புதன், 4 பிப்ரவரி, 2015

புரிஞ்சு வாழணும்


ராமநாதனுக்கு மகளின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. செல்லமாய் வளர்ந்த மகள்தான் ‎இருந்தாலும் திருமணத்திற்குப்பின் அவள் செய்கைகளால் அவருக்கு நிம்மதி குறைந்தது.‎

சம்பந்தி வீட்டார் தன் அளவுக்கு வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் தரமான குடும்பம். ‎மாப்பிள்ளைப் பையன் பிரபலமான கம்பெனியில் விற்பனைப்பிரிவு மேலாளர். நல்ல ‎சம்பளம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் ‎கிடைப்பது என்பது அரிது. ‎

தன் மேல் உள்ள மரியாதையில் மருமகளை சம்பந்தி வீட்டார் எதுவும் சொல்வதில்லை ‎என்பதால் அவருக்கு கொஞ்சம் நிம்மதி. இருந்தாலும் தேவையில்லாமல் கணவனுடன் ‎சண்டையிட்டு நிம்மதியை கெடுத்துக் கொள்ளும் மகளுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று ‎மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவரது அலைபேசி சிணுங்கியது.‎

‎"அலோ... ராமநாதன் ஹியர்..."‎

‎"அங்கிள் நான் ரவி..."‎

‎"என்ன மாப்ளே... நலமா... அப்பா அம்மா நலமா... திவ்யா எப்படி இருக்கா?"‎

‎"ம்... எல்லோரும் நலம் மாமா... நீங்களும் அத்தையும் நலமா?.. திவாகர் பேசினானா..?"‎

‎"நல்ல சுகம். திவா நேத்து பேசினான். சென்னையில அவனோட பிஸினஸ் நல்லா ‎போகுதாம். எங்களையும் சென்னைக்கே வரச்சொல்லி பாடாபடுத்துறான்."‎

‎"போக வேண்டியதுதானே மாமா..."‎

‎"அட போங்க மாப்ளே... நம்ம ஊரை விட்டுட்டு அங்க போயி... அதெல்லாம் நமக்கு சரியா ‎வராது. அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி மருமகளை சென்னைக்கு அனுப்பி ‎வைப்போம்."‎

‎"சரி மாமா... சீக்கிரம் நல்ல பொண்ணா பாருங்க."‎

‎"பார்ப்போம் மாப்ளே... வேற என்ன விசயம் மாப்பிள்ளை..."‎

‎"எப்பவும் உள்ளதுதான்..."‎

‎"என்ன திவ்யா... சண்டை போட்டுட்டு வந்துட்டாளா...?" ‎

‎"ம்..."‎

‎"சாரி மாப்ளே... நீங்க எதுவும் நினைக்காதீங்க... அவளுக்கு சரியான பாடம் கற்பித்தாத்தான் சரி ‎வருவா... "‎

‎"நீங்க எதுக்கு மாமா சாரி கேட்டுக்கிட்டு... இது என்ன புதுசா..?. கல்யாணமாகி இந்த ஒரு ‎வருசத்துல இது எழுவதாவது தடவைன்னு நினைக்கிறேன்...என்ன செய்யிறது. இன்னமும் ‎புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளேன்னுதான் வருத்தமா இருக்கு. மாமா நீங்க எதுவும் வேகமா பேச ‎வேணாம். கன்சீவா வேற இருக்கா... ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்."‎

‎"அவளுக்கு உங்க மனசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க தெரியலையே... மாப்ளே"‎

‎"திருந்திடுவா மாமா... சரி மாமா, பார்த்துக்கங்க... ஈவினிங் போன் பண்ணுறேன்..."‎

‎"சரி மாப்ளே..."‎

போனை வைத்தவர் மனைவியிடம் "உம் பொண்ணு வாறாளாம். மாப்ள போன் பண்ணுனார்" ‎

‎"நீங்க கொடுத்த செல்லம்தான் இப்ப அவ பண்ணுற செயல்களுக்கு காரணம். அவளை என்ன ‎செய்யிறதுன்னே தெரியலை..."‎

சம்பந்தி வீடு அதிக தூரமில்லை பக்கம்தான். ஆட்டோவில் வந்தால் அரை மணி ‎நேரத்திற்குள் வந்துவிடலாம் என்று நினைத்தபடி "இந்த தடவைதான் அவ சண்டை ‎போட்டுகிட்டு வர்றது கடைசியா இருக்கணும்" என்றபடி சேரில் அமர்ந்து தினசரியை ‎கையில் எடுத்துக் கொண்டு செல்பேசியில் யாருடனோ பேசினார்.‎

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் ஓசை கேட்டதும் பேப்பரை வைக்காமல் கண்களை மட்டும் ‎வாசலுக்கு கொண்டு சென்றார். மகள்தான்... வரட்டும்... என்று நினைத்தபடி மீண்டும் ‎பேப்பரில் கவனம் செலுத்தினார்.‎

‎"அப்பா..."‎

கண்களை மெல்ல உயர்த்தி " அடடே... வா... திவ்விக்குட்டி... ஆமா மாப்ளே எங்கே? ‎வரலையா..?" என்றவர் "சரிம்மா உள்ள போ" என்றபடி மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்த ‎ஆரம்பித்தார்.‎

திவ்யாவிற்கு அப்பாவின் செயல் வருத்தம் அளித்தது. எப்பவும் அருகில் இழுத்து உச்சி ‎முகர்ந்து கன்னத்தில் முத்தமிடும் அப்பா முதல் முறையாக வித்தியாசப்படுகிறார். அவரின் ‎செயல் வருத்தத்தை அளித்தது. உள்ளே நுழைந்தது "அம்மா, அப்பாவுக்கு என்னாச்சு?" ‎என்றாள்.‎

‎"என்னடி வந்ததும் வராததுமா... அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு... யாரும் அவருக்கு ‎முடியலையின்னு சொன்னாங்களா..?"‎

‎"ஐயோ... அம்மா... எப்பவும் எனக்கு முத்தம் கொடுப்பாரு... இன்னைக்கு வான்னு ‎சொல்லிட்டு பேப்பர படிக்கிறாரு..."‎

‎"ப்பூ... இவ்வளவுதானா... நான் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன். உனக்கு ‎கல்யாணமாகி ஒரு வருசமாச்சு. இன்னும் நீ சின்னப்பிள்ளையில்ல... தெரிஞ்சுக்க..."‎

‎"வந்தது ஆரம்பிக்காதம்மா..." என்றாள் கோபமாக.‎

‎"இங்க பாரு..." எதோ சொல்ல வந்தவளை கணவனின் குரல் தடுத்தது. ‎

‎"என்னங்க"‎

‎"நான் கடைத்தெரு பக்கம் பொயிட்டு வாரேன். எதுவும் வாங்கணுமா..? வந்த புள்ளைக்கிட்ட ‎வளவளன்னு பேசாம அதுக்கு சாப்பிட எதாவது கொடு..."‎

‎"ம்க்கும்... மகளை யாரும் ஒண்ணு சொல்லக்கூடாது. சரி வரும்போது நெஞ்செலும்பு ‎இருந்தா வாங்கியாங்க. திவ்யாவுக்கு சூப் வச்சுக் கொடுப்போம்."‎

‎"சரி... நம்ம ராமசாமி வந்தான்னா இருக்கச் சொல்லு." என்றபடி கிளம்பினார்.‎

ராமநாதன் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் ராமசாமி வந்தார். "வாங்கண்ணே..."‎

‎"என்னம்மா நல்லாயிருக்கியா... அடடே திவ்வி வந்திருக்கா... ஏம்மா மாப்பிள்ளை வரலை...?"‎

‎"இல்ல அங்கிள்... அவருக்கு லீவு இல்லை" அழகாய் பொய் சொன்னாள்.‎

‎"எங்க உங்க அப்பன்..?"‎

‎"கடை வீதிக்கு போயிருக்காங்க"‎

‎"மக வந்திருக்குல்ல... மட்டன் வாங்க போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க. நீங்க வந்தா ‎இருக்கச் சொல்லச் சொன்னாங்க... இருங்க வந்துடுவாங்க"‎

திண்ணையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து திவ்யா கொடுத்த தண்ணீரை அருந்தியபடி, ‎‎"சொக்கனூர் பொயிட்டு வாரேன்" என்றார்.‎

‎"என்ன விசயமுண்ணே... அவ்வளவு தூரம்?"‎ 

‎"அக்கா மக வீட்டுக்குத்தான்..."‎

‎"சும்மாதானே..."‎

‎"என்னத்தை சும்மா... இந்தா நம்ம புள்ளைங்களை கட்டிக் கொடுத்தோம். அதுக பாட்டுக்கு ‎இருக்குதுங்க. பிரச்சினையில்லாத சம்மந்தம். ராமு திவ்யாவை எப்படி வளர்த்தான்னு ‎ஊருக்கே தெரியும். நாங்கூட எம்மகளை அப்படி வளர்க்கலை. திவ்யா புகுந்த வீடு வசதியில ‎குறஞ்சவங்கன்னாலும் மனசால உயர்ந்தவங்கன்னு அவன் அடிக்கடி சொல்லுவான். அவ ‎இப்ப அவங்க கூட சந்தோஷமாக இருக்கிறது அவனுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு. ‎ஆனா அக்கா பொண்ணு வாழப்போன இடத்துல மாமியா, மாமனாரு, புருஷன் எல்லோரும் ‎கொடுமைக்காரங்க. தினமும் அடி உதைதான். பாவம் அந்த பச்சைப்புள்ள. அப்பாவும் இல்ல. ‎அம்மாகிட்ட சொல்லி அழுதுருக்கு. அக்கா எங்கிட்ட அழுதுச்சு. அதான் இன்னைக்கு போய் ‎வச்சுக்கிறதா இருந்தா அந்தப் புள்ளையை கண்கலங்காம வச்சுக்க. இல்ல அத்து ‎விட்டுடுன்னு சொல்லிட்டு வாரேன்."‎

‎"என்ன அங்கிள் இது அநியாயம்... யாருமே கேட்கலையா?"‎

‎"என்னம்மா பண்றது. நல்ல புருஷன் கிடைக்கணுமுன்னுதான் நாங்க ஆசைப்படுறோம். ‎ஆனா என்ன பண்றது ஒரு சில பேரோட தலையெழுத்து இப்படி. இது பரவாயில்லை ‎இன்னும் சில புள்ளைங்க நல்ல கணவன் அமைந்தும் தேவையில்லாம சண்டை போட்டு ‎வாழ்க்கையை கெடுத்துக்கிறாங்களே அத என்ன சொல்றது. வாழ்க்கையை புரிஞ்சு வாழ்ந்தா ‎சந்தோஷத்திற்கு குறை இருக்காது " என்றதும் திவ்யாவிற்கு சுளீர் என்றது.‎

‎"சரியாயிடுமா அண்ணே..."‎

‎"இனி எல்லாம் சரியாயிடும்முன்னு நினைக்கிறேன். இனியும் அவங்க திருந்தலையின்னா ‎அத்துக்கிட்டு வந்துட வேண்டியதுதான். அதோட தலை எழுத்து... என்ன பண்றது… மாத்தவா ‎முடியும்..." என்றவர், திவ்யாவிடம் "என்னம்மா திவ்வி, மாப்பிள்ளை ராத்திரிக்கு ‎வருவாரா?" என்று கேட்டார்.‎

‎"ஆ..ஆமா அங்கிள்..."‎

‎"இப்ப மாதிரி எப்பவும் சந்தோஷமாக இரும்மா... உங்கப்பன் என்ன கேட்டாலும் வாங்கிக் ‎கொடுப்பான். அவனுக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்."‎

‎"சரி அங்கிள்"‎

ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். ‎

‎"இந்தா கறியும் நெஞ்செலும்பும் இருக்கு... உங்க அண்ணனுக்கும் சேர்த்து சமை... வாடா... ‎எப்ப வந்தே... " மனைவியிடம் கொடுத்தபடி நண்பனை வரவேற்றார் ராமநாதன்.‎

‎"இப்பதான் வந்தேன். சும்மா பேசிக்கிட்டிருந்தோம். மக வந்த உடனே கறி வாங்கப் ‎போயிட்டியா..."‎

‎"ஆமா... வாயிம் வயிறுமா இருக்க புள்ளை... மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கிட்டாலும் ‎எனக்கு அவ இன்னும் குழந்தைதாண்டா. அவளுக்கு நெஞ்செலும்பு சூப்புன்னா ரொம்ப ‎பிடிக்கும். அதான்... சரி அண்ணி பசங்க நலமா..?"‎

‎"எல்லோரும் நலம்."‎

‎"வாடா தோட்டத்துப் பக்கம் போயி பேசலாம்."‎

‎"என்னடா... வந்த காரியம் சக்ஸஸா..?"‎

‎"ம்ம்... அக்கா மக கதை ஒண்ண சொல்லி திவ்யாவுக்கு மறைமுகமா புரிய வச்சேன். இனி ‎பிரச்சினை இருக்காது. "‎

‎"உண்மையாவா சொல்லுறே..?"‎

‎"ம்... அவ திருந்தணுங்கிறதுக்காக அக்கா மாப்பிள்ளை மேல பழி போடும்படியாயிடுச்சு. ‎பரவாயில்லை. நம்ம புள்ளை நல்லாயிருக்கணும். நீ போன் பண்ணினதும் வய வேலைய ‎அப்படியே போட்டுட்டு வந்தேன். சாப்பிட்ட உடனே போகணும்."‎

‎"ரொம்ப நன்றிடா... எனக்கு எப்படி அவளுக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை... அதான் ‎உங்கிட்ட கேட்டேன்."‎

‎"ம்.. நமக்குள்ள என்ன நன்றி... அது இதுன்னு..."‎

பழைய கதைகளை பேசிவிட்டு வீடு திரும்பிய போது திவ்யா அலைபேசியில் கணவனுடன் ‎சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். ராமநாதனின் கைகள் ராமசாமியின் கைகளை ‎பற்றிக்கொண்டது.‎

********************

டிசம்பர் - 2009-ல் சிறுகதைகள் வலைப்பூவில் பகிர்ந்தது மீண்டும் உங்கள் வாசிப்புக்காக.

-'பரிவை' சே.குமார்.

24 கருத்துகள்:

  1. மறைமுகமா புரிய வைச்சது சூப்பர்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்
    அண்ணா
    குடும்ப வாழ்வை மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஏளனம்:   கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. சஸ்பென்சாக கொண்டு வந்தது அருமையான நடை நண்பரே இந்த மா3 நானும்தான் யோ சி கிறேன் ம்ஹூம்
    தமிழ் மணம் - அபரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நாங்க பாமரதனமா யோசிக்கிறோம்... நீங்க எழுதுவதெல்லாம் ரொம்ப யோசிச்சு எழுதுறீங்க... நமக்கு இதெல்லாம் வருதில்லையே...

      நீக்கு
  4. வாழ்க்கைப் பாடங்கள்! மனம் நோகாமல், உறவு கெடாமல் சொல்லிக் கொடுக்கப் படுவது அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வாங்க ஐயா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க சகோதரி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. ரசிக்கும் படியான நாடகம் ,ராமசாமி நடிப்பு சூப்பர் :)
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. இலை மறைவு.. காய் மறைவு!..

    எளிய வார்த்தைகள்.. நிறைந்த பொருள்!.. இதுவே வாழ்க்கை.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வாங்க ஐயா....

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாங்க துளசி சார் / கீதா மேடம்....

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாங்க ஐயா....

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. முள்ளை முள்ளால் எடுத்த உத்தி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அக்கா.......

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. அருமையான கதை. மருமகள்கள் இப்படி இருக்க, பல வீடுகளில் மாமியார்களையும் மனம் மாற்ற வேண்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி