சமீபத்தில் பார்த்து ரசித்த மலையாளப்படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி நடித்திருந்த படம். தமிழ்த் திரையுலகில் கேரள வரவுகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் காலத்தில் கேரளச் சேட்டன்களின் தூக்கத்தைக் கெடுத்து மலர், மலர் என வண்டுகளாக அலைய விட்டிருக்கிறார் தமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி, சரி பல்லவி அப்புறம் பாடுவோம் முதலில் பிரேமிக்கலாம்.
பிரேமம் பள்ளிக்காதல்... கல்லூரிக்காதல்... திருமணம் என மூன்று பிரிவுகளாக படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். படத்தின் எடிட்டரும் இவரே. கேரள இயற்கையோடு பயணிக்கும் படம் இரண்டே முக்கால் மணி நேரம் என்றாலும் கொஞ்சம் கூட அலுப்பைக் கொடுக்கவில்லை. அவ்வளவு அழகாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.
நாயகன் நிவின் பள்ளியில் படிக்கும் பையனாக, மேரி என்ற பெண்ணை காதலிக்கிறேன் என நண்பர்களுடன் விரட்டிக் கொண்டு திரிவதாகட்டும்... கல்லூரியில் மடித்துக் கட்டிய வேஷ்டியுடன் மீசை முறுக்கிக் விட்டுக் கொண்டு ஆசிரியர் தனனைக் காதலிக்கிறாரா என்றெல்லாம் அறிய விரும்பாமல் தான் காதலிப்பதாகட்டும்... படிக்கும் வயதில் போட்ட ஆட்டங்களுக்குப் பிறகு பொறுப்போடு ஒரு கேக் கடை வைத்துக் கொண்டு அனுபவஸ்தனாக வருவதாகட்டும்... மனுசன் ஒவ்வொரு கட்டத்திலும் தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல்மொழியிலும் மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவைப் போல மலையாளத்திலும் இயக்குநர் மகன், நடிகர் மகன் என ஒரு பட்டாளம் கிளம்பி யிருக்கும் போது எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் நிவின்.
என்னோட பேர் மலர் என்று அறிமுகமாகும் சாய் பல்லவி, கல்லூரியில் பையன்களின் தாளத்துக்கு தலையாட்டியபடியே படித்துக் கொண்டிருக்கும் போதே எல்லோரையும் கவர்ந்து விடுகிறார். பின்னர் அவர் தமிழ் பேசியபடி வரும் ஒவ்வொரு காட்சியிலும் மலராகவே மாறியிருக்கிறார். நிவின் மற்றும் அவரது நண்பர்களுக்கு கல்லூரி விழாவுக்காக நடனம் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் இசையைக் கேட்டபடி மெதுவாக நடந்து செல்லும் அவர் போடுவாரே ஒரு ஆட்டம்... ஆஹா ரகம். மாணவனைக் காதலிப்பதை வெளியில் சொல்லாமல் மனசுக்குள் வைத்துக் கொண்டு அவரைப் பிரிந்து செல்லும் போது அந்தப் பார்வையில் காதலை மறைத்துச் செல்கிறார்.
பள்ளியில் படிக்கும் கிறிஸ்தவப் பெண்ணாக, முடியை ஒரு பக்கமாக விரித்துப் போட்டு வரும் அனுபமா பரமேஸ்வரனாகட்டும், நாயகனுக்கு தெரிந்த பெண்ணாக, கடைசியில் அவனைக் கரம் பிடிக்கும் பெண்ணாக வரும் மாடோனா செபஸ்டினாகட்டும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
மலரை ஒரு தலையாக காதலிக்கும் ஆசிரியராக வினய் போர்ட் மற்றொரு ஆசிரியருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் கொஞ்ச நேரம் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். நிவின் நண்பர்களாக வரும் கிருஷ்ண சங்கரும் மற்றவர்களும் பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை மிகப்பெரிய பலம். கல்லூரிக்குள் நாயகன் நண்பர்களுடன் நுழையும் முதல் நாளில் வகுப்பறையில் இருந்து வரும் தாளம்... பார்ப்பவர்களையும் தாளம்போட வைக்கிறது. பின்னணியிலும் மனுசன் கலக்கியிருக்கிறார். ராஜேஷ் முருகேசன் படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
இந்தப் படம் ஆட்டோகிராப் மாதிரி இருக்கு என்று சிலர் சொன்னார்கள். ஆட்டோகிராப் போல் மூன்று விதமான காதலில் கதை நகர்ந்தாலும் ஆட்டோகிராப்புக்கும் இதற்கும் துளியும் ஒத்துப் போகவில்லை. படத்தின் கிளைமேக்ஸ்தான் படத்தின் முக்கியத் திருப்பம். பிரேமம் மலையாளத் திரையுலகம் கொடுத்திருக்கும் ஒரு அருமையான படம்.
சாய் பல்லவி... இன்றைய தேதியில் முகநூலில் இவர் இடும் போட்டோக்களுக்கு எல்லாம் 'டா மலரே...' என மலையாளிகள் லைக் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாய்... இனி ஒரு ரவுண்ட் வருவார்... அப்படியே தமிழிலும் இவரைக் கொண்டுவர நம்ம ஆளுங்க போட்டா போட்டி போடுவார்கள்.
தமிழில் இது போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருவது அரிது. இங்கே கதாநாயகனை அறிமுகம் செய்யும் போது ஒரு பாடல், குத்துப்பாடல், நாயகன் நாயகிக்கு பாடல் எனவும் கதாநாயகனுக்கு பில்டப் கொடுக்கும் வசனங்களும்தான் படங்களாகி வருகின்றன... இதையும் நாம் பாலாபிஷேகம், காவடி என எடுத்துக் கொண்டாடுகிறோம். ஆனால் நமக்கு அருகே மலையாளக் கரையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை... கதாநாயகனுக்கு பில்டப்பெல்லாம் இல்லை.. ஆனால் நல்ல கதைகளோடு பயணிக்கிறார்கள்... ஜெயிக்கிறார்கள்.
நேற்று அமலாபால், நிவின் பாலி நடித்த மிலி பார்த்தேன். இது ஒரு வித்தியாசமான கதைக்களம். அருமையான படம்... இது குறித்து மற்றொரு பகிர்வில் பேசுவோம்.
-'பரிவை' சே.குமார்.
வித்தியாசமான கதையே அவர்களின் மூலதனம்...
பதிலளிநீக்குரசனையான பார்வை... நன்றி...
வணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. எளிமையான கதை. வலுவான திரைக்கதை. அற்புதமான கேமிரா மற்றும் எடிட்டிங். எல்லாவற்றிற்கும் மேல் நிவின் பாலியின் தேர்ந்த நடிப்பு . சூப்பர்.. நல்ல விமர்சனம் ஜி!
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நிஜம்தான் நானும் இதை பல நாள் யோசித்ததுண்டு. பல கோடிகள் பணம் போட்டு மொக்கையாக படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்கள் கொஞ்சம் பக்கத்திலேயே இருக்கும் மலையாள திரைத்துறையினரையும் கண்கொண்டு நோக்கினால் நன்றாக இருக்கும். ஆனால் இப்பொழுது தமிழிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நல்ல படங்களும் வருவது லேசான ஆறுதல். என்ன இருந்தாலும் மலையாளப் படங்களைக் காணும் போது வரும் பெருமூட்சினை கடக்க இயலாது.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரி...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பிரேமம் பிரியம்.
பதிலளிநீக்குவணக்கம் நண்பார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களைப்போன்றோர் எழுதும் விமர்சனைங்களைப் படிப்பதோடு சர்!படம் எல்லாம் பார்ப்பதில்லை!
பதிலளிநீக்குவணக்கம் அய்யா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
விடுமுறையிலிருந்து வந்தாச்சா சகோ,எப்படி இருக்கீங்க??
பதிலளிநீக்குதங்கள் விமர்சனம் படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது.அருமை!!
நல்ல விமர்சனம்.
பதிலளிநீக்குநடுநிலையான விமர்சனம். நன்றி.
பதிலளிநீக்குமலையாளத்தில் கதைகளுக்குத்தான் முக்கியத்துவம். அடுத்து பாடல்கள். மட்டுமல்ல நடிப்பவர்களும் இயல்பாக நடிப்பதால். பெரும்பாலும் மலையளப் படங்களின் கதைகள் ஏதேனும் நாவல் இல்லை கதையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்...அதுவும் காரணம். யதார்த்தம் அதிகம் அனுசரிக்கப்படுவதால் வெற்றி பெறுகின்றன...மட்டுமல்ல கேரளத்துப் பாரம்பரியத்துடன் படம் எடுக்கப்படுவதாலும் இருக்கலாம்...
பதிலளிநீக்குநல்ல விமர்சனம்..படம் பார்த்தாயிற்று...