செவ்வாய், 9 ஜூலை, 2013

'திருப்தி முக்கியம்!' - லட்சுமி மேனன்

கிரின் பார்க் ஹோட்டல்.... அறை என் 117....

""வாங்க சார்...''  அழைக்கிறது தென்றல் குரல்....

"சுந்தரபாண்டியன்', "கும்கி', "குட்டிப்புலி' என அடுத்தடுத்த படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களின் உறக்கம் கலைத்து விட்டீர்களே...?

""ஹலோ.... இதெல்லாம் டூ மச். நான் சின்ன பொண்ணு. இப்போதுதான் சினிமாவில் நல்ல இடத்துக்கு வளர்ந்து வருகிறேன். அதுக்குள்ளேயே கண்ணு வைக்கிறீர்களே... ஆல் தி பெஸ்ட் சொல்லுங்க!.'' என்கிறார் லட்சுமி மேனன்.


சினிமாவுக்கு வந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை... மூன்று படங்கள் ரிலீசாகி விட்டது... கிளாமர், கவர்ச்சின்னு தாராளம் காட்ட தயாரக உள்ள நடிகைகளுக்குக் கூட இந்த இடம் இல்லை. உங்க ப்ளான் என்ன...?

 என்னை யாரோடும் இணைத்து பேசாதீங்க! அது எனக்கு பிடிக்காது. என்னைப் பற்றிதான் நான் பேசுவேன். அந்த நடிகை இப்படி இருக்காங்க. இந்த நடிகை இப்படி இருக்காங்கன்னு சொல்லுவது என் வேலை இல்லை. பாட்டி, அம்மா, நான் எல்லோருமே கேரளத்தில் டான்ஸ் ஸ்கூல் வைத்திருந்தோம். அந்த ஆர்வம் சினிமாவுக்கு அழைத்து வந்து விட்டது. ""சினிமாவில் நடிக்கப் போறேன்...''னு சொன்னதும், வீட்டில் பெரிய எதிர்ப்பு. அப்பா, அம்மா இரண்டு பேருமே ஷாக் ஆகி விட்டார்கள். கெஞ்சி கெஞ்சி இரண்டு வருடம் டைம் கேட்டு நடிக்க வந்திருக்கிறேன். எனக்கு இப்போது கிடைத்திருக்கிற பெயருக்கு, நான் பெரிய உழைப்பை தரவில்லை. எல்லாம் அதுவாகவே நடந்தது. உண்மையைச் சொன்னால் ரிலீசான மூன்று படங்களின் கதைகளையும் நான் கேட்கவில்லை. பிரபுசாலமன் சார் ஏதோ வித்தியாசமாக செய்வார் என்று நம்பி வந்தேன். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நல்ல இடம் தந்தார். சசிகுமார் சாருக்கு என் மீது நிறைய அக்கறை. அதனால் அவர் படங்களில் நடித்தேன். இந்த வருடம் இதுவரை நன்றாக இருக்கிறது.

தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கிறீங்களே... அப்படி, இப்படியென எதுவும் செய்திகள் வந்து விடாதா...?

 எனக்கு நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதை தவிர, வேறெதும் நோக்கம் கிடையாது. நீங்க கேட்ட கேள்வியை என்னிடம் கேட்காதவர்களே கிடையாது. என்னுடைய ப்ரெண்ட்ஸ்கூட நிறைய பேர் கேட்டார்கள். எனக்கு அவரைப் பிடிக்கும். அவருடன் ஒரு படத்தில் நடித்தேன். அது ஹிட் ஆனது. அடுத்த படத்தில் நடிக்க கேட்டார். அதுவும் ஹிட்டாகும் என்று நடிக்க வந்தேன். இதில் என்ன இருக்கிறது? சமீபத்தில் இந்த கேள்வியை ஒருவர் என்னிடம் கேட்டார். அவருக்கு நான் சொன்ன பதில் இதுதான். "இதில் வேறு எதுவும் இல்லை. சசிகுமார் சாருடன் படத்தில் நடித்தால் அது நல்ல காவலாக இருக்கும்' என்றேன். அதுதான் உங்களுக்கும் பதில்.


மார்டன் உடைகளில் அழகாகவே இருக்கீங்க... இப்போது "சிப்பாய்' பட ஸ்டில்ஸ் கூட ரசிக்க வைக்கிறது... ஆனால் இதுவரை ஏன் பாவடை, தாவணியில் மட்டுமே வந்தீர்கள்....?

 எனக்கு மார்டன் உடைகள்தான் பிடிக்கும். சொல்லப் போனால் "கும்கி' படத்துக்குப்பின் அப்படியொரு படத்தில் நடிக்கத்தான் விரும்பினேன். ஆனால் "சுந்தர பாண்டியன்' படமும் பாவடை, தாவணிக்கே முக்கியத்துவம் கொடுத்தது. அந்தப் படத்துக்குப்பின் எல்லாப் படங்களுமே கிராமத்து கதைகள்தான். "குட்டிப்புலி' முடிந்ததும், இனி இரண்டு படங்களாவது வேறு மாதிரியாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். "கும்கி' மாதிரி, "சுந்தர பாண்டியன்' மாதிரி இருந்தால் கூட பரவாயில்லை. கறுப்பு மை பூசி, மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டும் என சிலர் வந்து கதை சொன்னார்கள். விடுங்க சாமின்னு வந்து விட்டேன். "சிப்பாய்' பட கதை அளவுக்கு எந்த கதையும் உயிர்ப்பாக இல்லை. அதுதான் அதில் தாமரையாக வாழ வந்து விட்டேன். இந்தப் படம் என்னை வேறு ஒரு இடத்துக்கு கொண்டு போகும். அந்த நம்பிக்கையில்தான் ஆசை ஆசையாக அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நீங்க இப்படி நிதானமாக இருக்கீங்க... சில பேர் இரண்டாவது படத்திலேயே விஜய், அஜித், விக்ரம், சூர்யான்னு மாஸ் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து விடுகிறார்களே...?

 அந்த நடிகர், இந்த நடிகர் என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். எனக்கு இயக்குநரும், கதையும்தான் முக்கியம். விஜய், அஜித் கூட நடிக்கும் பக்குவம், நேரம் எல்லாம் வரலாம். அதற்கு நான் கொஞ்சம் வளர வேண்டும். அதற்கு சில நம்பகமான கதையில் நடித்து என்னை நானே நிரூபித்துக்கொள்ள வேண்டும். பெரிய நபர்கள் எனக்கு முக்கியமில்லை. ஒவ்வொரு படத்திலும் ஏற்படுகிற திருப்திதான் முக்கியம்.

இப்படி அதிரடியாக பேசுறீங்களே.... உங்களின் ரோல் மாடல் யார்...?

 எங்களூர் நயன்தாரா.... ஆச்சரியமா இருக்கா! அதுதான் உண்மை. தென்னிந்தியாவில் எல்லா சினிமாக்களிலும் நயனுக்கு ஆஃபர் இருக்கிறது. இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டார். இப்படியொரு சூழலில் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முடிவை நயன் எடுக்க மாட்டார் என்றுதான் நினைத்திருந்தேன். அதையெல்லாம் தூக்கி போட்டு விட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். இனி அவரது பயணம் நன்றாக இருக்க போகிறது. அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா இவர்கள் எல்லாம் கூட எனக்கு ரோல் மாடல்தான். கமர்ஷியல் சினிமாக்களில் அதிகமாக இருந்தாலும், ரொம்பவே நிதானமாக முடிவெடுக்கிறார்கள். இங்கே திரிஷா இடம் இப்போதும் அப்படியே இருக்கிறது. அதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.


சூர்யாதான் பிடித்த நடிகராமே...?

 யெஸ். ஒவ்வொரு படத்திலும் அவர் காட்டுகிற எனர்ஜி சூப்பராக இருக்கிறது. சூர்யாவுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனடியாக கால்ஷீட் ரெடி. ஏனென்றால் சூர்யா அவ்வளவு க்யூட்!

செய்திக்கு நன்றி       : தினமணி - சினிமா எக்ஸ்பிரஸ்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி