திரைக்கதை ஆளுமை கே.பாக்யராஜ் பற்றித்தான் பார்க்கப் போறோம்.. இதற்குள் கிராமத்து நினைவுகளும் கலந்தே வரும்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது பாக்யராஜ் படங்கள் என்றால் தவறாமல் அம்மாவை நச்சரித்து பார்த்து விடுவது உண்டு. அவரது கதை பயணிக்கும் விதத்திற்காகவோ இரட்டை அர்த்த வசனத்திற்காகவோ பார்க்கும் வயதில்லை ஆரம்பப்பள்ளியில் படித்த காலம், நகைச்சுவைக்காகவே மட்டுமே அவரின் படங்களின் மேல் ஒரு ஒட்டுதல் இருந்தது என்பதே உண்மை.
தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துக்கள் வாங்கும் போது கமல் படமும் பாக்யராஜ் படமும் வாங்கி அனுப்பாமல் பத்திரமாக நமது சொத்தில் சேர்த்து வைக்கப்படும். என்னவோ அப்படி ஒரு கிரேஸ் இருவரின் மீதும்... பெரும்பாலும் எட்டாவது படிக்கும் வரை அம்மாவோடுதான் சினிமாவுக்குச் செல்ல முடியும். அது காலைக்காட்சியாக இருந்தாலும் சரி... மேட்னியாக இருந்தாலும் சரி... இல்லை இரவுக்காட்சியாக இருந்தாலும் சரி... அம்மாவை ஒரு வாரம் நச்சரிக்க வேண்டும். அம்மா ஊரில் அவரோடு சினிமாவுக்கு வரும் சொந்தங்களிடம் சொல்லி அவர்களையும் ஒத்துக்க வைத்து மறுவாரம் கூட்டிச் செல்வார்கள். அம்மாவுடன் அக்கா, நான், தம்பி மூவர் மட்டுமே இருந்ததால் மூவரும் அவருடன் அதிகமாய் படத்துக்குப் போய் இருக்கிறோம். சில படங்களை அம்மாவும் பஞ்சம்மாவும் கடைக்குப் பொயிட்டு வாறோம்ன்னு சொல்லி நைசாப் பாத்துட்டு வந்துருவாங்க. அது வேற விஷயம்... சரி பாக்யராஜ் சாரைப் பார்ப்போம் வாருங்கள்.
ஸ்கூல்ல படிக்கும் போது 'தூறல் நின்னு போச்சு' படம் பார்க்க அம்மாவை நச்சரித்து ஒரு வழியாக இரவுக்காட்சி பார்த்துட்டு வந்தாச்சு. அந்தப் படத்தில் நம்பியாரை ரொம்ப அருமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். பல முறை தொலைக்காட்சியிலும் சில முறை இணையத்திலும் பார்த்த போதுதான் அவரின் நடிப்பை ரொம்ப ரசிக்க முடிந்தது. காரணம் தூறல் நின்னு போச்சு பார்க்கும் போது நடிப்பை எல்லாம் சிலாகிக்கும் வயது இல்லை. அந்தப் படத்தின் நகைச்சுவை மற்றும் பாடல்களுக்காகவே ரொம்ப பிடிக்கும். பாட்டுப் பிடிக்கும்ன்னாலும் விரும்பிய நேரம் கேட்டு ரசிக்க வீட்டில் டேப்ரெக்கார்டர் இல்லை என்பதைவிட கரண்டே பத்தாவது படிக்கும் போதுதான் வீட்டிற்கு வந்தது என்பதே உண்மை..
வீட்டில் ஒரு நாலு கட்டை போடுற நேஷனல் ரேடியோ இருக்கும். அப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் அதில் நியூஸ் கேப்பார். எங்களுக்கு அதில் நாடகம், ஒலிச்சித்திரம், பாடல்கள் என கேட்பது பிடிக்கும். பேட்டரி மண்டையைப் போட்டுட்டா... அதான் பேட்டரி தீர்ந்து விட்டால் வெயிலில் வைத்தெல்லாம் இந்தப்படத்தின் பாடலைக் கேட்டிருக்கிறேன். சரி அடிக்கடி வண்டி வேற கிராமத்து நினைவுகளுக்குப் போயிடுது. பாக்யராஜ் கதைக்குள்ள போவோம்.
தூறல் நின்னு போச்சு பாத்த மறுநாள் பள்ளிக்கூடத்துக்குப் போயாச்சு... மத்தியானம் சத்துணவு சாப்பிட்டுட்டு பெரிய பசங்க மரங்குரங்கு (நம்ம ஊர்ல தவட்டாங்கம்பு) விளையாட, நான் செவனேன்னு ஒரு ஓரமா நின்னு பாத்துக்கிட்டு இருந்தேன். அப்பத்தான் நம்ம எட்டாப்பு சவரிமுத்து மரத்துல இருந்து கீழ குதிச்சான். சின்ன உடம்பு இல்ல... நல்லா கும்முன்னு இருப்பான். குதிச்சவன் நேர என்னைய செவத்துல தள்ளி பக்கத்து கல்லுல விழ வச்சிட்டான். முழங்கைக்குள்ள என்னமோ சொடக்குன்னு கேட்டுச்சு. அம்புட்டுத்தான் கொஞ்ச நேரத்துல சும்மா விறுவிறுன்னு வலி ஏறிடுச்சு. அப்புறம் எங்க பாப்பாத்தி டீச்சர் பாத்துட்டு கிளாஸ்ல உக்கார வச்சி ஈரத் துணியைத் சுத்தி விட்டாங்க. ம்ஹூம்... வீக்கம் பெரிசாகி வலி உயிர் போயிடுச்சு. உடனே பார்த்தாங்க... நம்ம ஊருப்பய ஒருத்தனைக் கூப்பிட்டு இவன வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னாங்க.
எனக்கு வீட்டுக்குப் போனா அம்மாக்கிட்ட பூஜை விழுகுமேன்னு ஒரே பயம்... இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும். போயி மெதுவாச் சொல்லியாச்சு. உடனே அம்மா நேத்து படம் பாத்துட்டு வந்து இன்னக்கி பள்ளிக்கொடத்துல போயி பாக்கியராஜூ சண்டை போட்டமாதிரி போட்டிருப்பாரு அதான் விழுந்து கையை ஓடிச்சிக்கிட்டு வந்து நிக்கிறாருன்னு அக்காக்கிட்ட சொல்லி நமக்கு நாலு மொத்து கொடுத்தாங்க... கை வலியோட முதுகு வலி வேற... அப்ப அறியாத வயசாப் போச்சு... இல்லேன்னா அப்பவே இப்படிக் கேட்டிருப்பேன்... ஆமா அவரு போட்ட சண்டை மாதிரி நா போட்டிருந்தாலும் அவரே ஏதோ சண்டையின்னு ஒண்ணு பண்ணுனாருன்னு... ஆனா நமக்கு அன்னைக்குத் தெரியாததால அம்மா அப்படிச் சொல்ல சரியான பதில் கொடுக்க முடியல... இப்ப யோசிக்கிறது அவரு போடுற சண்டையும் அதைப் பார்த்து நாம கையை ஒடிச்சிக்கிட்ட கதையும் காமெடியால இருக்குன்னு... அவரு சண்டையை நாம போட்டு கை ஒடிஞ்சது காகம் உக்கார பணம் பழம் விழுந்த கதைதான்.. போங்க...
ராத்திரி எங்க போயி மொடங்கட்டுறதுன்னு சொல்லி ஆவாரங்கொலையை பறிச்சாந்து ஏதோ பண்ணிக் கட்டுனாங்க... கொஞ்சம் வலி கொறஞ்சாலும் இரவெல்லாம் தூக்கமே இல்லை. மறுநாள் காலையில வேகவேகமாக் கிளப்பி எங்கூருல இருந்து கண்டதேவிக்கு கூட்டிக்கிட்டு வந்து (வரும்போது வழியெங்கும் ஒரே திட்டுத்தான்... அவங்க வலி அவங்களுக்கு... என்னோட வலி எனக்கு... வழியில முள்ளு வேற...) எட்டரை கே.எஸ்.எஸ்ல காரைக்குடி போயி அங்கிருந்து குன்றக்குடி நுடவைத்திய சாலை போனா... அவரு பேச்சுப் பேச்சா இருக்கும் போது கையை ஒரு ஒடி ஒடிச்சித்தான்யா கட்டுனாரு... அப்புறம் தொடர்ந்து வாராவாரம் போயி மாவுக்கட்டு, முட்டைப் பத்துன்னு போட்டுக்கிட்டு வந்தோம். தூறல் நின்னு போச்சு படம் பாக்க அஞ்சு ரூபா டிக்கெட்டா இருந்திருக்கும்... அப்புறம் செலவு பண்ணுனது.... ம்... படம் பாத்துட்டு செவனேன்னு நின்னவனை செவத்துல தள்ளுனது நம்ம சவரிமுத்து... அம்மாக்கிட்ட அதிகமா திட்டு வாங்குனது பாக்யராஜூ... பாவம் இந்தாளு என்னய்யா தப்பு பண்ணுனாரு.
இன்னுங் காமெடி இருக்கு... காலையில அவசர அவசரமா கிளம்பிக்கிட்டு இருப்போம். அந்தப் பஸ்ஸை விட்டுட்டா அப்புறம் கவர்மெண்ட் பஸ் வர ரெண்டு மணி நேரமாகும். குன்றக்குடி போயி வர்றது அப்படி அப்படித்தான்... அவசரமாக் கிளம்புவோமா அப்பத்தான் 'ஏரிக்கரை பூங்காத்தே' அப்படின்னு ரேடியாவுல பாட்டைப் போடுவானுங்க... உடனே மெதுவாக் கிளம்ப ஆரம்பிப்பேன்.. ஏன்னா பாட்டைக் கேக்கணுமில்ல... நம்மதான் பாக்யராஜோட தீவிர விசிறியாச்சே... என்னடா பஸ்ஸூ வந்துரும் கிளம்புடான்னு அம்மா கத்த, நீ போம்மா வக்கப்பொடப்பு (வைக்கோல் வைத்திருக்கும் இடம்) போறதுக்குள்ள வந்துருவேன்ன்னு சொன்னதும் மொட்டையாப் போவான் (சத்தியமா பாக்யராஜை இல்லைங்க) பாட்டைப் போட்டுட்டானுங்களா... இனி இவன் வந்த மாதிரித்தான்... படத்தைப் பாத்துட்டு வந்து கையை ஒடிச்சிக்கிட்டு இப்படி குன்னக்குடிக்கு லோ...லோன்னு அலைய விடுறே... இதுல பாட்டு வேற... பஸ்ஸூக்காரன் மாமனா மச்சானா நமக்காக நிக்கன்னு சத்தம் போடுவாங்க... இருந்தாலும் பாட்டைக் கேட்டுட்டுத்தான் போவேன்.
அப்புறம் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என வாழ்க்கைப் பயணம் வளர்ந்து வர, அம்மா துணையெல்லாம் இல்லாம நாமே படம் பாக்க போயாச்சு.. இது நம்ம ஆளு, வீட்ல விஷேசங்க, சுந்தரகாண்டம் அப்படின்னு தொடர்ந்து பாக்யராஜ் படங்களை விரும்பிப் பார்க்கும் போதுதான் அவரின் கதையைக் கொண்டு போகும் திறமையும் யாரும் எதிர்பார்க்காத கிளைமேக்ஸூம் என்னை மிகவும் கவர்ந்தது. சுந்தர காண்டம் படத்தோட பாடல்கள் எல்லாம் என்னோட டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் ஓடிக்கொண்டிருக்கும். அவர் நகைச்சுவையாகப் பேசினாலும் இரட்டை அர்த்த வசனம் பேசினாலும் டிரேட் மார்க் நடனம் ஆடினாலும் மனுசன் கதைக்குள்ள வச்சிருப்பாரு எல்லாத்தையும்... அந்தக் கதையோட்டத்தை அடிச்சிக்க இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமாவுல ஆளு இல்லைன்னு சொல்லலாம்.
பாக்யராஜ் அவர்களிடம் பிடித்த மற்றொன்று என்னன்னா... நாம மட்டும் கண்ணாடி போட்டு நடிச்சா கூட நடிக்கிற நடிகை அழகா இருக்காங்கன்னு அவங்களைப் பத்தித்தான் பேசுவானுங்கன்னு கணக்குப் போட்டு மனுசன் அம்புட்டுப் பேருக்கும் கண்ணாடியை மாட்டி விட்டுருவாரு... நம்ம எவர்கிரீன் பாடல்களின் தல ராமராஜன் லிப்ஸ்டிக் போட்டு நடிச்சது மாதிரி... மனுசனுக்கு இளையராசா பாட்டுப் போட்டிருப்பாரேய்யா... ம்ம்ம்... டவுசரைப் போட்டுக்கிட்டு செண்பகமே.... செண்பகமேன்னு பாடுனது இன்னைக்கு வரைக்கும் காதுக்குள்ள ஒலிச்சிக்கிட்டுத்தானே இருக்கு... எங்க தலையைப் பத்தி பேசினா நிறைய எழுதலாம்... அதுக்கு தனியா பதிவு எழுதுவோம். இப்ப திரைக்கதை நாயகன் பாக்யராஜை பாலோ பண்ணுவோம்.
அவரின் இயக்கத்திலும் மற்றவர்களின் இயக்கத்திலும் உருவான படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களே. எங்க சின்ன ராசா, அந்த ஏழு நாட்கள், இன்று போய் நாளை வா, மௌன கீதங்கள், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்னவீடு, புதிய வார்ப்புகள், சுவர் இல்லாச் சித்திரம், பாமா ருக்மணி என அவரின் படங்களை தொலைக்காட்சிகளில் பலமுறை பார்த்திருந்தாலும் அவ்வப்போது இணையத்திலும் பார்க்க தவறுவதில்லை.
கல்லூரியில் படிக்கும் போது டி.ராஜேந்தரின் உஷா, பாக்யராஜின் பாக்யா ரெண்டும் பத்திரிக்கை உலகில் ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்திருந்த நேரம். நாம எப்பவுமே பாக்யாவோட வாசகன். அதிலும் குறிப்பாக அவரின் கேள்வி பதிலுக்காகவே பாக்யா வாங்குவேன். என் நண்பர் திருநாவுக்கரசோ ராஜேந்தரின் உஷா... ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனாலும் பாக்யாவிற்கே மற்ற நண்பர்கள் ஆதரவு இருந்ததால் நாங்கதான் ஜெயிப்போம். அப்ப ஒரு படம் போட்டு கவிதை எழுதச் சொல்லுவார். அப்படி எழுதி இரண்டாம் பரிசெல்லாம் வாங்கியிருக்கிறோம்.
கதாநாயனாக கோலோச்சியிருந்த காலம் முடிந்ததும் விஜயகாந்தை வைத்து சொக்கத் தங்கம் எடுத்தார். அப்புறம் பல படங்களில் நடித்திருக்கிறார். மகளுக்காக பாரிஜாதம் எடுத்து தானும் நடித்திருந்தார். தனுஷ் கூட நடித்திருந்தார். இப்பக்கூட துணை முதல்வர்ன்னு ஒரு படத்துல நடிக்கிறாருன்னு போட்டோக்கள் பார்த்தேன். ஆளு சும்ம்ம்ம்மா ஜம்முன்னு அது யாரோ மேனனாமே அது கூட ஜோடி போட்டு நிக்கிறாரு... முருங்கைக்காய் நாயகன் இன்னும் முத்தலைங்கன்னு (அலோ முத்தம் இல்லை) சொல்லத் தோணுது... போட்டோக்கள் பாக்க சூப்பராத்தான் இருக்கு... படத்துக்காக வெயிட்டிங்க் சார்....
பாக்யராஜ்... பாலியலை தனது படத்தில் அதிகமாக வைப்பார் என்று சொன்னாலும் திரைக்கதையில் அவரை மிஞ்ச ஆளே இல்லை... ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாகவும் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் சினிமாவில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் தொட்டவர். தூறல் நின்னு போச்சு படத்தப் பாத்துட்டுப் போயி கையை ஒடிச்சிக்கிட்டாலும் கதையோட்டத்தால் ஈர்க்கப்பட்டு இன்று வரை அவரின் பின்னே ஓடிக் கொண்டேதான் இருக்கிறேன்.
எனக்கு பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலச்சந்தர் படங்கள் பிடிக்கும்... இப்பக்கூட சேரன், பாலா, சமுத்திரக்கனி, சசிக்குமார்ன்னு சில பேரோட திரைக்கதை பிடிக்கும்... ஆனா ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்... சிறந்த இயக்குநராய் பாக்கியராஜை மட்டுமே பிடிக்கும்.
அப்படியே நம்ம கை ஒடியக் காரணமாய் அம்மா சொல்லும் தூறல் நின்னு போச்சு படத்தில இருந்து ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்த்துட்டுப் போங்க...
அப்படியே நம்ம கை ஒடியக் காரணமாய் அம்மா சொல்லும் தூறல் நின்னு போச்சு படத்தில இருந்து ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்த்துட்டுப் போங்க...
-'பரிவை' சே.குமார்.
தங்கள் பதிவை படித்ததும் எனக்கும் பழைய நினைவுகள் வந்து விட்டன. குமார். அவரை திரையில் ரசித்தது போல் நேரிலும் கண்டு பேசியது என் வாழ்க்கையின் பெரிய சாதனை என்பேன். அவர் என் குருநாதர் நன்றி தங்கள் பதிவுக்கு
பதிலளிநீக்குஎனக்கு என்ன புரியலைனா..எப்படி இவர்களால் இன்று "சர்வைவ்" ஆக முடியவில்லை???! பாக்யராஜ் மட்டுமல்ல, வயதாக ஆக இயக்குனர்கள் பலர் இன்றைய மக்களுக்கேற்றார்போல் படைப்புகளைக் கொடுக்க முடியாமல் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடுகிறார்கள்.
பதிலளிநீக்குபாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் யாருமே இதுக்கு விதிவிலக்கு கெடையாது. :)
மனுசன் கதைக்குள்ள வச்சிருப்பாரு எல்லாத்தையும்... அந்தக் கதையோட்டத்தை அடிச்சிக்க இன்னைக்கு வரைக்கும் தமிழ் சினிமாவுல ஆளு இல்லைன்னு சொல்லலாம்..
பதிலளிநீக்குnice..
//ஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்... சிறந்த இயக்குநராய் பாக்கியராஜை மட்டுமே பிடிக்கும்.//
பதிலளிநீக்குநியாயமான கருத்து..
மலர்ந்த நினைவுகள் அருமை..
அடுத்த காட்சி இப்படித்தான் வரும் என்பதை யூகிக்க முடியாது... திரைக்கதை அமைப்பதில் கில்லாடி என்பதில் சந்தேகமேயில்லை... அவரின் பல படங்கள் என்றும் ரசிக்கலாம்...
பதிலளிநீக்குஒரு நல்ல கதையாசிரியனாய்... திரைக்கதை ஆசிரியனாய்... சிறந்த இயக்குநராய் பாக்கியராஜை மட்டுமே பிடிக்கும்.//
பதிலளிநீக்குசிறந்த இயக்குநர் தான்.
இதைப் பார்த்ததும் ஹை நம்ம நண்பர் சரவணன் சாரின் குருநாதர் பற்றியது அவர் வந்திருப்பரே என்று பார்த்ததும் அவர்தான் முதல் ஆள்.
பதிலளிநீக்குஎங்களுக்கும் மிக மிகப் பிடித்த இயக்குனர். திரைக்கதை மன்னரே! அதை அடிக்க இன்றும் யாருமில்லை நீங்கள் சொல்லியிருப்பது போல். அவரது படங்களை மிகவும் ரசித்தும் பார்ப்போம் அந்தத் திரைக்கதைக்காகவே. அதில் பல சுவாரஸ்யங்கள் இருக்கும். தங்கள் அருமையான இந்தப் பதிவிற்கு நன்றியும், வாழ்த்துக்களும். இருங்க இன்னும் இருக்கு..
அவர் திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டு நீங்கள் இங்கு பதிர்ந்திருக்கும் அந்த வீடியோ. பெண்பார்க்கும் காட்சி. அவர் அந்தச் சின்னக் குழந்தையிடம் சொல்ல சொல்ல சுலக்ஷ்ணா அதற்கு ஏற்றார் போல் தன்னை அலங்கரித்துக் கொள்வது...அருமை
அந்தக் காலகட்டத்திலேயே பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை எந்த கோதாவும் இல்லாம இருக்க வேண்டும்...மாப்பிள்ளை காப்பி வழங்குவ்தில் தவறு இல்லை என்று அழகாக் காட்சிப்படுத்தி இருப்பதைப் பாருங்கள்...இல்லையா?....அருமை அருமை..அந்தத் திரைக்கதை மன்னரை மிக அருகாமையில் னேரில் சந்திக்கும் வாய்ப்பு எங்கள் இயக்குனர், நண்பர் குடந்தையூர் திரு ஆர்.வி சரவணன் அவர்களின் காரணம் கிடைத்தது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மிக்க நன்றி!
பதிலளிநீக்கு"ஒவ்வொரு படத்திலும் தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லனாகவும் இது நம்ம ஆளு படத்தில் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் சினிமாவில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் தொட்டவர்." என்ற உண்மையைப் பகிருவதில் எனக்கும் மகிழ்ச்சி. கதைக்காகத் தான் அவரது படத்தைப் பார்ப்பேன்.
திரைக்கதை வித்தகரைப் பற்றிய இனிய நினைவுகள்! அருமை! வாழ்த்துக்கள்! அவருடைய பல படங்களை விரும்பி ரசித்து பார்த்திருக்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇந்தியாவிலேயே திரைக்கதையாசிரியரின் முதல் இடத்தை நெடுநாட்கள் தக்கவைத்துக் கொண்டது கே. பாக்கியராஜ் ஒருவர்தான்
எட்டரை கே.எஸ்.எஸ்ல காரைக்குடி போயி...
பஸ் விபரங்களைக்கூட இன்னும் ஞாபகம் வைத்திருக்கும் தங்களின் ஞாபகசக்திக்கு ஒரு சல்யூட் நண்பரே...
தமிழ் மணம் 1
கலக்கீட்டீங்க...
பதிலளிநீக்குஇப்படி ஒரு பதிவு சான்சே இல்லை
தொடருங்கள்.
அப்புறம்
தம நான்கு ஒக்கே தானே.
பாக்யராஜ் திரைக்கதை மன்னன் என்பதில் சந்தேகமேயில்லை. வருண் சொல்வது போல அவ்வளவு திறமையான ஆளால் ஏன் இப்போது பரிமளிக்க முடியவில்லை?
பதிலளிநீக்குசுவையான நினைவுகள்.
நல்ல கதையாக இருக்கும் இவரின் படைப்பு. பின்னோக்கி வந்தேன்.
பதிலளிநீக்குதமிழ்த் திரையுலகில் பாக்யராஜின் பங்கு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தாங்கள் நினைவுகூர்ந்து தொகுத்துள்ள விதம் மிகவும் அருமையாக உள்ளது. திருவள்ளுவர் படம் போட்டு அகரமுதல எழுத்தெல்லாம் என்ற திருக்குறள் தொடக்கம் முதல் பாலசந்தர் படங்களை விரும்பிப் பார்த்துள்ளேன். பாலசந்தரின் தாக்கம் அவருடைய திரைப்படங்களில் இருப்பதுபோன்ற ஓர் எண்ணம் எனக்கு. பல்நோக்கு திறமை கொண்ட பாக்யராஜ் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஹலோ! நண்பரே !
பதிலளிநீக்குஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
என் அத்தைகள் காலத்து ஹீரோ !! திரைகதையில் அவர்க்கு நிகர் அவர்தான் என்பதில் ஐயமே இல்லை!!
பதிலளிநீக்குநல்ல பதிவு அண்ணா!