கமல்... தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல... இந்தியத் திரையுலகம் மட்டுமல்ல... உலகத் திரையுலகமே வியந்து நோக்கும் ஒரு நடிகன். இது கமலின் பிறந்தநாளுக்காக பகிரும் பகிர்வாக மட்டுமில்லாமல் இந்த 55 வருட சினிமா வாழ்க்கையில் இன்னும் எதையோ தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கலை ரசிகனைப் பற்றிய பகிர்வு என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன்.
கமல் படங்களைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் விரும்பிப் பார்த்தேனோ இல்லையோ கமலுக்கு ரசிகனாய் இருந்தேன். பொங்கல் வாழ்த்து அட்டையில் வரும் கமலின் படங்கள் யாருக்கும் அனுப்பாமல் வாங்கி வைத்திருக்கிறேன். தேவகோட்டையில் எப்போதாவது மூன்று நாட்களுக்கு மட்டும் நல்ல படங்களை போடுவார்கள்... பெரும்பாலும் தீபாவளி பொங்கலுக்கு முன்னர் சில நாட்கள் பல பழைய படங்களைப் போடுவார்கள். பள்ளியில் படிக்கும் போது அம்மாவின் அனுமதியுடன் அவருடன்தான் செல்ல வேண்டும். அதனால் திரும்ப திரைக்கு வந்தாலும் பார்க்க முடியாமல் போன கமலின் ஆரம்ப கால படங்களை எல்லாம் தூர்தர்ஷன் உதவியில்தான் பார்த்து ரசிக்க முடிந்தது. அப்படி பார்த்த படங்களில் வாழ்வே மாயம், சட்டம், 16 வயதினிலே, சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, என ஒரு பெரிய அட்டவணையைச் சொல்லலாம்.
கமல் நடிப்பில் வந்த எல்லாப் படங்களுமே பிடிக்கும் என்றாலும் என்னை ரொம்பக் கவர்ந்த குணா, தேவர் மகன் போன்ற படங்களின் வரிசையில் படங்களில் சலங்கை ஒலிக்கு என தனி இடம் உண்டு. கமலின் பரத நாட்டியத்தை அதில் பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர் நடனத்தைக் குறைத்த பிறகு ஏதாவது ஒரு படத்திலாவது மீண்டும் அதுபோல் ஒரு நடனம் வைக்க மாட்டாரா என நினைத்துண்டு. மன்மதன் அம்பு படத்தில் முதல் பாடலில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது மனிதர் மேலே குதித்து ஒரு காலில் மற்றொரு காலைத் தட்டுவார். ஆஹா... இன்னும் நடன நெளிவுகள் அப்படியேதானே இருக்கு... ஏன் இந்த மனிதர் அப்படிப்பட்ட நடனங்களைக் குறைத்து விட்டார் என்றே தோன்றியது. சொல்ல விட்டுட்டேனே கமலின் சலங்கை ஒலியை எத்தனையோ முறை பார்த்து ரசித்திருக்கிறேன்... கொஞ்ச நாள் முன்னர் கூட யூடியூப் உதவியில் மீண்டும் பார்த்து ரசித்தேன்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு படத்துக்கு போவது என்பது ரொம்ப அரிது.... காரணம் முதல் வருடத்தில் அப்படி எண்ணமே தோன்றவில்லை... இரண்டாவது வருடத்தில் தோன்றினாலும் நம்மூருப் பயலுக எல்லாம் தேவகோட்டைக்குள்ளதான் திரிவானுங்க... நாம போயி... அவனுங்க பாத்து வீட்டுல வத்தி வச்சிட்டா என பயந்தே போவதில்லை... மூன்றாம் ஆண்டில் பெரும்பாலும் மதிய வகுப்புக்கள் இருப்பதில்லை என்பதால் வா பங்காளி... இது கடைசி வருடம் இன்னமும் சின்னப்பிள்ளையாட்டம் இருக்கே என நட்புக்கள் அழைக்க பார்த்த படங்கள் ஏராளம்... திரையரங்கில் பார்த்த சொந்தங்களும் ஏராளம்தான்... ஆனா ஒருத்தரும் வீட்டில் சொல்லவில்லை.
அப்படிப் பார்த்த் படங்களில் மூன்றாம் பிறையும் ஒன்று... பாலு மகேந்திராவின் கைவண்ணத்தில் வெளிவந்த அற்புதமான படைப்பு... சிலுக்கு கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் வேண்டுமானால் மோசமாக... இப்ப மோசமாக என்று சொன்னாலும் கல்லூரிப் பருவத்தில் அதை ரசிக்கும் மனநிலைதான் இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன... அருமையான படம்... கமலுக்கு இணையாக ஸ்ரீதேவியும் நடித்திருப்பார்... கடைசிக் காட்சியில் மனிதர் ஒரு சாதாரண சுப்பிரமணி, பைத்தியமாக இருந்தாலும் பார்த்துப் பார்த்து காத்து காதலித்த பெண் நலமாகி அவனை மறந்து போகும் போது என்ன மனநிலையில் இருப்பான் என்பதை கடைசி நேர இரயில்வே ஸ்டேசன் காட்சிகள் சொல்லிவிடும். மனுசன் பின்னிப் பெடலெடுத்திருப்பார்.
நடிகர் திலகத்தின் கலையுலக வாரிசாக இருந்தாலும் அவரைக் காட்டிலும் கலைத்தாகம் கொண்ட நடிகர், ஒவ்வொரு படத்துக்கான தேடல்தான் மனிதரை இத்தனை வருடங்களாக சினிமாவில் நிறுத்தி... உலக நாயகன் ஆக்கியிருக்கிறது. எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையும் அந்த கடின உழைப்பும் இன்று வரும் நடிகர்களிடம் இருந்தாலும் இந்தளவுக்கு இவரைத் தவிர வேறு எவரிடமும் இல்லை என்று சொல்லலாம். எத்தனை விதமான கெட்டப்புக்கள்... எப்படிப்பட்ட நடிப்பு... பார்த்து வியக்க வைக்கும் நடிகன்... கமல்.
கமலின் பாடல்களில் எத்தனையோ பாடல்கள் என்னைக் கவர்ந்திருந்தாலும் 'உனக்கென்ன மேலே நின்றாய்...' நான் எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல்... அலுவலக நேரத்தில் இந்தப்பாடலை தொடர்ந்து பலமுறை கேட்டபடி வேலை செய்திருக்கிறேன். என்னவோ தெரியவில்லை... அந்தப் பாடலின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. அதேபோல் 'சிப்பி இருக்குது... முத்தும் இருக்குது', 'நஞ்சை உண்டு புஞ்சை உண்டு', 'வரம் தந்த சாமிக்கு' இப்படி நிறைய பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் சில கலைஞர்களில் முதன்மையானவர் கமல். பல படங்களில் போட்ட காசை இழந்தாலும் சில படங்கள் இவரைத் தாங்கிப் பிடித்துவிடும். அப்படி தாங்கிப் பிடித்த படங்களால்தான் இவரும் இன்னும் தாக்குப் பிடித்து நிற்கிறார் என்ற உண்மையை உரக்கச் சொல்லலாம். கமலின் கலைத்தாகம் ஒவ்வொரு படத்திலும் அதிகரித்துக் கொண்டே போவதால்தான் அவரின் படங்கள் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசம் காட்டி வருகின்றன. தொடரும் அவரின் கலைத்தாகம் இன்னும் நல்ல திரைப்படங்களை தமிழ் திரையுலகுக்கு அளிக்கட்டும். வாழ்த்துக்கள் கமல் சார்.
முதலாவது அற்புதம்...
இன்று நம்ம அண்ணாச்சி கில்லர்ஜி அவர்களைச் சந்தித்தேன். பெரிய மீசையுடன் அவரின் படத்தைப் பார்த்திருந்ததால் வில்லன் போல் ஆஜானுபாகுவாய் இருப்பார் என்று நினைத்திருந்தேன்.. ஆளைப் பார்த்ததும்தான் தெரிந்தது வச்சிருக்கும் மீசைக்கும் மனிதருக்கும் உள்ள வித்தியாசம்... வில்லனில்லை... மிகச் சிறந்த நாயகன் என்பதை அவருடன் பேசிய அரைமணி நேரத்தில் தெரிந்து கொண்டேன். தேனம்மை ஊரணிப் பக்கம் அக்கா வீட்டையும் அத்தானையும் சொன்னதும் 'அவரா அவரை நான் மாமான்னுல்ல சொல்லுவேன்...' என சொல்லி ஆச்சரியப்பட வைத்தார். பேச்சு மூச்சு எல்லாமே மனிதருக்கு வலைதான்... நல்ல சிந்தனைகள்... அருமையான ஒரு உறவை எனக்களித்த இறைவனுக்கு நன்றி.
இரண்டாவது அற்புதம்...
அண்ணன் கில்லர்ஜி அவர்களுடன் நேரில் அரை மணி நேரம் பேசினால் மகேந்திரன் அண்ணனோ தனது அலுவலகப் பணியிலும் போனில் என்னுடன் அரை மணி நேரம் பேசியிருக்கிறார். பல விஷயங்களை மனிதர் சிரிக்கச் சிரிக்க பேசினார். எனது சொந்தங்களே சொல்லாத எனக்கான சில காரியங்களில் நான் முன் நிற்கிறேன் என்று சொன்னபோது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியை விட கண்கள் கலங்கவே செய்தன. ஏன்னா நீ இப்படியா... எப்படி இதிலிருந்து வெளியே வரப்போறே... என கைகொட்டி சிரிக்கும் சொந்தங்களைச் சந்தித்த எனக்கு என்ன இதுதானே குமார்.,.. விடுங்க... நான் இருக்கேன் என்று இன்னும் குரலில் மட்டுமே உறவாய் இருக்கும் அவர் சொன்னது மிகுந்த பலத்தைக் கொடுத்தது. கடலுக்குள் வேலை... நேற்றெல்லாம் 100 கி.மீ காற்று வீசியதாம்... என்ன செய்வது இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை... இதைப் புரிந்து கொண்டவர்கள் சிலரே... அண்ணா... உங்களைச் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்... இறைவன் அந்த நாளை விரைவில் வரச்செய்யட்டும்.
-'பரிவை' சே.குமார்.
மூன்றாம் பிறை, சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி இவைகள் எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது. சலங்கை ஒலியில் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். கலை தாகம் விடாது தொடர்ந்து உள்ள மனிதர்கள் சிலரே... அதில் இவர் மனுசனே இல்ல பிசாதுமாதிரி (நல்லவிதமாகத்தான்)குறியா செய்து சாதிப்பார்.
பதிலளிநீக்குநண்பர்களின் சந்திப்பு..சந்தோஷம்.
இனிய வணக்கம் சகோதரர் குமார்....
பதிலளிநீக்குஇப்போதான் பேசிட்டு வைச்ச மாதிரி இருந்துச்சி அதுக்குள்ளே பதிவாயிடுச்சு...
நினைவுகளையும் நீங்கக்கூடாத சொந்தங்களின் உணர்வுகளையும் சுமந்துகொண்டு
வெளிநாடுகளில் இருக்கும் நம்மைப் போன்றோருக்கு நாம் தானே உறவு குமார்.
நிச்சயமாக சந்திப்போம் ஒரு வசந்த தினத்தில் அப்போது தமிழ்த் தோட்டமிட்டு
தீந்தமிழ் ஊஞ்சலிட்டு அளவளாவுவோம்.....
நண்பர் கில்லர்ஜீ யிடமும் பேசினேன்... தாளாத சோகங்களை மனதில் சிறைவைத்துக் கொண்டு
தமிழின் பால் உள்ள காதலால் தனது நிலைதனை உறுதியாக்கிக் கொண்டிருப்பவர்...
மீசைதான் முரடே தவிர மனிதர் மனது இலவம் பஞ்சு...
=====================
கலைஞானி கமலஹாசன் அவர்கள் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம் ...
கலைவுலகின் மகாநதி ...அவர்.
தொழில் பக்தி அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று...
நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு...
நண்பர்களுடன் சந்திப்பு என்பது என்றுமே பேரானந்தம்தான்
பதிலளிநீக்குtha ma 3
பதிலளிநீக்குமீண்டும் கமலைத் திருப்பிப்பார்க்க வைத்தமைக்கு நன்றி...அற்புதமானக் கலைஞன்..நான் மிகவும் நேசிக்கும் மனிதன்...
பதிலளிநீக்கு"உனக்கென்ன மேல நின்றாய்..." மிகவும் பிடித்த பாடல்... மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்...
பதிலளிநீக்குவரும் ஆண்டு புதுக்கோட்டையில் அனைவரும் சந்திப்போம்... இப்போதே தயார் செய்து கொள்ளுங்கள்...
சிறந்த திறனாய்வுப் பார்வை
பதிலளிநீக்குதொடருங்கள்
பதிலளிநீக்குநண்பா இதை தாங்கள் வெளியிட்ட மறுநிமிடமே... படித்து விட்டேன் என்ன எழுதுவது என ஆலோசித்துக் கொண்டே.......... இருந்தேன் சகோதரி உமையாள் அவர்களிடமிருந்து கருத்துரை வந்தது அதையும் பார்த்தேன், கவிஞர் மகேந்திரனிடமிருந்து வந்தது பார்த்தேன் மீண்டும் என்ன எழுதுவது என ஆலோசித்துக்கொண்டே.......... இருந்தேன் உறங்கியும் விட்டேன்... சரி எதாவது எழுவோமே அப்பிடினு பேனைவை எடுத்தேன் (விரல்களைத்தான்)
கமல்,
ஒரு முழுமை பெற்ற தமிழ்க் கலைஞன் என்பதில் நான் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் அறிந்ததே அவரின் மாறுபட்ட சிந்தனைகள், எமக்கு என்றுமே பிடிக்கும் சிறந்த எழுத்தாளரும்கூட சினிமாவில் 90 சதவீதம் மூக்கை நுனைத்தவர் இந்தத் தமிழனை நினைத்து நிறைய பெருமைப்பட்டுள்ளேன், சிறிது சிறுமையும் கொண்டுள்ளேன் ஒருமுறை 1983 சென்னை விமான நிலையத்தில் டெல்லியில் மூன்றாம் பிறைக்கு அவார்டு வாங்கி வருகிறார் முதல் வராண்டாவில் நானும் ஒருபெண்ணும் மட்டுமே தொடும் தூரத்தில் நின்றிருந்தோம் என்னுடன் நின்றபெண் கமலை கட்டிப்பிடிக்காத குறையாக பிடித்து நிற்கிறார் கண்ணாடியால் வேய்ந்த அடுத்த வராண்டாவில் எல்லோரும் இவரை பிரமாண்டமாய் பார்க்க இவர் என்னை தீர்க்கமாய் பார்த்தார் காரணம் நான் அவரை இயல்பாய் பார்த்தேன் தலையை அசைத்து அழைத்தார் நான் கை கொடுத்து ‘’நான் உங்க ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் ‘’தெரியும் உனது பார்வையே சொல்லுச்சு, ரஜினி ரசிகரா ?’’ ‘’இல்லை ஸார்’’ ‘’பின்னே ?’’ ‘’நான் யாருக்குமே ரசிகர் இல்லை ஸார்’’ என்றேன் உடன் அவர் கையை பிடித்து குலுக்கினார் ‘’நல்லது இப்படியே இரு’’ இது ஐந்து நிமிடத்தில் நடந்து முடிந்து விட்டது கூட்டம்கூட நான் நசுக்கி தூரத்தில் தள்ளப்பட்டேன் எனது பார்வையில் எனது மனதை படித்த கமலை அன்றிலிருந்து கவனமாக பார்த்துக்கொண்டு வருகிறேன் ஆனாலும் இன்றுவரை அவருக்கு நான் ரசிகர் இல்லை ஆனால் ? அவரது நடிப்பை ரசிப்பவன் இதுவரை எவனுக்கும் நான் ரசிகன் இல்லை (குறிப்பு கமல் பிறந்தநாளான இன்று எனக்கு வேண்டப்பட்ட நண்பர் மூலம் எமது வலைத்தள முகவரி கமலிடம் கொடுக்கப்பட்டது அவர் பார்ப்பாரா ? என்பது நானறியேன்) நடிகர்களால் சமூகத்திற்க்கு பிரயோசனம் இல்லையெனினும் இந்தத் தமிழன் நீடூழி வாழ வாழ்த்துவோமாக
கவிஞர் மகேந்திரன் அவர்களோடு பேசினேன் வரும் டிசம்பர் 3 ல் சந்திப்போம் 3 வரும், கவிதை நடையில் ஆறுதல் சொல்லி தேறுதல் சொல்லிய பாங்கான மனிதர் அவரைப்பற்றி நிறைய எழுதலாம்... பார்ப்போம் பதிவுகளில்...
அண்ணா!
பதிலளிநீக்குகமல் பற்றிய அட்டகாசமான தொகுப்பு எனக்கு மிக பிடித்த பாடலுடம்:)) மிக்க நன்றி அண்ணா!
ஆஹா! நாங்களும் எழுதியிருந்தோம்...நீங்களும் சூப்பர்!!!! அருமையான தொகுப்பு! மிகவும் ரசிக்கும் பாடல்கள்! அவர் ஒரு அற்புதமான கலைரல்லவா! ரசித்தோம்!
பதிலளிநீக்கு