ஞாயிறு, 28 ஜூலை, 2013

புற்று நோயின் பிடியில் நடிகை கனகா


கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.

அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை. 

முத்துக்குமார்  என்ற வெளிநாட்டு இன்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனகாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா, கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த  மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்கவில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்று கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் கனகாவை யாரும் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள். 

கருப்பு, வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!! 

நன்றி : தினமலர்
-'பரிவை' சே.குமார்

5 கருத்துகள்:

  1. படிக்கும்போதே மனம் வேதனையாகிறது... நடிகை என்ற நோக்கில் இருந்து ஒதுக்கி அவரை மனிதாபிமானத்துடன் அன்புடன் பார்த்துக்கொள்ள அருகில் யாரும் இல்லாததும்...

    தாய் தன் பிள்ளையை தனியே இந்த உலகில் வாழ பழக்காமல் பொத்தி வளர்ப்பதால் இவருக்கு தனியே வாழ தைரியமற்று மனநிலையும் பாதிக்கப்பட்டு... அதுவே வியாதியாக முற்றி இப்போது மரணத்தின் பிடியில்...

    இறைவன் இவரை காக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  2. கனகா என்றில்லை யாருக்குமே இப்படி ஒரு நிலை வரக்கூடாது

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ வித்யா வாழ்க்கையும் கடைசியில் இப்படித்தான் முடிந்தது.

    பதிலளிநீக்கு
  4. படிக்கவே மனது கஷ்டமாய் உள்ளது.ஏதாவது நம்பிக்கை இருந்தால் தான் வாழ்வில் ஜீவித்து இருக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  5. அழகான,அம்சமான நடிகை!திரையுலகமும் வீணடித்து, இப்போ வாழ்க்கையும்..............ஹூம்!!!!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி