சனி, 20 செப்டம்பர், 2014

கிராமத்து நினைவுகள் : எங்க வீட்டு நாய்


கிராமங்களில் எல்லாருடைய வீட்டிலும் ஆடு, மாடு, கோழி இவற்றுடன் நாயும் இருக்கும். நகரங்களில் வளர்க்கப்படும் நாய்கள் படுக்கை அறை வரை சென்று பக்கத்தில் படுப்பது போல் இல்லாமல் வீட்டுக்கு வெளியேதான் இவைகளின் வாழ்க்கை. இவைகளுக்கு என்று ஒரு தட்டு இருக்கும். அதில்தான் மூன்று வேலை சாப்பாடு இடப்படும். ஊருக்குள்  முகம் தெரியாத ஒருவர் நுழைந்து விட்டால் போதும் அதுவரை அடித்துக் கொண்டிருந்த நாய்கள் எல்லாம் ஒன்று கூடி அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும்.

எங்கள் வீட்டிலும் ராணி, டைகர் என பல நாய்கள் இருந்தன. எங்காவது நாய் குட்டி போட்டால் போதும் அதை தாய் நாய்க்குத் தெரியாமல் எடுத்து வந்து வளர்க்க ஆரம்பிப்போம். நாய்க் குட்டியை எடுத்ததும் அதன் கால் நகங்களைத்தான் எண்ணுவோம், பதினெட்டு, இருபது நகங்கள் உள்ள நாய்கள்தான் அதிகம் கிடைக்கும். முகத்தில் வாயைச் சுற்றி கருப்பு இருந்தாலோ, கண்ணைச் சுற்றி கருப்பு இருந்தாலோ அது வேண்டாம் என்று ஒதுக்கி விடுவோம். 

எங்கள் வீட்டில் வளர்ந்த நாய்கள் எல்லாம் குரைக்கிற நாய் கடிக்காது என்ற பழமொழிப்படிதான் இருந்தன. யாரையும் வீட்டுக்குள் விடாது... பாம்பே வந்தாலும் குரைத்து எல்லோரையும் எழுப்பிவிட்டுவிடும். வீட்டு வாசலில் கட்டிக்கிடக்கும் மாடுகளுக்கும் கூண்டுக்குள் அடைத்துக்கிடக்கும் கோழிகளுக்கும் ஏன் எங்கப்பாவின் அட்லஸ் சைக்கிளுக்கும் இவைதான் காவல். எத்தனை விதமான நாய்கள்... எங்களோடு எப்படி எப்படி வளர்ந்தன.

நான் என்ன சொன்னேன்... ம்... குரைக்கிற நாய் கடிக்காது என்றுதானே... எவன் சொன்னான் நான் கடிப்பேன் என எங்கள் வீட்டுக்கு எங்க பெரிய அண்ணன் மூலமாக வந்ததுதான் ராஜா... பேருக்கு ஏத்த மாதிரி செவலை நிறத்துல... நல்ல உயரத்துல... கிண்ணுன்னு இருக்க ஒடம்போட எங்க வீட்ல வளர்ந்தவந்தான் ராஜா.

ஆரம்பத்துல குரைக்க மட்டும்தான் செய்தது.... அப்போ எல்லோருமே சின்னப் பசங்கதானே... அது வாசல்ல நிக்கும் போது கோவிலில் விளையாட வரும் மற்ற பசங்கள் கல்லை விட்டு எறிந்து அதை சூக்காட்டி... சூக்காட்டியே கோபம் தலைக்கேறி விரட்டிக் கடிக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் எப்போதாவது கடிக்க ஆரம்பித்த ராஜா அப்புறம் வர்ற ஆளை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது.

நாய் கடித்தால் அந்த வீட்டில் நீச்சத்தண்ணி வாங்கிக் குடிப்பது கிராமத்து வழக்கம். விஷம் விலகிவிடும் என்று சொல்வார்கள். அப்படி தினமும் யாராவது ஒருவருக்கு நீச்சத்தண்ணி கொடுக்க வேண்டியதாகி விட்டது. எல்லோரும் கடி நாயை வைத்திருக்கிறீர்கள் என்று சத்தம் போட ஆரம்பிக்க, அம்மாவோ அதை அடித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அண்ணனுக்கு அதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. இஷ்டப்பட்டு வளர்த்த நாயை கண் முன்னே கொல்வதா என அம்மாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

எப்படியும் அதை வளர்க்க வேண்டும் என்று நினைத்தவர் மாடுகளுக்கு ஓடாமல் இருக்க கழுத்தில் ஒரு கட்டையைக் கட்டி இரண்டு கால்களுக்கும் இடையில் விட்டுவிடுவார்கள். அதை தொன்றிக் கட்டை என்று சொல்வார்கள். அவை ஓட ஆரம்பித்தால் அந்தக் கட்டை காலில் இடிக்கும் என்பதால் எங்கும் ஓடாது. அதுபோல் எங்கோ நாய்க்குப் போட்டிருந்தார்களாம். அதேபோல் ஒரு சின்னக் கட்டையை கட்டி விட்டார். இப்போது ஓடிப் போய் கடிக்க முடியாமல் குரைக்க மட்டும் ஆரம்பித்தது. எங்களுக்கு கொஞ்சம் சந்தோஷம். இனி ராஜா அமைதியா இருப்பான்னு நினைச்சிக்கிட்டோம்.  ஊருக்குள்ளும் தொன்றிக்கட்டை போட்ட நாய் திரியிதுன்னு சிரிக்க ஆரம்பிச்சாங்க.

ஆனா பாருங்க... கொஞ்ச நாள்தான் அப்புறம் இவனுக என்ன நமக்கு கட்டை கட்டி விடுறதுன்னு அதை வாயில கவ்விக்கிட்டு வீட்டுப் பக்கம் வர்ற ஆளுகளைத் துரத்த ஆரம்பிச்சிருச்சு. வீட்டுப்பக்கம் யாரு வந்தாலும் இதே நிலைதான். பின்னர் ஊரில் எல்லாரும் மீண்டும் கத்த ஆரம்பித்து விட்டார்கள். இனிமேல் இவன் வளர்க்க சரிப்பட்டு வரமாட்டன் என்பதால் அம்மா ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா பையன் செல்வத்திடம் பிடித்துக் கொடுத்து விட்டார்கள். அத்தோடு எங்க வீட்டு ராஜாவின் கதை முடிந்தது. அதன் பின்னான நாட்களில் எங்க வீட்டில் நாய் வளர்க்கும் எண்ணமே தோன்றவில்லை.

இப்போ விஷாலுக்கு கோழி, நாய் எல்லாம் வீட்டில் வளர்க்க ஆசை. சில நாய்களை எடுத்து வந்து வளர்த்தார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை எந்த நாயும் நீண்ட நாள் இருக்கவில்லை... சில இறந்து விட்டன... சில ஓடி விட்டன... இனி நாய் வளர்க்க வேண்டாம் என முடிவுக்கு வந்து விட்டார்கள்.

-கிராமத்து நினைவுகள் தொடரும்
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:


  1. ஒரு நாய் ஓர் ஊர் (கிராமம்)
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. மலரும் நினைவுகள்..
    ரீங்காரம் இசைக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. மனுஷன் பிழைப்பே நாய்ப் பய பிழைப்பாய் இருக்கு ...அதை ஞாபகப் படுத்தும் நாயை வேற வளர்க்கணுமா?நல்ல முடிவு வரவேற்கிறேன் )))))
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. நன்றியுள்ள ஜீவனை நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுகள்!..

    பதிலளிநீக்கு
  5. நாய் வளர்ப்பது உண்மையிலேயே சந்தோசமான விசயம் சார், குட்டியாக இருக்கும் போது பள்ளி விட்டவுடன் வீட்டுக்குச் சென்று அதோடு விளையாடுவது எல்லாமே அருமையான நினைவுகள்... நமக்குன்னு ஒரு பாதுக்காப்பு ங்கறத விட நாய் இருந்தா ஒரு கெத்துன்னு கூட சொல்லிக்கலாம் சிறு வயதில்,,, நினைவுகளுக்கு நன்றிகள் சார்..

    பதிலளிநீக்கு

  6. நாயானாலும் பழகி விட்டால் அதுவும் குடும்ப உறுப்பினர்தான்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பதிவைப் படிக்கும் போது, நானும் மலரும் நினைவுகளில் மூழகி விட்டேன். நாங்கள் வளர்த்த "டாம்" நாயின் நினைவில் நானும் சிறிது நேரம் மூழ்கி விட்டேன். நன்றி நினைவுகளி மீட்டெடுக்க உதவியதற்கு.

    பதிலளிநீக்கு
  8. உங்களுடைய மலரும் நினைவுகளான அனுபவங்களை அழகாகச் சொன்னீர்கள். எங்கள் அம்மாவின் கிராமத்தில் இருந்த “மணி”, நாங்கள் ஆசையுடன் வளர்த்த “ஜாக்கி” - இருவரும் எனது நினைவுகளில் வந்து போயினர்.

    // நாய்க் குட்டியை எடுத்ததும் அதன் கால் நகங்களைத்தான் எண்ணுவோம், பதினெட்டு, இருபது நகங்கள் உள்ள நாய்கள்தான் அதிகம் கிடைக்கும். முகத்தில் வாயைச் சுற்றி கருப்பு இருந்தாலோ, கண்ணைச் சுற்றி கருப்பு இருந்தாலோ அது வேண்டாம் என்று ஒதுக்கி விடுவோம். //

    கால்நகங்களை எண்ணியதற்கும், சில நாய்க்குட்டிகளை ஒதுக்கியதற்கும் சிறப்பான காரணங்கள் ஏதேனும் உண்டா? சொன்னால் தெரிந்து கொள்வோம்.
    த.ம.4

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி