ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சிதையும் நிலையில் சரித்திரச் சிற்பங்கள்!


மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள சிலைக்காட்சிக் கூடத்தில் போதிய பராமரிப்பின்றி சிலைகள் சிதையும் நிலையில் இருப்பதாக வரலாற்று ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
   மதுரையில் திருமலை நாயக்கர் காலத்தில் கி.பி.1636-ல் கட்டப்பட்ட மகால் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் காண ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதில் சுமார் 800 பேர் வெளிநாட்டவர்கள். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் காலங்களில் வெளிநாட்டவர் 39 ஆயிரம் பேரும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 28 ஆயிரம் பேரும் வருகைதருவது தெரியவந்துள்ளது. அவர்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி வரை வருவாயும் கிடைக்கிறது.
  மகாலின் தூண்கள் மற்றும் மேல் மாடங்களை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தமிழின் தொன்மையையும், சரித்திரத்தையும் அறிய வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ல் மகாலின் பின்பகுதியில் இடதுபுறம் உள்ள அந்தப்புர அறையில் கல்வெட்டுக் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டது. இதில் தமிழ் எழுத்தின் வளர்ச்சி, ஆங்கிலேயரான எல்லீஸ் பிரபு கிணறு வெட்டியது, திருவிடைமருதூர் கல்வெட்டு, பிற்காலச் சோழர் மற்றும் குலசேகரபாண்டியன் கோயிலுக்கு நிலத்தைத் தானம் அளித்தது உள்ளிட்ட அரிய 15 கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.


  கல்வெட்டுக் காட்சிக்கூடத்துக்கு முன்பகுதியில் சிலைக்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகள் உள்ளன. மண்ணில் புதையுண்ட நிலையில் மீட்கப்பட்ட ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்பட்ட இச் சிலைகள் தமிழின் அரிய பொக்கிஷங்களாகும்.
  இங்குள்ள சிலைகளில் லகுலீஸ்வரர் சிலையானது அரிட்டாபட்டியில் கிடைத்தாகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச் சிலை வட இந்திய பூஜை முறையைக் கொண்ட சுவாமி சிலையாகும். சாலுக்கியர் படையெடுப்பை நினைவுகூரும் அரிய வகை சிலையாக இதை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
 அதேபோல, மகாலின் நாடகசாலையில் உள்ள சுமார் 60 சிலைகளும் சரித்திர அரிய சான்றுகளாகவே உள்ளன. கல்வெட்டுகள் மற்றும் சரித்திர சிலைகளை காட்சிப்படுத்துவது மட்டுமல்ல.
  அதை அறிவியல் பூர்வமான முறையில் பாதுகாப்பதும் முக்கியமாகும். ஆனால், மகாலில் உள்ள அரிய கல்வெட்டுகள் தூசுபடிந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ளன.
 அவற்றில் உள்ள விவரங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு விளங்கும் வகையில் எழுதி வைக்கப்படவில்லை. மேலும், சரியான மின்விளக்கு, பாதுகாப்பான கவசங்கள் இல்லாததால் பார்வையாளர்கள் கல்வெட்டுகளை தொட்டு சேதப்படுத்தும் நிலையும் இருக்கிறது.   அரிய சிலைகளைப் பாதுகாக்க சில முறைகள் உள்ளன. அதாவது தண்ணீரில் கழுவும் சிலைகளை எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளிட்ட அழுக்குகளை நீக்கும் வகையில் சோடியம் மற்றும் நைட்ரேட்டைப் பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும். அதையடுத்து, பிவிசி எனப்படும் பாலி வினைல் குளோரைடைப் பயன்படுத்தி மெருகூட்ட வேண்டும். இதுபோன்ற முறையை 3 மாதங்களுக்கு ஒருமுறை செயல்படுத்தினாலே சரித்திரச் சான்றுகளாகும் சிலைகள் காலத்தால் அழியாமல் பாதுகாக்கப்படும்.
 ஆனால், மகாலில் உள்ள காட்சிக்கூட சிலைகள் எவ்விதப் பராமரிப்பும் இன்றி சிதைந்துவருவதைக் காண முடிகிறது. தொல்லியல் துறை சார்பில் சிலைப் பராமரிப்புக்குரிய நிதி உள்ளிட்ட வசதிகளை அரசு அளித்தும் பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
 இதுதொடர்பாக மகாலில் உள்ள தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநர் அலுவலகத்தில் விசாரித்தபோது, சிலைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் 2 ரசாயனர்கள் உள்ளனர்.
  அவர்களில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் சிலைகளை கழுவி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
 இடியும் நிலையில் உள்ள கட்டடங்களைக் கூட வரலாற்று சான்றாகக் கூறி பாதுகாக்க வலியுறுத்தும் வேளையில் தமிழின் சரித்திர ஆவணங்களாக உள்ள அரிய சிலை மற்றும் கல்வெட்டுகளைக் காப்பதில் தொல்லியல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கை.
-செய்திக்கு நன்றி : தினமணி
-படத்துக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்....

    இப்படி இருக்கிறது நினைத்து வேதனை தான்....

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி