சனி, 28 டிசம்பர், 2013

பாரதி நட்புக்காக சொல்லரங்கம் - இன்னும் சில

பாரதி நட்புக்காக அமைப்பு நடத்திய சொல்லரங்கம் பற்றி மூன்று பகிர்வுகள் பகிர்ந்தாச்சு. அதில் விடுபட்ட சிலவும் அவர்கள் தவறாகச் சொன்ன சிலவும்... எப்படியோ பகிர்வு தேத்திடுறமுல்ல....

"எதிர் நீச்சல்ன்னு ஒரு படம் சிவகார்த்திகேயன் நடிச்சது. அதுல அவருக்கு ஒரு பேர் வச்சிருப்பானுங்க... வெளிய சொல்ல முடியாத பேரு... அந்தப் பேரை வச்சிக்கிட்டு அவரு எதிர் நீச்சல் போட்டு  ஜெயிக்கிற கதை ரொம்ப நல்ல படம். நம்ம ஆளுங்க பேர் வைக்கிறது இருக்கே... பிச்சையின்னு வைப்பானுங்க அவன் கோடீஸ்வரனா இருப்பான். கோடீஸ்வரன்னு வைப்பானுங்க கோயில்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பான். கன்னங்கருப்பா இருப்பான் அவனுக்கு வெள்ளச்சாமின்னு வைப்பானுங்க... வெள்ளையா இருக்கவனுக்கு கருப்புன்னு பேர் வைப்பானுங்க..."

"ஆஸ்பத்ரிக்குப் போனா இந்த டாக்டர்கள் செய்யிறது இருக்கே... அப்ப்ப்ப்பா... நமக்கு பிபி இருக்கான்னு பாக்குறதுக்கு கையில அப்படியே சுத்திக்கிட்டே ரிலாக்ஸா இருக்கணும்... அப்படித்தான்.... எதுக்கு டென்சன் ஆகுறீங்க... என்று சொல்லியே நம்ம பிபியை எகிற வச்சிடுவாங்க..." என்றவர் விழா அமைப்பாளர்களில் சிவராமன் என்பவர் மருத்துவர் என்பதால் உடனே "சிவராமனைச் சொல்லவில்லை... அவரு ரொம்ப நல்ல மருத்துவர்" என்று சொல்லி அரங்கைச் சிரிக்க வைத்தார்.

"அந்தக் காலத்துல படம் பூராம் பாட்டா வச்சிருப்பானுங்க... கதாநாயகன் பிறந்ததும் ஒரு பாட்டு... கதாநாயகிக்கு ஒண்ணு... அப்புறம் வளரும் போது ஆளுக்கு ஒண்ணு... அந்தப்புள்ள வயசுக்கு வந்ததுக்கு ஒண்ணு.... அப்புறம் ரெண்டு பேரும் இளைஞராகும் போது தனித்தனியா பாட்டு... காதல் வரும் போது ரெண்டு பாட்டு கற்பனையில... ரெண்டு பாட்டு தனித்தனியா... கல்யாணத்துக்கு... முதலிரவுக்கு... இப்படி பாட்டாவே போகும்... எவனாவது முதலிரவுல போயி பாட்டுப்பாடுவானாய்யா..."

"எம்.ஜி.ஆரோட ஸ்பெஷாலிட்டியே அந்த டொக்குத்தான்.. தொட்டால் பூமலரும்... அப்படின்னதும் கதாநாயகி மேல்ல கையை அப்படித் தட்டி 'டொக்' என்பார். 

ஒரு கறுப்பர் இன நாட்டில் உள்ள தமிழ் சங்கத்தில் பட்டிமன்றம் நடத்தியதைப் பற்றி இனியவன் சொன்ன போது "அந்த நாட்டை அழுத்திச் சொல்றதுக்கு காரணம் இருக்கு. பிளைட்ல போகும்போது கருப்பர் இன பிளைட்ல ஏர்ஹோஸ்டர்ஸ் எப்படி இருப்பாங்கன்னு தெரியும். மேல பறக்கும் போது குடிக்கக் கொடுத்தானுங்க.... நான் ஒன்மோர் பிளீஸ்ன்னு சொன்னேன்... கண்டுக்கவேயில்லை... ஆனா இவரு ஆளப் பாருங்க... அவங்க மாதிரியே இருக்கவும் கேட்காமலே கொடுத்துக்கிட்டே இருந்தாங்க... அதனாலதான் ரொம்ப அழுத்தமாச் சொல்றாரு."

"ஒரு ஊர்ல பட்டிமன்றம் நடந்தப்போ எவ்வளவு நேரம் பேசலாம் என்று கேட்டேன். நீங்க எம்புட்டு நேரம் வேணுமின்னாலும் பேசுங்க... நாங்க அரைமணி நேரத்துல போயிடுவோம் என்றார்கள். அரைமணி நேரத்துல போயிடுவீங்களான்னு கேட்டதுக்கு அதான் வீதிக்கு வீதி குழாயைக் கட்டி வச்சிருகானுங்கள்ல அதுல கேட்டுக்கிட்டே படுத்திருப்போம்"

திரு. விஜயகுமார் பேசும்போது "ஒரு முறை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான பதிவு நடந்தது. நான் பேச ஆரம்பிக்க இயக்குநர் அவர்கள் சார் சிரிக்கிற மாதிரி பேசுங்க என்றார். என்னங்க யாருமே இல்லாம எப்படிங்க சிரிக்க சிரிக்க பேசுறது. நீங்க பேசுங்க... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது பாக்குறவங்க வீட்ல இருந்து சிரிச்சிக்குவாங்கன்னு சொன்னார். சரின்னு கேமராமேன் இருக்கானேன்னு அவனைப் பார்த்து நானும் சிரிக்க சிரிக்க ஒரு மணி நேரம் பேசினேன். அந்தாளு சிரிக்கவேயில்லை. எல்லாம் முடிந்து கடைசியில என்னய்யா... சிரிக்க சிரிக்க பேசுறேன்... நீ சிரிக்கவே மாட்டேனுட்டே... சிரிச்சிருந்தா என்னன்னு கேட்டா, ஹியான்னு இந்தியில பேசுறான்" என்றார்.

லியோனியின் டூயட்டைப் பற்றிப் பேசிய ஆதவன் அவர்கள், "ரெண்டு பேரும் டூயட் பாட ஆரம்பிச்சிட்டுட்டாங்க... ராத்திரி நேரம் வேற... எனக்கு என்னோட மனைவி ஞாபகம் வந்திருச்சு... அவ கடல்கரை ஓரம் தனியா இருக்கா" என்று சொன்னார்.

"ஒரு தடவை ஒரு ஊருக்குப் போனோம். ஒருத்தன் நல்ல போதையில முன்னால வந்து உக்காந்துட்டான். நான் என்ன பேசினாலும் திரும்பத் திரும்ப பேசுறான்... எல்லாருக்கும் வணக்கம் அப்படின்னா என்ன வணக்கம் அப்படிங்கிறான்... நான் என்ன சொல்றேன்னா... என்ன சொல்லப்போறேன்னு கேட்கிறான்... இப்படியே அவனை வச்சிக்கிட்டே நிகழ்ச்சி நடத்திட்டு வந்தேன்..." என்றார் லியோனி.

இன்னும் நிறையப் பேசினாலும் யாருமே இன்றைய சினிமா என்ற தலைப்புக்குள் வரவில்லை. பழைய சினிமாவைப் பற்றித்தான் பேசினார்கள். பழைய சினிமா பாடலுக்காகவும் ஓடியது... கதைக்காகவும் ஓடியது... இயக்குநருக்காவும் ஓடியது... நடிகருக்காகவும் ஓடியது... ஆனால் இன்றைய சினிமாக்கள் பாடல் இல்லாமல் பெரிய நடிகர் இல்லாமல் ஓடிகொண்டுதான் இருக்கின்றன. தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் போது இன்றைய சினிமாவை எடுத்துவிட்டு திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம் எது என பேசியிருக்கலாம். தலைப்பை விட்டு பேசியது சிரிப்பாக போனதால் தப்பித்தது.

ஆரம்பத்தில் பேசும் போதே சினிமா சம்பந்தமான தவறான தகவல்களைச் சொன்னால் சின்னப் பையன் கூட யோவ் தப்பாச் சொல்லாதேன்னு சத்தம் போடுவான்னு சொன்னாங்க... ஆனா சில விஷயங்களைத் தவறாகத்தான் சொன்னார்கள்.

* அஞ்சலி அறிமுகமானது அங்காடி தெருவில் என்று சொன்னார்கள். அதற்கு முன்னே இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். முதல் படம் தமிழ் எம்.ஏ, வசந்தபாலன் கூட தனது முகநூல் பக்கத்தில் தமிழ் எம்.ஏயில் அஞ்சலியின் நடிப்பைப் பார்த்துத்தான் அங்காடி தெருவில் நடிக்க வைத்ததாக சொல்லியிருக்கிறார்.

* புது வசந்தம் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்த படம் என்றார்கள். முரளி, சார்லி, ராஜா எல்லாம் புது முகங்களா?

* நினைத்தாலே இனிக்கும் தோல்விப்படம் என்றார்கள். பாடல்களுக்காகவே ஓடிய படம் அது... மிகப்பெரிய வெற்றிப்படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. நான் பிறக்குமுன் வந்த படம் இது...

* விஸ்வரூபத்தையும் தோல்விப்படம் என்றார்கள். படம் குறித்து இங்கு பேசவில்லை... ஆனால் கோடிகளை வசூலித்துக் கொடுத்ததுதானே...

மொத்தத்தில் தலைப்புக்கான பேச்சாக அமையவில்லை என்பதோடு லியோனியின் திருமதியை கடைசியில் பேச விட்டிருந்தால் மற்ற பேச்சாளர்களின் பேச்சை இன்னும் ரசித்திருக்கலாமோ என்று அரங்கைவிட்டு வெளியே வந்த அனைவரையும் பேச வைத்த விழாவாக அமைந்தாலும்  பாரதி நட்புக்காக அமைப்பினரின் ஒருங்கிணைந்த மிகச் சிறப்பான பணிக்காக அனைவரின் பாராட்டுக்களும் எப்போதும் உண்டு.  அடுத்த விழாவில் மிகச் சிறப்பான தமிழ் அமுது படைப்பார்கள் என்று நம்புவோம்.

-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு குமார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நானிலம் போற்றும் பகிர்வுக்கும் மலரவிருக்கும் புத்தாண்டில்
    மகிழ்ச்சி பொங்கிடவும் என் இனிய வாழ்த்துக்கள் சகோதரா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் .

    பதிலளிநீக்கு
  3. ரசித்துப் படித்தேன்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. பாரதி நட்புக்காக நிகழ்ச்சிகள் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி