ஞாயிறு, 24 நவம்பர், 2013

சங்கதியும் கெமிஸ்ட்ரியும்

ங்கதி... கெமிஸ்ட்ரி... இந்த ரெண்டு வார்த்தையையும் சொல்லாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம். பெரும்பாலும் ஆடல் பாடல்... அதாங்க போட்டி டான்ஸ் நிகழ்ச்சிக்கு வர்ற நடுவர்கள் எல்லாம் கெமிஸ்ட்ரி படிச்சிருக்காங்களோ இல்லயோ ஜோடியா ஆட்டம் போடுறவங்களைப் பார்த்து உங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி சரியா பொருந்தியிருக்குன்னு சொல்லாம விட்டுட்டா ஜென்ம சாபல்யம் அடைய முடியாமல் போய்விடும் என்பதால் அடிக்கடி கெமிஸ்ட்ரியை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதேபோலத்தான் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் நடுவர்களுக்கு சங்கதி என்ற வார்த்தை ஜென்ம சாபல்ய வார்த்தை... என்ன சங்கதி போட்டிருக்கே... அந்த பல்லவியில ஒரு சங்கதி போட்டே பாரு... சும்மா செத்துப் பொயிட்டேன்னு அள்ளி வீசிருவாங்க.

இந்த சங்கதியும் கெமிஸ்ட்ரியும் மேல் தட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கலாம். என்னை மாதிரியான கிராமத்தானுக்கெல்லம் இது இன்னும் புரியாத புதிராகவே இருக்கு. இப்ப கிராமத்துல இருக்க ஒரு பெரியவரோ, ஒரு அப்பத்தாவோ, ஆயாவோ இல்லை அம்மாவோ இது போன்ற நிகழ்ச்சிகளை வீட்டில் டிஷ் வைத்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இவர்கள் பேசும் 80% ஆங்கிலம் 20%  தமிழ்  என்ன சொல்கிறார்கள் என்று எப்படி புரிய வைக்கும் என்று தெரியவில்லை. கெமிஸ்ட்ரியும் சங்கதியும் சுத்தமாக தெரிய வாய்ப்பில்லை.

எனக்குத் தெரிந்த ஐயா ஒருத்தர் கலைஞரின் மானாட மயிலாட பார்த்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா "என்ன பேராண்டி நம்ம ஊர்ல ஆடல் பாடல் வச்சாலே ஆபாசமுன்னு போலீஸ்காரன் அனுமதி கொடுக்க மாட்டேங்கிறான்... எல்லாரும் பாக்குற ஒரு டிவியில இப்படி ஆட்டம் போடுறாங்க.. இதுக்கு அந்த மூணு பொம்பளைங்க வேற கிழிகிழின்னு கிழிச்சிட்டேன்னு கத்துறாளுங்க.. அப்புறம் கெமிஸ்ட்ரி... கெமிஸ்ட்ரின்னு என்னமோ சொல்லுறாளுங்க... ஒண்ணுமே புரியலை." அப்படின்னு சொன்னார்.

அவர் சொன்னது முற்றிலும் உண்மைதான். ஊர் திருவிழாவிற்கு கலைநிகழ்ச்சி வைப்பதென்றால் முதலில் போலீஸ் ஸ்டேசனில் அனுமதி வாங்க வேண்டும். அதுவும் கரகாட்டம், ஆடல்பாடல் என்றால் பயங்கர கெடுபிடி... ஆபாசம் இருக்கக்கூடாது என்று சொல்லித்தான் அனுமதி கொடுப்பார்கள். திருவிழா அன்று இரண்டு போலீஸ்காரர்கள் வந்து விடியவிடிய அமர்ந்திருப்பார்கள். இடையில் இன்ஸ்பெக்டர் வேறு விசிட் அடிப்பார். 

இந்த முறை ஊருக்குப் போன போது என் மனைவியின் அம்மா ஊரில் திருவிழாவிற்கு ஆடல்பாடல் நிகழ்ச்சி வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் முத்துமாரி என்றுதான் ஆரம்பித்தார்கள். போகப்போக முத்தமாரி ஆக்கினார்கள்.  ஒரு மணி நேரத்திற்குள் விஷாலுக்கு தூக்கம் வர, நானும் நம்ம சிங்கக்குட்டியும் வீட்டிற்கு வந்துவிட்டோம். போகப்போக ரொம்ப மோசமாகிவிட்டதாம். போலீஸ்காரர் சொல்லியும் ஆட்டம் தொடர்ந்திருக்கிறது. அந்த சமயம் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆட்டத்தை நிறுத்தச் சொல்லி, விளக்கையெல்லாம் அணைக்கச் சொல்லி சத்தம் போட ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் 25, 30 வீடுகள் கொண்ட கிராமத்தில் 100, 150 பேர் பார்க்கும் நிகழ்ச்சிக்கு இவ்வளவு கெடுபிடி ஆனால் தொலைக்காட்சியில்..?

சரி விஷயத்துக்கு வருவோம். நமக்குத் தெரிந்த சங்கதியும் கெமிஸ்ட்ரியும் என்ன தெரியுமா? சின்ன வயதில் பசங்களோட விளையாடும் போது ஒருத்தனுடன் எப்படியும் சண்டை போட்டு விடுவோம். அது ரெண்டு நாள் மூணு நாள் கூட தொடரும். அப்போதைக்கு நம்மிடம் ரொம்ப நெருக்கமானவன் 'டேய் நான் ஒரு சங்கதி வச்சிருக்கேன்...' என்று சொல்லி காதுக்குள் சொல்லுவான். நமக்கு சண்டைக்காரனைப் பற்றிச் சொன்னால் பயங்கர சிரிப்பா வரும். அதுவே நம்ம நண்பனைப் பற்றிச் சொன்னா ஏற்க மறுத்துவிடுவோம். ஒரு சில நேரங்களில் 'ஒரு சங்கதி தெரியும்... ஆனா சொல்ல மாட்டேன்...' என்று சொன்னால் அவனிடம் கெஞ்சிக் கெஞ்சி சங்கதியைக் கறந்த நாட்களும் உண்டு. அதற்கு லஞ்சமாக சாப்பிட வைத்திருக்கும் எதையாவது கொடுத்தும் இருக்கிறேன்.

மாலை நேரத்தில் வீட்டு வாசலில் அம்மாவிடம் பேச வரும் பக்கத்து வீட்டு உறவுகள் ' அடி ஆத்தி... அக்கா இந்த சங்கதியைக் கேட்டியா?' என்றும் ' ஏன்டி... உனக்குத் தெரியுமா சங்கதி?' என்றும் ஆரம்பித்தால் நானும் படிக்க எடுத்த புத்தகத்தை வைத்துவிட்டு சங்கதியை கேட்க ஆரம்பித்து விடுவேன். இதேபோல் வயலில் மாடு இறங்கிவிட்டது என்றாலோ அல்லது எதாவது பிரச்சினை என்றாலோ சண்டை களை கட்டும் போது 'போடி இவளே உன்னோட சங்கதி தெரியாதாக்கும்..' என்று சொல்லாமல் முடிந்த கிராமத்துச் சண்டை எங்கிருக்கிறது..? இப்படித்தான் எனக்கு சங்கதியைத் தெரியும்.

அடுத்தது கெமிஸ்ட்ரி, பள்ளியில் படிக்கும் போதே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாமத்தானே வேற பக்கம் போனோம். கெமிஸ்ட்ரி படித்த நம்ம நண்பர்கள் பரிசோதனை கூடத்துக்குள் இருந்து வரும்போது இரண்டாம் உலகம் பார்த்துட்டு தியேட்டரைவிட்டு வெளிய வரும் ரசிகனைப் போல வருவான். என்னடா ஆச்சு முடியெல்லாம் சிலுப்பிக்கிட்டு நிக்கிதுன்னு கேட்டா...  மாப்ளே நல்லாத்தான்டா செஞ்சேன்... எல்லாம் சரியாத்தான் இருந்துச்சு... என்னன்னு தெரியலை... கடைசிவரை ரிசல்டே வரலைடா... என்று கெமிஸ்ட்ரி செய்முறைத் தேர்வு ஊத்திக் கொண்டதை சொல்லி அழுவான். இன்னொருத்தன் என்னன்னா... இந்த கெமிஸ்ட்ரிப் பேப்பரை தூக்க படாதபாடு பட்டிருக்கிறான். கெமிஸ்ட்ரிங்கிறது ஒரு பாடம் அப்படிங்கிற அளவுலதான் நம்ம அறிவு இருந்துச்சு.

இப்ப தொலைக்காட்சியில ஆடல் பாடல் குத்தாட்டம் போடும் போது கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரிங்கிறாங்க... பாட்டுக்குப் பாட்டுல ஆஆஆஆன்னு இழுக்கும் போது சங்கதி... சங்கதின்னு சொல்றாங்க... இதுக்குல்லாம் மேல ஒரு சினிமாவுக்காக நாயகனையும் நாயகியையும் ஒரு ரூம்ல ரெண்டு நாளோ மூணு நாளோ தங்க வச்சி கெமிஸ்ட்ரிய வேலை செய்ய வச்சாங்களாம். இப்போ அந்த படத்துல நடிக்கும் போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்காம் இயக்குநர் பேட்டி கொடுக்கிறார். அவங்களுக்குள்ள என்ன வேலை செய்ததுன்னு அவங்களுக்குத்தானே தெரியும். நாமெல்லாம் எங்க போய்க்கிட்டு இருக்கோம்... முகநூலில்தான் நண்பர்கள் அடிக்கடி நாம் எந்த மாதிரி உலகத்தில் வாழுறோம்ன்னு போடுவாங்க... அப்படித்தான் தோணுது.

சரிங்க எனக்குத் தெரிந்த கெமிஸ்ட்ரியையும் சங்கதியையும் சொல்லிட்டேன்.. உங்களுக்கு யாருக்காவது கெமிஸ்ட்ரிக்கும் சங்கதிக்கும் சரியான விளக்கம் தெரிந்தால் சொல்லுங்க இந்த கிராமத்தானும் பிறவிப் பயனை அடையப்பார்க்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

  1. கிராமத்து சங்கதியே சங்கதிதான்.
    வாழ்த்துக்கள் நண்பரே
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. அருமை, அருமை நன்கு சிரித்தேன்.
    இந்த கெமிஸ்ரியை அறிமுகப்படித்திய கலா இதைப் படிக்க வேண்டும்.

    //இதுக்குல்லாம் மேல ஒரு சினிமாவுக்காக நாயகனையும் நாயகியையும் ஒரு ரூம்ல ரெண்டு நாளோ மூணு நாளோ தங்க வச்சி கெமிஸ்ட்ரிய வேலை செய்ய வச்சாங்களாம். இப்போ அந்த படத்துல நடிக்கும் போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பரா இருக்காம் இயக்குநர் பேட்டி கொடுக்கிறார். அவங்களுக்குள்ள என்ன வேலை செய்ததுன்னு அவங்களுக்குத்தானே தெரியும்.
    இதை எல்லாம் பேட்டி எனும் பெயரில் உளறும் இயக்குநரை என்னென்பது

    //உங்களுக்கு யாருக்காவது கெமிஸ்ட்ரிக்கும் சங்கதிக்கும் சரியான விளக்கம் தெரிந்தால் சொல்லுங்க//

    யாரவது சொன்னால் நானும் தெரிஞ்சுக்குவேன்.

    பதிலளிநீக்கு
  3. முத்துமாரி To முத்தமாரி...! ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன்.....

    சங்கதி, கெமிஸ்ட்ரி இப்படியெல்லாம் கொல்றாங்கப்பா!

    பதிலளிநீக்கு
  5. இந்த சங்கதி, கெமிஸ்ட்ரி எல்லாத்துக்கும் இன்னா அர்த்தம் அப்படின்னு சொல்லனும்னு தான் நினச்சேன்.

    விலா வாரியா சங்கதி இன்னா அப்படின்னு சொன்னா என்ன சந்திக்கு இழுத்துடுவீக.. அப்படி ஒரு பயமும் கீது.

    ஒரு கடுதாசி வருது. அத படிச்சுட்டு குந்திக்கினு அப்படியே கம்னு உக்காந்துருக்கேன். பொஞ்சாதி வந்து இன்னாயா அப்படி ஏன்னா சங்கதி அதுலே அப்படின்னு கேட்குதுல்லே அதுவும் சங்கதி.

    கெமிஸ்ட்ரி க்கும் சங்கதி க்கும் கொஞ்சம் என்ன நிறையாவே லிங்க் இருக்குங்க..

    ஒன்னு ஒர்க் அவுட் ஆச்சுன்ன இரண்டாவது தானே வருது.

    அம்புடுதேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. சங்கதியைப் பற்றி இவ்வளவு சங்கதியா!..

    பதிலளிநீக்கு
  7. நான் சங்கதியை விளக்கிச் சொன்னாலும் , நீங்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு நமக்குள் கெமிஸ்ட்ரி இருக்குதான்னு தெரியலே !
    த.ம 5

    பதிலளிநீக்கு
  8. இந்த விளையாட்டிற்கு வரலே... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  9. ஊர்ப் பெரியவர் கேக்கற கேள்வி சரிதான் . சென்சார் என்பதன் இயக்கம் இல்லாமல் பிரயாணித்துக்கொண்டிருக்கிறது டி.வி சேனல்கள்..அசிங்கமும் ஆபாசமுமாய்..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி