திங்கள், 29 செப்டம்பர், 2014

மனசின் பக்கம் : கொஞ்சம் சிரிக்க மீதி சிந்திக்க

ன்று அலுவலகத்தில் என் மலையாளி நண்பன் அவனது செல்போனில் இருந்து ஒரு போட்டோ காட்டினான். அது சினிமாவில் வருவது போல் பிரமாண்ட வீடு. 'இது என்ட பாரியாளோட அச்சன் வீடு' என்று சொன்னதும் நம்ம வாய்தான் சும்மா இருக்காதே 'அப்புறம் என்ன பாரியா வீடுன்னா பர்த்தாவுக்குத்தானே... நீ கோடீஸ்வரனாக்கும்' என்று சொன்னதும் அவன் வேறு எதுவும் சொல்லவில்லை சிரிச்சிக்கிட்டே தோளில் கை போட்டபடி 'ஆமா... அம்பானி இந்தியன்கிறதுக்காக அவனோட சொத்துல பாதி எனக்குத் தருமா?' அப்படின்னு கேட்டுட்டு சீட்டுல போயி உக்காந்துட்டான். அதுக்கு மேல நான் ஒண்ணுமே பேசலை. என்னத்தை சொல்றது... பய சரியான கேள்விதானே கேட்டிருக்கான்.

குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால் மதுரை போயிருக்கும் மனைவி, அவர் அம்மாவுடன் போத்தீஸூக்கு தீபாவளிக்கு துணி எடுக்கப் போயிருக்கிறார். சரி நம்மாளுக்கு டிரஸ் எடுப்போமே என்று (எப்பவும் தீபாவளி, பொங்கலுக்கு நமக்கும் எடுத்து விடுவார்கள்) எனக்கு போன் செய்து கேட்டார். பின்னர் ஏங்க ஓட்டோவே (OTTO - கம்பெனி பெயர்) வாங்கிறவா... உங்களுக்கு அதானே பிடிக்கும் என்றார். மலையாளி சொன்ன பதிலை நினைத்து நம்ம சும்மா இருந்திருக்கலாம் என்னமோ தெரியலை இன்னைக்கு நம்ம நாக்கு நமநமத்துச்சு போல 'இங்க பாரும்மா ஓட்ட பேண்ட் வாங்காத... காசைக் குடுக்கிறதுதான் குடுக்கிறே... நல்லதாவே வாங்குன்னு சொன்னேன்...' இது தப்பா... உடனே 'அப்பா ஆரம்பிச்சிட்டீங்களா... எங்கடா இன்னும் குடும்பக் கிசும்பைக் காணாமேன்னு பார்த்தேன்... இது கடை... என்று சொன்னவங்க நம்ம பேச்சை ரசிச்சாங்கங்கிறது அங்கிட்டு சிரிச்ச சிர்ப்புல தெரிஞ்சிச்சு.. வீட்டுக்கு வந்து போன் பண்ணும் போது எதுவும் சொல்லலைன்னாலும் நா ஒண்ணு பெத்து வச்சிருக்கேன் அப்பனைத் தூக்கி சாப்பிட்டுடும் போல நக்கல் பேச்சில அப்படின்னு வாரிசை திட்டினாங்க... பயபுள்ள பேசுறதைப் பார்த்தா பெரிய இயக்குநரா வரும்போல... இப்பவே காட்சியோட கதை சொல்லுதுங்கிறேன்....


மது (முன்னாள்) முதல்வர் ஜெயலலிதா ஜெயிலுக்குப் போனது செய்த தவறுக்காகத்தான் என்பதை எல்லோரும் அறிவோம். ஆனால் கர்நாடகத்தானும் மலையாளியும் இந்தப் பேச்சுப் பேசக் காரணம் அவரது ஆளுமையின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சிதான் என்பதை தயங்காமல் சொல்லலாம். இதில் அதிமுக அபிமானியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்தான். கொஞ்ச நாள் விஜயகாந்த் மீது பற்றுதல் இருந்தது. இப்போ அதெல்லாம் கழுவி ஊத்தியாச்சு. சரி விஷயத்துக்கு வாரேன்... 'ஜெயலலிதா இப்போ ஜெயில் லலிதாவாக இருந்தாலும் சௌத்ல இருந்து குரல் கொடுத்த ஒரே முதல்வர், அவரது பதவி பறிப்பு சௌத்துக்கு மிகப்பெரிய இழப்பு' என ஒரு சேட்டன் என்னிடம் பேசும் போது சொன்னார். உண்மைதானே தெற்குப் பக்கம் இருக்கும் முதல்வர்களில் சிறந்த ஆளுமை இவர் மட்டும்தானே. கட்சி கலக்காமல் பார்த்தால் அவரது நேரடி ஆட்சி இல்லாமல் கட்டுப்பாட்டில் இருக்கப் போற ஆட்சியால் தமிழகம் ஒரு நல்ல ஆளுமையை இழந்திருக்கிறது என்பது தெரியும்.

ன்று ஒரு குறும்படம் பார்த்தேன். 'கொஞ்சம் கதை மீதி கவிதை', மிகச் சிறந்த குறும்படம். ரோட்டில் படம் வரைந்து அதன் மேல் விழும் காசுகளை வைத்து மகனை கல்லூரியில் படிக்க வைக்கும் அப்பா, கல்லூரியில் பணம் கட்டாமல் திட்டு வாங்கும் மகன் என இவர்களை மையப்படுத்தி நகரும் கதை, பத்தாயிரம் பரிசு தொகை கிடைத்தால் கல்லூரி கட்டணம் கட்டி விடலாம் என கல்லூரியில் நடக்கும் ஓவியப் போட்டியில் கலந்து கொள்கிறான் மகன், பார்த்து வரைய ஒரு பிச்சைக்காரரை  இரண்டாயிரம் ரூபாய்க்காக கூட்டி வருகிறார்கள். படம் வரைந்த அந்தப் பையன் ஜெயித்தானா? அந்தத் தந்தை தன் மகனின் கல்லூரி கட்டணத்தை எப்படிக் கட்டினார்? என்பதை மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக பார்த்த என்னை இறுதிக் காட்சி அழுக வைத்து விட்டது. அப்பா மீது பாசம் வைத்திருக்கும் எல்லாரும் அழுவது நிச்சயம். படம் முடிந்தும் எங்கள் படிப்புக்காக கஷ்டப்பட்ட எங்கம்மாவை நினைத்து எனக்கு கண்கள் குளமாகியே இருந்தது. அவர் எங்களுக்காக எங்களோடு பள்ளிக்கும் கல்லூரிக்கும் நடந்ததை மறக்கவா முடியும். அருமையாக கதை சொன்ன இயக்குநர் நித்திலன் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து. இணைப்பு கீழே... நீங்களும் பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள் அத்துடன் ஒரு துளியாவது கண்ணீர் சிந்துவீர்கள்.


ப்போ இன்று இதுதான் என்று இல்லாமல் நினைத்த நாளில் நினைத்ததை எழுதி வருகிறேன். அதையே இன்று இதுதான் என்று முறைப்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது. மனசு பேசுகிறது, மனசின் பக்கம் / மனதில்பட்டது, வெள்ளந்தி மனிதர்கள், நண்பேன்டா, கிராமத்து நினைவுகள், தொடர்கதை சினிமா (பாடல்கள், விமர்சனம்), கவிதை/ சிறுகதை / கட்டுரை மற்றும் மற்றவை என நிறைய தலைப்புக்கள் இருப்பதால் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொன்றாய் எழுதினால் இன்ன கிழமை இதுதான் என ஒரு ஒழுங்கு முறையில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை... முயற்சிக்கிறேன்.

லையாத கனவுகளுக்கு இருந்த வரவேற்பை விட 'வேரும் விழுதுகளும்' தொடர்கதையின் முதல் பகுதிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருப்பது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. முக்கியமாக பின்னூட்டமிட்ட உறவுகள் அனைவரும் சொன்னது மண் மனம் கமழும் கதையாக இருக்கிறது என்பதுதான். எப்போதுமே எனது சிறுகதைகள் எல்லாவற்றிலுமே எங்க பக்கத்து பேச்சு வழக்குத்தான் இருக்கும். இதில் கிராமத்து வாடையை அதை அனுபவித்து வாழ்ந்தவன் என்பதால் அப்படியே கொண்டு வர நினைத்து முதல் பகுதியில் எழுதினேன். எல்லோரும் நல்லாயிருக்கு என்று சொல்வதைப் பார்க்கும் போது அடுத்தடுத்த பகுதிகளை சிறப்பாக நகர்த்த வேண்டுமே என்று பயமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதுதான் கதைக் கரு என்று முடிவு செய்தவுடன் முழுவதும் எழுதிப் பழக்கமில்லை. சிறுகதைகளைக் கூட நான்கு ஐந்து நாட்கள் எழுதுவேன்... பின்னர் திருத்துவேன். தொடர்கதையின் ஒவ்வொரு பகுதியையும் பதிவிடும் முன்னர் எழுதி திருத்தி... உடனே பதிவிடுவேன். அதனால்தான் முதல் தொடர் அதன் போக்கில் போய் நீளமாகிவிட்டது. இதை நீளமாக கொண்டு செல்ல நினைக்கவில்லை. மொத்தமாக எழுதி வைக்கும் எண்ணம் இல்லை என்பதைவிட பழக்கம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை.. இருந்தாலும் சிவகங்கைச் சீமையின் பேச்சு வழக்கை கொஞ்சமும் குறைவில்லாமல் கதையில் தொய்வு வராமல் கொண்டு செல்ல வேண்டும் என்கிற போது குமாரு ஒரு கதை பத்தாதா... இப்ப எதுக்கு நீயே வாலண்டியரா போயி மாட்டியிருக்கேன்னு ஒரு பய மின்னல் அடிக்கடி மின்ன ஆரம்பிச்சாச்சு... வேரும் விழுதும் எப்படி போகப் போகுதுன்னு பாக்கலாம்.

து சிரிக்கவும் சிந்திக்கவும்...



-மனசின் பக்கம் தொடரும்.
-'பரிவை; சே.குமார்.

10 கருத்துகள்:

  1. பயபுள்ள பேசுறதைப் பார்த்தா பெரிய இயக்குநரா வரும்போல... இப்பவே காட்சியோட கதை சொல்லுதுங்கிறேன்....

    ஆஹா!வாழ்த்துக்கள் நாளைய இயக்குனருக்கு.

    குறும்படம் பார்த்து நானும் நெகிழ்ந்து போனேன். முன்பே பார்த்து இருந்தாலும் மறுபடியும் பார்த்தேன்.

    ராஜா காணொளி பார்த்தேன் மீண்டும் சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.
    கிழமை பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஓட்டோ பேண்ட் சூப்பர், என்ன இருந்தாலும் அவர் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றது மட்டும் உறுத்தத்தானே செய்கிறது சார், இதோ இப்போதே அந்த சார்ட் பிளிமை பார்த்துவிடுகிறேன்.சிவகங்கைச் சீமையின் பேச்சு வழக்கு எப்போதுமே சூப்பர் தான்... நல்ல மிக்ஸிங்க் பதிவு...

    பதிலளிநீக்கு
  3. குறும்படம் அருமை!

    வீட்டில் நாளைய இயக்குநர் உருவாகின்றார் என்று சொல்லுங்கள்!!!

    ராஜா பேசும் காணொளி சிந்திக்க வைக்கின்றது!

    நல்ல பதிவுகள்!

    பதிலளிநீக்கு
  4. குறும்படம் மனதை நெகிழ்வித்தது..

    பதிலளிநீக்கு
  5. கண்ணில் நீர் வரவழைத்தப் படம். உங்களின் பதிவில் இருந்த மற்ற செய்திகள் இந்த ஒரு படத்தில் மறைந்து போய் விட்டது. கண்களை குளமாக்கியப் பதிவு.

    பதிலளிநீக்கு

  6. கதம்பமாலை நன்றக இருக்கிறது நண்பரே,,,
    எனது புதிய பதிவு My India By Devakottaiyan

    பதிலளிநீக்கு
  7. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. ஓட்டோ பேண்டை போன்றே ,ruf&tuf பேண்ட் அணிபவர்களும் ரப் அன் டப்பாக பேசுவார்களோ ?)))
    த ம 3

    பதிலளிநீக்கு
  9. குறும்படம் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன்... உங்கள் தொடர் அருமையாய் அமைய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. குறும்படம் முன்னரே பார்த்திருக்கிறேன்.... அருமையான படம்.

    உங்கள் மகனும் உங்களைப் போலவே.... :)

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி