சனி, 11 அக்டோபர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 3)

முந்தைய பகுதிகள் : பகுதி-1     பகுதி-2


இரண்டாவது பகுதியின் கடைசியில்...

நீண்ட நேரம் ரிங் போகவும் "என்னடி... அம்மா எடுக்க மாட்டேங்கிது..." என்று மனைவியிடம் கேட்க, "மெதுவா எந்திரிச்சி வந்துதானே எடுக்கணும்.. வேணுமின்னா உங்கம்மாளுக்கு ஒரு செல் வாங்கிக் கொடுங்க" என்று சிரித்தபடி அவனின் அருகில் அமர்ந்த சித்ராவை, 'உனக்கு நய்யாண்டி' என தலையில் கொட்டினான். எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும் 'எடுத்துருச்சு' என்பதுபோல் தலையாட்டினான்.

"அலோ... ஆருப்பா...? கொஞ்சஞ்சத்தமா பேசுங்க... மழ பெஞ்சிருக்கதால கொரக்கொரன்னு கேக்குது..." என்று கத்தினாள் காளியம்மாள்.

-------------------------------

இனி...

த்தமாப் பேசுங்க என்று காளியம்மாள் கத்தியதைத் தொடர்ந்து மணியும் "அம்மா நாந்தாம்மா மணி பேசுறேன்..." என்று கத்தினான்.

"ஆரு... மணியாப்பா... நல்லாயிருக்கியாப்பா... மருமவ மகாக்குட்டியெல்லாம் நல்லாயிருக்காகளா?"

"ம்... எல்லோரும் நல்லாயிருக்கோம்.. நீயும் அப்பாவும் நல்லாயிருக்கீகளா?"

"எங்களுக்கென்ன நல்லாத்தே இருக்கம்..."

"அம்மா... அங்க மழை விட்டிருச்சா?"

"ஆமா அதுதான் விடுது.. மத்தியானம் மழ விட்டு வெட்டரிச்சிச்சி... இந்தா இப்ப மறுக்கா தூற ஆரம்பிச்சிருக்கு... இன்னம் ரெண்டு நாளக்கி மழ இருக்கும்ன்னு பேசிக்கிறாங்க..."

"ம்... இங்கயும் லேசா தூறிக்கிட்டுத்தான் இருக்கு... ஆமா அப்பா எங்க?"

"அதுவா... நம்ம சறுக்கையில தண்ணி வெளியாகாம இருக்க எளந்தாரிப்பயக மண்ணு மூட்டை போட்டு அடச்சி வச்சிருந்தானுங்க... ... இப்போ மழ ஊத்த்துன ஊத்துல கம்மா நெறஞ்சி மேக்குப்பக்கமா உடைக்கிற மாதிரி இருக்காம்... அதான் சறுகையில கொஞ்ச மூட்டைய எடுத்து தண்ணிய கொளக்கால்ல விட்டுடலாம்ன்னு எல்லாரும் போயிருக்காக..."

"மழையில... இந்த இருட்டுல இவரு எதுக்குப் போறாரு...?"

"ஊரே போவும் போது போகலயின்னா நல்லாயிருக்குமா? இவுக என்ன வெட்டக் கொத்தப் போறாவளா? எளந்தாரிப்பயக வெட்டிப் போடுவானுக... இவுக பேச்சாளுத் தொனைக்கித்தானே போறாக... முத்துச்சாமி அம்மானே போவும் போது இவுக போவாம இருக்க முடியுமா?"

"சரி.. சரி.. பயிரெல்லாம் எப்புடியிருக்கு? வேந்தங்கம்மாத் தண்ணி வயலுக்குள்ள ஏறிடுச்சா...?"

"பொதி கட்டுற சமயம்... வயலெல்லாம் தண்ணி மகுந்து நிக்கிது... இன்னக்கி ராத்திரி முச்சூடும் மழ பேஞ்சா வேந்தங்கம்மாத் தண்ணி வட்டச்செய்யிக்கு வந்திரும்ன்னு உங்கப்பா சொன்னாரு..."

"சரிம்மா... அப்புறம்... அப்பா வந்தா காலையில நா வேலைக்குப் போறதுக்கு முன்னால கூப்பிடச் சொல்லு,,, சரியா..."

"செரிப்பா... அப்பறம்...." மெதுவாக இழுத்தாள்.

"என்ன சொல்லும்மா...?"

"மழ விட்டது எல்லாரும் பொத்துக்குடிப்பான் வராம மருந்தடிப்பாக... அடியொரம் போடுவாக... நாமளும் மருந்தடிக்கணும்... கள எடுத்தது... அது இதுன்னு கையில இருந்த காசெல்லாம் முடிஞ்சி போச்சு... அன்னைக்கு பரமசிவண்ணன் மவங் கலியாணத்துக்கு மொய்யி வக்க காசில்லாமா நம்ம கண்ணதாசனுக்கிட்டதான் வாங்கிக்கிட்டுப் பொயிட்டு வந்தாக... கொஞ்சக் காசு அனுப்பி வையிப்பா... "

"காசா... ம்... இது மாசக் கடைசிம்மா... மகா வேற காலேசுல படிக்கிறா... அவளுக்கு டெய்லி எதாவது வாங்க வேண்டியிருக்கு... இப்ப இங்க உள்ள செலவுக்கே இழுத்துக்க பரிச்சுக்கன்னு இருக்கு... தம்பிக்கிட்ட கேட்டுப் பாரும்மா... அவனுக்கிட்ட இருக்கும்... அவனும் இல்லைன்னு சொன்னா போன் பண்ணு எங்கிட்டாச்சும் வாங்கி அனுப்புறேன்..."

"சரிப்பா... வயசுக்கு வந்த பொட்டப்புள்ள இருக்கு... அதோட படிப்புச் செலவும் ஒனக்கு இருக்கும்... நீ பாத்துக்கப்பா... நாங்க தம்பிக்கிட்ட வாங்கிக்கிறோம்..." என்று போனை வைத்த காளியம்மாள் 'கருதறுத்ததும் எனக்கு முதல்ல ரெண்டு மூடை அரிசி அனுப்புங்கன்னு அவனுக்கு அப்புறம் அனுப்பலாம்ன்னு போனு மேல போனா பண்ணுவான்... காசு கேட்டா மட்டும் எனக்கு மொடையா இருக்கு அவனுக்கிட்ட கேளுங்கன்னு சொல்லுறான்... என்ன பண்ணுறது அவனுக்கு வந்த மவராசி அப்படி ஆக்கி வச்சிட்டா...' என்று தனக்குத்தானே பேசியபடி வராத கரண்டை திட்டியபடி அரிக்கேன் விளக்கைத் தூண்டி விட்டு விட்டு புருஷனுக்காக காத்திருந்தாள்.

கொஞ்ச நேரத்தில் ஈரத்தோடு வந்த கந்தசாமியைப் பார்த்ததும் "குளிச்சீங்களா?" என்று கேட்டாள்.

"ஆமா... கம்மா நெறஞ்சு கிடைக்கா... தண்ணியப் பாத்ததும் எல்லாருக்கும் ஆசை... நல்லா ஆனந்தமாக் குளிச்சிட்டு வந்தோம்..." சந்தோஷமாய் சொன்னார்.

"மழ நேரத்துல குளிச்சு ஒடம்புக்கு ஒத்துக்கலைன்னா..."

"அடிப்போலா.... பொறந்ததுல இருந்து அதுக்குள்ள கெடக்குற ஒடம்பு இது... அதெல்லாம் ஒண்ணும்  பண்ணாது...."

"புதுத்தண்ணி... தடுமங்கிடும பிடிச்சிக்கிச்சின்னா ஏ உசிருல்ல போவும்..."

"ஒண்ணும் பண்ணாதுங்கிறேன்... கரண்ட்டு இனி வராதுன்னு நெனக்கிறேன்... கரண்டுக்கம்பி வர்ற பாதயில கருவ அடிக்கிதாம்... இனி அதை வெட்டி சுத்தம் பண்ணனும்.... காலயில மழ இல்லன்னா போவலாம்ன்னு சொல்லியிருக்காங்க..." என்றவர் வேட்டியை மாற்றிவிட்டு சிம்ளி விளக்கை எடுத்துக் கொண்டு சாமி அறைக்குள் போய் 'அப்பனே முருகா... எம்புள்ளகுட்டிகள நல்லா வச்சிக் காப்பாத்து' என சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டு திருநீறை எடுத்து நெற்றியில் பட்டை அடித்து நெஞ்சிலும் தடவிக் கொண்டு வந்து கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தார்.

"வாங்க சாப்பிட்டுட்டு உக்காருங்க... லண்டியன் வெளிச்சத்துல உக்காந்திருக்கதுக்கு காலாகாலத்துல படுக்கலாம்..." என்றவள் அவரின் தட்டை எடுத்து வைத்தபடி "பெரியவன் போன் பண்ணினான்..." என்றாள்.

"எப்போ...? என்ன சொன்னான்...? பேத்தியா எப்புடியிருக்காளாம்?"

"கொஞ்ச முன்னாடித்தான் பேசுனான்... எல்லாரும் நல்லா இருக்காகளாம்... என்னத்த சொல்றான்... ஒரம் போடணுமின்னு காசு அனுப்பச் சொன்னா சின்னவனைக் கேளுங்கிறான்..."

"சரி விடு... அவனுக்கும் செலவிருக்குமில்ல... காலையியல் சின்னவங்கிட்ட நா பேசுறேன்... இல்லாட்டி பெரிய மாப்ளக்கிட்ட சொன்னா ஒடனே கொண்டாந்து ஒரத்த எறக்கப் போறாரு..."

"ஆமா ரெண்டு மயங்க சம்பாரிக்கயில வீட்டுக்கு வந்த மாப்ளக்கிட்ட கேட்டாத்தான் நல்லாயிருக்கும்... நாளைக்கி நெல்லவிச்சதும் அவளுகளுக்கா கொடுக்க விடுவாய்ங்க..."

"சரி... சரி... தருவாய்ங்க... விடு... இப்ப சோத்தப் போடு..." என்று சொல்லவும் 'ஆமா சீமையில இல்லாத பிள்ளகள பெத்துப்பிட்டாக... மாசா மாசம் நோட்டு நோட்டா அனுப்பிட்டுத்தான் மறுவேல பாக்குறாய்ங்க... அட ஏஞ் சும்மா... ஒவ்வொரு தடவயும் கேட்டுக்கேட்டு வாங்கணும்..' என்று முணங்கியபடி அவருக்கு சாப்பாடு போட்டுவிட்டு தானும் போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

(வேரும் விழுதுகளும் வளரும்...)
-'பரிவை' சே.குமார்.

15 கருத்துகள்:

  1. அழகான வட்டார வழக்கு நடையில் மனதில் அப்படியே காட்சி விரியுது!

    பெரும்பான்மையா எல்லா வீட்டுலயும் இப்படித்தான் பையங்க இருப்பானுங்களோ?! தொடர்கின்றோம் ஆவலுடன்!

    பதிலளிநீக்கு
  2. மழைவிட்டும் தூறல் விடாததுபோல் காளியம்மாளின் முணகலைக் கேட்க பாவமாய்தான் இருக்கு !
    த ம 2

    பதிலளிநீக்கு

  3. நன்றாகப் போகிறது சார்.. இப்படித்தான் போல எல்லோர் வீடுகளிலும்??? தொடருங்கள் தொடர்கிறோம்..

    பதிலளிநீக்கு
  4. காட்சிகள் கண்முன் விரிந்து கதைக்குள் இழுக்கின்றன.

    எத்தனையோ காளியம்மாக்கள்..நேற்றும்.இன்றும்,நாளையும் இருந்து கொண்டே இருப்பார்கள்.

    நேரம் இருப்பின் என் தளம் வாருங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க துளசிதரன் சார்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஜி...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  6. வாங்க சீலன்...
    தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  7. வாங்க சகோதரி உமையாள்...
    தங்களது பதிவுகளைப் படித்திருக்கிறேன்... இணைந்ததாய் ஞாபகம்... இன்று மீண்டும் உங்கள் தளத்தில் பார்த்து இணைந்துவிட்டேன்.. இனி தொடர்கிறேன்...
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. தென்னையப் பெத்தா இளநீரு!.. புள்ளையப் பெத்தா கண்ணீரு!.. - ஒருத்தன் குணம் தெரிஞ்சு போச்சு!..

    பார்ப்போம் - என்ன நடக்குதுன்னு!..

    பதிலளிநீக்கு
  9. விறுவிறுப்பாக இருக்கிறது.. தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. அருமையான தொடர் மூன்று பகுதியுமிப்பதான் படிச்சேன்..கண்முன் காட்சிகள் விரிகின்றன...பேச்சு வழக்கு சொற்கள் கதையை ஆழப்படுத்துகின்றது...தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமை நண்பரே தொடர்கிறேன்
    முதல் இரு பகுதிகளையும் சேர்த்து வாசித்து விட்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  12. விவாசாயி படும் பாட்டை அருமையாக சொல்கிறீர்கள்.

    தாய், தகப்பன் மனம் எப்படி பட்டது என்று அழகாய் சொல்கிறீர்கள். அவர்கள் பேசும் பேச்சு எல்லாம் அப்படியே கண் முன் காட்சியாக விரிந்தது.

    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே.!

    கதை தொடங்கியதும், மழையுடன் ஆரம்பித்த விதம் மனதிற்கு இதமாக உள்ளது. கிராமிய பேச்சுவழக்குடன் நல்ல கருத்துச் செறிவுடன் ௬டியக்கதை.! பகுதி 1 ம், 2 ம் படித்து விட்டு பகுதி 3 லிருந்து, தங்களது தொடர்கதையை நானும் இனி தொடர்கிறேன்.! பகிர்விற்கு நன்றி.!

    என் தளம் வந்து கருத்திட்டமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்.!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. சின்ன பையன் என்ன குணம் கொண்டிருக்கிறான் என்று பார்ப்போம்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி