சனி, 29 நவம்பர், 2014

தலைமுறை நேசம்

ப்பத்தா இறந்து விட்டாள் என ஊரிலிருந்து போன் வரவும் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதாள் செல்வி. அவளது அழுகுரல் கேட்டு வெளியிலிருந்து வேகமாக அறைக்குள் ஓடி வந்த அவளது தோழி "ஏய்... என்னாச்சுடி..?" என்று பதறினாள். பதில் சொல்லாது அழுதவள் தோழியின் தொடர்ந்த கேள்விக்கு அழுகையினூடே பதில் சொன்னாள். சற்று நேரம் பேசாமலிருந்தவள் "சரி நீ டாக்டருக்கிட்ட சொல்லிட்டுக் கிளம்பு... நான் பாத்துக்கிறேன்" என்று சொல்ல, "இல்ல ராத்திரி நேரத்துல நீ மட்டும் தனியா... அதுவுமில்லாம அப்பா கூட காலையில வான்னுதான் சொன்னார். சொந்த பந்தமெல்லாம் வந்து எடுக்க.." மேலே பேச முடியாமல் அழுகை அடைத்தது. "ஏய் அழுகாம கிளம்புற வேலையைப் பாரு... சொந்த பந்தம் வந்து சாயந்தரம் அடக்கம் பண்ணுனாலும் நீ விடியக் காலையில அங்க இருக்கலாம்... இந்த ராத்திரியில போறதுதான் நல்லது. காலையில வரைக்கும் அழுதுக்கிட்டே கெடப்பே... கிளம்பு முதல்ல..." என்று சொல்ல, டாக்டரிடம் விவரம் சொல்லி வேகவேகமாக அறைக்குச் சென்று கிளம்பி இதோ ராமேஸ்வரம் செல்லும் பேருந்தில் ஓடிவந்து ஏறி காலியாக இருந்த இருக்கையில் சன்னலோரமாக அமர்ந்து கொண்டாள். அழுகை மட்டும் அடங்கவே இல்லை... கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. 

'அப்பத்தா... என் உயிர்... உயிரு என்னை விட்டுப் போயிருச்சே... 'என நினைத்து நினைத்து அழுதாள். சட்டென அழுகை கேவலாய் வெடிக்க, இருந்த நாலைந்து பேரும் அவளைத் திரும்பிப் பார்க்க, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே பார்க்கலானாள்.

சாதாரணமாக குழந்தைகள் எல்லாமே ஆயா வீட்டுப் பக்கம்தான் பாசமாக இருப்பார்கள். அப்பத்தாக்களும் ஆயாக்களாக இருக்கவே விருப்பம் கொள்கிறார்கள். ஒரு சில அப்பத்தாக்கள் என்னதான் ஊட்டி ஊட்டிக் கொடுத்தாலும் பாசம் என்ற தராசில் அவர்கள் பக்கம் எப்பவுமே கீழிறங்குவதில்லை... இதற்கு செல்வியுடன் பிறந்த இரண்டும் விதிவிலக்கல்ல. ஆனால் செல்வி மட்டும் விதிவிலக்கு... அவளுக்கு சின்ன வயசு முதலே அப்பத்தாதான் எல்லாமே.... அப்பத்தாமேல அம்புட்டு பாசம் அவளுக்கு... விடுமுறைக்கு எல்லாரும் ஆயா வீட்டுக்கு கிளம்பினா இவள் மட்டும் அழுது ஆர்ப்பரித்து சொந்த ஊருக்குப் போயிடுவா.. அங்க என்னதான் இருக்கோ... நொப்பத்தா... நொப்பத்தான்னு கிடக்குறாக... வாடி ஆயா வீட்டுக்குப் பொயிட்டு வரலாம்ன்னு அம்மா சத்தம் போட்டாலும் கேட்கமாட்டாள். விடுமுறை முடிந்து திரும்பியதும் காஞ்சு கருவாடா வந்திருக்கே... சொன்னாக் கேட்டாத்தானே என்று கத்துவாள். ஆனால் செல்வி எதையும் காதில் வாங்கிக் கொள்ளமாட்டாள். இவுக எல்லாம் அப்படியே புசுபுசு தகதகன்னு வந்திருக்காகன்னு நினைச்சு சிரிச்சிப்பா... என்னடி சிரிப்பு வேண்டிக் கெடக்கு... சிரிப்பு என அம்மா கோபமாகப் பார்த்தாள் சிரித்தபடி விளையாடப் போய் விடுவாள்.

அப்பத்தா கருப்பாயி... பேருதான் கருப்பாயி... நல்ல செவப்பா உயரமா இருக்கும். காது வளத்து தண்டட்டி போட்டிருக்கும். ரெண்டு பக்கமும் மூக்குக் குத்தி கல்லு வச்ச மூக்குத்தி பெருசா போட்டிருக்கும். வெயில்ல போனா அது டாலடிக்கிற அழகே தனிதான். அப்பத்தாவின் மூக்குத்தி மேல ஆசை வந்து வயசுக்கு வந்த பின்னால அடம்பிடிச்சு ஒரு பக்க மூக்கு குத்திக்கிட்டா... அதுல சின்னதா ஒரு கல்லு வச்சி மூக்குத்தி போட்டிருப்பா... அது செல்வியோட அழகான மூக்க இன்னும் எடுப்பாக் காமிக்கும். அந்த மூக்குத்தி எம் பேத்திக்கு நாந்தான் வாங்கிப் போடுவேன்னு அப்பத்தா ராமநாதபுரத்துக்கு கூட்டிப் போயி தன்னோட சிறுவாட்டுக் காசுல இருந்து வாங்கிக் கொடுத்தது. இப்ப எத்தனையோ ரகம் ரகமான மூக்குத்தி வந்திருந்தாலும் அவளுக்கு இந்த மூக்குத்திதான் பிடிக்கும். மூக்கை விட்டு கழட்டவே மாட்டா... அந்த நினைப்பு வந்ததும் மூக்குத்தியைத் தடவிக் கொண்டாள்.

"என்னம்மா எங்க போகணும்?" கண்டக்டர் கேக்கவும் "ராம்நாடு ஒண்ணு கொடுங்கண்ணே... " என்று சொல்லி காசை நீட்டினாள். டிக்கெட்டும் சில்லறையும் கொடுத்து விட்டு அங்கிருந்து அடுத்த ஆளிடம் நகர்ந்தார். 

"ஏம்ப்பத்தா... காது உனக்கு மட்டும் இப்படி இருக்கு.. இது என்ன இம்புட்டு பெரிசா நகை போட்டிருக்கே... உனக்கு நகைன்னா அம்புட்டு இஷ்டமா?"ன்னு சின்னப் பிள்ளையா இருக்கும் போது அப்பத்தா பக்கத்துல படுத்துக்கிட்டு அந்த ஓட்டைக் காதுக்குள்ள விரலை விட்டுக்கிட்டு சிரிப்பாள். "ஏய்... எங்க காலத்துல காது வளக்குறது பேசனு.. எங்கப்பாரு எல்லாரையும் காது வளக்கச் சொன்னாரு... எனக்கு மட்டுமா இருக்கு,.. பெரியப்பத்தா, சின்னப்பத்தா எல்லாரும் காது வளத்திருக்கோமா இல்லையா... இப்ப ஆரு காது வளக்குறா... கண்ட எடத்துலயும் குத்தி தோடு போடுறீய கேட்டா பேசனுங்கிறியா? என்று சொல்லிச் சிரிப்பாள். அந்தக் காதும் அதில் ஆடும் தண்டட்டியும்தான் அப்பத்தாவுக்கு அழகு. எப்போவாச்சும் தண்டட்டிய கழட்டி அழுக்கெடுக்கிறேன்னு சுடுதண்ணியில போட்டு வைக்கும். அப்போ பாத்தா அப்பத்தாவோட காது பாக்கச் சகிக்காது.

வெளியில் லேசான தூறல் விழ ஆரம்பிப்பது வண்டியின் வேகத்தில் சன்னல் வழியே அவள் மீது விழுந்த துளிகளில் தெரிந்தது. அப்பத்தா நினைவில் இருந்து மீண்டு சன்னலை அடைத்தாள். வெளியில் காற்று பலமாக இருந்தது. படிக்கட்டு வழியாக வந்த காற்று சிலீரென்று முகத்தில் தாக்கியது. பேக்கில் இருந்த சால்வையை எடுத்து இறுக்கிப் போர்த்திக் கொண்டவள் அப்படியே அப்பத்தா நினைவுக்குள் சென்றாள்.

"பாருத்தா ரொம்ப குளிருதுல்ல... கொண்டாந்த சொட்டரைப் போட்டுக்க... நாளைக்கு சொரங்கிரம் வந்துட்டா உங்காத்தாவுக்கு பதில் சொல்ல முடியாது." என அப்பத்தா கத்திக் கொண்டே இருந்தாலும் சொட்டர் போடாமல் கிராமத்துக் குளிர் காற்றை அனுபவிப்பதில் செல்விக்கு தனி சுகம். சின்னப் பிள்ளையில் இருந்து இப்போது வரை ஊருக்கு வந்தால் ஸ்வெட்டர் போடுவதே இல்லை. ஐயாவின் கத்தலுக்காக அவரின் மப்ளரை எடுத்து தலையில் சுத்திக் கொள்ளுவாள். "நாஞ்சொன்னா நீ எங்கே கேக்குறே..? ஆம்பளப் பிள்ளையாட்டம் இதை சுத்திக்கிறே... இனி மழக்காலத்துல் நீ இங்க வராதே.." என அப்பத்தா பொய்க் கோபம் கொள்ளுவாள். உடனே செல்வி கோவித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியில் இருக்கும் கோழிக்கூண்டு மேல போயி உக்காந்துருவா... அப்புறம் அவ வந்து கெஞ்சிக் கூத்தாடி ராக்கப்ப சாமி கதை சொல்லி ஒரு வழியாக சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கணும் படுக்கும் போது அப்பத்தா அருகில் படுத்தாலும் குளிரில் அவளின் வயிற்றுக்குள் சுருங்கி அவளது கண்டாங்கிச் சேலைக்குள் தன்னை மூடிக்கொள்ள அடைகாக்கும் கோழி போல் செல்வியை அணைத்துக் கொண்டு தூங்குவாள். அந்தக் கதகதப்பில் அவளுக்கு குளிரே தெரியாது.

"என்ன கருப்பாயிக்கா... ரெண்டு நாளா அங்கிட்டு வரக்காணோம்" என முத்தம்மா அப்பத்தா கேட்டபடி வந்து படியில் அமரும். "என்ன தெரியாத மாதிரி கேக்குறே... எங்க செலுவி வந்திருக்கா... அவள விட்டுட்டு அங்கிட்டு வந்தா புள்ள ஏமாந்து போயிறாது" என்றபடி செல்வியை இழுத்து மடியில் வைத்துக் கொள்வாள். "அதானே... பேத்திய பாத்துட்டாத்தான் எங்கள மறந்துருவியே" என்று சொல்லி பேச்சுத் தொடரும்... உண்மைதான்... சாயந்தரமான முத்தம்மா வீட்டுக்குப் போறவ அங்க வர்ற மத்த பெருசுகளோட ஊரு விஷயமெல்லாம் பேசிட்டு ஏழு மணிக்கு மேலதான் வீட்டுக்கு வருவா. ஆனா செல்வி வீட்டுக்கு வந்துட்டா அங்கிட்டு இங்கிட்டு எங்கிட்டும் போகமாட்டா... வாசல்ல பேத்தி விளையாடுறதை பாத்துக்கிட்டே உக்காந்திருப்பா... யாராவது பேத்திய எதாவது பண்ணிட்டா உடனே சண்டைக்குப் போயிருவா... அந்த ஒரு வாரம் பத்து நாளு அவளுக்கு உலகமே செல்விதான்.

பனிரெண்டாவது விடுமுறையில் அதைப் படிக்கணும் இதைப் படிக்கணுமின்னு அம்மா கத்த பத்துநாள் அப்பத்தாக்கிட்ட இருந்துட்டு வாறேன்னு சொல்லி அப்பாவிடம் சம்மதம் வாங்கி வந்திருந்தாள். பக்கத்து வீட்டு சண்முகத்துக்கு அவள் மீது ஒரு கண்ணு... இது இன்னைக்கு நேத்து இல்ல... பத்தாவது லீவுல வரும்போதே அவளிடம் தொட்டுப் பேசுவதையும்... தனியாக மணிக்கணக்கில் பேசுவதையும் விரும்பினான். சின்ன வயதில் இருந்து ஒன்றாக இருப்பவன் என்பதாலும் அப்போது அவன் எதற்காக தன்னிடம் நெருக்கம் காட்டுகிறான் என்பதும் அவளுக்கு புரியவில்லை.சென்ற முறை வந்தபோது தனியாக இருந்தவளிடம் லெட்டர் கொடுத்தான்... வாங்கிப் பார்த்துவிட்டு அவனைத் திட்டி விட்டு யாரிடமும் சொல்லாமல் விட்டு விட்டாள். இந்த முறை அவளிடம் அடிக்கடி என்னை விரும்புறியா இல்லையா... இல்லைன்னா மருந்தைக் குடிச்சி செத்துருவேன்னு மிரட்ட ஆரம்பிக்க, பயத்துல அப்பத்தாக்கிட்ட அவன் என்னை லவ் பண்ணுறேன்னு சொல்லி மிரட்டுறான்னு சொல்லி அழுதா... 

அம்புட்டுத்தான் அப்பத்தா காளியா மாறிட்டா... "எவன்டா அவே எம்புள்ளய லவ் பண்ணுறேன்னு சொன்னவே... எந்த எடுபட்ட சிறுக்கி மவே... ஏன்டா கூதரைக் கழுதை... படிக்கிற வயசுல லவ்வு கேக்குதோ லவ்வு... அதுவும் எங்கூட்டு ராசாத்திய" அப்படின்னு குதிச்சி ஊருக்கே தெரியிற மாதிரி பண்ணிட்டா. அதுக்கு அப்புறம் அந்தக் குடும்பமே பேச்சு வார்த்தை வச்சிக்கவே இல்லை. இப்ப சண்முகம் சென்னையில ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான். சென்ற முறை பொங்கலுக்கு போனப்போ வந்திருந்தான்... என்ன செல்வி எப்படியிருக்கேன்னு கேட்டுட்டு பேசாம பொயிட்டான். அவன் பேசுனது தெரிஞ்சா அப்பத்தா மறுபடிக்கும் காளியா மாறிடும்ன்னு சொல்லவே இல்லை... எப்பவுமே செல்விக்கு அப்பத்தாவை அப்பத்தாவா பாக்கத்தான் ஆசை... பதரகாளியா இல்லை... 

வண்டி ஒரு ஊரில் நிற்க, சன்னலை மெதுவாக திறந்து பார்த்தாள். தெருவிளக்கு மசமசன்னு எரிஞ்சிக்கிட்டு இருந்தது. மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. வண்டி கொஞ்ச நேரம் நிக்கும் பாத்ரூம் போறவுக... டீக்குடிக்கிறவுக... பொயிட்டு சீக்கிரம் வாங்க என கண்டக்டர் சொல்ல இருந்த சொற்பக் கூட்டமும் இறங்கியது. இது மாதிரி மோட்டல்களில் சுத்தமா எதுவுமே நல்லாயிருக்காது. ஆனா மூணு மடங்கு விலை வைத்திருப்பார்கள். டிரைவர் கண்டக்டருக்கு இலவச சாப்பாடு, காபி... அதனால இங்க நிப்பாட்டாம போக மாட்டாங்க... அவளுக்கு பாத்ரூம் போனால் தேவலாம் என்று தோணியது தலையில் சால்வையை எடுத்துப் போட்டுக் கொண்டு சில்லரையும் எடுத்துக் கொண்டு இறங்கினாள். வயிற்றில் இருந்த பாரம் இறங்கினாலும் மனப்பாரம் இறங்காமல் இருக்க மீண்டும் பஸ்ஸூக்குத் திரும்பியவள் தண்னீரை எடுத்துக் குடித்தாள். எப்பவும் கொறிக்க எதாச்சும் வாங்கிக்கிட்டு வருவா... இன்னைக்கு இருந்த மனநிலையில் அதுக்கெல்லாம் எங்க நேரம்... எடுத்தாந்தாலும் கொறிக்கும் மனநிலை வருமா என்ன... எப்பவும் தண்ணீர் மட்டும் பயணத்தில் மறக்காமல் எடுத்துச் செல்வாள். மீண்டும் வெளியில் பார்க்க ஆரம்பித்தாள்.

ஒரு வாரம் முன்னாடி அப்பத்தாவுக்கு முடியாம வந்து விழுந்த போது வேலைக்கு லீவு போட்டு விட்டு அப்பாவுடன் கிளம்பி வந்து இரண்டு நாள் இருந்து விட்டுத்தான் போனாள். எப்பவும் சுறுசுறுப்பாத் திரியும் அப்பத்தா, சிரிக்கச் சிரிக்க பேசிக்கிட்டு இருக்கும் அப்பத்தா, வெள்ளை முடியை அள்ளிக் கட்டிக்கிட்டு கண்டாங்கிச் சேலையை தூக்கிக்கட்டிக்கிட்டு அம்புட்டு வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்க்கும் அப்பத்தா, அன்னைக்கு கட்டில்ல... ஒத்த கை காலு வெளங்காம... வாயைப் பிடித்து இழுத்து பேச முடியாம கிடக்கதைப் பார்த்ததும் கதறி அழுதாள். அவள் அழுவதைப் பார்த்ததும் கண்ணாலே அழுகாதே என்றாள். இரண்டு நாளும் பக்கத்துலே இருந்தா... சித்தியும்.. அத்தையும் நல்லா பாத்தாங்க... அம்மாதான் வந்துட்டு பசங்க ஸ்கூலு அது இதுன்னு அப்பாவோட ஓடிட்டா... ஆனா செல்வி ரெண்டு நாள் அங்கதான் இருந்தா... சுருக்கம் விழுந்த கையை எடுத்து எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டாள். இனி அப்பத்தா பிழைக்காது... எந்த நேரமும்  உயிர் போயிடும் என்பது தெரிந்ததும் அங்கயே... அந்த உயிர் போகும் போது பக்கத்துலயே இருக்க ஆசைப்பட்டா... ஆனா சித்தப்பாதான் நீ இங்க இருந்தா அதைப் பாத்துப்பாத்து அழுவே... அது உன்னையப் பாத்து அழுகும்... நீயும் சாப்பிட மாட்டே... அதுவும் சாப்பிடாது... அப்பத்தாவுக்கு ஒண்ணும் ஆகாது... அடுத்த கிடாவெட்டுக்கு எந்திரிச்சி அம்புட்டு வேலையும் பாக்கும் பாருன்னு வந்த அழுகையை மறச்சிக்கிட்டே செல்வியை அனுப்பி வச்சிட்டாரு.

ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொருவர் என தூங்கிக் கொண்டு வர, செல்விக்கு தூக்கம் வரவில்லை... வெளியே மழை இல்லை... இந்தப்பக்கம் மழை பேஞ்சிருக்காது போல... எப்ப ராம்நாட்டுப் பக்கம் நல்ல மழை பேஞ்சிருக்கு... காஞ்சு போன பூமிதானே... காரைக்குடி வரை அடித்துப் பேயும் மழை இப்பல்லாம் தேவகோட்டையில பேயிறதே அதிசயமா இருக்கு... அப்புறம் எப்படி திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாண்டி இங்க போயப்போகுது என நினைத்துக் கொண்டாள். காரைக்குடியில்தான் வீடு இருந்தது என்பதால் அங்கிருந்து பஸ் பயணம் என்பது அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். இப்போ நர்ஸ் படிப்பு முடித்து திருச்சியில் பணிக்கு அமர்ந்ததும் காரைக்குடி திருச்சிக்கு பயணிப்பது அவளுக்கு சாதாரண ஒன்றாகிவிட்டது. ஆனால் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு காரைக்குடியில் இறங்காமல் பயணிப்பது இதுதான் முதல் முறை. அதுவும் இரவு நேரப் பயணம்... ராமநாதபுரத்தில் இறங்கி அவளின் சொந்தக் கிராமத்துக்கு பேருந்தில் பயணிக்க வேண்டும். பஸ்ஸின் வேகத்தைப் பார்க்கும் போது இன்னும் அரை மணி நேரத்தில் போய் விடும் போல... அவளது ஊர்ப்பக்கம் போகும் பேருந்து அஞ்சு மணிக்குத்தான்... செல்போனில் மணி பார்த்தாள் மூணு பத்து ஆனது... எப்படியும் நாலு மணிக்குள் போயிடும்... ஒரு மணி நேரம் காத்திருக்கணும். பஸ்ஸ்டாண்டுலதானே என்ன பயம்? என்று நினைத்துக் கொண்டாள்.

எப்பவும் இவள் வருகிறாள் என்றால் விலக்கு ரோட்டில் அப்பத்தாவும் ஐயாவும் காத்திருப்பார்கள்... சின்ன வயதில் ஐயாவின் சைக்கிளில் அமர்ந்து கொள்ள, அப்பா, ஐயா, அப்பத்தா எல்லாரும் பேசிக்கொண்டே நடப்பார்கள். அவளா வர ஆரம்பித்த பிறகு அப்பத்தா இவளுக்காக காத்துக்கிட்டு இருக்கும்... இருவரும் பேசிக்கொண்டே நடப்பார்கள்... அப்பத்தா ஊர்ல நடந்த அம்புட்டுக் கதையும் சொல்லும்... அவ இவனை இழுத்துக்கிட்டு ஓடிட்டாடின்னு சொல்ல ஆரம்பிக்கும்... என்ன நினைக்குமோ தெரியாது... சரி கழுதை அதை விடு... நமக்கெதுக்குன்னு சொல்லி வேற கதைக்கு ஓடிடும்... ஆரம்பத்துல ஒண்ணுஞ் சொல்ல மாட்டா... இப்பல்லாம் அப்படிக்கதையை பாதியில நிறுத்துனா ஏம்பத்தா முழுசும் கேட்டா நானும் யாரையாச்சும் இழுத்துக்கிட்டு ஓடிடுவேன்னு பயப்படுறியான்னு சொல்லிச் சிரிப்பாள். நீ எங்க தங்கம்... உனக்கு அறுத்துப் போட்டாலும் அந்தப் புத்தி வாராதுடின்னு சொல்லி இறுக்கிப் பிடிச்சிக்கும். 

ஒரு வழியா ராமநாதபுரத்துல இறங்கி காத்திருந்து ஐந்து மணிக்கு கிளம்பி முதல் பேருந்தில் ஏற, ஏம்மா வள்ளியூர் வெளக்குல எறங்குறவங்க சில்லறையாக் கொடுங்க... அம்பது நூறுன்னு நீட்டுனா காலங்காத்தால எங்கிட்ட சில்லரை இல்லைன்னு கண்டக்டர் முன்னால கத்த, இந்த மாதிரி கிராமத்துப் பக்கக் போற பஸ்சுல கண்டக்டர்தான் பாவம்... இதுக அம்பது நூறைக் கொடுத்துட்டு அவரு போகயிலயும் வரயிலயும் அப்பு... மிச்சக்காசு தரணுமின்னு தொந்தரவு பண்ணுங்க... காலையில அவரு என்ன பண்ணுவாருன்னு நினைச்சிக்கிட்டே சில்லரையாக பொறக்கி வைத்துக் கொண்டாள். எப்ப ஊருக்கு வந்து திரும்பிப் போனாலும் பஸ்சுக்கு சில்லறையா வச்சிக்கன்னு அப்பத்தா சாமி உண்டியல்ல இருந்து சில்லரைக்காசை வெளக்குமாத்துக் குச்சிய விட்டு எடுத்துக் கொடுக்கும். எதுக்கப்பத்தா சாமி காச எடுக்கிறேன்னு கேட்டா... நம்ம சாமிதானே அப்புறம் சேத்துப் போட்டாப் போச்சுன்னு சொல்லிச் சிரிக்கும்... அந்த காசுல துணூரு வாடை இருக்கும்... என்ன பேத்தியா துணூரு தட்டுல இருந்து உங்க அப்பத்தா பொறக்கிக் கொடுத்தாளான்னு இந்த ரூட்ல போற விமலாவுல கண்டக்டரா இருந்த முத்து தாத்தா கேட்டுச் சிரிப்பாரு... அவரு செத்தும் ரெண்டு வருசமாச்சின்னு நினைக்கிறேன்... இந்த பஸ்ல ஓடியாந்து ஏறுறேன்னு கீழ விழுந்து செத்துப் பொயிட்டாரு. அவருக்கு விதிச்ச விதி பஸ்லதான்னு இருந்திருக்கு.

வள்ளியூர் வெளக்கு இறங்குறவங்க வெரசா இறங்குங்க என கண்டக்டர் கத்த... ஒரு சிலரோடு செல்வியும் இறங்கினா... அப்பத்தா காத்திருக்கும் புளியமரம் வெறுமை சுமந்து நிற்க, அந்த ஊரோ ஒரு மனுசியின் இழப்பைச் சுமந்து சோகமாய் தூரத்தில் தெரிய, ஒரு சில சமயம் அள்ளிக் கட்டிய கொண்டை அவிழ இடுப்பில் தூக்கிச் சொறுகிய சேலையில் முட்டி தெரிய ஓடிவரும் அப்பத்தா இன்று ஓடிவருகிறாளா எனப் பார்த்தாள்... தூரத்தில் நிழலாய் ஒர் உருவம் ஓடி வருவது போல் தெரிய 'அப்பத்தா' என பெருங்குரலெடுத்து அழுதாள்.

-'பரிவை' சே.குமார்.

(சிறுகதை இங்கு பதிவதை தவிர்த்து வந்தேன்... இரண்டு நாட்களுக்கு முன்னர் நண்பன்  சத்தம் போட உடனே  எழுதி சிறுகதை பதிவதில்லை என்ற விரத்ததை முடித்து இன்று பகிர்ந்தாச்சு...  நான் இப்படித்தான் எழுதணும் என சண்டை போட்ட நட்புக்கு நன்றி.)

16 கருத்துகள்:

  1. தாத்தா பாட்டி தலைமுறைக்கும், பேரன் பேத்தி தலைமுறைக்குமான தொப்புள்கொடியின் ஈரம் நனைந்த நெஞ்சத்தை மிக அழகாக சித்தரித்த விதம் அருமையான அழகு. இன்னும் இது போன்ற அழகான அருமையான நல்ல பதிவுகள் தொடர விரும்புகிறோம். தமிழுக்கும் தரணிக்கும் செய்யும் சிலரது எழுத்துக்களே வழிகாட்டலாய் அமையும்.

    பதிலளிநீக்கு
  2. கிராமிய எழுத்து நடையோடு கதை அருமை..இப்படி அடிக்கடி எழுதுங்கள் சகோ !! பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. இந்த உறவுகளும், ஈர நினைவுகளும் அனைவர் மனதிலும் என்றென்றும் நிலைத்திருக்கும் நண்பரே

    பதிலளிநீக்கு

  4. செல்வியை கண்டு மனம் கணத்து விட்டது...

    நண்பரே ஒரு சந்தேகம் வள்ளியூர் எங்கே வருகிறது ராமநாதபுரம் ஏரியாவில் ?
    திருநெல்வேலி மாவட்டத்தில் ஒன்று இருக்கிறது....

    த.ம.3

    பதிலளிநீக்கு
  5. உணர்வுமிக்க சிறுகதை. மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்கிவிட்டது. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  6. சிறுகதை விரதம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள். அந்த நண்பருக்கு ஒரு சபாஷ். சிறுகதைகள் தொடர்ந்து வலம் வரட்டும். தம 4

    பதிலளிநீக்கு
  7. எப்போதுமே இந்த தாத்தா பாட்டி உறவு என்பது மிகவும் மனதிற்கு உகந்த உறவு..பேரன் பேத்திகளுக்கு...

    ஈரம் மிக்க சிறுகதை.மனதைத் தொட்டது. தொடருங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. அன்பின் குமார்..

    தங்களின் பதிவினை நேற்றே படித்து விட்டேன்.

    அருப்புக் கோட்டை அருகே - பள்ளிக்குள் மாணவன் கொலை செய்யப்பட்ட செய்தியைப் படித்து மனம் கலங்கித் தவித்த நேரம் அது.

    அதனூடாக இந்தக் கதையைப் படித்ததும் மனம் கனத்து விட்டது.

    மனம் பதைக்கின்றது..

    பந்த பாசங்களின் பார்வையில் இருந்து வெகுதொலைவில் இருக்கும் எனக்கு இந்த மாதிரி கதைகளை - கதை என்றாலும் - தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. ஒரு கிராமத்து பேத்தியின் மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது கதை! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அருமையான கதை நண்பரே.....

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. பாட்டியை இந்த அளவு நேசிக்கும் உறவுகள் அரிது. உணர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  12. த ம ஏழு ...
    அருமை தோழர் தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. அப்பத்தாவின் நினைவுகள் என் நெஞ்சிலும் நிலைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி