புதன், 24 செப்டம்பர், 2014

மனசின் பக்கம் : சினிமாப் பேச்சே வேலையாப் போச்சு

புதாபி அரசு அலுவலகத்தில் எங்கள் புராஜெக்ட் அடுத்த மாதம் முடிவடைய இருப்பதால் வேலைகளை முடித்துக் கொடுக்க வேண்டிய ஒரு நாளைக்கு 11 மணி நேர வேலை... காலை 5.30 மணிக்கு எழுந்து குளித்துக் கிளம்பி அலுவலகம் நோக்கி நடந்து... அலுவலகம் அடைந்து 7 மணிக்கு வேலை ஆரம்பித்தால் மாலை 6 மணிக்குத்தான் முடிகிறது. மாலையும் நடைதான்... இப்போது காலை மற்றும் மாலை நேரத்தில் வெயிலின் தாக்கம் மாறி இருக்கிறது... குளிர் காலத்தின் அடையாளமாக லேசான காற்றும் இருக்கிறது. அறைக்கு வந்ததும் ஊருக்கு ஸ்கைப்பில் கொஞ்ச நேரம் பேச்சு... பின்னர் சமையல்... வலைப்பூவில் கொஞ்ச நேரம் மேய்ச்சல் என என்று நாட்கள் நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எனது அருகில் இருக்கும் மலையாள நண்பரிடம் மெதுவாக சினிமாப் பேச்சுக் கொடுத்தால் போதும் விடாமல் பேச ஆரம்பிப்பார்... வேலையின் கடுமை தெரியாது... பத்தாததுக்கு பாகிஸ்தானி வேறு எதற்கெடுத்தாலும் குட்டே.. ம்... குட்டே என்று சொல்லுவான். அவனை மலையாளத்தில் ஓட்டுவதே அந்த நண்பரின் வேலையாக இருக்கும்... அவனுக்குப் புரியாததால் மீண்டும் குட்டே என்பான். நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறுவோம். இருந்தும் பெரும்பாலான பொழுதுகளை என கணிப்பொறியில் இருக்கும் 80-90 பாடல்கள் ஆக்கிரமித்துவிடும். எப்படி இருந்தாலும் மாலை ஆறு மணிக்கு இருக்கையில் இருந்து எழும்போது முதுகுவலி கொன்று எடுத்து விடுகிறது.

HOW OLD ARE YOU மற்றும் BANGALORE DAYS என்ற இரண்டு மலையாளப் படங்களைப் பார்த்தேன். இரண்டும் அருமையான படங்கள். அதிலும் HOW OLD ARE YOU சான்ஸே இல்லை... சூப்பர்ப்படம்... இரண்டு படங்களைப் பற்றியும் விமர்சனமில்லாத ஒரு பார்வை. 


HOW OLD ARE YOU : அயர்லாந்து செல்லும் கனவு கலைந்த 36 வயதான ஒரு பெண் தன் மகளாலும் கணவனாலும் உதாசீனப்படுத்தப்பட, கல்லூரியில் படிக்கும் போது உன்னிடம் இருந்த அந்த போராட்டக் குணம் எங்கே போச்சு என்று தோழி கனிகா கேட்க, அதன் பின் வீட்டு மொட்டை மாடியில் விளைவித்த காய்கறிகள் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுத்தர பக்கத்து வீட்டு மனிதர்களின் உதவியுடன் எல்லா வீடுகளிலும் தோட்டம் வைத்து அதில் ஜெயித்து எந்தக் குடியரசுத் தலைவரைப் நேரில் பார்த்த போது மயங்கி விழுந்து எல்லோராலும் கேவலப்படுத்தப்பட்டாரோ அவரோடு தில்லியில் விருந்து சாப்பிட குடும்பத்துடன் சென்று திரும்புகிறார். காவ்யா மாதவன் மீதான மோகத்தில் திலீப் விவாகரத்து செய்த பிறகு மஞ்சு வாரியர் நடித்திருக்கும் படம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருந்திருக்கும் அதை பூர்த்தி செய்யும் விதமாக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.


BANGALORE DAYS : உறவினராய் இருந்தும் படிக்கும் போதே நல்ல நண்பர்களாக வாழ்ந்த... வாழ்கிற இரண்டு ஆண், ஒரு பெண்ணின்  வாழ்க்கையை மையமாக வைத்து நகரும் கதை. பெங்களூர் போய் ஜாலியாகச் சுற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட மூவரில் ஒருவனுக்கு அங்கு வேலை கிடைக்கிறது. அந்தப் பெண்ணுக்கு பஹத் பாசிலுடன் திருமணம் முடிந்து அங்கு செல்கிறாள். மற்றவனோ ரேஸ் ஓட்டுபவர்களின் பைக் மெக்கானிக்காக பெங்களூர் வர, அவர்களது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் பஹத் பாசிலின் முன்னாள் காதல் கதை... அதன் பின்னான நிகழவுகளும் என படம் அழகாக பயணிக்கிறது. நஸ்ரியா கலக்கியிருக்கிறார். பஹத் சொல்லவே வேண்டாம்... மனுசன் என்ன கதாபாத்திரமோ அப்படியே வாழ்ந்து விடுவார். துல்கர் சல்மான் இளமைத் துடிப்புடன் நடித்திருக்கிறார். குட்டனாக வரும் நிவினும் அருமையாக நடித்திருக்கிறார். 

திரு. கரந்தை ஜெயக்குமார் ஐயா, திரு. முத்து நிலவன் ஐயா, ஒரே ஒரு முறை மட்டுமே பேசி மீண்டும் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் திண்டுக்கல் தனபாலன் அண்ணா (இப்போ இவர் மதுரை பதிவர் சந்திப்பில் மிகவும் பிசியாக இருப்பதால் தொந்தரவு பண்ண வேண்டாம் என்ற நினைப்பு) என பலரோடு பேச வேண்டும் என்று நினைத்து வேலையின் காரணமாக தள்ளிப் போய் கொண்டே இருக்க இன்ப அதிர்ச்சியாய் மகேந்திரன் அண்ணா முகநூலில் எனது தொலைபேசி எண் கேட்டு அன்று மாலையே கூப்பிட்டார். அவர் அபுதாபியில்தான் இருக்கிறார் என்பது அவரிடம் பேசிய பின்னர்தான் தெரியும். விரைவில் சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். 

சில நாட்களுக்கு முன்னர் இருந்த மனநிலை மாறி இப்போது எப்போதும் போல் போய்க் கொண்டிருக்கிறது என்பது சந்தோஷமே. அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் வாழ்க்கையை மட்டுமல்ல... சில மனிதர்களையும் படிக்க முடிந்தது. எத்தனை விதமான மனிதர்கள்... எப்படி எல்லாம் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது, இப்படி ஒரு பாடத்தை மிகவும் கஷ்டமான சூழலோடு கொடுத்திருந்தாலும் வாழ்க்கைப் பாடம் கற்றுக் கொள்ள வைத்த இறைவனுக்கு நன்றி.

ன்று ஒரு நண்பர் போனில் கூப்பிட்டார். ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அலைனில் சந்தித்த தமிழர்தான் அவர்.  எனக்கும் அவருக்குமான தொடர்பு அங்கு இருக்கும் போது மட்டுமே இருந்தது. இன்று திடீரென அழைத்துப் பேசினார். எனக்கு யாரென்று தெரியாவிட்டாலும் அவருடன் பேசினேன். என் குரலை வைத்து கண்டு பிடிக்க முடியவில்லையா என்றார். இல்லை என்றதும் நான் இன்னார் எனச் சொல்லி பணி நிறைவு பெற்று விட்டதாகவும் வேறு வேலைக்கு முயற்சிப்பதாகவும் சொன்னார். எங்கள் கம்பெனியில் ஆள் எடுப்பதாகவும் நீங்கள் கொஞ்சம் எனக்காக உங்க மேனேஜரிடம் சொல்லுங்கள் என்றார். சரி என்று சொல்லி அவரின் பயோடேட்டா அனுப்பச் சொன்னேன். முக்கியமான விவரம் என்னவென்றால் மகன்கள் இருவரும் அரசு அலுவலகத்தில் பணி செய்யும் போதும் இன்னும் வேலை செய்ய வேண்டும் என்ற அவரின் எண்ணம் போற்றத்தக்கதுதான் என்றாலும் இந்த வயதுக்கு மேல் ஊரில் போய் இருந்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கலாமே என்பதுதான் எனது ஆதங்கம். ஒருவேளை இந்தப் பாலை மண் வந்தவர்களை அவ்வளவு சீக்கிரம் அனுப்பாது என்று நண்பர்கள் சொல்வது உண்மைதானே.... அப்பா... எப்படியும் சீக்கிரமே இங்கிருந்து ஓடிவிட வேண்டும் என இறைவனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்..

மீண்டும் ஒரு தொடர்கதை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது. விரைவில் தொடங்கலாம் என கதையை மனசுக்குள் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த முறை கலையாத கனவுகளைப் போல நீண்ட தொடராக இல்லாமல் குறைந்த பகுதிகளில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கிறேன். என்னது..? ஐயோ போதும்டா சாமின்னு சொல்றீங்களா..? இல்லையில்லை உங்களை விடுற மாதிரி இல்லை... விரைவில் தொடர்கதை ஆரம்பிக்கத்தான் போகிறேன்.. ஹா... ஹா... விடமாட்டோமுல்ல....

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

10 கருத்துகள்:

  1. அடுத்தத் தொடரைத் தொடங்குங்கள் நண்பரே
    காத்திருக்கிறேன்
    தாங்கள் குறிப்பிட்ட இரு படங்களையும்காண முயற்சிக்கிறேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. மலையாளப் படங்கள் பார்ப்பதில்லை. எப்பவோ பார்த்தது.

    உங்கள் மனநிலை மாறி பழைய உற்சாகத்துக்கு வந்தது சந்தோஷம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இரண்டு படங்களும் உண்மையிலேயே நல்ல படங்கள் சார், மலையாளத்தில் பல நேரங்களில் தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன. ம்ம் ஆரம்பியுங்கள் தொடர்கதையை , இதை தொடர்ந்து படிக்க ஆவலாக காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  4. ஹவ் ஓல்ட் ஆர் யூவை என்னுடைய சில தோழமைகளும் என்னைப் பார்க்கச் சொன்னார்கள்....அதைப்பற்றி இங்கே படிக்க மகிழ்வாய் இருந்தது?

    பதிலளிநீக்கு
  5. மனசின் பக்கம் நன்று.தெளிவு பெற்றதில் மகிழ்ச்சி.தொடர் கதையா,எப்போ?///என்னது..? ஐயோ போதும்டா சாமின்னு சொல்றீங்களா..?///சீச்சீ.............எப்படான்னு இருக்கு,எனக்கு!

    பதிலளிநீக்கு
  6. ரொம்பவும் ஹிட்டான இரு படங்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்! இரண்டு மாதம் முன்பு வரை நான் ஷார்ஜாவிலிருந்த போது சிடி வரவில்லை என்றார்கள். இப்போது உங்கள் பதிவு மூலம் வந்து விட்டன என்று தெரிந்து கொண்டேன். ஷார்ஜா சென்றதும் முதல் வேலையாக இந்தப் படங்களைப் பார்க்க வேன்டும். அதுவும் மஞ்சு வாரியர் எனக்கு மிகவும் பிடித்தவர். அவரின் படங்களில் ஒன்று கூட மிஸ் செய்ததில்லை. அவ்வளவு திறமையாகவும் அருமையாகவும் இருக்கும் அவரது நடிப்பு!

    பதிலளிநீக்கு
  7. சினிமா பகிர்வு உட்பட அனைத்தும் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு

  8. மீண்டும் தொடர்கதை ஆரம்பிக்க வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  9. படங்கள் பார்க்க முடிவதில்லை குமார். பெரும்பாலான நேரத்தினை அலுவலகப் பணி எடுத்துக் கொண்டு விடுகிறது.

    இரண்டு படங்களும் பார்க்கத் தூண்டியது உங்கள் பகிர்வு.

    தொடர்ந்து உற்சாகத்துடன் எழுத வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி