புதன், 17 ஜூலை, 2013

'சீக்கிரம் எழுந்து வாங்க கவிஞரே...' வாலியிடம் கமல் உருக்கம்!!


கவிஞர் வாலியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரை நேரில் பார்க்க சென்ற கமல், சீக்கிரம் எழுந்து வாங்க நம்ம பட வேலைகள் எல்லாம் பாக்கி இருக்கு என்று உருக்கமாக வேண்டியுள்ளார். மேலும் டாக்டர்களிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து உள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த கவிஞர், பாடலாசிரியர் வாலி. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலந்தொட்டு இன்றைய தனுஷ், சிம்பு வரை எல்லா தரப்பட்ட நடிகர்களின் படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார், இப்போதும் எழுதி வந்தார். 

சமீபத்தில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சுமார் 5 மணிநேரம் கலந்து கொண்டுள்ளார், அதன்பிறகு வசந்தபாலன் இயக்கவுள்ள தெருக்கூத்து படத்திற்கு பாட்டெழுத ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவுக்கு சென்று பாடல் எழுதும் விதம் குறித்து சுமார் 7 மணி நேரம் விவாதித்து உள்ளார். இதனால் சோர்ந்து போய் இருந்த அவருக்கு அன்று இரவே உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். தொடர்ந்து மருத்துவமனையிலேயே கடந்த ஒரு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. நுரையீரல் தொற்று நோயுடன், மூச்சு திணறல் அதிகமானது. இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் ‌சேர்த்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாகத்தான் உள்ளது. இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன், வாலியை மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளார். அப்போது, அவர் அருகே சென்று சீக்கிரம் எழுந்து வாருங்கள், விஸ்வரூபம்-2 உள்ளிட்ட நமது படவேலைகள் எல்லாம் பாக்கி இருக்கிறது, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று ரொம்ப உருக்கமாக பேசியுள்ளார். மேலும் மருத்துவர்களிடம் வாலியின் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். கமல் தவிர ஏ.ஆர்.ரஹ்மானும், வாலியை சந்தித்துள்ளார். 

செய்திக்கு நன்றி : தினமலர்
படத்துக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்.

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி