மார்ச் 7ம் தேதி என்பதை எப்போதும் நான் ஒரு நிகழ்வாகக் கடந்து வந்ததில்லை. பள்ளியில் படிக்கும் நாட்களில் எல்லாம் பிறந்த தினத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுத்தால் கூட தம்பி என்ன புதுசாப் பண்ணுது என்று சொல்லிய கிராமம்தான் எங்கள் ஊர். இன்று கால மாற்றம் பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஊருக்குள் கொண்டு வந்துவிட்டது என்பது தனிக்கதை.
கல்லூரிக்குச் சென்ற பின்னர் நண்பர்களின் தூண்டுதலுக்காக எதாவது சுவீட் வாங்கி நட்புக்களுக்கு மற்றுமே கொடுத்திருக்கிறேன். கொண்டாட்டங்கள் என்ற வட்டத்துக்குள் வந்ததில்லை. நட்புக்கள் அனுப்பும் வாழ்த்துக்கள் வீடு தேடி வந்ததுண்டு. சில வாழ்த்துக்கள் கொடுத்த சந்தோஷங்கள் இன்னும் இனிப்பாய் இருக்கிறது. சில வாழ்த்துக்கள் இன்னும் எங்கள் வீட்டு பீரோவில் பத்திரமாய்... ஊருக்குப் போகும் போதெல்லாம் பீரோவுல ஒரு தட்டுல வெறும் பேப்பரா வச்சிருக்கே... கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடுத்துட்டுப் போடா... நான் வேஷ்டி சட்டை வச்சிப்பேன்ல என அப்பா சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார். எனக்கு என்னவோ தேவகோட்டை சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியும் அந்த நட்பு வட்டமும் கண் முன்னே வர இன்னும் அதை எல்லாம் எடுத்து சுத்தம் பண்ணிக் கொடுக்கவில்லை.
எங்க ஐயா வீட்டில் எல்லோருடைய பிறந்தநாளையும் குறித்து வைத்திருப்பார்கள். எங்கள் பிறந்ததினத்தன்று பெரும்பாலும் மதிய சாப்பாடு அங்குதான் இருக்கும். அம்மா சைவ சாப்பாடு செய்து வைத்திருப்பார்கள். நாங்கள் எல்லாரும் அங்கு ஆஜராகிவிடுவோம். அந்த தினங்கள் இனி என்றும் வருவதில்லை. இப்போ நாங்க எல்லோரும் வாழ்க்கைப் பயணத்தில் ஆளுக்கு ஒரு திசையில்... இப்போதெல்லாம் ஊருக்குச் செல்லும் போது ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ ஐயா வீடு போக முடிகிறது. அப்போதெல்லாம் அம்மா இன்னார் வந்திருந்தார்... உன்னைய ரொம்பக் கேட்டாங்க என்று சொல்லும் போது அந்த தேவிபவனத்துக்குள் இருந்த ஐயா வீட்டின் வாசலில் அவருடன் நாற்காலியில் அமர்ந்து நாங்கள் அடித்த அரட்டைதான் ஞாபகத்துக்கு வரும்.
திருமணத்துக்கு முன்பு வரை சாதாரண நாளாகக் கடந்து வந்த மார்ச்-7 மனைவியின் வருகைக்குப் பின்னர் அதிகாலையில் எழுந்து எதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்து அவர் எடுத்து வைத்திருக்கும் புதுத்துணியை அணிந்து சந்தோஷிக்கும் நாளாக மாறியது. இப்போதெல்லாம் எல்லா பிறந்ததினங்களும் மனைவி எடுக்கும் புதுத்துணியோடுதான் கடந்து போகிறது. இந்த வருடமும் அதே.
இன்றைய தினம் எனது பிறந்த நாள் சற்றே வித்தியாசமாகக் கடந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஊரில் இருந்து உறவினர் வரும்போதே இரண்டு சிறிய பரிசுப்பெட்டி வந்திருந்தது. ஸ்ருதியும் விஷாலும் அவர்கள் சேர்த்து வைத்த காசில் இருந்து பரிசுப் பொருளை வாங்கி அவர்களின் பெயரை எழுதிக் கொடுத்து விட்டிருந்தார்கள். சரி இன்று பிரிக்கலாம் என பத்திரமாக வைத்திருந்தேன். இன்று காலை எழுந்து குளித்து வந்து சாமி கும்பிடும்போது ஊரில் இருந்து போன் வந்தது. கூப்பிட்டு என்னவென்று கேட்டால் அப்பா உடனே ஸ்கைப்பில் வாங்க என்று பாப்பா அழைத்துவிட்டு வைத்துவிட்டார்.
ஸ்கைப்பில் போனால் காலையில் முருகன் கோவிலுக்குப் பொயிட்டு வரும்போது அவர்கள் சேர்த்த காசில் இருவரும் அம்மாவிடம் அடம்பிடித்து கேக் வாங்கி வந்திருக்கிறார்கள். பாப்பா மெழுகுவர்த்தியை ஏற்ற, நான்தான் குமார் என்றபடி அதை ஊதி அணைத்து கேக்கை வெட்டினார் விஷால். பின்னர் இருவரும் அவர்கள் கொடுத்துவிட்ட பரிசுப் பொருளை பிரிக்கச் சொல்லி பார்த்து சந்தோஷப்பட்டார்கள். இதுவரைக்கும் கழிந்த தினங்களில் இன்றைய பிறந்தநாள் மிகவும் சிறப்பானதொரு நாளாக அமைந்தது. இந்த நாளை இனிய நாளாக்கிய என் செல்லங்களுக்கும் மனைவிக்கும் அன்பு முத்தங்கள்.
மேலும் காயத்ரி அக்கா எல்லாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வார்கள். அவர்களிடம் அக்கா என்னை மறந்துட்டீங்க என்று சொன்னதும் முகநூலில் தேடியிருக்கிறார். விவரம் கிடைக்கவில்லை... பின்னர் நான் முகநூலில் போட்டதைப் பார்த்து வாழ்த்திவிட்டு தேதியை போடாமல் மறைத்து வைத்துவிட்டாயே என்று கேட்டிருந்தார்கள். பிறந்தநாள் கொண்டாடினால் தேதி தேவை நமக்கு எதுக்கு என்றேன். உண்மைதான் எல்லா நாளுமே நமக்கு சுகமான நாட்களாக இருப்பதில்லை என்பதால் எந்த நாளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எண்ணம் வருவதில்லை.
எனது உறவுகள் கேக்குடன் அறைக்கு வந்து கேக் வெட்ட வைத்து... அட ஏங்கேக்குறீங்க இந்த கேக் வெட்டுறதெல்லாம் நமக்குப் புடிக்காத ஒண்ணு... இருந்தும் அவர்கள் அன்புக்காக கேக் வெட்டியதுடன் மதியம் தம்பி செய்த சூப்பர் மட்டன் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டிவிட்டு நல்ல தூக்கம் ஒன்று போட்டாச்சு. இனி தொடரும் நாட்கள் ஆச்சர்யத்தையோ அதிசயத்தையோ நிகழ்த்துமா என்பது தெரியவில்லை. ஆனால் எப்பவும் போல் இதுவும் கடந்து போகும் என்ற கணக்கில் கடந்து போய்க் கொண்டுதான் இருக்கும்.
ஆமா மார்ச் மாதம் பிறந்தவர்கள் எல்லாம் அறிவு ஜீவிகளாமே... ரொம்பப் பேரு சொல்லிக்கிட்டுத் திரியிறாங்க... உண்மையாங்க... இன்று பிறந்த நாள் கொண்டாடிய தெரிந்த தெரியாத எல்லாருக்கும் வாழ்த்துக்கள்... இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய அன்பிற்குரிய அக்கா சீதாலெட்சுமி அக்காவுக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வரும் மார்ச்-21 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் எனது கல்வித்தந்தை முனைவர் பழனி இராகுலதாசன் அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை இப்போதே சொல்லிக் கொள்கிறேன்.
இந்த நாளில் முகநூலில் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் என் அன்பான நன்றிகள்.
-'பரிவை' சே.குமார்.
Kids are so sweet. Happy birthday.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் குமார். முகநூலில் நீங்கள் தேதி தராததால் அங்கு குறிப்பு வரவில்லை போலும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஒரு வோட்டு போட்டு நான் வாழ்த்துக்களை சொல்வதற்கு முன்பே 'பக்தி 'உங்களை வோட்டுக்களால் திக்கு முக்காட வைத்து விட்டார் போலிருக்கே !
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்..
பதிலளிநீக்குவளர்க நலமுடன்..
அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்க்கள் சகோ!!
பதிலளிநீக்குகுழந்தைகள் நம் வாழ்வில் வந்த வசந்தங்கள் !!அவர்கள் உங்களை எவ்வளோ மிஸ் பண்றதுக்கும் ,பாசமழை பொழியிறதுக்கும் அண்ணி உங்களை பற்றி அவர்களிடம் பேசிக்கொண்டே இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறவாமல் அவங்களுக்கும் உங்க மகிழ்ச்சியை சொல்லுங்க!
மனம் நிறைந்த இனிய பிற்ந்தநாள் நல்வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குபிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் குமார்....
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு