முகநூல், டுவிட்டர் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் இருக்கு. எங்க அறையில் கூட இது குறித்து பயங்கர விவாதம் நடந்தது. ஆம்... மணிமண்டபம் தேவையா என்று நாமும் விவாதிப்போமே... 

நம் நாட்டில் இதுவரை கட்டப்பட்ட மணிமண்டபங்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கு என்பதை நாம் அறிவோம். எங்கள் காரைக்குடியில் கூட கண்ணதாசன் மணிமண்டபம், கம்பன் மணிமண்டபம் எல்லாம் இருக்கு. விழாக்களின் போது மட்டுமே அவை ஜொலிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதே போல் தலைவர்களின் சிலைகளை மூலைக்கு மூலை வைத்திருக்கிறோம். அவர்களின் பிறந்தநாள்... இறந்தநாளில் மட்டுமே மாலைகளில் சிரிப்பார்கள். மற்ற நாட்களில் எல்லாம் குருவிகளின் எச்சத்தை சுமந்து நிற்பார்கள். இதில் என்ன கொடுமை என்றால் சிலைகளை வைத்து நாம் சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரமாக வாழ்ந்த பல தலைவர்களை இப்போது சிலைகளாய் கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறோம். இதில் சிவாஜியை கடல்கரையில் இருந்து தூக்குங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்... அரசு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று சொல்லியிருப்பது சரியா தவறா என்பதெல்லாம் இங்கு விவாதம் இல்லை மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது சரியா என்பதே கேள்வி. அதிமுக அரசு சென்ற முறையே இதற்காக இடம் ஒதுக்கியது என்றும் அதன் பின்னான திமுக அரசு அதை வாடகைக்கு விட்டுவிட்டது என்றும் படித்த ஞாபகம். இப்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் மறக்கும் முகமாக முதல்வர் அறிவிக்கும் திட்டங்களில் இதையும் மீண்டும் அறிவித்திருக்கிறார்.

சிவாஜி...

மிகச் சிறந்த நடிகர்... சிம்மக் குரலோன்.... நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த கலையார்வம் மிகுந்த அர்ப்பணிப்புக் கலைஞன்... வரலாற்று நாயகர்களை எல்லாம் திரையில் காட்டியவர்... கட்டபொம்மன், இராஜராஜ சோழன், வ.உ.சிதம்பரநாதன், வீரசிவாஜி என எல்லாரையும் திரையில் நம் கண் முன்னே நிறுத்தியவர். இன்றும் வரலாற்று நாயகர்கள் என்றாலே நம் மனக்கண்ணில் வருவது சிவாஜிதான்.

ஒருவரின் நடிப்புத் திறமைக்காக மணிமண்டபம் கட்ட வேண்டுமா? ஆம்... வேண்டும் என்றுதானே பிரபு கேட்டார்.  சினிமாவில் சிறப்பாய் நடித்த ஒரு கலைஞன்... தான் சம்பாதித்து சேர்த்த சொத்தில் ஏழைகளுக்கு உதவியிருக்கலாம் அது நமக்கு தெரிய வேண்டியதில்லை... அவரும் சொல்ல வேண்டியதில்லை... ஏன்னா ஒரு கை செய்வது இன்னொரு கைக்கு தெரியாமல் இருப்பதுதான் உதவி... தம்பட்டம் அடித்துக் கொள்வது உதவியல்ல. எத்தனையோ பேர் வெளியில் தெரியாமல் உதவிக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் சினிமா நாயகர்கள் எல்லாருமே பெரும்பாலும் நான் இதைச் செய்தேன்... அதைச் செய்தேன்னு விளம்பரம் செய்யத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பாடாவதி ரசிகன் குடும்பத்தை விட்டுட்டு இவனுக்காக செத்தாக்கூட அவனோட வீட்டுக்குப் போயி பணம் கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரம் தேடிக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த உதவி விஷயத்தில் விஜயகாந்த் பெரும்பாலானவைகளை வெளியில் தெரியாமல் செய்து கொண்டிருந்தார். ஆனால் இப்போது ஒரு சின்ன விஷயம் செய்தாலும் அவரது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் நான் செய்தேன்... நான் செய்தேன்... என முரசு அடித்து அறிவிக்கிறார்கள். அஜீத் செய்வதாகச் சொல்கிறார்கள்... எல்லாவற்றிற்கும் மேலாக ராகவா லாரன்ஸ் சமீபத்தில் தனது படத்துக்காக கிடைத்த பணத்தை மக்களுக்காக மேடையில் வைத்தே கொடுத்து அதற்காக இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து கலாமின் காலடியில் என்ற அமைப்பின் மூலமாக சேவை செய்யப் போவதாகத் தெரிவித்தார். இதில் அவர் விளம்பரம் தேடிக்கொண்டதாகத் தெரியவில்லை. விஷயம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது.

பாருங்க... மணிமண்டபத்தைப் பற்றி பேச வந்துட்டு பேச்சு அங்கிட்டும் இங்கிட்டுமாப் போயிருது... சிவாஜி தனது குடும்பத்துக்கு தேவையான சொத்தைத் சேர்த்து வைத்துவிட்டுப் பொயிட்டார். எந்த ஏழைக்காவது உதவணுமின்னு டிரஸ்ட் ஆரம்பிச்சி வச்சிருக்காரா...? எனக்குத் தெரிந்தவரை இல்லை என்றுதான் நினைக்கிறேன்... அப்படியிருந்தால் சொல்லுங்கள்.  அரசியலில் வந்து ஆட்சியைப் பிடிக்கும் ஆசையும் அவருக்கு வர தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்தார். கஞ்சிக்கு இல்லாதவனுக்கு உதவவா அரசியல்ல இறங்கினார்... இப்படி மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரு மனிதருக்கு மக்களின் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மக்களுக்காகவே உழைத்து மறைந்த பலர் இருக்கும் போது ஒரு கலைஞனுக்கு ஏன் மணி மண்டபம்? மக்களெல்லாம் கேப்பை சாப்பிடுகிறார்கள் என்று தன் தாயையும் கேப்பைதான் சாப்பிட வேண்டும் என்று சொன்ன காமராஜர், மக்களுக்ககாகவே வாழ்ந்த ஜீவா, கக்கன்... இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர்தான் என்றாலும் தனது குடும்பத்தினருக்கு சலுகை அளிக்காத, அனுபவிக்க விடாத அப்துல் கலாம் இப்படி எத்தனையோ மனிதர்கள் மக்கள்... மக்கள் என்று இருந்தார்கள்... ஆனால் சிவாஜி அப்படி இருந்தாரா... அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்ன நம்ம முதல்வர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்று வழக்கு நடந்து தீர்ப்பும் வந்து மீண்டும் வழக்கு தொடரப்பட்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு செய்தவர் ஏன் தன் சொந்தப் பணத்திலேயே கட்டக்கூடாது?  கல்யாண் ஜீவல்லரிக்கு மட்டுமே வாங்க... தங்கம் வாங்கன்னு மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் நடிக்கும் பிரபுவிடம் அரசு கொடுத்த இடத்தில் மணிமண்டபம் கட்ட பணம் இல்லையா என்ன? இந்த வேஷ்டி சட்டையில் எங்க சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு பேசும் விக்ரம் பிரபு கூட இன்னைக்கி சினிமாவுல சம்பாதிக்கத்தானே செய்கிறார். ஏன் பிரபுவின் அண்ணன் ராம்குமார் சிவாஜி பிலிம்ஸ் மூலமாக படங்களை தயாரித்துக் கொண்டுதானே இருக்கிறார்.  கோடிகளை வைத்திருக்கும் குடும்பம் இருக்க மக்கள் வரிப் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

மணிமண்டபம் கட்டப்படும் என்று சொன்னதும் கமல், ரஜினி, பிரபு என ஆளாளுக்கு அம்மாவுக்கு நன்றி சொல்றாங்க. தமிழக திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தலைவராக போட்டிபோடும் நடிகர்கள் மணிமண்டபம் கட்ட ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டாலுமே போதுமே மிக அழகான, நல்லதொரு மணிமண்டபத்தைக் கட்டிவிடலாமே? சிவாஜியைப் பார்த்துத்தான் நடிக்கக் கற்றுக் கொண்டேன் என்றும்... தமிழ் சினிமாவின் பிதாமகன் அவர் என்றும்...  சொல்லும் நடிகர்கள் எவருமே இதற்கு பணம் நாங்கள் போடுகிறோம் என்று சொல்லவில்லையே ஏன்? வரியே கட்டாமல் ஏய்க்கும் இவர்களுக்கு அன்றாடம் சம்பாரித்து அதற்கும் வரிக்கட்டும் குப்பனும் சுப்பனும் கொடுக்கும் பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

நாட்டுக்காகவோ நாட்டு மக்களுக்காகவோ உழைத்தவர்களுக்கு வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டப்படுமேயானால் அதை கரம் குப்பி வரவேற்கலாம்... ஆனால் சினிமா என்னும் கவர்ச்சி ஊடகத்தில் ஆடிப்பாடி சம்பாதித்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்ட மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுமேயானால் அதை எப்படி வரவேற்பது?  இதை அரசு சொல்லியிருப்பதுதான் வேடிக்கை... என்ன செய்வது கூத்தாடிகள்தானே நம்மை ஆள்கிறார்கள். நடிகர்களையும் ஒரு குடுபத்தையும் குளிர்விக்க செய்யும் இந்தச் செயலால் யாருக்கு லாபம்? நாட்டில் ஆயிரத்தெட்டு தேவைகள் அடிப்படை மக்களுக்கு இருக்க ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு மணிமண்டபம் கட்டி என்னவாகப்போகிறது? 

சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி என்று செய்தி போடுகிறார்கள்... உண்மையில் எத்தனை பேர் மகிழ்ந்திருப்பார்கள்... குடும்பத்தை விட்டு கூத்தாடிகளை தலையில் தூக்கி வைத்து ஆடும் அந்த ரசிகர்கள் மட்டுந்தான் நம்ம வரிப்பணத்தில் கட்டுறாங்களே என்று சிந்திக்காமல் வெடிவெடித்து மகிழ்ந்திருப்பார்கள். சரி... நாளை மணிமண்டபம் கட்டியதும் எல்லாரையும் உள்ளே விடுவானுங்களா என்ன..? தலைவருக்கு மணிமண்டபம் என்று குதிக்கும் இவர்கள் டாஸ்மார்க் சரக்கை உள்ளே இறக்கிக் கொண்டு அழுக்கடைந்த உடையோடு போனால் காவலாளி அடித்து விரட்டுவான். இவன் பணத்தில் கட்டிவிட்டு இவனையே உள்ளே விடமாட்டானுங்க... அதுதானே நடக்கும்... அப்புறம் இவனோட வரிப்பணத்தில் மணிமண்டபம் எதற்கு?

சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்கள் செய்கிறார்கள் என்றாலும் அவர்களின் பார்வையும் சரியாகத்தான் தெரிகிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் மணிமண்டபமும் சிலைகளும் மக்கள் வரிப்பணத்தில் செய்வதால் என்ன லாபம்? அடிப்படை வசதிகளற்ற எண்ணற்ற குடும்பங்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு செலவு செய்து அவர்களை உயர்த்த முயற்சித்தால் அதை பாராட்டலாம்... அதைவிடுத்து மணிமண்டபம் கட்டுவது எதற்கு?

கடைசியாக சொல்லிக்கிறேன்... நான் சிவாஜி ரசிகனுமில்லை... அவருக்கு எதிரியும் இல்லை... எனது இந்தக் கட்டுரை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமலும் இருக்கலாம். இது என் மனதில்பட்ட கருத்து... நல்ல கலைஞன்... தான் ஏற்ற கதாபாத்திரங்களை அப்படியே நம் கண்முன் நிறுத்தியவர்... தமிழ் சினிமா என்றால் தவிர்க்க முடியாத கலைஞன்... என எல்லாவற்றிலும் அவர் மீது மரியாதை இருக்கு... ஆனால் மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் கட்டும் அளவுக்கு என்ன மக்கள் தொண்டாற்றினார் என்று நினைக்கும் போது மணிமண்டபம் தேவையா என்றே தோன்றுகிறது... 

இது சிவாஜிக்கு எதிரான பதிவு அல்ல.... என்னோட வரிப்பணமும் அந்த மணிமண்டபத்துக்கு போகுமே அப்ப சிவாஜி நமக்கு என்ன செய்தார்ன்னு தரையில படுத்துக்கிட்டு மோட்டுவலையைப் பாத்து யோசிக்கிற ஒவ்வொரு தமிழனோட மனசாட்சிப் பகிர்வுதான் இது... யார் திட்டினாலும் ஏற்றுக் கொள்ளப்படும்... தயக்கம் வேண்டாம்... தயங்காமல் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.

என்னோட கேள்வி மக்கள் வரிப்பணத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் தேவையா?.என்பதுதான். மணிமண்டபம் தேவை என்றால் கோடிகளைக் குவித்து வைத்திருக்கும் முதல்வரும், கோடிகளில் புரளும் நடிகர்களும், வளமாய் வாழும் பிரபு குடும்பமும் சேர்ந்தே செய்யட்டும்... மக்கள் வரிப்பணத்தில் தேவை இல்லை என்பதுதான் என்னோட எண்ணம்.

-'பரிவை' சே.குமார்.

33 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லி இருக்கிறீர்கள். சிவாஜி சிலை, மணிமண்டபம் என்பதெல்லாம் அரசியல். இங்கு திருச்சியில் கூட சிவாஜியின் முழு உருவச்சிலை ஒன்று சாக்குகளால் சுற்றப்பட்டு திறக்கப்படாமல் முக்கிய சந்திப்பில் பல மாதங்களாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      திருச்சியிலுமா? அது சரி.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் நண்பரே!! சரியான நெத்தியடி பதிவு!! ஆனால் இவரின் "உயிர் ரசிகர்தான் "நீங்கள் கட்டுகிறீர்களா இல்லை நாங்கள் கட்டட்டமா? என்று ....ம்மா அரசிடம் கர்சித்தார்கள் நம் மறத்தமிழன்!! பிச்சைகாரனுக்கு ஒரு பைசா போட
    ஒரு மணி நேரம் யோசிப்போம்?? இதை எப்படி யோசிக்கிறது!! நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. தங்களது கருத்து சிந்திக்கப்பட வேண்டியதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. தங்களது எண்ணமே
    எனது எண்ணமும்
    பெருவாரியான மக்களின் எண்ணமும்
    நன்றி நண்பரே
    தம =1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. தேவையில்லை என்பதுதான் என் கருத்து.... மக்கள் பணமோ சொந்த பணமோ அது வீண்விரயம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      உண்மைதான்... பணம் விரயம்தான்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. சிந்திக்க வைக்கும் பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. சிவாஜி மட்டுமா நடித்தார்?..
    சிலுக்கும் கூடத்தான் நடித்தார்!..

    - என்று Facebook -ல் பதிவு செய்கின்றார்கள்..

    இருந்தபோதே - இழித்துப் பேசி, அவரைக் கொன்றவர்கள் - தமிழர்கள்..
    மாண்டு போன மனிதனைப் பற்றி வசை பாடவேண்டாம்..

    வாழும் போதே - தன் வாழ்நாளைத் தானம் செய்தவன் - அந்த மனிதன்..

    செத்து சாம்பலாகிப் போன பிறகு -
    மா கலைஞன் என்ற அளவில் கூட வேண்டாம்..
    சாதாரண மனிதன் என்ற அளவில் - அவரை விட்டுவிடலாம்..

    கயத்தாறில் - மண்டிக் கிடந்தது - பெரிய புதர்..
    அது வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்..

    நடித்துச் சம்பாதித்த காசைக் கொடுத்து -
    அந்த இடத்தை விலைக்கு வாங்கி - நினைவுச் சின்னம் அமைத்து -
    அதை அரசின் கையில் ஒப்படைத்த ஒரு செயலுக்காக நன்றி கூறலாம்..

    மற்றபடி - மணியாவது.. மண்டபமாவது!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தாங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் நான் அறியாதது...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. தெளிவான பார்வையோட்டம் அண்ணே ...
    மக்கள் வரிப்பணத்தில் இது போன்ற ஏகப்பட்ட விரையங்கள் நடந்தேறிக் கொண்டு இருக்கின்றன. அதை நாமும் கண்டு கொள்ளாமல் தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். முன் மாதிரியாக வாழ்ந்து காட்ட கூடிய தலைவர்களுக்கு தமிழ் நாட்டில் பஞ்சம் தலைவிரி கோலமெடுத்து ஆடுகிறது. சரி அதை சொன்னால் நம்மளை வேறொரு லிஸ்டில் சேர்த்து விடுவார்கள். கோடிகள் புரளும் நடிகர் சங்கம் தான் கட்டியிருக்க வேண்டும். இப்போது ஜெயலலிதாவும் அரசியலுக்காக மட்டுமே மணிமண்டப மேட்டரை கையில் எடுத்திருக்கிறார். கடற்கரை சாலையில் இருக்கும் சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் அதை நேரிடையாக செய்தால் பலரின் எதிர்ப்புக்களை சம்பாதிக்க நேரிடும் என்பதற்காக அரசின் செலவிலையே மணி மண்டபம் கட்டி அங்கு இடமாற்றி விடுவதாக தான் ப்ளான். தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மக்களின் பணம் விரையம் தான். கடற்கறையில் அவ்வளவு இடமிருக்க நடுச்சாலையில் வைத்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட தன்மான தலைவரை என்ன சொல்வது என்றுத்தான் தெரியவில்லை. அரசின் பங்களிப்போடு செய்யலாம் என்பதே எனது கருத்து .,, அதற்கும் வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன் அண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அரசன்...
      மிகத் தெளிவான கருத்து.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. நான் சிவாஜி ரசிகன். ஆனால் அரசு இதுபோன்ற வேலையில் ஈடுபடத்தேவையில்லை என்பது தான் என் கருத்து. சிலைவைப்பது மணிமண்டபம் கட்டுவது இதெல்லாம் அரசின் பணத்தை விரயம் செய்வதாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. கூத்தாடிகள் கையில் அதிகாரத்தை கொடுத்து விட்டு இப்பொழுது புலம்பி பயன் என்ன கேனப்பயல்கள் ஊருல கிருக்குப்பய நாட்டாமையாம் அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. சிவாஜி என்கிற ஆளுமை தமிழர்களின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்று...
    ஆரோக்கியமான விவாதம் தான் தோழர் ...
    ஆனால்
    மக்கள் வரிப்பணம் ஒருபோதும் முறையாக செலவிடப்படுவதே இல்லை என்பதே உண்மை .
    அந்த வகையில் இப்படி ஒரு விசயம் கொஞ்சம் உருப்படியாகத் தெரிகிறது எனக்கு...
    இன்னபிற விசயங்களைக் கடந்து பார்த்தோம் என்றால் இது பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டிய வேலை.
    இப்போது அடுத்த தலைமுறை பேச ஆரம்பித்த உடன் செய்வதால்தான் விமர்சனம் வருகிறது..
    எனது ஆதரவு உண்டு... மணிமண்டபம் கட்டப்பட வேண்டும். அரசுப் பணத்தில் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மது சார்...
      நல்ல கருத்து...
      அரசுப் பணத்தில் கட்டட்டும் என்பதே கருத்து.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. சிவாஜியின் புகழ் பாட அவர் நடித்த படங்கள் இருக்கின்றனவே மணி மண்டபம் தேவை இல்லை என்பதே என் கருத்து. என் தளத்துக்கு வருகை தாருங்கள் ஒரு கதைப்போட்டி அறிவித்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      காலையில் பார்த்தேன்... முயல்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. நம்ம ஊர்ல எல்லாமே மக்களின் பணமேதான் விளையாடப்படுகின்றது...அரசியல்வாதிகளின் பைக்குப் போவதிலிருந்து, மக்களுக்கு ஏதோ இவங்க இலவசம் கொடுக்குறாங்களே எல்லாமே நம்ம பணம்தான் அவர்கள் சொந்தப் பணமே கிடையாது...மணி மண்டபம் போன்றவற்றிற்கு செலவழித்து பணத்தை விரயம் செய்வதற்குப் பதில் தமிழ்நாட்டில் இருக்கும் அரசு பள்ளிகளை மேம்படுத்தி, கல்வித் திட்டங்களைச் சீரமைக்க பயன்படுத்தலாம். அதுதான் இப்போதைய உயிர்நாடித் தேவை. அரசு பணமாக இருந்தாலும், மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் இல்லை அது சொந்தப்பணமாக இருந்தாலும் மணிமண்டபம் என்பது அவசியமே இல்லை. கலைஞர்களை நினைவுகூர இவை எல்லாம் அவசியமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  15. சினிமா என்றாலே சிவாஜி நினைவில் வரும் போது மணி மண்டபம் தேவையில்லை என்பது தான் என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  16. பொதுவாக கலைஞர்கள் வாழ்ந்த இல்லங்களை அரசு எடுத்து காட்சியகமாக மாற்றும் அப்படி எம்ஜிஆர்,சிவாஜி....வீடுகளை கைப்பற்றி அரசு காட்சியகமாக மாற்றலாம் அங்கே அவர்கள் சிலையையும் நிறுவலாம்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி