செவ்வாய், 20 ஜனவரி, 2015

வெள்ளந்தி மனிதர்கள் : 6. திரு. லெட்சுமணன்

திப்பிற்குரிய லெட்சுமணன் அவர்களின் பேரை மட்டும் சொன்னால் அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பேனாக்கடை லெட்சுமணன் என்றால் எல்லாருக்கும் தெரியும். தேவகோட்டையில் ஸ்டேட் பாங்க் வீதியில் (குதிரை வண்டிச் சந்துங்கிற பேரு இப்ப மறைந்து விட்டது) பேனாக்கடை வைத்திருக்கிறார். இன்றைய வெள்ளந்தி மனிதராய் இவருடனான உறவைக் கொஞ்சம் நினைவில் நிறுத்திப் பார்க்கலாம்.

பள்ளியில் படிக்கும் போது மை ஊற்றி எழுதும் பேனா வாங்குவதற்காக இவரின் கடைக்குப் போவோம். நான்கு பக்கம் கட்டை வைத்து வயரால் பின்னப்பட்ட அடிப்பலகை போட்டு அமர்ந்திருப்பார். சிவப்பாக, பெரிய உருவமாக, தங்கப்பல் தெரிய சிரித்தபடி செட்டியார் மாதிரி இருப்பார். வகை வகையாக பேனாக்களை அட்டையில் வைத்திருப்பார். எடுத்துக் கொடுத்து பிடித்ததை எடுத்துக்கச் சொல்லி அதற்கு மை ஊற்றி ஒரு பேப்பரில் கிறுக்கிப் பார்த்து பின்னர் நம்மை எழுதச் சொல்லி கையில் கொடுப்பார். பணம் கொடுக்கும் போது 'கொஞ்சம் குறைச்சுக்கங்க ஐயா' என்று சொன்னால் போதும் கோபம் சுருக்கென்று வரும். 'இங்க லாபத்துக்கு விக்கலை தம்பி. வாங்குறதை விட 25 காசு 50 காசு சேர்த்து விக்கிறேன் அம்புட்டுத்தான்... வேணுமின்னா மத்த கடையில விசாரிச்சிட்டு வாங்க... நம்ம கடையிலதான் கொறச்ச விலை' என்று சொல்லியபடி பணத்தை பெற்றுக் கொள்வார்.

இப்படியாக பேனா வாங்கும் நேரத்தில் மட்டுமே அவரைச் சந்தித்தவன், கல்லூரியில் படிக்கும் போது திரு. பழனி ஐயாவால் கலையிலக்கியப் பெருமன்ற உறுப்பினரான போது அங்கு பொருளாளராக இருந்த லெட்சுமண ஐயாவுடன் (பின்னாளில் அப்பா என்றோம்) நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. 'என்னப்பா இன்னும் இழுத்துப் போட்டுக்கிட்டு கெடக்கீக... சட்டுப் புட்டுன்னு வேலையை முடிக்க வேண்டாமா...?', 'இதையே இப்படி இழுத்துக்கிட்டு இருந்தா... சாயந்தரம் அடிகளார் நிகழ்ச்சி இருக்குப்பா...', 'சாப்பாடு திருப்தியா இருக்கணும்... வாறவன் வாய்க்கி வந்த மாதிரி பேசிடக்கூடாதுல்ல...' என பேசியபடி எல்லா வேலையிலும் ஒரு இளைஞனைப் போல் தன்னையும் இணைத்துக் கொள்வார்.

இந்த நட்பின் வாயிலாக நானும் முருகனும் அவரின் வீட்டுக்கும் கடைக்கும் செல்லும் பிள்ளைகளானோம். அவரின் இரண்டாவது புதல்வன் லெனின் எங்களுக்கு நட்பானார். அவருடன் கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். கலையிலக்கியப் பெருமன்றத்தின் பாரதி விழாவுக்கு இரவு உணவு பூவநாதன் ஐயா வீட்டில் பணம் கொடுத்து செய்து வாங்கி வருவோம். ஐயாவின் இறப்புக்குப் பிறகு அது சரி வராது போகவே, கடையில் வாங்கினோம். அதில் திருப்தி இல்லாததால் அடுத்த விழாக்களில் எல்லாம் பெருமன்றம் மூலமாக பொருட்களை வாங்கி தனது வீட்டிலேயே செய்து கொடுக்க ஆரம்பித்தார்.

விழா நடக்கும் போது எங்களை அழைத்து நம்ம வீட்ல சாப்பாடெல்லாம் தயாரா இருக்கும். ஒரு ஆட்டோ எடுத்துக்கிட்டுப் போயி தூக்கிக்கிட்டு வந்துருங்க என்பார். அதன்படி அங்கு சென்றால் எல்லாம் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும். அம்மாவோ அவரின் மகளோ இருப்பார்கள். சொல்லி எடுத்து வந்தால் அவர்களும் விழா அரங்கிற்கு வந்துவிடுவார்கள். விழா முடியும் தருவாயில் பந்திக் கட்டுல போயி எல்லாம் ரெடி பண்ணுங்கப்பா... சாப்பாட்டை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல, அவர் மனைவி, மகள் மற்றும் நாங்கள் என எல்லாருமாக நின்று பரிமாறி விழாவைச் சிறப்பாக முடிப்போம்.

கலையிலக்கியப் பெருமன்ற வரவு செலவு விவரங்கள் அடங்கிய சின்ன பேக்கை கையில் இடுக்கிக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்வார். 'பழனி சார்... அடுத்த வருசத்துக்கு இது சரியா வராது. வேற மாதிரி பண்ணனும்...', 'ஊர்வலத்தை இன்னும் சிறப்பா பண்ணியிருக்கணும்...' என முடிந்த விழாவில் வரும் ஆண்டுக்கான விழா குறித்த திட்டங்களைப் பேசுவார். செயலர் முருகன் அண்ணனை எப்பவும் கூப்பிட்டு எதாவது சொல்லுவார்.

கல்லூரி நாட்களில் மாலை வேளைகளில் எங்கள் குழு ஐயா வீட்டில் தஞ்சமடைந்துவிடும். நான், முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, தமிழ்குமரன் மற்றும் ஐயாவின் மகள் மணிமேகலை என கூட்டமாய் அமர்ந்து அரட்டை அடிப்போம். ஐயாவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்போம். எங்களுடன் எதிர் வீட்டில் இருந்த ஜெயலட்சுமி அக்கா, அவரின் தம்பி சுதந்திர குமார் மற்றும் அவரின் தங்கை என அவர்களும் இணைந்து கொள்ள நீண்ட நேரம் எங்கள் பேச்சு தொடரும்.

ஐயா வெளியில் கிளம்ப ஆயத்தமாகிவிட்டால் எல்லாரும் களைந்து விடுவோம். நானும் முருகனும் ஐயாவுடன் சைக்கிளை உருட்டியபடி பேசிக்கொண்டே வருவோம். ஒரு சில நாள்களில் 'வாங்கய்யா பேனாக்கடை லெட்சுமண அண்ணனைப் பார்த்துட்டுப் போவோம்' என ஐயா சொல்வார். அங்கு சென்றால் 'என்ன பழனி சார்... ரெண்டு பிள்ளைங்களும் எப்போதும் உங்க கூடத்தானோ...?' என்று கேட்டுவிட்டு வெள்ளந்தியாய்ச் சிரிப்பார். 'டீ சாப்பிடுங்கய்யா...' என்று கடையில் இருக்கும் அண்ணனிடம் போய் டீ வாங்கி வரச் சொல்லுவார். செம்மலர் கட்டுரைகளையும் தாமரையில் பொன்னீலனின் எழுத்தையும் விலாவாரியாக ஐயாவிடம் சொல்லிச் சிலாகிப்பார். அப்புறம் பேச்சு கலையிலக்கியப் பெருமன்றச் செயல்பாடுகளில் வந்து நிற்கும். 

மாதக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் பள்ளியில் கொஞ்சம் பிரச்சினை எழுந்த போது தன் வீட்டில் சில மாதங்கள் நடத்த இடங்கொடுத்ததுடன் எல்லோருக்கும் காபி வடையெல்லாம் கொடுக்கச் சொல்லி அமர்க்களப்படுத்தினார். எப்பவும் கடையில்தான் இருப்பார். மதியம் சாப்பிட்டு விட்டு சிறிது தூங்கி விட்டு கடைக்கு வந்தால் பின்னர் இரவுதான் செல்வார். அவரின் இரண்டு மகன்களும் அவருடன் கடையில் இருந்து கடையை நடத்தினார்கள்.

எப்போது ஊருக்குப் போனாலும் அவரைப் பார்ப்பேன்... இப்போது ரொம்பத் தளர்ந்திருந்தார். கடையில் அதிக நேரம் உக்காருவதில்லை போலும். எப்போதாவதுதான் கடைக்கு வருவேன்... முன்ன மாதிரி உக்கார  முடியிறதில்லை... வேலை பாக்கவும் கண்ணு மட்டுப்படலை என அவரே சொன்னார். 

இந்த முறை வாட்ச்சுக்கு வார் மாற்றுவதற்காகப் போனேன். கல்லாவில் அமர்ந்திருந்தார்... என்னை பார்த்து விட்டு பேசாமல் அமர்ந்திருந்தார். நானும் சிரித்து விட்டு என்னடா ஆளைத் தெரியலை போல என்று நினைத்தபடி பணம் கொடுக்கப் போனபோது என்னைத் தெரியுதாப்பா? என்று கேட்டேன். 'ஏந்தெரியாம... நீ நம்ம குமாருதானே...? வந்த வேலை முடியட்டும் பேசுவோம்ன்னு பார்த்தேன்... உன்னையும் முருகனையும் மறக்க முடியுமா என்ன? எப்படிப்பா இருக்கே? எங்க இருக்கே? குழந்தைங்க எப்படியிருக்காங்க? முருகன் வீடு கட்டிட்டான் போல... நீ கட்டலையா..? எனக் கேள்விகளை அடுக்கி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அதன் பின்னர்தான் மேலே இருக்கும் பாராவில் சொன்னதைச் சொன்னார்.

பேனாக்கடை லெட்சுமணன் என்ற அந்த தங்கப்பல் கட்டிய சிங்கம், நாங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலையிலக்கியப் பெருமன்றத்தில் கோலோச்சியிருந்தது. இன்றைய நிலையில் உடல் தளர்ந்து முதுமை ஆட்கொள்ள.. தள்ளாத வயதில்... கலையிலக்கியப் பெருமன்ற செயல்பாடுகளில் எல்லாம் இருந்து விலகி இருப்பார் என்று நினைக்கிறேன். முதுமையின் பிடியில் இருக்கும் அவர் கஷ்டங்கள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து செல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

22 கருத்துகள்:

  1. தங்களின் வெள்ளந்தி மனிதர் ஐயா லட்சுமணன் அவர்கள் நலமுடன் வாழ நானும் பிரார்த்திக்கின்றேன் நண்பரே....
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. லட்சுமணன் ஐயா நலமாக இருக்க வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம்

    ஐயா நலமுடன் வாழ வேண்டுகிறேன்.த.ம4
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. லட்சுமணன் ஐயா அவர்களின் நலத்திற்கு நானும் தங்களுடன் வேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரி.....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. நல்ல மனிதரின் அறிமுகம்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோதரா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. முதுமையின் பிடியில் இருக்கும் அவர் கஷ்டங்கள் எதுவுமின்றி சந்தோஷமாக வாழ வேண்டிய வாழ்க்கையை வாழ்ந்து செல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.// பிரார்த்திக்கின்றோம். அருமையான மனிதரின் அறிமுகம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பது ஊர்ஜிதமாகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார், கீதா மேடம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. எனது பிரார்த்தனைகளும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. திரு லட்சுமணன் நலமாய் வாழ எங்கள் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. க.இ.பெ.ம நினைவலைகள் அருமை
    நாங்களும் அவர் நலனோடு இருக்கவே ஆசைப்படுகிறோம்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மது சார்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. தோழருக்கு நீங்க வேண்டிக்கிட்டது சரிதான் ,அவர் நாத்திகராய் தானே இருப்பார் ?
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி