செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கோபிநாத்தின் பாஸ்வேர்டு


சென்னையில் ஒரு மழை நாள்!
நனையாமல் தப்பிக்க ஒரு டீக்கடைக்கு அருகில்  வண்டி யை நிறுத்தி ஒதுங்கிக் கொண்டேன். வேலை விட்டு வீடு திரும்புபவர்கள், சாரை சாரையாகப் படையெடுக்கிற மாலை நேரம் அது. நான் நின்ற இடத்தில், ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளின் வழியே தண்ணீர் கொட்டி,எங்க ளையும் அவ்வப்போது நனைத்துக்கொண்டு இருந்தது. சடசடவென அடித்த மழையில் நனையாமல் தப்பி ஓட முயன்றுகொண்டு இருந்த அனைவரின் கைகளும், சட்டைபாக் கெட்டின் மேல் இருந்தன. குறுக்கும்நெடுக்கு மாக பாக்கெட்டுகளில் கை வைத்துக் கொண்டு ஓடியவர்களை, 'வித்தியாசமாக ஏதோ படுகிறதே’ என்று கவனித்தபோதுதான், என் கைகளும் சட்டைப் பையைப் பத்திர மாகப் பிடித்துக்கொண்டு இருந்தது.
மழை பெய்யும்போது தலைக்கு மேல் கையைக்கொண்டு தண்ணீரை மறைக்க முயன்ற நாம் எல்லோருமே, இப்போது எல்லாம் அனிச்சையாக செல்போனைப் பாதுகாப்பதற்காக பாக்கெட் மீது கை வைத்திருக்கிறோம் என்பது, அப்போதுதான் உறைத்தது. அதுசரி... தலை நனைந்தால் துவட்டிக்கொள்ளலாம், போன் நனைந்தால் என்னாவது?! மழைக் காலத்தின் வழக்கமான ஒரு செயல்பாட்டையே மாற்றிப்போட்டிருக்கின்றன நம் தொழில்நுட்பக் கருவிகள்.
மழை மறைப்பு நடவடிக்கை மட்டுமல்ல; ஏறக்குறைய நடைமுறையில் இருக்கும் அனைத்துப் பழக்கங்களையும், சில பல குணாம்சங்களையும், சின்னச் சின்ன அபிலாஷைகளையும், நீண்ட நாள் பழக்க வழக்கங்களையும்கூட!

திண்ணைப் பேச்சு, கடைவீதிச் சந்திப்பு, மொட்டை மாடி வெட்டிப் பேச்சு, அம்மாக்கள் எல்லாம் வீட்டு வாசலில் அமர்ந்திருக்க பிள்ளைகள் விளையாடிய ஐஸ்பாய் ஆட்டங்கள்... என எல்லாவற்றையும் கருவிகள் களவாடி ரொம்ப நாள் ஆகிவிட்டன. குறைந்தபட்சம் இரண்டு பேர் விளையாடும் செஸ் ஆட்டத்தைக்கூட கணினியோடு விளையாடும் மனநிலையைப் பலரும் எட்டியிருக்கிறோம்.
கணினிகளும், செல்போன்களும், வீட்டுக்குள்ளே நடைபோடச் செய்யும் ட்ரெட் மில் எந்திரங்களும், டி.வி-க்களும் இன்னும் பல இத்யாதி இத்யாதி கருவிகளும் பெருகிக்கிடக்கும் போது, அதன் வசதிகளை அனுபவித்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? மனிதர் களோடு பேசிப் பழகிப் பிரச்னை வருவதற்குப் பதிலாக, எந்திரங்களோடு இயங்கிக்கொள்வது நல்லது என்று நமக்கு நாமே சமாதானம்சொல்லிக் கொள்கிறோம். ஆனால், கருவிகள் நம் கால்களை யும், கைகளையும், மனதையும், மூளையையும்கூட மனித சமூகத்துடன் ஐக்கியப்பட விடாமல்கட்டி வைத்து இருக்கின்றன என்பதைக் கவனிக்க மறந்துவிட்டோம்!
தெருவில் ஓடி ஆடித்திரிந்த பிள்ளைகள் 'டெம்பிள் ரன்’ விளையாட்டில் யாரோ ஓட மார்க் சேர்க்கிறார்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளியின் முகம் பார்த்துப் பேசவிடாமல் வீட்டு ஹாலில் இருக்கும் டி.வி. அலறுகிறது. 'முக்கியமான ஒரு விஷயம் பேசணும்’ என  உட்காருகிற அமர்வுகளில் கூட டி.வி-யை நிறுத்த மனசு வராமல் கொஞ்சம் சத்தத்தைக் குறைத்துவிட்டு, 'சொல்லுங்க...’ என்று கேட்கிற மனிதர்களிடம் என்னத்தைப் பேசுவது? 'மேனேஜர் ஏதோ பிஸியாக இருக்கிறார்!’ என்ற நினைப்பில் எல்லோரும்காத்துக் கிடக்க, அவரோ கை நடுங்க கணினியில், 'சாலிட்டர்’ ஆடிக்கொண்டு இருப்பார்.
இணைய இணைப்பில் பிரச்னை என்றால் இதயம் படபடக்கிறது. டி.வி பழுதானால் வீட்டின் செல்லப் பிள்ளைக்கு காய்ச்சல் கண்டதுபோல பதைபதைத்துப் போகிறோம். உடம்பு சரியில்லை என்றால் இரண்டு நாள் கழித்து மருத்துவரிடம் செல்லும் நாம், கருவிகள் பழுதானால் அடுத்த நிமிடமே அதைச் சரிசெய்ய வேண்டிய அவசியத்துக்கு ஆளாகி இருக்கிறோம்.

கல்லூரிப் பெண் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்னது இன்னமும் என் நினைவில் அப்படியே நிற்கிறது.
'ஒருநாள் சாப்பாடு இல்லேன்னா என்ன ஆகும்?’
'அது பரவால்ல... அட்ஜஸ்ட் பண்ணிக் கலாம்!’
'செல்போன் இல்லேன்னா..?’
'ஐயைய்யோ... பைத்தியம் பிடிச்சிடும்!’
டி.வி., செல்போன், கணினி என எந்தக் கருவியும், எதிரில் உட்கார்ந்து இருப்பவரின் முகம் பார்த்துப் பேச நம்மை அனுமதிப்பதே இல்லை. இரண்டு மனிதர்களின் உணர்வு ரீதியான பகிர்தலுக்கு நடுவே, ஏதோ ஒரு கருவி உட்கார்ந்துகொண்டு அந்தப் பகிர்த லின் அவசியத்தைப் பிடுங்கித் தின்கிறது. அடுத்த மனிதனுக்குக் காது கொடுக்காத, மனசைக் கொடுக்காத வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்திய கருவிகளின் மீது, பிரிக்க முடியாத ஒரு சார்புநிலை ஏற்பட்டுவிட்டதை முழுவதுமாக மறுக்க முடியாது.
கொஞ்சம் கொஞ்சமாகக் கருவிகள் நம்மை அவற்றின் கட்டுப்பாட்டிற்கேற்ப இயக்கிக்கொண்டிருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் செல்ல, ஐந்து முறை செல் போனில் வழி கேட்கிறோம். வழி கேட்க நமக்கு உதவும் அந்தக் கருவி, வழியைத் தேடிக் கண்டுபிடிக்கும் திறனை நம்மிடம் இருந்து திருடிவிட்டது. 1,000 எண்களைச் சேமித்து வைக்கும் திறனுடைய அந்த செல்போன், அம்மா, அப்பா, மனைவியின் எண்களைக்கூட நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு நம் திறனை முடக்கிப் போட்டிருக்கிறது. அறிவியலின் வளர்ச்சியைப் பழைய குமாஸ்தா மனநிலையில் இருந்து பார்க்கக் கூடாது என்ற வாதம் சரிதான். ஆனால், கருவிகளின் மீதான நமது சார்ப்புத்தன்மையும் காதலும் அதிகரித்துக்கொண்டே செல்வது, அத்தனை நல்லதல்ல என்பதையும் நாம்  மறக்க வேண்டாமே!
'அப்பார்ட்மென்ட் பசங்க ஓடி விளையாடி கால், கைல அடிபட்டுக்கிறதைவிட கம்ப்யூட்டர்ல விளையாடிக்கிறது சேஃப்தானே’, 'நாலு பசங்க சேர்ந்து விளையாண்டா சண்டை வரும். அதுக்கு இது நல்லது பாருங்க’ என்று அறிவுபூர்வமான விளக்கம் தருகிற வர்களையும் பார்க்க முடிகிறது.
இன்னொரு பக்கம் நம் கருத்துக்கும் செயல்பாடு களுக்கும் முரண்படுகிற மனிதர்களைவிட, சொன்னதை எல்லாம் கேட்கும் கருவி களோடு புழங்குவது சுகமாக இருக்கிறது. கடந்த 20ஆண்டு களில் கருவிகள் நமக்கு நிறைய வசதிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. ஐந்து மணி நேரம் செய்துகொண்டிருந்த வேலையை அரை மணி நேரத்துக்குள் செய்து முடிக்கிற சக்தியைத் தந்திருக்கின்றன. பூகோளரீதியிலான தூரத்தைக் குறைத்திருக்கின்றன. ஆனால், நாளாக நாளாக அவை மனிதர்களின் மனங்களுக்கு இடையேயான தொலைவை அதிகப்படுத்திவிட்டன என்பதுதான் அச்சுறுத்தும் உண்மை. நேரத்தை மிச்சப்படுத்தியதற்காக நாம் கொண்டாடிய கருவிகள், இன்று நமக்கு நேரமே இல்லாத நிலைமைக்குத் தள்ளிவிட்டிருக்கின்றன.
ஏதோ ஒரு விஷயத்தைத் தேட இணையத்துக்குள் போய், இரண்டு நேரம் கழித்துதான் திரும்ப முடிகிறது. 'பத்து நிமிடம் விளையாடிவிட்டுத் திரும்பலாம்’ என நினைத்து தொடங்கப்படும் ஒரு விளையாட்டு விடிந்த பிறகுதான் முடிகிறது. உறங்கப்போகும் நேரத்தை 12 மணியாக்கி, எழும் நேரத்தை 8 மணி ஆக்கியிருக்கிறது. புத்தகம் வாசிப்பது, வீட்டு உறுப்பினர்களுடன் பேசுவது, வாரம் ஓர் உறவினர் வீட்டுக்குச் செல்வது என வழக் கத்தில் நாம் வைத்திருந்த நல்ல பல விஷயங்களைக் கருவிகள் பறித்துக்கொண்டதைப் பற்றி தீவிரமாக கவனிக்க வேண்டிய இடத்தில் இப்போது நாம் நிற்கிறோம். கருவிகளின் பயன்பாடும் தேவையும் அத்தியாவசியமானது. ஆனால், அவை மனிதர்களைவிட மேலானவையாக, மனிதர்களைவிட வசதியானவையாக மாறிக்கொண்டே இருப்பதை உறுத்தல் இன்றி அனுபவித்துக்கொண்டு இருப்பதுதான் ஆபத்து.
மனிதர்கள் குறைவாக உள்ள நாடுகள், கருவிகளோடு காலம் கழிப்பது வேறு விஷயம். தடுக்கி விழுந்தால் அடுத்தவன் மீது விழக்கூடிய மனிதத்திரள் கொண்ட நாம், அவர்களைப் புறக்கணித்துவிட்டுக் கருவிகளோடு குடும்பம் நடத்துவது, நமது வாழ்வியல் சூழலுக்கு ஏற்றதல்ல. குழந் தைகள், கருவிகளின் மீது சார்ப்புத்தன்மை கொண்டவர்களாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பெரியவர்களும், இளைஞர்களும், தாங்களும் அந்த சார்புநிலையில் சிக்கிக்கிடக்கிறோம் என்பதை உணர்ந்தே ஆக வேண்டும்.
'சரி கோபி.... என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கருவிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு  பழைய வாழ்க்கைக்கே போய்விடலாமா?’
வேண்டியதில்லை; அப்படிப் போகவும் முடியாது. 'மனிதன் முக்கியமா... கருவி பிரதானமா..?’ என்றொரு கேள்வியை மட்டும் அடிக்கடி எழுப்பிக்கொள்வது அவசியமாக இருக்கிறது. அவரவரின் வாழ்க்கை முறை, தொழில், வாழிடம், புறவியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒட்டி, அதற்குத் தகுந்தாற்போல் கருவிகளின் மீது இருக்கும் சார்புத்தன்மையைக் குறைத்துக் கொள்ளும் முயற்சிகள், மேற்குலக நாடுகளில் பரவலாகத் தொடங்கிவிட்டன. ஆனால், அவர்களின் விற்பனைச் சந்தையாக மாறிவிட்ட நமது தேசத்தில், அப்படியான  முயற்சிகளை அவர்கள் ஊக்குவிக்க மாட்டார்கள். மனிதர்களோடு விழுவதும் புழங்குவதும் சிரமமாக இருக்கலாம். ஆனால், அதுதான் வாழ்வின் அர்த்தத்தை சொல்லித்தரும்.
'டெம்பிள் ரன்’ விளையாடியது போதும்.. வீட்டுக்குள் ட்ரெட் மில்லில் ஓடியது போதும். மைதானத்துக்குப் போவோம் வாருங்கள்... மைதானமே இல்லையே என்று மல்லுக்கு வராதீர்கள். தேடிக் கண்டுபிடிக்கலாம். கருவிகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதைவிட, மைதானத்தை தேடித் திரிவது புத்திசாலித்தனம்! 
நன்றி : படைப்புக்கு - கோபிநாத், படத்துக்கு - கே.ராஜசேகரன்
நன்றி : ஆனந்தவிகடன்
-'பரிவை' சே.குமார்

3 கருத்துகள்:

  1. அத்தனையும் உண்மை

    பதிலளிநீக்கு
  2. மிக நல்ல பகிர்வு...

    பதிலளிநீக்கு
  3. மனிதர்கள் குறைவாக உள்ள நாடுகள், கருவிகளோடு காலம் கழிப்பது வேறு விஷயம். தடுக்கி விழுந்தால் அடுத்தவன் மீது விழக்கூடிய மனிதத்திரள் கொண்ட நாம், அவர்களைப் புறக்கணித்துவிட்டுக் கருவிகளோடு குடும்பம் நடத்துவது, நமது வாழ்வியல் சூழலுக்கு ஏற்றதல்ல. குழந் தைகள், கருவிகளின் மீது சார்ப்புத்தன்மை கொண்டவர்களாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பெரியவர்களும், இளைஞர்களும், தாங்களும் அந்த சார்புநிலையில் சிக்கிக்கிடக்கிறோம் என்பதை உணர்ந்தே ஆக வேண்டும்.//

    உண்மை. உறவுகள், நட்புகள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நேரம் ஒதுக்க வேண்டும்.
    அருமையான பகிர்வுக்கு நன்றி.


    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி