செவ்வாய், 24 டிசம்பர், 2013

பாரதி நட்புக்காக : லியோனியின் சொல்லரங்கம் - 'பகுதி : இ'

பாரதி நட்புக்காக அமைப்பு தங்களது ஆண்டு விழாவினை அபுதாபி இண்டியன் பள்ளிக் கலையரங்கில் வெள்ளிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடத்தியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.

முதல் இரண்டு பகுதிகளையும் படிக்க கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்குங்கள்...


(விழா அமைப்பாளர்களும் பேச்சாளர்களும்)

திரு. விஜயகுமார் அவர்களைப் பேச அழைக்க, அவரும் தாய்த்தமிழுக்கு கவிதையால் வாழ்த்துப்பாடி அவை தொழுது இயக்குநரே என்று தனது வாதத்தை அமர்களமாக ஆரம்பித்தார். நடுவர் அவர்களே இசையே என்று பேச வந்த அண்ணியார் அவர்கள் பாடலாகப் பாடினார். நீங்களும் சேர்ந்து பாடினீர்கள்...  உங்க முதலிரவு அன்னைக்கு ரெண்டு பேரும் பாட்டாவா பாடுனீங்க என்றதும் ஏய்யா உனக்குப் பொறாமை நாங்க பாடுனது பிடிக்கலையான்னு லியோனி கேட்டாரு... சொல்லுங்க முதலிரவுல பாடுனீங்களா என்றார். ஏய்யா அங்க பாடியிருந்தா என்ன ரெண்டும் நல்லாத்தானே உள்ள போனதுங்க... என்னாச்சோன்னு சொல்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுவானுங்கய்யா என்றார். 

ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை வெளியில் கொண்டு வந்து கிராமத்து மனிதர்களைக் தனது படத்தில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அவரது படங்களை அவர் இயக்கியிருக்கும் விதம் மிக நேர்த்தியாக இருக்கும். கதை என்று பேசிய ஆதவன் அவர்கள் சோறு குழம்பு எனச் சொல்லி கதையே கதையேன்னு சொன்னார். எப்படிக் கதையிருந்தாலும் இயக்குநர் சரியாக இயக்கவில்லை என்றால் அந்தப்படம் தோல்விப்படமாகிவிடும் ஆதவன் என்றார். இங்கு விஜயகுமார் அவர்கள் சிவாஜி கணேசனைப் போல் 'மிஸ்டர் ஆதவன்' என்று சப்தமாக கர்ஜனையோடு அடிக்கடி அழைத்தது அரங்கை சிரிப்பில் ஆழ்த்தியது.

நானும் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்று சென்னையில் அலைந்தவன்தான்... சீனு ராமசாமியும் நானும் ஒன்றாகத்தான் இருந்தோம்... சிம்புதேவனும் என்னோட நண்பன்தான்... அவர்கள் இயக்குநர்களாய் ஜொலிக்கிறார்கள். நான் இப்படியிருக்கிறேன் என்றார்.  இயக்குநர் சங்கரைப் பாருங்கள் வெளிநாடுகளுக்குப் போக முடியாதவர்களை எல்லாம் தனது படத்தின் மூலம் சீனப் பெருஞ்சுவரையும்... அயர்லாந்து, லண்டன் என எல்லா இடங்களையும் திரையில் கொண்டு வருகிறாரே...கதையும் இசையும் நடிப்பும் செய்து விடுமா என்ன...

நடுவர் அவர்களே... இசை எத்தனை எழுத்து... உடனே லியோனி ரெண்டு எழுத்து... கதை... அதுவும் ரெண்டு எழுத்துத்தான்.... நடிகர்.. நாலெழுத்து... இயக்குநர்... ஆறெழுத்து... இப்ப எதுக்குய்யா இதைக் கேட்கிறாய்... இப்பச் சொல்லுங்க ரெண்டு, நாலு, ஆறு இதுல எது பெரிசு என்றார். சந்தேகமில்லாமல் ஆறுதான் பெரிசு. அப்ப இங்க இயக்குநர்தானே பெரிசு... தீர்ப்பைச் சொல்லிடுங்க... அதுசரி இப்படியெல்லாம் தீர்ப்பைக் கேட்பீங்களா... நல்லாயிருக்குய்யா என்றார் லியோனி. இடையில் ரஜினி போல் பேசினார். உடனே ரஜினி நோவுல கெடந்து பேசுற மாதிரி இருக்குய்யா... இருந்தாலும் அந்த முயற்சிக்குப் பாராட்டுக்கள் என்றார்.

நேரம் கடந்து கொண்டிருந்ததால் விஜயகுமார் அவர்களின் பேச்சைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கவிஞர் ஆதவனை, இந்திய ராணுவத்தில் பணி புரியும் இவர் மிகச் சிறந்த எழுத்தாளர், நல்ல பேச்சாளர்... ஆளைப் பார்த்தாலே தெரியும் அவர் ராணுவத்தில் இருப்பது என்று சொல்லி பேச அழைத்தார்.

Displaying ku_0658.JPG
(திரு.விஜயகுமார்)

இனியவன் தனது உரையைத் தொடங்கியதும், லியோனி அவர்கள் படையப்பாவில் ரஜினி சொல்வது போல் இவரு போட்டிருக்கிற டிரஸ் இவரது இல்லை. பாரதி நட்புக்காக அன்பர்கள் வாங்கிக் கொடுத்தது... இவருதான் டிரஸ்ஸை எல்லாம் பெட்டியோட விட்டுட்டு வந்துட்டாரே என்றார். உடனே இனியவன் ஆமாங்க எனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்தாங்க.... பனியனெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க... அதுவும் பேக்கோட கொடுத்தாங்க என்றார். இந்தப் பேச்சு தொடரும் போது சிவகாசிக்கு ஒரு முறை போனபோது எனக்கு வெடியில மாலை போட்டாங்க... பயந்து பயந்து பேசிக்கிட்டு இருந்தா தீப்பெட்டி தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக இந்த வெடிமாலையை பத்த வைக்கிறோம்ன்னு சொல்லிட்டானுங்க என்றார்.

உடனே லியோனி ஒவ்வொரு ஊர்லயும் கொடுக்கிற அன்புப் பரிசு இருக்கு பாருங்க அந்தந்த ஊருக்கு தகுந்த மாதிரி இருக்கும். ஒரு முறை பவானி போனோம். அங்க ஒரு போர்வையை போர்த்திவிட்டுட்டு பேசி முடிக்கிறவரைக்கும் இதை போர்த்திக்கிட்டே பேசுங்கன்னு சொல்லிட்டானுங்க... அதே மாதிரி பத்தமடை போனப்போ ரெண்டு பாயைக் கொடுத்துட்டாங்க... பேசி முடிச்சிட்டு வீட்டுக்கு ரெண்டு கக்கத்துலயும் பாயை இடுக்கிக்கிட்டு நடந்து போனா பக்கத்துவீட்டு பாட்டி லியோனி என்ன முதலிரவுக்குப் பொயிட்டு வர்றமாதிர் வாறேன்னு கேக்குது. இப்படித்தான் திருநெல்வேலி போனதுக்கு இருட்டுக்கடை அல்வா கொடுத்தாங்க என்றதும் இன்னைக்கு டூயட் பாடினப்போ இங்கயும் அல்வா கொடுக்கிற மாதிரித்தான் இருக்கும்ன்னு நினைச்சேன் என்றான் இனியவன்.

ஒரு தடவை திருப்பூர் போனோம் அஞ்சு ஜட்டி, அஞ்சு பனியன் கொடுத்தாங்க. தினமும் காலையில அவங்களை நினைக்காம நான் கிளம்பினதே இல்லை என்றார். தனது உரையைத் தொடர்ந்த இனியவன், பிளைட்ல அந்தப் புள்ளைக்கிட்ட ஒண்ணும் கேக்கலை பேர் கேட்டேன்... நான் சௌத் இந்தியா இல்லை நார்த் இந்தியான்னு சொன்னா.. அதுதான் பார்க்கயிலே தெரியுதேன்னு சொல்லிட்டு கொஞ்சம் பேசினேன்... பின்னால வான்னு சொன்னா... போனது தப்பாய்யா... பெட்டியை எடுத்து வச்சிக்கிட்டு கொடுக்க மாட்டேனுட்டானுங்க என்றார்.

டூயட்டைப் பற்றி பேசிய இனியவன் இன்னைக்கு மேடையில நடந்ததைப் பார்த்தால் ஊருக்குப் போற டிக்கெட்டை நாளைக்கு மாற்றணும் போல என்றார். அண்ணியார் அவரை ரொம்ப மோசமா பாட்டுல திட்டினாலும் இவரு சிரிச்சிக்கிட்டே பாடுறாருய்யா... 'ஒத்தயடிப் பாதையில ஒருத்தி நான் போகயில.... சுத்திச் சுத்தி பின்னால பித்தனைப் போல் வந்தவனேன்னு பாடுறாங்க... இவரும் சிரிச்சிக்கிட்டு பின்னாலயே பாடுறாரு.... பித்தன்ங்கிறது எவ்வளவு மோசமான வார்த்தை தெரியுமா? என்று பேசிக்கொண்டே போக, இடையில் புகுந்த லியோனி ஏய்யா நாங்க பாடுனது உனக்குப் பிடிக்கலையா... என்னய்யா வயித்தெரிச்சல் உனக்கு என்றார்.

இன்னைக்கு பராசக்தி படத்துல இருந்து ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினாங்க. அப்போ அந்தப் பாடலைப் பற்றி மேடையில் அறிமுகம் செய்த சகோதரி, படத்தின் இயக்குநரையோ, இசை அமைப்பாளரையோ, கதையாசிரியரையோப் பற்றி சொல்லவில்லை. நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம் என்றுதான் சொன்னார். இதிலிருந்தே தெரியவில்லையா ஒரு படத்தை மக்கள் முன் கொண்டு சென்று வெற்றிப்படமாக்குவது நடிகர்கள்தான் என்றார். ஆமா அந்தப்படத்துக்கு கதை கலைஞர் அவர்கள் யார் எடுத்ததுன்னு எனக்குந் தெரியலை என்று சொன்னார் லியோனி.

Displaying ku_0661.JPG
(திரு. இனியவன்)

முதல் மரியாதை படத்துல ஒரு காட்சி, சாகக் கிடக்கிற சிவாஜியைப் பார்க்க ராதா வருவாங்க. அப்போ ராதாவின் கால் அந்த மண்ணை மிதித்ததும் அவரது உடல் ஒரு சிலிர்ப்பு... சாகக் கிடக்கிறவன் நடிக்கணும்... இங்க அவரோட உயிர் நடிச்சது. அது ஒரு நடிகனாலதான் முடியும். என்னவோ சொன்னாங்களே இயக்குநர் இமயம் வெற்றிப்படம் கொடுத்தாருன்னு கருத்தம்மாவுல படத்துல பெரியார்தாசனுக்கு வாதம் வந்து ஒரு பக்கம் புல்லா செயல் இழந்திரும்... அவரோட அந்தப் பக்கத்துக் கண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கிட்டே வரும். பாரதிராஜா அவர்கிட்ட எதுக்கு கண்ணச் சுருக்குறீங்கன்னு கேட்டதுக்கு ஒரு பக்கம் உடம்பு செயலிழக்கும் போது கண்ணும் சுருங்கிடும்ன்னு சொல்லியிருக்கார். உடனே நீ நடிகன்யான்னு சொல்லி நீ நடின்னு சொல்லிட்டு அவர் போயிட்டார் என்றார்.

கும்பகோணத்துல குழந்தைகள் தீவிபத்தில் இறந்தபோது யாரு அந்த இடத்துக்கு வந்தா கதையாசிரியரா, இயக்குநரா.. ஒரு நடிகன் நடுவர் அவர்களே... தன்னோட சூட்டிங்கை பாதியிலேயே நிப்பாட்டிட்டு அங்க ஓடியாந்தது தல அஜீத் என்னும் நடிகன் மனிதன் என்றதும் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. 

ஷகீலா படம் கதைக்கா நடிகரே ஓடுது என்றதும் அதை ஏன்ய்யா இங்க கேக்குறே என்றார். சொல்லுங்க நடுவரே... நாமெல்லாம் முழூ நீள திரைப் படத்தைப் பார்ப்போம். இந்தம்மா படத்துல முழுவையும் திரையையும் எடுத்துட்டு நீலப்படமா ஆக்கிட்டாங்கன்னு சொன்னவர். நம்ம ஊர்ல தியேட்டருக்குள்ள பொயிட்டு படத்தைப் போடுய்யா... படத்தைப் போடுயான்னு கத்துறானுங்க என்றார். இன்னும் நிறைய பேசினார். பேசிக் கொண்டிருக்கும் போது  இடையில் நடுவரிடம் வந்த சித்ரா அவர்கள் ஒரு பேப்பரை நீட்ட, அதைப் பார்த்தவர் தன் வாட்சையும் பார்த்து ஓகே சொன்னார். திருமதி லியோனி அவர்களும் இனியவனை முடித்துக் கொள்ளும்படி சைகையால் சொன்னார்.

தனது தீர்ப்பைச் சொல்லும் விதமாக பேசிய நடுவர் அவர்கள் இசையால் ஓடிய படங்கள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் படம் முழுக்க பாட்டாகவே வைத்திருப்பார்கள். அதேபோல் கதைக்காக ஓடிய படங்கள் எவ்வளவோ இருக்கின்றன. பாடல்கள் நிறைந்த படங்கள் எல்லாம் தோல்வியையும் தழுவி இருக்கின்றன. நல்ல கதைகள் இருந்த படங்கள் எல்லாம் சரியான இயக்கம் இல்லாமல் தியேட்டரை விட்டே ஓடியிருக்கின்றன.

இப்போ இரண்டாம் உலகம்ன்னு ஒரு படம் தியேட்டருக்குப் போனவனெல்லாம் இந்தா இப்படியே திரும்பி வாரானுங்க... என்னடான்னு கேட்டா டிக்கெட்டுக்கு கொடுத்த காசு போச்சுன்னு சொல்றானுங்க. நல்ல கதைதான் எதையோ சொல்ல வந்து எப்படியோ ஆயிடுச்சு. இயக்குநர் சொல்ல வந்தது இதுதான் எந்த உலகத்துக்குப் போனாலும் காதல் இருக்கும்ன்னு ஆனா சொல்லிய விதம் புரியலை. கடைசியில ஆர்யா நீ இன்னும் உயிரோட இருக்கியா எனக்கு ஒண்ணும் புரியலை என்றதும் ரசிகர்கள் எங்களுக்கும் ஒண்ணும் புரியலைன்னு கத்துறாங்க.

இயக்குநர் ராம் அருமையான படம் ஒண்ணை எடுத்தார். தங்க மீன்கள் ஆனா அந்தப் படம் ஓடலை. இதே மாதிரி ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... இப்படி நிறையப் பேசினார். பிரபலக் கதாநாயகர்கள் என்றில்லாமல் புதியவர்களையும் வைத்து வெற்றி பெற்ற படங்கள் நிறைய இருக்கின்றன. சுப்ரமண்யபுரம்ன்னு ஒரு படம் சசிக்குமார் எடுத்திருப்பார். அதுல எல்லாமே 1980ல நடந்த மாதிரி இருக்கும். ஒவ்வொன்னையும் பார்த்துச் செய்திருப்பார். அதுல நாயகனும் நாயகியும் தொடாமலே ஒரு பாட்டுப் படிப்பாங்க... கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... ஆஹா எப்படிப்பாடல். அந்தப் படத்துல காதலி துரோகம் பண்ணிட்டானதும் ஜெய் என்னைக் கொன்னுடுன்னு சொல்லுவாரு... அருமையான படம்  அதை எடுத்த சசிக்குமாரைக் கண்டிப்பா பாராட்டியே ஆகணும் என்றார்.

Displaying ku0642.JPG
(விழா மேடையில் நடுவரும் பேச்சாளர்களும்)

பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் காட்சியை அவர்கள் பேசுவது போல் பேசி ரசிக்க வைத்தார். அவர் மிகவும் ரசிப்புத் தன்மையுடன் அந்தக் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து வெளியே போய்விட்டு வந்த திருமதி. லியோனி ஏதோ சொல்ல அவரிடம் குனிய இவரும் நாகேஷ் பாலையாவிடம் ஒரு கத்துக் கத்துவாரே அதைச் செய்ய அந்த அம்மையாருக்கு பயத்தில் தூக்கி வாரிப் போட, அரங்கத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.

உடம்பில் உள்ள உறுப்புக்களை வைத்து அழகான விளக்கம் சொன்னவர் உடம்பை இயக்கும் இதயம் போல இயக்குநர், கதை மூளையாக இருக்கலாம். ஆனால் அதை வைத்து தன் எண்ணத்தில் உள்ளதை காட்சிப்படுத்தி மிகச் சிறப்பான படைப்பாக கொடுப்பவர் இயக்குநரே என்று சொல்லி தீர்ப்பை வழங்கினார். 

தியேட்டரில் படம் முடிந்ததும் தேசிய கீதம் போட்டால் நிற்காமல் போவோமே அதுபோல்தான் எப்பவும் நன்றி உரை சொல்லும் போது நடக்கும் எனவே தீர்ப்புக்கு இடையில் சொல்லி விடலாம் என லியோனியிடம் கேட்டிருக்கிறார்கள். சரி என்றவர் பேச்சு சுவராஸ்யத்தில் மறந்துவிட்டார்.  அதனால் கடைசியில் இதைச் சொல்லி இருந்து நன்றியுரையையும் கேட்டுச் செல்லுங்கள் என்றார். 

திருமதி. சித்ரா நன்றியுரை வழங்க விழா இனிதே முடிந்தது.

திரு.லியோனியின் நகைச்சுவைகளும், பேச்சாளர்கள் சொன்ன தவறான தகவல்களும் கலந்த பதிவு ஒன்றை விரைவில் பகிர்கிறேன். 

விழா நிகழ்வில் நிறைய மறந்து போச்சு... விழா பார்த்த நண்பர்கள் நிறை இருந்தால் மனதால் வாழ்த்துங்கள்... குறையிருந்தால் பின்னூட்டத்தில் சொல்ல மறக்காதீர்கள்.

 நன்றி.

படங்கள் கொடுத்த எனது அண்ணன் திரு.சுபஹான் அவர்களுக்கு நன்றி.
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. இனிய நத்தார் திருநாள் வாழ்த்துக்கள்!!!///நன்றாக ஒவ்வொன்றையும் அசை போட்டிருக்கிறீர்கள்.பின்னூட்டத்தில் நண்பர்கள் குறை/நிறைகளை சுட்டுவார்கள் என நம்புகிறேன்.////அடுத்த பகிர்வை எதிர் பார்த்து................

    பதிலளிநீக்கு
  2. சகோதரருக்கு வணக்கம்
    விழா பற்றிய தகவல்களை மிக அழகாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள். சொல்லிய விதம் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றிகள். தொடருங்கள் அடுத்தடுத்த பதிவை. நன்றி..

    பதிலளிநீக்கு
  3. விழா பற்றிய அருமையான தொகுப்பு.....

    பாராட்டுகள் குமார்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி