நினைவில் நான் மீட்டெடுத்துப் பார்க்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, என்னை உறவாய், மகனாய்ப் பார்த்த மனிதர்களைப் பற்றி பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அம்மா... இந்த அம்மா எனது பேராசன் மு.பழனி இராகுலதாசன் அவர்களின் துணைவியார். எனக்கு மட்டுமல்ல... ஐயாவின் அன்புக்குப் பாத்திரமான அனைத்து மாணாக்கர்களுக்கும் இவர் அம்மாதான்... என்ன எனக்குத் தெரிந்தவரை இவருக்கு நாங்கள் ரொம்பப் பிடித்தவர்கள். அந்தப் பாசம் இன்று வரை எனக்கு அவரை அம்மாவாகவும் அவருக்கு என்னை மகனாகவும் தொடர வைத்திருக்கிறது.
அம்மா...
கல்லூரி முதலாம் ஆண்டில் இரண்டு செமஸ்டர்களிலும் தமிழ் வகுப்புக்கு ஐயா வந்தாலும் அந்த வருட முடிவில்தான் முருகன் மூலமாக ஐயாவுடன் நெருக்கமாகும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடன் கல்லூரியில் தினமும் பேசினாலும் வீட்டுக்கு எல்லாம் செல்வதில்லை. ஒரு நாள் ஐயாதான் 'வீட்டுக்கு வாங்க தம்பி' என்று அழைத்தார். பின்னர் முருகனுடம் ஐயா குடியிருந்த தேவி பவனத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். நாங்க போனபோது அம்மா, வாங்க என்று சொன்னதுடன் அருமையான காபி ஒன்றையும் கொடுத்தார். அதன் பின் தினமும் ஐயா வீட்டில் அரட்டை, அம்மாவின் காபி, சாப்பாடு... ஐயாவுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேசிக்கொண்டு தியாகிகள் ரோடு, திருப்பத்தூர் ரோடு, கண்டதேவி ரோடு, சில நாட்கள் புதூர் அக்ரஹாரம் பாலு அண்ணா வீட்டு வரைக்கும் பயணித்து இரவு ஏழு, எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குப் போவேன்.
ஆரம்ப நாட்களில் அம்மாவுடன் அவ்வளவாக பேசுவதில்லை. முருகனைப் போல் எல்லாருடனும் சரளமாகப் பேசமாட்டேன் என்பது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும். ஐயா கூட தம்பிக்கிட்ட கேட்டாத்தான் பதில் வரும்... முருகனுக்கிட்ட கேட்காமலே பதில் வரும் என்பார். அம்மாவைப் பார்த்து சிரிப்பதோடு சரி... சில விடுமுறை தினங்களில் வீட்டுக்குச் சென்றால் ஐயா வெளிய போயிட்டாங்கப்பா... நீங்க சாயந்தரம் வாறீங்களா? என்பார். 'சரிங்க' என்று வந்துவிடுவேன்.
ஒரு நாளைந்து மாதத்துக்குப் பின்னர் அம்மாவுடன் சரளமாகப் பேச ஆரம்பித்ததும் ஒரு நாள் போகலைன்னாலும் 'என்ன குமார் ஏன் நேற்று வரலை' என்று கேட்க ஆரம்பித்த போதுதான் அவரின் பாசம் புரிந்தது. பின்னர் ஐயா இல்லாவிட்டால் கூட அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு வர ஆரம்பித்த நாட்கள் அவரின் பாசத்தைச் சுமந்து கடந்து சென்றன என்றால் மிகையில்லை. ரெண்டு மூணு நாள் செல்லவில்லை என்றால் 'எங்கே குமாரைக் காணோம்? காலேசுக்கு வந்துச்சா... நீ பாத்தியா...?' என வீட்டிற்கு தினமும் செல்லும் எங்கள் குழு நண்பர்களிடம் கேட்டதும்,. குமார் வரலைன்னா மட்டும் புலம்புறீங்க... நாங்க வரலைன்னா கேக்க மாட்டீங்கதானே என அம்மாவிடம் சண்டை பிடித்து விடுவார்களாம். மறுநாள் போனால் குமாரு வரலைன்னு கேட்டா பண்ணையாருதான் புள்ளையோன்னு சண்டைக்கு வருதுக என்று சொல்லிச் சிரிப்பார்.
விடுமுறை தினங்களில் பெரும்பாலும் ஐயா வீட்டில்தான் எங்கள் குழு அரட்டை அடிக்கும். எங்கள் குழு என்பது அன்பு அண்ணன், முருகன், நான், தமிழ்க்குமரன் (படிக்கும் போதே இறந்துவிட்டான்), பார்த்தீபன் (எப்போதாவது வருவான்), மணிவாசகம் (ஐயா மகன்), மணி மேகலை (ஐயா மகள்), சுபஸ்ரீ, கனிமொழி, அம்பேத்கார் (இவனும் அடிக்கடி வரமாட்டான்), மணி, ஐயா வீட்டின் எதிர் வீட்டில் இருந்த ஜெயலெட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திரக்குமார், அவரின் தங்கை என பெரிய கூட்டம். நாங்கள்.மாலை எல்லோரும் அங்கு ஆஜராகிவிடுவோம். அம்மா கொடுக்கும் சுவீட், காரம், காபியோட ஐயா தலைமையில் அரட்டை ரெண்டு மணி நேரத்துக்கு மேல களை கட்டும். அம்மா எங்களுடன் அரட்டையில் கலந்து கொள்ள மாட்டார். எனக்குத் தெரிந்து எங்களுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இப்படி ஒரு அரட்டைக்குழு ஐயா வீட்டில் கூடவே இல்லை. உங்க செட்டுக்கு அப்புறம் அந்த மாதிரி பிள்ளைங்க கூட்டமெல்லாம் வரவேயில்லை என அம்மா இப்போது கூட சொல்லுவார். அப்போத்தான் குமார் வீடே நிறைஞ்சிருக்கும்... எல்லாரும் வருவீங்க... அதுக்கப்புறம் அவ்வளவு பசங்க வரலை.. ஒரு சிலர் தான் வந்தாங்க... என்றும் சொல்வார்.
எனக்கு அப்போது உள்நாக்குப் பிரச்சினை இருந்தது. திடீரென வீங்கி எச்சில் விழுங்க முடியாதவாறு வலி உயிர் போகும். டாக்டரிடம் காண்பித்து மருந்து சாப்பிட ரெண்டு மூணு நாளில் சரியாகும். இதை அறிந்த ஐயா, ஒரு ஞாயிறு அன்று என்னைக் காரைக்குடியில் இருந்த ஆயுர்வேத மருத்துவரிடம் கூட்டிச் சென்றார். அவருக்கு ஐயாவை நல்லாத் தெரியும்... அவர் சின்னச் சின்னதாக மிளகு அளவில் வெள்ளை உருண்டை மாத்திரைகள் கொடுத்தார். அப்போது டீ, காபி, சிகரெட், பீடி, தண்ணி எல்லாம் சாப்பிடக்கூடாது. அப்புறம் மருந்துக்கு பலனில்லாமப் போயிரும் என்றார். டீ, காபி குடிப்பார்.. மத்ததெல்லாம் எம்புள்ளைக்கு இல்லை என்று ஐயா சொன்னார். அத்தோடு இல்லாமல் வீட்டுக்குப் போனதும் மேகலாவிடம் சொல்லி குமாருக்கு இனி டீ, காபி கொடுக்கக்கூடாது. பால் மட்டும்தான் கொடுக்கணுமின்னு அம்மாக்கிட்ட சொல்லுங்க என்று சொல்லி விட்டார். அதன் பின் எனக்கு மட்டும் ஸ்பெஷலாய் பால், பூஸ்ட், ஹார்லிக்ஸ்தான். இங்கு வந்து டீ, காபி சாப்பிட ஆரம்பித்தாலும் இன்று போனாலும் குமாரு டீ காபி சாப்பிடமாட்டாக என்று சொல்லி பால் மட்டுமே காய்ச்சிக் கொடுப்பார்.
எல்லாருக்கும் காபி கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் பால் கொடுப்பதைப் பார்த்து அதென்ன அவரு மட்டும் ஸ்பெஷல்... தனியா பால் போட்டுக் கொடுக்குறீங்க என சுபஸ்ரீ கேட்க, எம்புள்ள எப்பவும் ஸ்பெஷல்தான் உனக்கு காபியே அதிகம் என்று சொல்ல, அம்மா எல்லாருக்கும் முன்னால சின்னப்புள்ளையில இருந்து உங்க மகளா வர்றவ நாந்தான்... இவுகள்லாம் இப்பத்தான் வந்திருக்காக. பாத்துக்கங்க என்று கோபப்படுவது போல் நடிப்பார். ஆம் மேகலையோட ஆரம்பப்பள்ளியில் இருந்து பனிரெண்டாவது வரை ஒன்றாகப் படித்தவர். கல்லூரிப் படிப்பை மேகலை திருச்சியில் தொடர, இவர் எங்கள் கல்லூரியில் பிஸிக்ஸ் படித்தார். 'பரியன் வயல் பண்ணையார்' என இவர்கள் எல்லாம் கேலி பண்ணினால் என் பிள்ளைய ஏன் கேலி பண்ணுறீங்க? சும்மாவே இருக்க மாட்டீங்களா? என எனக்காக எல்லோரையும் சத்தம் போடுவார்.
என்னோட பிறந்த தினத்தை ஞாபகம் வைத்திருந்து அன்றைய தினம் வீட்டில் எதாவது ஸ்வீட் செய்து வைத்திருப்பார். அவர்களிடம் ஆசி வாங்க நான் வருவேன் என்பது தெரியும். எப்படியும் வந்துருவான் என எதிர் பார்த்திருப்பார். நான் பிறந்தநாளெல்லாம் கொண்டாடுவதில்லை. ஆனாலும் அவர்களின் ஆசி வேண்டிச் செல்வதுண்டு. ஐயா எதாவது புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்குக் கொடுப்பார். அம்மா இப்போதும் எனது பிறந்தநாளை நினைவில் வைத்துச் சொல்வார்.
அம்மா அசைவம் சாப்பிடமாட்டார். எங்களுக்காக அசைவம் சமைத்திருக்கிறார்... ஒரு முறை எல்லோரும் காரைக்குடிக்கு சினிமாவுக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்குத் திரும்பினால் அம்மா எங்களுக்காக மட்டன் வாங்கி சமைத்து வைத்திருந்தார். ஹாலில் எல்லாவற்றையும் கொண்டாந்து வைத்து விட்டு கிச்சனுக்குள் போய்விட்டார். நாங்களே போட்டுச் சாப்பிட்டோம். இன்றும் வீட்டுக்குப் போனால் எதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால் வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாமல் போறீயேப்பா என்பார். என்னிடம் மட்டுமல்ல எனது மனைவி, குழந்தைகள் என எல்லோரிடமும் பாசம் வைத்திருக்கிறார்.
மாலை வேளைகளில் ஐயா பேப்பர் திருத்தும் போதே அல்லது எதாவது மொழிபெயர்ப்புக்காக தயார் பண்ணிக் கொண்டிருக்கும் போதோ நான், முருகன், சுபஸ்ரீ மூவரும் உதவியாக இருப்போம். அப்பொதெல்லாம் எங்களுக்கு இரவு டிபன் அங்குதான். ஏழு மணிக்கு கிளம்பினால் இருங்க தோசை சுட்டுட்டேன். ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டுப் போங்க என்பார்.
வீட்டுக் கிரகப்பிரவேசத்துக்கு நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பாக வரணுமின்னு சொல்லிட்டு வந்தும் அம்மா மட்டும்தான் வந்தாங்க... ஐயா பெரும்பாலும் எங்கும் செல்வதில்லை... என்னம்மா ஐயா இங்ககூட வரலை என்று கேட்டேன். அவர்கள் தற்போது குடியிருக்கும் அதே வீதியில் கொஞ்ச தூரம் தள்ளித்தான் எங்கள் வீடு... ஐயாக்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் இருந்தேன்... ஏதோ அவசர வேலையின்னு பொயிட்டாங்க... என்று சொல்லிச் சென்றார். மறுநாள் பேரன் பேத்திகளுக்கு புத்தகங்களும் ஸ்வீட்டும் வாங்கிக் கொண்டு சைக்கிளில் வந்து இறங்கினார் ஐயா. எனக்கு ஆச்சர்யம்... எப்படி இவர் வந்தார்... அதான் நீங்க பொயிட்டு வந்தாச்சுல்ல அப்புறம் நான் எதுக்கு என்று மறுப்பவர் ஆச்சே என்று நினைத்தபடி 'வாங்கய்யா' என நானும் மனைவியும் அழைத்து அவரை சேரில் அமரவைத்து அவருக்கு அருகே தரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
'நேத்துல இருந்து உங்கம்மா குமாரு வீட்டுக்குப் பொயிட்டு வாங்க... புள்ள வந்து சொல்லிட்டுப் போச்சுல்ல... ஊரே சுத்துறீக... இந்தா இருக்கு.. பொயிட்டு வாங்கன்னு' ஒரே புடுங்காப் புடிங்கிட்டாங்க... காலையிலயே சொல்லிட்டாங்க எங்க போனாலும் முதல்ல குமார் வீட்டுக்குப் பொயிட்டுப் போங்கன்னு... அம்மாவுக்கு உங்கமேல ரொம்பப் பாசம்... வரலையின்னா புடுச்சி இழுத்திக்கிட்டு வந்துருவாங்க போலன்னு சொல்லிச் சிரித்தார். அன்று கல்லூரியில் படிக்கும் பையனாக அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எப்படிப் பார்த்தார்களோ அதே பாசமும் நேசமும் இன்று இரண்டு குழந்தைகளின் தந்தை ஆன போதும் அவர்கள் இருவரிடம் தொடர்வது நான் செய்த பாக்கியம் என்றுதானே சொல்லவேண்டும். எத்தனையோ பிள்ளைகள் அந்த வீட்டுக்கு வந்து மூன்றாண்டுகள் பேசி, மகிழ்ந்து கடந்து செல்ல, அவர்களின் மகனாக உறவைத் தொடரும் சிலரில் நானும் ஒருவன் என்றாகும் போது அதுவும் மாணவனாக எட்ட வைக்காமல் மகனாக அருகே வைத்துக் கொள்ளும் அந்தப் பாசம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.
என்னை தன் மகனாகப் பாவிக்கும் அம்மாவும் ஐயாவும் நாங்கள் படிக்கும் காலத்தில் பேசிக் கொள்வதில்லை என்பது பழக ஆரம்பித்து சில மாதங்களுக்குப் பிறகே தெரியும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் இருவரும் பேசாமல் வாழ்ந்திருக்கிறார்கள். நாங்களும் அவர்களைச் சேர்க்க முயன்று தோற்றுத்தான் போனோம். அம்மா சமைத்து வைக்கும் சாப்பாட்டை நான் ஐயாவுடனோ அல்லது ஐயா, முருகன், சுபஸ்ரீ, மேகலாவுடனோ எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஐயாவுடன் என்றால் நாங்கள்தான் போட்டுச் சாப்பிட வேண்டும் அம்மா வரவே மாட்டார். ஆனால் சாப்பிட்டு எழும்போது 'என்னப்பா அதுக்குள்ள எந்திரிச்சிட்டீங்க... நல்லா சாப்பிட்டீங்களான்னு கிச்சனில் இருந்து கேட்பார். இருவரும் பேசிக்கொண்டது மேகலாவின் திருமணத்தின் போதுதான்.... அவர்கள் பேசிக்கொள்வதைப் பார்த்து எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? அதை எழுத்தில் கொண்டு வரமுடியாது. அந்தளவுக்கு சந்தோஷப்பட்டவன் நான்.
என்மேல் உள்ள பாசத்தால்தான் என்னைக் கல்லூரி விழாவில் மகன் என்று சொன்னார், திருமண வாழ்த்திலும் எங்கள் வீட்டுப் பிள்ளை, எங்கள் மகன் என்று எழுதி நால்வரின் பெயரும் போட்டுக் கொடுத்தார். அப்படிப்பட்ட ஆசான்... எனது ஐயா.. பாசமிகு அப்பா... மூலமாகக் கிடைத்த அம்மா... எனக்கு எப்போதும் எனது ஆசிரியன் மனைவியாகத் தெரியவே இல்லை... என்னைப் பெற்ற தாயாகத்தான் தெரிகிறார். ஆம்.. எனது அம்மா சிவகாமி போல்தான் இந்த அம்மாவும்... முருகனின் அம்மாவும்... இன்னும் சில அம்மாக்களும்...
என்னை மகனாக நினைக்கும் அந்த அன்னை எப்போதும் போல் சந்தோஷமாக நான் அந்த வீட்டுக்குப் போகும்போது குமாரு என வாய் நிறைந்த பாசத்தோடு அழைத்து எப்பவும் போல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.
வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
தங்களின் ஆசியுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்... நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தங்களின் நினைவோட்டங்களோடு நானும் சென்று வந்தேன் தங்களது எண்ணம் போல் வாழ இறைவன் துணை புரியட்டும்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
வாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கொடுத்து வைத்திருக்கிறீர்கள் குமார், இந்த மாதிரி உறவுகளையும், நட்புகளையும் பெற..
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிலவற்றை எழுத்தில் கொண்டு வர முடியாது... என்னவொரு அன்பு...
பதிலளிநீக்குவாங்க அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எண்ணம் ஈடேறும் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நெகிழ வைக்கும் பாசம். அந்த பேரன்புக்கான மரியாதையாக அமைந்திருக்கிறது தங்களின் அருமையான இந்தப் பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
வாங்க அக்கா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அருமையான உறவுகள். வெள்ளந்தி மனிதர்கள் நெகிழ்ச்சியான பதிவு.
பதிலளிநீக்குவாங்க அக்கா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல மனிதர்களின் நட்பை பெற்றிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குவாங்க சகோதரா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பலருடைய அம்மாக்கள் இவ்வாறாக உள்ளனர். பலருக்கு இவ்வாறான அம்மாக்கள் உள்ளனர். இதுதான் கொடுப்பினை என்பதோ?
பதிலளிநீக்குவாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குஅருமையான மனிதர்களைப் பற்றிய பதிவு! நல்ல நட்புகளும், நல்ல உறவுகளும் வாழ்வில் கிடைப்பதென்பது அரிதான விசயம். உங்கள் வாழ்வில் அது நிறைந்திருக்கிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ! என் வாழ்த்துக்கள்.
இனி இத்தகைய உறவுகள் என்றும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என் தளம் வந்து என் நலம் விசாரித்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோதரரே.!
பயணத்தின் விளைவால் தடைப்பட்டது பதிவுலகப் பயணம். அதுகுறித்து பதிவொன்றும் எழுதியுள்ளேன்.நேரம் கிடைக்கும் போது வந்து படித்து கருத்திட்டால் மகிழ்ச்சியடைவேன்.. ! நன்றி!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வாங்க சகோதரி...
நீக்குரொம்ப நாளாச்சேன்னு பாத்தேன்... அதுக்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,
எத்தனை அருமையான அன்பான உறவுகள்!!!! மிக மிக அழகான நட்புறவுகள்! என்ன ஒரு அன்பு! இது போன்றவற்றை நாம் உணரும் போது இருப்பதை வேறு எந்தவிதத்திலும் கொண்டுவருதல் கடினம்தான்.....மனதை நெகிழ வைத்த அன்பு!!! இப்படியான நல்ல மனிதர்கள் தங்களுக்குக் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குவாங்க துளசி சார் / கீதா மேடம்
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எவ்வளவு சிறப்பான , அன்பான உறவு! அம்மா என்றும் நீங்கள் சொன்னது போல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
பதிலளிநீக்குவாங்க அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எத்தனை அன்பான பாச உறவுகள்
பதிலளிநீக்குமனதை நெகிழச் செய்த பதிவு நண்பரே
நன்றி
தம +1
வாங்க ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மிக அருமையான உறவு குமார். எனக்கும் என் தோழிகளின் அம்மாவும் என் தமிழம்மா சுசீலாம்மாவும் இப்படித்தான் பொக்கிஷம். :)
பதிலளிநீக்கு