செவ்வாய், 8 ஏப்ரல், 2014

சினிமா : நெடுஞ்சாலையில் பிரணயக்கதா

சில படங்களைப் பார்க்கும் போதே இதுக்கு மேல் எதற்காக நேரத்தைச் செலவிட வேண்டும் என மூடி வைத்துவிடத் தோன்றும். அப்படி கால்வாசி படம் போகும் போதே கடுப்பாகி கணிப்பொறியில் இருந்து 'ரெட் ரெயின்' என்ற மலையாளப் படத்தை தூக்கி விட்டுவிட்டு பார்த்த படம்தான் 'ஒரு இந்தியன் பிரணயக்கதா'. பஹத் பாசில் மற்றும் அமலா பால் நடித்திருக்கும் படம். மம்முட்டி மோகன்லால் படங்கள் எல்லாம் பிடித்ததோ இல்லையோ பஹத் பாசில் படம் என்றால் மிகவும் பிடித்துவிடுகிறது. இதற்கு முன் பார்த்த படங்களைவிட இது கொஞ்சம் சுமார்தான் இருப்பினும் பஹத்தின் நடிப்பில் படம் நம்மை ஈர்க்கிறது.


அனாதை இல்லத்தில் இருந்து வெளிநாட்டுத் தம்பதிகளால் எடுத்து வளர்க்கப்படும் அமலாபால் தன்னைப் பெற்றவர்கள் யாரென்று கண்டுபிடித்து ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்ப்புப் பெற்றோரின் இறப்புக்குப் பின் இந்தியா வருகிறார். அரசியலில் பெரியாளாக வேண்டும் என தில்லாலங்கடி வேலைகள் பார்க்கும் பஹத், தனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் வெறொரு பெண்ணுக்கு கொடுக்கவும் கட்சிப் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைக்கிறார். அந்த சமயத்தில் பொய்யான காரணம் சொல்லி உதவி கேட்கும் அமலாபாலுக்கு உதவப் போய் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் டிரைவராகிறார்.

ஒரு கட்டத்தில் அமலாபால் எதற்காக வந்திருக்கிறார் என்கிற உண்மை போலீஸ் மூலமாக வெளிவர, பஹத் அவரை விட்டு விலகுகிறார். இதற்கிடையே அவருக்கு தனியாக ஒரு காதல் டிராக் போய்க்கொண்டிருக்கிறது. அது எல்லாப் படத்திலும் போல் வெறொரு மாப்பிள்ளைக்கு மனைவியாவதில் முடிகிறது. பின்னர் அமலாவின் அப்பா அம்மாவை கண்டுபிடிக்க பஹத் உதவினாரா இல்லையா?. அமலா பெற்றோரைப் பார்த்தாரா இல்லையா?. இருவருக்கும் இடையே காதல் வந்ததா வரவில்லையா? பஹத்தின் அரசியல் கனவு என்னாச்சு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். 

பஹத்தின் நடிப்பு சொல்லவே வேண்டாம். மனுசன் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அன்னாவும் ரசூலுமில் கவர்ந்து நிறையப் படங்களை தேடிப்பிடித்துப் பார்க்க வைத்தார். அமலா பாலும் நன்றாகவே செய்திருக்கிறார். சில லாஜிக் இல்லாத காட்சிகள், சினிமாத்தனமான கிளைமாக்ஸ் என எல்லாம் இருந்தாலும் ஒரு இந்தியன் பிரணயக்கதா ரசிக்கவே வைத்தது.

அடுத்ததாகப் பார்த்தது நெடுஞ்சாலை. 


ரு கார் விபத்தில் பெற்றோரை இழந்து பிறக்கும் நாயகன் ஆரி இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் லாரிகளில் கொள்ளை அடிக்கிறார். இவரை வைத்து தனக்கு லாபம் ஈட்டிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சலீம் குமார், இவர்களது வாழ்க்கையில் நெடுஞ்சாலையில் தாபா நடத்தும் மலையாள வரவான ஷிவதாவும் கஞ்சாப் பேர்வழியான இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணனும் புக, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளே கதைக்களம்.

ஷிவதாவின் மீது போலீசுக்குக் ஒரு கண், அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது காலை ஒடித்துவிடுகிறார். இதனால் அவளுக்கு விபசாரி பட்டம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். இங்கு சாட்சியாக வரும் ஆரி அவளைக் காப்பாற்ற, இன்ஸ்பெக்டருக்கும் ஆரிக்கும் இடையில் பற்றிக் கொள்கிறது. நாயகனை ஒரு கட்டத்தில் தனது உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நின்று நாயகி காக்கிறாள். அதன் பிறகு அவன் தனது கொள்ளைத் தொழிலை விட்டானா... காதலில் விழுந்தானா... இன்ஸ்பெக்டரிடமிருந்து தப்பித்தானா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.

லாரிகளில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அருமை என்றாலும் ஏணி போன்ற சாதனத்தை தங்களது வண்டியில் இருந்து லாரியில் மாட்டும் போது லாரி டிரைவருக்கு தெரியாமல் இருக்குமா என்ன? ஒவ்வொரு முறை திருடும் போதும் லாரி டிரைவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதே சறுக்கல்தான். இருந்தாலும் கொண்டு சென்றவிதம் அருமை.

ஆரிக்கு இதில் தார்ப்பாய் முருகன் என்ற கதாபாத்திரம், நன்றாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் பருத்திவீரன் கார்த்தியை நினைவூட்டுகிறார். ஷிவதாவுக்கு தாபா நடத்தும் மங்கா கதாபாத்திரம், மலையாளக்கரை கொடுத்த ஜில் வரவு... இயக்குநர்களுக்கு ஏற்ற நடிகை, நன்றாக நடிக்கவும் செய்திருகிறார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் கேமரா இவர் மீது மேய்வதை வைத்துப் பார்க்கும் போது கதைக்காக இவரை புக் செய்வதைவிட கவர்ச்சிகாகவே பெரிதும் பயன்படுத்தப்படுவார் என்றே தோன்றுகிறது. 

போலீஸாக வரும் பிரசாந்த் நாராயணன் அருமையான வில்லன், சலீம் குமார், தாபா மாஸ்டராக வரும் தம்பி ராமையா, கும்கி அஸ்வின், தாபாவில் வேலை செய்யும் சிறுவன் என எல்லாரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.


நிறைய இடங்களில் வசனத்தின் சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் மோசமான வார்த்தைகள் என்பது வாயசைப்பில் தெரிகிறது. பெரும்பாலான இயக்குநர்கள் எதார்த்தம் என்ற போர்வையில் கேவலமான வார்த்தைகளை வைப்பதை விரும்புகிறார்கள். பிரசாந்த் நாராயணன் உள்ளிட்ட சிலரின் பேச்சு டப்பிங் படம் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. ஒருவேளை  கேரள எல்லையை ஒட்டி நடக்கும் கதை என்பதால் அப்படி பேசியிருப்பார்களோ?

படத்தில் ஒரு காட்சியில் மீசைக் கோனார் மாட்டுக்கறி விற்கிறார். கோனார்கள் மாடு வளர்ப்பார்கள்... பால் வியாபாரம் செய்வார்கள். தாங்கள் தெய்வமாகப் பார்க்கும் மாட்டை வெட்டி விற்கமாட்டார்கள். பெரும்பாலும் கோனார்கள் மாட்டிறைச்சி சாப்பிடவும் மாட்டார்கள். ஏன் இயக்குநர் மாட்டிறைச்சி விற்பவருக்கு அப்படிப் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை என்ன கோபமோ... கோனாரு மகளை லவ்வி இருப்பாரோ என்னவோ. இது போன்ற காட்சிகளை யாருமே எதிர்க்கவில்லையே ஏன்? நாமளும் கொளுத்திப் போட்டுப் பார்ப்போம்.

படத்தின் இறுதிக் காட்சி பல படங்களில் பார்த்ததுதான்... முக்கிய வில்லன் அவர்களை விடும்போது அடுத்து என்னவாகும் என்பது நமக்குத் தெரிவதால் சுவராஸ்யமில்லாமல் போகிறது. எதற்காக எல்லா இயக்குநர்களும் ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை... கதை மக்களின் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக இதுபோல் முடிவுகளை வைக்கிறார்கள் போல.. இப்படியே போனால் படங்கள் சரிவை நோக்கித்தான் செல்லும். இருப்பினும் நெடுஞ்சாலையில் ஒரு இரவு நேரப்பயணம் போய் வரலாம்... அலுப்புத் தெரியவில்லை.

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே... மனசுல இது 600-வது பதிவு... மொத்தத்தில் 795-வது பதிவு... எல்லாம் உங்களால்தான் சாத்தியமானது... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

  1. கேரள எல்லையில் அப்படித்தானோ...?

    600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. 600 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  3. 600-வது பதிவுக்கு,வாழ்த்துக்கள்,குமார்!///நெடுஞ்சாலை..........ம்.........விறு விருப்பான,அடுத்து என்ன என்று ஆவலைத் தூண்டிய படம் என்றால்,மிகையாகாது.///நாயகி கேரளத்துப் பெண் குட்டி தானே?கதையிலும் அவ்வாறே என்பதால்,கமேரா மேய்ந்திருக்கக் கூடும்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜெயக்குமார் ஐயா...
    தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க தனபாலன் சார்...
    இருக்கலாம் சார்...
    தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க கோவை நேரம் அவர்களே...
    இது ரெட் ஒயின் அல்ல ரெட் ரெயின்... நரேன் நடித்தது... வானத்தில் ஏதோ ஒரு சக்தியால் உருண்டை உருண்டையாய் வருவதாகக் காட்டினார்கள்... எனக்கு பிடிக்கலை... அதான் பார்க்கலை...

    ரெட் ஒயின் நல்ல படமாமே....

    பதிலளிநீக்கு
  6. வாங்க சகோ. எழில்...
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்...

    பதிலளிநீக்கு
  7. வாங்க யோகராஜா அண்ணா...
    வாழ்த்துக்கு நன்றி.
    கேரளத்துப் பெண் குட்டி என்றாலும் நெஞ்சில் துண்டைப் போட்டிருக்கலாமே...
    சரி விடுங்க... படம் ஓகேதான்...

    பதிலளிநீக்கு
  8. 600-வது பதிவு... மனம் நிறைந்த பாராட்டுகள் குமார்.

    மேலும் பல சிறப்பான பதிவுகள் வெளியிட எனது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  9. 600-வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி