கடந்து சென்ற வாரத்தில் தனது 50 பிறந்த தினத்தை எட்டிப் பிடித்தார் எங்கள் அண்ணன். இதுவரைக்கும் அவரது பிறந்த தினத்துக்கு வாழ்த்தெல்லாம் சொல்லியது இல்லை. இந்த முறை பிறந்தநாளுக்கு முன்னர் என்னிடம் பேசும்போது 'வர்ற சனிக்கிழமை என்னோட 50வது பிறந்தநாள்ப்பா' என்றார். ஞாபகத்தில் நிறுத்தி அன்று காலை எப்படியும் வாழ்த்துச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்து எப்பவும் போல் மறந்து மாலைதான் கூப்பிட்டேன். வாழ்த்துச் சொல்லி இப்பத்தான் ஞாபகம் வந்துச்சாடான்னு திட்டும் வாங்கியது வேற கதை. சரி அண்ணனைப் பற்றிப் பார்ப்போம்.
எங்க அண்ணன் எங்க குடும்பத்து ஆண் வாரிசில் மூத்தவர். இரண்டு அக்காக்களுக்கு அடுத்து மூன்றாவதாகப் பிறந்தவர். அழகுமலையானை குலதெய்வமாகக் கொண்ட குடும்பம் என்பதால் முதல் ஆண்குழந்தைக்கு கண்ணன் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
எங்க மாமாவின் தோட்டத்தை எங்கப்பா குத்தகைக்கு எடுத்துப் பார்த்து வந்தார். சில காலம் அந்தத் தோட்டத்தில்தான் தங்கியிருந்தோம். நாங்கள் சிறுபிள்ளைகள்... பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்தோம். அண்ணன் அப்போது தேபிரித்தோவில் படித்துக் கொண்டிருந்தார். தோட்டத்தில் விளையும் காய்கறிகளை கூடையில் எடுத்துக் கொண்டு சைக்கிளில் சென்று வீதிவீதியாக விற்றுவிட்டு வந்து பள்ளிக்குச் செல்வார்.
நன்றாகப் படித்தவர் குடும்பச் சூழலால் அதற்கு மேல் படிக்கவில்லை. அவர் வேலைக்குப் போக வேண்டிய சூழல்... சில காலம் தேவகோட்டையில் வேலை பார்த்தார். அப்புறம் அரவக்குறிச்சிக்கு சென்றுவிட்டார். அங்கு அவருக்கு ஒரு அம்மா, அப்பா, அக்கா, தங்கை, மாமா, மச்சான் என ஒரு குடும்பமே கிடைத்தது. அவர்கள்தான் மிகப்பெரிய விபத்தில் இருந்து அவரைக் காப்பாற்றினார்கள். அந்த விபத்தில் தலையெங்கும் தையல். இது முதல் விபத்து. பொங்கல் தீபாவளிக்கு ஊருக்கு வரும்போது எனக்கும் தம்பிக்கும் சட்டை, டவுசர் தைத்துக் கொண்டு வருவார்.
பின்னர் சிலகாலம் சிங்கப்பூரில் வேலை. அங்கும் கட்டிடத்தில் இருந்து விழுந்து கால் ஓடிந்து மிகவும் சிரமப்பட்டார். இது இரண்டாவது விபத்து. மூன்றாவது அக்காவுக்கு திருமணத்தை முடித்தார். பிறகு மீண்டும் அரவக்குறிச்சிக்கே சென்றுவிட்டார்.
நான் பனிரெண்டாவது படிக்கும் போது எங்கப்பா எங்க ஊருக்கு அருகில் இருக்கும் பஞ்சு மில்லில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்து படித்தது போதும் வேலைக்குப் போ பின்னாடி வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று சொல்லி விட்டார். நானும் அழுது சண்டையிட்டுப் பார்த்தேன். ம்ஹூம்... அவர் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிவிட்டார். அப்புறம் அண்ணனுக்கு ஒரு லெட்டர் போட்டேன். அவர் அங்கிருந்து வந்து நாங்கதான் படிக்கலை. அவனுகளாச்சும் நல்லா படிக்கட்டும் என்று சொல்லி அப்பாவை அடக்கி என்னை படிக்க வைத்தார்.
அன்று அவர் மட்டும் இல்லை என்றால் இன்று பஞ்சுமில்லுக்கு சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பேன். என்னை மட்டுமல்ல தம்பியையும் அண்ணன்தான் படிக்க வைத்தார். அவருக்கு ஒரே எண்ணம் எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதே.
அதன் பின்னர் அவருக்குத் திருமணம்... குடும்பம்... குழந்தைகள் என்று வாழ்க்கை நகர்ந்த போதிலும் தம்பிகள் மீதான பாசத்தை இதுவரை குறைக்கவில்லை.. அதிகம் கோபம் வரும். கோபம் இருக்கும் இடத்தில்தானே குணம் இருக்கும். அண்ணன் என்றாலே எல்லாருக்கும் ஒரு பயந்தான். எதற்கெடுத்தாலும் திட்டுவார். அதில் காரணம் இருக்கத்தான் செய்யும். எங்கப்பாவுக்கும் இவருக்கும் ஒத்தே வருவதில்லை... இருவரும் ஒரு விசயத்தைப் பேசினால் அப்பா கண்டிப்பாக அண்ணனிடம் திட்டு வாங்கிவிடுவார்.
சின்ன அண்ணனும் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்ததாலும் எல்லாருமாகச் சேர்ந்து சாமி கும்பிட வேண்டி இருந்ததாலும் இராமேஸ்வரத்துக்கு வேனில் போயிருக்கிறார்கள். கடலில் பிள்ளைகள் இறங்கினாலும் சத்தம் போட்டாலும் அதட்டியிருப்பார் போல. விஷால் வீட்டுக்கு வந்ததும் என்னிடம் போனில் இந்த கண்ணப்பாகூட போகவே கூடாதுப்பா... சும்மா திட்டிக்கிட்டே இருக்கார் என்றான். சின்ன அண்ணனிடம் பேசும் போது என்னண்ணே கண்ணண்ணன் பசங்களை திட்டுனாரோ என்றதும் அட அதை ஏன் கேக்குறே..? சின்னப்பிள்ளைங்க கடல்ல ஆட்டம் போட்டா இவரு கத்து கத்துன்னு கத்துறாரு... நமக்கிட்ட பேசுற மாதிரி அதுககிட்ட பேசுனா... எல்லாம் கண்ணப்பா சும்மா சும்மா திட்டுறாருன்னு புலம்புதுக... விஷால் எதுவும் சொன்னானா..? என்று கேட்டார்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் மைன்ஸில் பணியாளர்களிடம் டிவிஎஸ்-50யில் நின்றபடி பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பின்புறமாக வந்த கம்பெனி லாரி அவரை இடித்து அவர் முதுகில் ஏறி... டிவிஎஸ்-50 முன்னால் விழுந்ததால் இவர் தப்பினார். மிகவும் கஷ்டப்பட்டு ஆளைக் காப்பாற்றி... கிட்டத்தட்ட ஓராண்டு நடக்காமல் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்து தற்போது பரவாயில்லை.
அவரது சம்பாத்தியம் அவருக்குப் போதுமானதாகவே இருக்கிறது. சின்ன அண்ணன் காய்ச்சல் அதிகமாக சிங்கப்பூரில் பார்க்க முடியாத கண்டிசனில்தான் இந்த முறை ஊருக்கு வந்தார். அவர் வந்து கிடந்ததைப் பார்த்ததும் என்னிடமும் தம்பியிடமும் போனில் பேசும் போது 'அடேய் கடன் இருக்கத்தான் செய்யும்... முதல்ல ஊருப்பக்கம் வந்து சேருங்க... கண்காணாத ஊர்களில் இருந்து கொண்டு எதாவது ஒண்ணுன்னா என்ன செய்யிறதுன்னு ஒரே புலம்பல்தான்.
எங்க அண்ணன் எங்களுக்கு அப்பா என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாரும் வேணும் என்று நினைக்கும் அந்தக் குணத்தை அவரிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொண்டோம். என்ன எதைச் செய்தாலும் எதுக்கு வீண் ஆடம்பரம், தேவையில்லாத செலவு என்று சத்தம் போடுவார். இன்று நானும் தம்பியும் பட்டம் பெற்று பணியில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணகர்த்தா எங்கள் அண்ணன்தான்.
"என்னடா..." என்று பேச்சுவாக்கில் எப்போதாவது சொல்வாரே ஒழிய எப்போதும் கூப்பிடுவது "என்னப்பாதான்...". போன் செய்தோம் என்றால் எடுத்ததும் "என்னப்பா..." என்று அவர் கேட்கும் போதே அவர் அன்று இருக்கும் மனநிலையைக் காட்டிவிடும். 'என்னண்ணே சோர்வாப் பேசுறே...? முடியலையா..? என்றால் 'அது ஒண்ணுமில்ல அடிபட்ட முதுகுல வலி... அதான் படுத்திருந்தேன்...' என்பார். 'வண்டி அதிகம் ஓட்டாதே...; என்று எப்போது சொன்னாலும் 'அட ஏம்ப்பா அது இல்லைன்னா காலத்தை ஓட்டமுடியாது...' என்பார்.
இன்னும் பல காலம் எங்கள் அண்ணன் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக நெறியாளராக இருக்க வேண்டும். எங்கள் அன்பு அண்ணனுக்கு ஐம்பதாவது பிறந்தநாள் வரை நாங்கள் எதுவும் செய்து விடவில்லை... அவரும் எதையும் எதிர் பார்ப்பதும் இல்லை... எப்பவும் நமக்குள்ள சண்டை வம்பு இல்லாம இப்படியே இருக்கணும்ப்பா... அது போதும் என்பார். எத்தனை பிறவி எடுத்தாலும் அவர்தான் எங்களுக்கு அண்ணனாகப் பிறக்க வேண்டும்.
மீண்டும் இப்படி ஒரு அன்பான உறவுகளோடு பிறப்போம் என்று சொல்லமுடியுமா என்ன... அதனால் பிறந்தது ஒரு முறை.... இருக்கும்வரை எல்லாரும் சந்தோஷமாக இருப்போம். சின்ன வயதில் நான்கு பேரும் ஒருவர் மடியில் ஒருவர் படுத்து உறங்கியதும்... ஒரே சட்டையை நாலு பேரும் (அது பெரிது... சிறிதாக) இருந்தாலும் போட்டுக் கொண்டதும்... அம்மா மடியில் நாலு பேரும் தலைவைத்து படுத்து இருந்ததும் இப்போது எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
பிறந்தநாள் அன்னைக்கு கேக் வெட்டி எல்லாருக்கும் சாப்பாடெல்லாம் போட்டியாண்ணே என்று கேட்டதற்கு 'ஆமா பிறந்தநாள் கொண்டாடுறாக... அட ஏம்ப்பா நீ வேற..? காலையில மாரியாத்தாவையும் முனியய்யாவையும் கும்பிட்டு நம்ம வீட்டுக்குப் போனேன். அப்பா தேவகோட்டைக்குப் பொயிட்டார். அம்மாதான் இருந்துச்சு... வீட்டுல சாமி கும்பிட்டேன். அப்ப அம்மா வந்து இருடா நான் துணூறு பூசி விடுறேன்னு சொல்லி பூசி விட்டுச்சு... அம்மா நினைச்சிருக்கும்ல நாம்பெத்தபுள்ளக்கு இன்னைக்கு அம்பது வயசாயிடுச்சின்னு... அதேமாதிரி என்னோட அம்பதாவது வயசுல அம்மாக்கிட்ட ஆசி வாங்கியிருக்கேன்ல இதைவிட எனக்கு வேற என்னப்பா ஆசி வேணும்... அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு அரவக்குறிச்சி வந்துட்டேன். இந்தா புளிக்கொழம்பு வச்சிக்கிட்டு இருக்கேன்' என எதார்த்தமாகச் சொன்னார்.
அம்மாவின் ஆசியைவிட வேறு என்ன வேண்டும்? இந்த ஆசிக்கு இணையாக வேறு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது. சனிக்கிழமையே அண்ணனைப் பற்றி எழுத நினைத்து இன்று திங்கள் ஆகிவிட்டது. எங்க அண்ணன் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் எங்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
எங்க அண்ணனை நீங்களும் வாழ்த்துங்க...
-'பரிவை' சே.குமார்.
குமாரின் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!எல்லோருக்கும் இவர் போல் அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!மீண்டு,உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வேண்டும்!!!
பதிலளிநீக்குGreat to read about your brother. Wish him a long & healthy life.
பதிலளிநீக்குஅண்ணன்கள் கிடைப்பது மட்டுமல்ல
பதிலளிநீக்குதந்தைபோல இதுபோல
அண்ணன் கிடைப்பதற்குக் கூட
நிச்சயம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்
நீங்கள் புண்ணியம் செய்திருக்கிறீர்கள்
தங்கள் அண்ணன் நல்ல உடல் நலத்தோடு
நூறாண்டு கடந்து வாழ
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மீண்டும் இப்படி ஒரு அன்பான உறவுகளோடு பிறப்போம் என்று சொல்லமுடியுமா என்ன... அதனால் பிறந்தது ஒரு முறை.... இருக்கும்வரை எல்லாரும் சந்தோஷமாக இருப்போம்.///உண்மைதான் .உங்கள் அண்ணனுக்கு இந்த அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குமார்
பதிலளிநீக்குநெகிழ வைக்கிறது. உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துகள். நல்லதொரு குடும்பம் கழகம்தான். சுற்றிப் போடச் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குஉங்கள் அண்ணன் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் அண்ணன் வாழும் தெய்வம்...அவர் பல்லாண்டு உங்களோடு இருந்து சுகமுடன் வாழ வேண்டும், நெகிழ்சியான பதிவு....!
பதிலளிநீக்குஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
அண்ணனுக்கு வாழ்த்துக்கள்..!
பதிலளிநீக்குsuper brother sir
பதிலளிநீக்குஇப்படி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். அண்ணனுக்கு இந்த தம்பியின் வாழ்த்தையும் தெரிவித்து விடுங்கள் குமார்!
பதிலளிநீக்குஅண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த நெகிழ்வான பகிர்வே அவருக்கான சிறந்த வாழ்த்து. நாங்களும் இணைந்து வாழ்த்துகிறோம்.
பதிலளிநீக்குதங்கள் அண்ணன் நீண்ட ஆயுளுடன் நல்ல உடல் நலத்துடன் விளங்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குபடிக்கும் போதே மனம் நெகிழ்ந்தது..தங்கள் அண்ணன் வாழ வைத்த ,வாழும் தெய்வம்..அவர்களுக்குமனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குநெகிழ்ந்தேன்.....
பதிலளிநீக்குஉங்களது அண்ணனுக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துகளை சொல்லிடுங்க குமார்!
அண்ணனுக்கு பிடித்த ஏதாவது.. பிறந்தநாள் விழாவோ, கோவிலுக்கு கூட்டி செல்வதோ, பரிசோ.. ஏதாவது இப்போதே செய்துவிடுங்கள். பிரியத்தை காட்டாவிட்டால் அந்த பிரியத்திற்கு என்ன மதிப்பு?
பதிலளிநீக்குஅண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அண்ணன் மீதான அன்பும் பாசமும் தெரிகிறது. பல்லாண்டு வாழ்ந்து வழி காட்டட்டும்
பதிலளிநீக்குஉங்க அண்ணணுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன வேலன்.
பதிலளிநீக்கு