பெரும்பாலான கிராமங்களில் அடி பம்புகள் இன்னும் இழந்துபோன அடையாளங்களுடன் தனது சுயத்தை இழக்காமல் இருக்கின்றன. எங்கள் ஊரிலும் முதன் முதலில் எங்கள் தண்ணீர் தேவையைத் தீர்ப்பதற்காக வந்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.
எங்கள் ஊரில் இரண்டு கண்மாய்கள் இரண்டு ஊரணிகள் இருந்தாலும் மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் தண்ணீருக்கு திண்டாட்டமாக இருந்த காலம் அது. ஊரணிகள் என்பது பெயருக்குத்தான். ஒன்று சுத்தமாக பயன்பாட்டில் இல்லை. மற்றொன்றில் தண்ணீர் நிறைந்தாலும் அது குளிப்பதற்கோ குடிப்பதற்கோ பயன்படுவதில்லை. கண்மாயிலும் ஊருக்குப் பின்னே இருக்கும் கண்மாய் விவசாயத்திற்கும் குளிப்பதற்கும் மட்டுமே பயன்பட்டது. ஊருக்குள் நுழையும் போது இருக்கும் கண்மாய் விவசாயம், குளிக்க, குடிக்க என எல்லாவற்றிற்கும் பயன்பட்டது.
நாங்கள் பள்ளியில் படிக்கும் போதுதான் எங்க ஊருக்கு அடி பம்ப் வரப்போவதற்கு அடையாளமாக அடிபம்ப் போடுவதற்காக இடம் பார்த்தார்கள். ரோட்டோரத்தில் மாரியம்மன் கோவிலுக்குப் பின்னே வேப்ப மரத்து அருகில் போர்ப் போட ஆரம்பித்தார்கள். எப்போது அடி பம்ப் வரும் என்ற ஆவல் எல்லோருக்குள்ளும் இருந்தது. பத்துப் பதினைந்து நாள் போர் போட்டு குழாய் இறக்கி அதைச் சுற்றி கூழாங்கல் கொட்டி மேலே சாக்கைக் கட்டி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.
ஊருக்குள் ஓட்டுக் கேட்டு வரும் எம்.எல்.ஏ. ஜெயித்ததும் எட்டிப் பார்க்காமல் அடுத்த தேர்தலுக்குத்தான் வருவார். நாமும் அன்று வரவேற்றது போலவே மறுபடியும் வரவேற்று ஓட்டைப் போட்டு அடுத்த அஞ்சு வருசத்துக்கு சம்பாரிக்க வழி பண்னிக் கொடுப்போமல்ல அதே போல் போர் போட்டதும் கொஞ்ச நாளைக்கு யாரும் வரவில்லை. பின்னர் ஒருநாள் திடீரென ஒரு கம்ப்ரஸரைக் கொண்டு வந்து தண்ணிரை சுற்றம் செய்தார்கள். முதலில் சேறும் சகதியுமாக வந்த தண்ணீர் நேரமாக நேரமாக நல்ல தண்ணீராக வர எல்லோரும் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட்டோம்.
அதன் பிறகு சில வாரங்கள் கழித்து அடி பம்பினைச் சுற்றி வட்டமாக சிமிண்டில் தளமிட்டு சுற்றி கட்டி நின்று தண்ணீர் அடிப்பதற்கான பிளாட்பாரம் அமைத்துச் சென்றார்கள். பின்னர் ஒருநாள் அடிபம்ப் முழு உருவம் பெற்று தண்ணீரை கொடுக்க ஆரம்பித்தது. குடத்தை வைத்துவிட்டு அதம் பின்னே நீளமாக இருக்கும் கம்பியை மேலும் கீழுமாக ஆட்ட தண்ணீரைச் சளச்சளவென கொட்ட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஆசையில் வேகவேகமாக அடிக்க பின்னர் கைவலி வந்து தண்ணீர் அடிக்க யோசிக்க வைத்தது.
ஒரு சிலர் கம்பியை வேகமாக ஆட்டும் போது டங்க் என மேலே ஒரு அடி கீழே ஒரு அடி... டங்க்கு டங்குன்னு அடிச்சா அப்படி அடிக்காதீங்கன்னு பக்கத்துல நிக்கிறவங்க சொன்னாலும் கேக்காத ஒரு சிலரை இளையர் வீட்டு ஐயா கண்டபடி திட்டிவிடுவார். ஒருவர் தண்ணீர் அடிக்கும் போது அசந்து மறந்து கையை அந்த கம்பியின் பாதையில் வைத்துவிட்டால் போதும் உயிர் போகும் அளவிற்கு வலியுடன் ரத்தம் கொட்ட நச்சுவிடும். எல்லாருக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. சிலர் தண்ணிர் அடிக்கும் போது வழுக்கி விழுந்து அடிபட்டிருக்கிறார்கள்.
சில நாட்கள் செயின் அறுந்து படுத்துவிடும், அப்புறம் வைத்தியரைக் கூட்டியாந்து பார்த்து சரி செய்வார்கள். வைத்தியருக்கு கூலியாக வீட்டிற்கு இவ்வளவு என வசூலிப்பார்கள். கண்மாயில் தண்ணீர் இல்லாத நாட்களில் எல்லாம் நாங்கள் குளிக்கும் இடம் அடி பம்ப்தான்... ஆளுக்கு ஒரு பெரிய இரும்பு வாளி வைத்திருப்போம்... நான், என் தம்பி, தம்பி சரவணன், சேகர் சித்தப்பு, சரவணன் சித்தப்பு, முருகன், மச்சான் இளங்கோ, சோலை என எல்லாருமாக அரட்டை அடித்துக் கொண்டு குளிப்போம். செவ்வாய் வெள்ளி மாடு குளிப்பாட்டி விட்டு குளிக்க வேண்டும். தினமும் காலையில் தண்ணீர் அடித்து குடம் குடமாகக் கொண்டு போய் பாத்திரங்களை நிரப்பி வைப்போம். அதற்காகவே எல்லாருடைய வீட்டிலும் பிளாஸ்டிக் வைத்திருப்போம்.
பின்னர் எங்கள் ஊருக்கு மற்றுமொரு அடி பம்ப் வந்தது. அது ஊருக்குப் பின்னே வயல்களுக்குள் இருந்தது. அங்கு யாரும் விரும்பிச் செல்வதில்லை. அந்த அடி பம்ப் ஒருவரின் தோட்டத்திற்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்கள் பாசமிகு அடிபம்ப் நாங்கள் பள்ளி, கல்லூரி எல்லாம் முடித்த போதும் ஓய்வில்லாமல் உழைத்தது. இதற்கு இடையே கண்டதேவியில் இருந்து தண்ணீர் கொண்டு வர பைப் போட்டு எல்லைப் பிரச்சினையில் நின்று போனது. பின்னர் பக்கத்து ஊரான மன்னன் வயலில் இருந்து வயல்களின் ஊடாக தண்ணீர் கொண்டு வந்தார்கள். கொஞ்ச நாள் எல்லாரும் குழாயில் பிடிக்க, பின்னர் அதுவும் போய்விட எங்கள் அடி பம்ப் அப்போது பிரதமரின் குடிநீர் திட்டத்தில் மோட்டர் இணைத்து அருகே ஆயிரம் லிட்டர் டாங்குடன் தயாராகியது.
தற்போது எங்கள் ஊருக்குள் டாங்க் கட்டி தண்ணீர் பைப் வீட்டிற்கு வீடு வந்த போதும் தன்னுடைய சுயத்தை இழக்காமல் இன்னும் உயிர்ப்புடன் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது எங்கள் ஊர் அடி பம்ப்.
-கிராமத்து நினைவுகள் தொடரும்.....
-'பரிவை' சே.குமார்.
நினைவுகள் என்றுமே சுகமானவை
பதிலளிநீக்குத.ம.2
நல்ல நினைவுகள். சிறு வயதில் வயக்காட்டில் பம்ப்செட்டில் குளித்த நினைவுகள் வருகின்றன.
பதிலளிநீக்குஇப்போது இங்குள்ள அடி பம்ப்புகளில் கூட்டமே இல்லை... தண்ணீர் வந்தால் தானே...!
பதிலளிநீக்குஇனிய நினைவுகளுக்கு வாழ்த்துக்கள்...
உயிர்ப்புடன் ஒரு கிராமத்தை கண்முன் கொணர்ந்து நிறுத்திய காட்சிப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குஆகா... அருமை... எங்கள் ஊர் அடி குழாயை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்...!
பதிலளிநீக்குஅடி பம்பில் அடிபட்டதுதான் இந்த நினைவுக்கு காரணம் ! அன்று வலி இன்று பதிவு
பதிலளிநீக்குத ம 6
எங்கள் ஊர் அடி பம்ப் - இன்னும் உயிர்ப்புடன் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குமலரும் நினைவுகளில் மனம் நிறைகின்றது.
உங்கள் பதிவு எனக்கும் பழைய நாட்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇனிய நினைவுகள்......
பதிலளிநீக்குநெய்வேலியிலும் தண்ணீருக்குக் கஷ்டம் இல்லை. பிறகு தில்லி வந்த பின்பும் தண்ணீர் கஷ்டம் இல்லை...
சில சமயங்களில் கிராமங்களில் இந்த அடி பம்பில் தண்ணீர் பிடித்திருக்கிறேன்!
பம்ப்செட் குளியல் - நிச்சயம் அருமையானது தான். சிறுவயதில் அம்மாவின் கிராமத்தில் குளித்தது!