ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மனசின் பக்கம் : 32/23 புலி ஜிப்பாக்கதையோடு பதிவர் விழா

சில பல நிகழ்வுகள் கொடுத்த வேதனைகளின் காரணமாக கடந்த பத்து நாட்களாகளுக்கு மேலாக வலைப்பக்கம் வரவில்லை. எதையும் வாசிக்கவும் இல்லை.... எழுதவும் இல்லை. அண்ணன் கில்லர்ஜி கூட மனசு குமார் கூட சுற்றினேன் என பதிவுகள் எல்லாம் போட்டிருக்கிறார். எனக்குத்தான் எங்கும் சுற்ற மனசே இல்லை. ஊருக்குப் போன் பேசவும்... இணையத்தில் படம் பார்க்கவும் என பொழுதைப் போக்கினேன்.  என்றோ எழுதி வைத்த ஒரு கவிதையை நேற்று தளத்தில் பகிர்ந்தேன். என்னடா இவன் நம்ம பக்கமே ஆளைக் காணோம் என்று நினைக்காமல் எப்பவும் போல் உறவுகள் அனைவரும் வந்து வாசித்து கருத்து இட்டிருந்ததைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.  நான் தங்கள் பக்கம் வரவில்லை என்று எண்ணாதீர்கள் இப்போதும் சிலரை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். கருத்துக்கள் பதியும் மனநிலை இன்னும் வரவில்லை... எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையோடு நகர்கிறது வாழ்க்கை. விரைவில் மீண்டு வருவேன்...

********

பாயும் புலி பார்த்தேன்... போலீஸ் கதை... விஷால் இப்போ நடிகர் சங்கத்துக்குள் நான் தனி ஒருவன் என சவால் விட்டுக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். வந்தேறிகள் ஆளத்தானே தமிழகம் இருக்கிறது... அடுத்து இவரும் கட்சியை ஆரம்பிப்பார்... ஆட்சியைப் பிடிக்கும் ஆசையோடு காய் நகர்த்துவார் என்பதை அவரது தற்போதைய அதிரடிகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது. சரி வாங்க புலி பாய்ந்ததான்னு பார்ப்போம். 


கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம்... போலீஸ் விஷாலுக்கும் பணக்காரர்களை மிரட்டி பணம் பறித்துக் கொல்லும் கும்பலுக்கும் இடையில் நடக்கும் போராட்டாம்... ஆரம்பக் காட்சிகள் விறுவிறுப்பாய் போனாலும் படம் நகர ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக படுத்துவிடுகிறது. அண்ணன்தான் அந்தக் கும்பலின் தலைவன் என்று தெரிய வரும் போது இன்னும் விறுவிறுப்பாகும் என்று நினைத்தால் ஒரு சாதாரண சண்டைக்காட்சியில் குடும்பமே அவனைக் கொல்லு என சொல்லிவிட இறுதிப் போராட்டத்தில் அண்ணனைக் கொன்று போலீஸ் கையில் கொடுக்காமல் பாலத்துக்கு அடியில் மறைத்து பத்தோடு பதினொன்றாக தொழிலதிபர் பணம் பறிக்கும் கும்பலால் கொல்லப்பட்டார் என முடித்து வைக்கிறார்கள். காஜல் வந்து போகிறார்... சூரி நகைச்சுவை என கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். டப்பு டப்பு என்று துப்பாக்கிச் சத்தம் மட்டும் கேட்க்கும் திரைக்கதையில் போலீசுக்கான மிடுக்கு இல்லை.

********

32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம் என்ற மலையாளப் படத்தை பொழுது போகாமல் டவுன்லோட் பண்ணிப் பார்த்தேன். கதைகளுக்காகவே மலையாளப் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  23 என்ற எண்ணை வைத்து வெளிவந்த ஆங்கிலப் படமான ஜிம் கேரியின் 'த நம்பர் 23' படத்தின் கதையைத் தழுவித்தான் எடுத்திருக்கிறார்கள். மாமா என்று அழைக்கப்படும் லால் தவிர காதல் தம்பதிகளான நாயகன் நாயகிக்கு உறவுகள் தொடர்பில் இல்லை. நாயகன் அநாதை இல்லத்தில் வளர்ந்தவன்... நாயகிக்கு அம்மா அப்பா இருந்தும் தொடர்பில் இல்லை. காதல் வாழ்வின் முதல் வருட திருமண நாளைக் கொண்டாட யூ.எஸ்ஸில் இருந்து வரும் நாயகன் மனைவி அலுவலகம் செல்ல பொழுது போகாமல் மனைவியின் தோழி கொடுத்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பிக்கிறான். 


கதையின் நாயகன் ஜான் ரேயனாக உங்களை நினைத்துக் கொள்ளுங்கள் என்று ஆசிரியர் எழுதி கதையை ஆரம்பிக்க இவனும் அப்படியே நினைக்க... கதையின் நிகழ்வுகளை அவன் வாழ்வுக்குள் புகுத்திப் பார்க்கிறான். மனைவியை சர்ச்சுக்கு கூட்டிப் போகும் போது கல்லறையில் ஒரு மனிதனைப் பார்த்து போட்டோ எடுக்க, அவன் இவனிடம் சண்டைக்கு வர, அப்போது வந்து தடுத்த சிலர் அவன் அமர்ந்திருக்கும் கல்லறைக்குள் இறந்த பெண் இல்லை... அவளின் பிணம் கிடைக்கவில்லை என்று சொல்லி வைக்க, கதையோடு இறந்த பெண்ணின் கதையும் பயணிக்க, அவளது உடலைத் தேடிப் போகிறான். திரில்லராக பயணிக்கும் படத்தில் அவளைக் கொன்றது நாயகனா அல்லது வேறு யாருமா என்ற சஸ்பென்சை இறுதியில் உடைத்திருக்கிறார்கள். படம் பார்க்கலாம்.

********

ரண்டு சிறுகதைப் போட்டிக்கான கதைகளை ஒரு வழியாக அனுப்பிவிட்டேன். இன்னும் கல்கி குறுநாவல் போட்டிக்கான கதையை எழுதவில்லை.... இந்த வாரத்தில் வரும் பக்ரீத் விடுமுறையில் எப்படியும் எழுதி 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நமது வலைப்பதிவர் விழாவுக்கான கட்டுரைப் போட்டிகளிலாவது கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. மனநிலை மாறும் பட்சத்தில் வலைப்பதிவர் விழாவிற்கான கட்டுரைகளை எழுதும் எண்ணம்... பார்க்கலாம்.

********

லைப்பதிவர் மாநாடு குறித்த பகிர்வுகள் நண்பர்களின் தளங்களில் வெளியாகி வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வேளையில் தினமணி மற்றும் தீக்கதிரில் செய்தி வெளியாகியிருக்கிறது என்ற பகிர்வை வலைப்பதிவர் விழாவுக்கான பிரத்யோக வலைப்பதிவில் பார்த்ததும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது. ஊரில் இருக்கும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்து வெற்றி விழாவாக ஆக்க வேண்டும் என்பதே எனது ஆசை. கண்டிப்பாக சிறப்பாக நடக்கும்.... நடத்திக் காட்டுவோம். வலைப்பதிவர் விழாவுக்கான பிரத்யோக வலைப்பக்கம் வாசிக்க... BLOGGERS MEET-2015

********

சேனையின் நண்பர் திரு. ராஜசேகர் அவர்களின் முதல் படைப்பான ஜிப்பா ஜிமிக்கி படத்தின் பாடல்கள் குறித்து முன்னர் ஒரு பகிர்வு எழுதியிருந்தேன். அந்தப் பதிவை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கி வாசியுங்கள். மிகச் சிறப்பான பாடல்களை நீங்களும் ரசிப்பீர்கள். அந்தப் படத்தில் வரும் 'ஜிப்பா போட்ட மைனரு... ஜிமிக்கி போட்ட பெண்டிரு...' பாட்டை பானுஷபானா அக்கா அவர்கள் சேனையில் பகிர்ந்திருந்தார்கள். பாடலும் அதற்காக படப்பிடிப்பு நடத்தப்பட்ட வயல்வெளிகளும் ஆஹா... அழகு மற்றும் அருமை... ரொம்ப நல்லா வந்திருக்கு... நீங்களும் கேட்டு ரசியுங்கள்... வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் இயக்குநர் / தோழர் ராஜசேகர்.


********

லைப்பதிவர் திருவிழா-2015 இது நம்ம திருவிழா... மறந்து விடாதீர்கள்... மறந்து இருந்து விடாதீர்கள்... ஊரே வியக்கும் வண்ணம் புதுக்கோட்டையில் பூக்கட்டும் வலைப்பூக்கள்...

-------------------------------------------------------

விழா இடம்... நாள்...

ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
பீ வெல் மருத்துவமனை எதிரில்
பழைய பேருந்து நிலையம் அருகில்
ஆலங்குடி சாலை, புதுக்கோட்டை

அக்டோபர், 11 - 2015
ஞாயிற்றுக் கிழமை.

-------------------------------------------------------
-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே!! விமர்சனம், வலைபதிவர், காணொலி, என கலந்துகட்டி! அனைத்தும் அழகு நன்றி!!!

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கள் பதியும் மனநிலை விரைவில் உங்களுக்கு வர வாழ்த்துக்கள். அனைத்தும் சரியாகும். நம்பிக்கையும் மன உறுதியும் துணை நிற்கும்.

    பதிலளிநீக்கு
  3. வலைப் பதிவர் விழா நிச்சயம் சிறக்கும் நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  4. முதலில் Tough Times do not last but Tough People Do!
    Be tough
    எல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் நிகழ்வதுதான் இது...
    வெளியில் வாங்க ... கட்டுரை எழுதுங்க... தானாக வெளியில் வரலாம்.
    எவ்வளவு பெரிய காயமாக இருந்தாலும் காலமெனும் அருமருந்து ஆற்றிவிடும்..
    பிரார்த்தனைகள் தோழர்.

    பின்னர் வலைப்பதிவர் சந்திப்புக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நெகிழ்வான நன்றிகள்..

    மீண்டு வாருங்கள்
    தொடர்வோம்
    தம +

    பதிலளிநீக்கு
  5. நானும் பையனின் காதுகுத்தல் விழா, விநாயகர் சதுர்த்தி என்று வலைப்பக்கம் சரியாக வரவில்லை! போதாக் குறைக்கு குரோம் பிரவுசர் வேறு பாடாய் படுத்துகிறது! பயர் பாக்ஸில் வீடியோ ஓபன் ஆக மறுக்கிறது! அதனால் வலைப்க்கம் வந்தாலும் ஒழுங்காக படித்து கருத்திட முடிவது இல்லை! தங்கள் மனக்குறைகள் நீங்கி குறுநாவல் எழுதி வெற்றி பெறவாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பதிவோடு பதிவர் திருவிழா பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர். எல்லாம் கடந்து போகும் வேதனை வேண்டாம். மனதிற்கு இதமான செயல்களில் ஈடுபடுங்கள்.

    பதிலளிநீக்கு
  7. நடப்பவை நடக்கும் இயல்பு வாழ்க்கைக்கு வாருங்கள் நண்பரே....
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  8. படங்களை நேரில் பார்த்து
    உள்ளத்தில் எழும் ஓட்டங்களை
    தங்கள் கண்ணோட்டமாக
    சிறப்பாகத் தந்துள்ளீர்கள்!

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  9. தங்களது நிலை போன்ற ஒன்று எங்களுக்கும் நேர்வதுண்டு. தாங்களும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். மீண்டு வாருங்கள். இதுவும் கடந்து போகும். கம் ஆன் குமார்! வந்து கட்டுரைப் போட்டிக்கு எழுதி அனுப்புங்கள். வெற்றிவாகை சூடுங்கள்....

    தங்கள் போட்டிக் கதைகள் வெல்ல வாழ்த்துகள் குமார்!

    பதிலளிநீக்கு
  10. உங்களால் முடியாதது வேறு யாரால் முடியும்....சகோ

    பதிலளிநீக்கு
  11. கஷ்டங்கள் வருவதும் போகும் இயல்பு குமார். யாருக்குத் தான் கஷ்டம் இல்லை சொல்லுங்கள்..... இதுவும் கடந்து போகும்..... கவலை வேண்டாம்...

    விமர்சனம், இற்றைகள் என பலவும் கலந்து அருமையாக எழுதி இருக்கிறீர்கள். போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. 'இதுவும் கடந்து போகும்'. என்ற பொன்மொழி துணை கொண்டு வாழ்வில் வரும் இன்ப, துன்பங்களை எதிர்கொள்வோம் குமார்.....

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி