முந்தைய பதிவுகளைப் படிக்க...
***** ***** ***** ***** ***** *****
8. மொட்டுக்கள் மலருமா?
முன்கதைச் சுருக்கம்.
தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம்கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள்.
இனி...
"மாப்ளே... வைரவந்தான் உனக்கு நல்ல
பிரண்ட்டாயிட்டாருல்ல... அப்புறம் என்ன... இப்ப அண்ணே அண்ணன்னு சொல்லுறே...
தைரியமா மச்சான்னு தோள்ல கையைப் போடு... நடக்கிறதை பாத்துருவோம்..." என்றான்
பழனி.
"என்னடா சொல்றே... போட்டிக்கு கூப்பிட வந்தா
அம்புட்டுத்தான் அவளை நான் அதுக்கு அப்புறம் பார்க்கவேயில்லை...பேசவும் இல்லை...
அதுக்குள்ளயும் வைரவன் அண்ணனை மச்சானாக்கிட்டிங்க... சும்மா போங்கடா..."
"மொதல்ல இப்படித்தான் இருக்கும் அப்புறம்
உன்னைத் தேடி அடிக்கடி வர ஆரம்பிப்பா... நீயும் புத்தகத்தை மாடு மேயிறதுகூடத்
தெரியாம கனவுல சிரிச்சிக்கிட்டு இருப்பே..."
"இப்ப எதுக்குடா தேவையில்லாம மாட்டை எல்லாம்
இழுக்கிறே... இங்க எதுக்கு மாடு வருது..."
"ம்... எட்டாப்பு படிக்கயிலே... செல்வி...
ம்.... ஏய்... ஏய்.... எல்லாம் தெரியும்டி..." பழனி சிரித்தான்.
"என்ன செல்வியா... அவ யாருடா..."
"அதான் எண்ணெய் வடிய வடிய தலைய வழிச்சிச்
சீவிக்கிட்டு பெரிய சைக்கிள்ல இடுப்ப ஆட்டி ஆட்டி ஓட்டிக்கிட்டு
வருவாளாமே..."
"இதெல்லாம் உனக்கு..."
"எல்லாம் சரவணன் உபயந்தான்.... ஆமா அவள லவ்
பண்ணுறேன்னு பிதற்றி லவ்லெட்டர் எழுத நோட்டை எடுத்து வச்சிட்டு கனவுக்குப்
பொயிட்டியாம் ஒரு குயர் நோட்டையும் உங்க வீட்டு கருத்த எரும பக்குவமா
தின்னுருச்சாமே..."
"சும்மா போடா... வேற பேச்சு பேசு..."
"இல்ல மாப்ளே அனுபவம் இருக்கதாலே இனி அப்படி
நடக்காம இருக்க மாட்டியா என்ன..."
"என்னடா இன்னைக்கு உங்களுக்கு ஓட்ட ராம்கிதான்
கிடைச்சானா?" என்றபடி வந்தான் சரவணன்.
"வாடா.... என்னடா இப்பல்லாம் அதிகமா
வரமாட்டேங்கிறே... நேத்துக்கூட பழனி வீட்ல எல்லாரும் இருந்தோம்... நீ
வரலை..."
"இல்லடா இன்னைக்கு காலையில ஒரு டெஸ்ட் அதான்டா
சாமிநாதன் கூட சேர்ந்து படிச்சேன்..."
"ம் இப்பல்லாம் கிளாஸ் பிரண்ட்ஸ்கூட
சேர்ந்துக்கிட்டு எங்களை ஒதுக்கிறே..." என்றான் ராம்கி.
"அப்படியெல்லாம் இல்ல... எப்பவும் அவங்ககூட
இருக்கோம்... உங்ககூட சேர்ந்து படிக்க வேற வேற சப்ஸெக்ட்... ஆமா அறிவுந்தான்
வரலை... அவனை மட்டும் ஒண்ணும் சொல்லாதீங்க... ஆமா நான் வரும் போது அனுபவம் அது
இதுன்னு பழனி சொன்னானே என்ன அது..."
"ஒண்ணுமில்லடா... அவனுக்கென்ன..." வேகமாக
பதிலளித்தான் ராம்கி.
"நீ இருடா... என்னடா பழனி..."
"ஒண்ணுமில்ல பய பெரிய இடத்துல காதல்ல
விழுந்துட்டான்... அதான் கருத்த எரும, ஒரு குயர் நோட்டு அனுபவம்
இருக்கதால இனி அதுபோல நடக்காம இருடான்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்."
"ராம்கிக்கு காதலா... யாருடா அவ..."
"புவனா..."
"புவனா எந்த கிளாஸ்..."
"பர்ஸ்ட் மாத்ஸ்..."
"மாத்ஸ்ஸா.... எங்ககூட தமிழுக்கும்
இங்கிலீஸ்க்கும் கம்பைன் கிளாஸ் வருவாங்களே... புவனா... அட அந்த
செவத்தக்குட்டி..."
"என்னடா... குட்டி...கிட்டின்னு நண்பனோட
ஆளுடா..." அண்ணாதுரை கிளறிவிட்டான்.
"அவளை அப்படித்தான் சொல்லுவோம்... எதுக்கும்
பயப்படமாட்டா... அது அவ சாதியில ஊறின திமிரு... ஆனா அவங்க கிளாஸ்ல அவதான் படிப்புல
நம்பர் ஒண்ணாம்... ஆமா அவ அண்ணன் யாரு தெரியுமா...?"
"தெரியும்டா... அடக்கி வாசி பின்னால தேர்ட் இயர்
பிகாம் கணேசன் பேசிக்கிட்டு இருக்கான் போயி அண்ணன்காரன்கிட்ட
போட்டுவிட்டுடுவான்.... அப்புறம் எல்லாருடைய செட்டையையும்
ஒடிச்சிருவாய்ங்க..." பழனி குசுகுசுத்தான்.
கணேசன் அங்கிருந்து நகரவும் புவனா லைப்ரரி நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
"சொன்னேன்ல மயிலு தேடி வந்திருச்சு.... மச்சான்
எல்லாத்துக்கும் தயாரா இரு..."
“நாம இங்க நிக்கிறது அவளுக்கு எப்படிடா தெரியும்....
லைப்ரரி போனாலும் போவா... சும்மா இருங்கடா...”
“போகட்டுமே... உன்னைய பார்த்த சிரிச்சிட்டாவது போவா....
இல்லாட்டி பேசிட்டுப் போவா பாரு...”
"டேய் அவகிட்ட அதிகம் வச்சுக்காதே... அவ அண்ணன்
மோசமானவன்..." சரவணன் பயத்தோடு சொன்னான்.
"இல்லடா... போட்டியில கலந்துக்கிறதுக்காக ஐயா
கூப்பிட்டு வரச்சொல்லி வந்து கூப்பிட்டா அம்புட்டுத்தான் மத்தபடி அவளுக்கும்
எனக்கும் என்ன இருக்கு..." ராம்கி பேசினாலும் மனசு மட்டும் அவ என்னைய
பார்த்து சிரிப்பாளா என்று யாருக்கும் தெரியாமல் தவமிருந்தது
அவர்களைக் கடந்தவள் எதேச்சையாக திரும்புவது போல் திரும்பி “
அட...நீங்க இங்கதான் எப்பவும் அரட்டை அடிப்பிங்களா... லைப்ரரியில படிக்கிற
பழக்கமெல்லாம் இல்லையா ரா....ம்.... ராம்கி..." சிரித்தபடி கேட்டுக்கொண்டு
அவனருகில் வர மற்றவர்கள் மெதுவாக நகர்ந்தனர்.
"ம்... இல்ல சாப்பாட்டுத் டயத்துலதான்
பிரண்டெல்லாம் ஒண்ணாக் கூடுவோம்... அதான் கொஞ்ச நேரம் அரட்டை..."
"காரைக்குடி வாறீங்கன்னு ஐயா சொன்னார்...?"
"ம்..."
"நல்லா பிரிப்பேர் பண்ணிக்கங்க... நம்ம
காலேசுக்கு கண்டிப்பா பரிசு கிடைக்கணும்.... கட்டுரைப் போட்டியில கலக்கலாப்
பண்ணனும்..."
"ம்... பண்ணிடலாம்...” மெதுவாக கண்களைச்
சுழலவிட்டான் எங்காவது வைரவன் நிற்கிறானா என்று பார்த்துக் கொண்டான்... எஙகும்
இல்லை என்றதும் சற்று சமாதானமானவன் “சரிங்க... நான் வாறேன்..."
"என்ன அவசரம்... என்னோட கவிதை இந்த வார ஆனந்த
விகடன்ல வந்திருக்கு..."
"அப்படியா... கவிதையெல்லாம் எழுதுவீங்களா...
வாழ்த்துக்கள்ங்க..." மெதுவாக கிளம்ப ஆயத்தமானான் வயிற்றுக்குள் வைரவன்
பார்த்துவிட்டால் செத்தோம் என்ற பயம் புளியைக் கரைத்தது.
"ம்... எதுக்கு பயப்படுறீங்க... நான் என்ன
முனுங்கவா போறேன்... சரியான பயந்தாங்கொள்ளியா இருப்பீங்க போல... எங்கண்ணன்
வந்துருவான்னு பயமா... கண்ணு நாலாபக்கமும் சுத்துதே... சரி நான் வாறேன்...
அப்புறம் பாப்போம்..." என்றபடி லைப்ரரிக்குள் நுழைந்தாள்.
மீண்டும் நண்பர்களுடன் கலந்தான்... "என்னடா சொன்னா..." என்ன சொன்னாள் என்று அறிய
ஆவலாய் அனைவரும் ஒன்றாகக் கேட்டார்கள்.
"காரைக்குடி போட்டிக்கு நல்லா ரெடி பண்ணச்
சொன்னாள். புக்ஸ் வேணுமின்னா அவகிட்ட கேட்டு வாங்கிக்கச்
சொன்னா...அம்புட்டுத்தான்" கொஞ்சம் சேர்த்து கதைவிட்டவன் "சாயந்தரம்
போகும் போது ஆனந்தவிகடன் வாங்கணும்டா..." என்றான்.
"என்னடா புதுசா... சம்பந்தமில்லாம ஆனந்த விகடன்
வாங்கணுங்கிறே..."
"அதுல ஒரு முக்கியமான மேட்டர் இருக்கு அப்புறம்
சொல்றேன்...." என்றவன் "சரி வகுப்புக்குப் போகலாம்" என்றபடி கிளம்ப
அவனையறியாமல் லைப்ரரி சன்னல் வழியே கண்கள் அவளைத் தேட, ஒருவன் அவளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான்.
ராம்கிக்கு வயிற்றுக்குள் புகைய ஆரம்பித்தது.
(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...
நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி