6. கண்ணெதிரே தோன்றினாள்
முன்கதைச் சுருக்கம்...
ஏழைக் குடும்பத்தில் பிறந்து தந்தையில்லாமல் தாயின் அரவணைப்பில் வாழும் ராமகிருஷ்ணன் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்கிறான். முதல் நாள் கல்லூரிக்கு செல்லும் அவனை அவனது தாயார் அக்கம் பக்கம் பார்த்து அனுப்பி வைக்கிறாள். ராக்கிங் அதன் பின்னான நட்பு வட்டம் என கல்லூரி வாழ்க்கை இனிமையாக கழிய ஆரம்பிக்கிறது.
தொடர்கதையின் முந்தைய பகுதிகளைப் படிக்க
---------------------------
இனி...
நாட்கள் வாரங்களாக... வாரங்கள் மாதங்களாகிப் போய்க்கொண்டிருந்தது... கல்லூரி வாழ்க்கையும் பழகி முதல் செமஸ்டரையும் அரியர் இல்லாமல் முடித்துவிட்டான் ராம்கி. இரண்டாம் செமஸ்டருக்கான வகுப்புக்கள் மொழிப்பாடங்களுக்கான ஆசிரியர்கள் மாற்றத்துடன் துவங்கிவிட்டன.
ஒரு மதியவேளை சாப்பிட்டுவிட்டு வகுப்பறையை ஆர்க்கெஸ்ட்ரா அரங்கமாக மாற்றியிருந்தார்கள் ராம்கியும் நண்பர்களும்... அவர்களில் சேவியர்தான் பாடகன், சர்ச்சில் பாடுவதுடன் ஒரு சிறிய இசைக்குழுவிலும் அவ்வப்போது பாடி வந்தான். அதனால் மதியம் எப்பவும் கச்சேரி களைகட்டும். ஒரு முறை வெள்ளையன் சார் கூட பாடுங்க வேண்டாங்கலை... அடுத்தவங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்கக்கூடாது என எச்சரித்திருந்தார். எனவே டெஸ்க் இசை ராஜாக்கள் தங்களது இசையை வெகுவாக குறைத்துவிட்டார்கள்.
"இங்க யாரு... ராம்கி" ரம்மியமான குரலைக் கேட்டு பாடிக்கொண்டிருந்த சேவியர் பாட்டை நிறுத்த, ராம்கி உள்பட எல்லாரும் வகுப்பறை வாசலை நோக்கினர்.
மஞ்சள் கலர் தாவணியில் பட்டுப் போல ஒரு பருவச்சிட்டு நின்றாள். எல்லாரும் அவளையே பார்க்க, "அலோ பட்டிக்காட்டான் மிட்டாய்கடையை பார்த்த மாதிரி பாக்கிறீங்க... முன்னப்பின்ன பொண்ணுங்களைப் பார்த்ததில்லையா? இங்க யாரு செந்தூரப்பூவே ராம்கின்னு கேட்டேன்" நக்கலாகக் கேட்டாள்.
"டேய்.... மச்சான்... நிரோஷா கேக்குறாங்கடா... நாந்தேன்னு சிவாஜி மாதிரி எந்திரிச்சி நில்லுடா" என்று பழனி சொல்லவும் எல்லாரும் 'ஹே...' என சிரிக்க,
"என்ன நக்கலாக்கும்" என்றவள் "ஆழந்தெரியாம காலை விடாதீங்க... அப்புறம் நொண்டிக்கிட்டுத்தான் திரியணும்... என்ன நீ.... நீங்கதான் ராம்கியா... முத்துச்சாமி ஐயா வரச்சொன்னார்..."
"அட புறாப்பொறக்கி அய்யான்னு சொல்ல வேண்டியதுதானே..."
"வாத்தியாரை கேலி பண்ணாதீங்க... உங்க மார்க்கையும் புறா பொறக்கிக்கிட்டுப் போயிடும்... சரி வாங்க கூப்பிட்டார்"
"மாப்ளே... நடத்து... நடத்து... பொம்பளப்புள்ள உன்னய தேடி வருது... நம்மளை எல்லாம் போலீசுதான் தேடி வரும்... ம்.... எங்கயோ மச்சம் இருக்குடா உனக்கு" மெதுவாக முணங்கினான் அண்ணாத்துரை.
"சும்மா இருங்கடா... நான் ஐயாவைப் பார்த்து என்னன்னு கேட்டுட்டு வாறேன்..."
"வாங்க ராம்கி..." என்றார் முத்துச்சாமி ஐயா.
"என்னங்கய்யா... எதுக்கு என்னைய வரச்சொன்னீங்க..."
"காரைக்குடி கம்பன் கழகத்துல கட்டுரைப் போட்டி வச்சிருக்காங்க... அது குறித்த தகவல் எல்லா வகுப்பறைக்கும் வரும். நீங்க கண்டிப்பாக கலந்துக்கணும்..."
"காரைக்குடியிலயா... அம்மாகிட்ட கேக்கணும்..."
'அது சரி... பால்வாடி போல... இதெல்லாம் போட்டிக்கு வந்து... ம்...' வாய்க்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.
"சரி.... நாளைக்குச் சொல்லுங்க அவசரமில்ல... உங்களைப் பற்றி தேபிரித்தோவுல வேலை பார்க்கிற என்னோட மாணவர் அலெக்ஸ் சொல்லியிருக்கார். அது போக நான் ஒரு பேச்சுப் போட்டிக்கு உங்க பள்ளிக்கு நடுவரா வந்திருக்கேன். அதுல நீங்கதான் முதல் பரிசு... சரியா.."
"ம்..."
'பால்வாடிக்கிட்ட சரக்கு இருக்கும் போல...ம்' மனசுக்குள் நினைத்தவள் சிரித்துக் கொண்டாள்.
"அதனாலதான் உங்களைப் போகச் சொல்றேன்... அப்புறம் இது புவனா... நல்ல பேச்சாளி, கவிஞரும் கூட... முதல் பருவம் வரைக்கும் திறமையாளர்களை கண்டுபிடிக்க முடியலை... ஏன்னா எந்தப் போட்டியும் வைக்கலை... சண்டையும் விடுமுறையுமா போச்சு... இவங்க என் பொண்ணோட பிரண்ட்... அதனால சுலபமா தெரிஞ்சிக்க முடிஞ்சது... இவங்க... நீங்க... அப்புறம் கலந்துக்க போறவங்க எல்லாரும் சேர்ந்துதான் காரைக்குடி போறீங்க... பேருந்துக் கட்டணத்தை தமிழ்துறை ஏத்துக்கும்... அதனால போட்டிக்கு தயாராகுங்கள்."
"சரிங்கய்யா..."
ராம்கி சார்ந்த துறையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறையும் ஒரே அறைக்குள் இருந்தது. ராம்கி ஐயாவிடம் பேசிக் கொண்டு நிற்கும்போது அவர்களை கடந்து சென்ற வெள்ளையன் சார் "என்னப்பா இங்க நிக்கிறே...?" என்று வினவினார்.
"ஐயா கூப்பிட்டாங்க... அதான் சார்..." பவ்யமாய் சொல்ல
"வெள்ளையன் சார் தம்பி ராம்கி நல்ல படிப்பாளி மட்டுமில்ல... பேச்சு, கட்டுரையின்னு நிறைய பரிசு வாங்கியிருக்காங்க... ரொம்ப தங்கமான பிள்ளை" என்று ஐயா சொல்ல, ஒற்றைச் சிரிப்பை உதிர்த்துச் சென்றார் பசங்களால் சில்வர் பிளஸ் மண்டையன் என்று செல்லமாக அழைக்கபடும் வெள்ளையன் சார். அவரது டாலடிக்கும் வழுக்கைத் தலையைப் பார்த்து ராம்கி சிரித்துக் கொண்டான்.
"சரி வாரேன்ய்யா" என்று கிளம்ப அவன் பின்னே வந்த புவனா, "எக்ஸ் கியூஸ் மீ..." என்றாள். என்ன என்பது போல ராம்கி திரும்பிப் பார்க்க... ஆணின் பார்வை பட்டதும் மாராப்பை சரிசெய்யும் பெண்களின் வழக்கத்தை அவளும் தொடர்ந்தபடி கேட்டாள்.
"பேரே ராம்கிதானா இல்ல வேற..." உதட்டை சுளித்து இழுத்தாள். அதுவும் அழகாய்த்தான் இருந்தது. ஆனால் ராம்கிக்கு அதெல்லாம் தெரியவில்லை.
இதுவரை பெண்களுடன் அதிகம் பேசியதில்லை, முதன் முதலில் ஒரு பெண் பெயரைக் கேட்கிறாள். அதுவும் தங்கச்சிலையாட்டம் அழகி அருகில் வந்து பேசுகிறாள். அவனுக்குப் படபடப்பு அதிகமாகியது. நாக்கு வறண்டு மேலே ஒட்டிக்கொண்டது. என்ன சொல்வது என்று தெரியாத நிலையில் இருந்தான்.
"என்னப்பா... பேரைக் கேட்டா பேந்தப் பேந்த விழிக்கிறே...? ராம்கியின்னு கிராமத்து அம்மா பேரு வச்சாங்களான்னு சந்தேகத்துல கேட்டேன்... ஓகே... நான் வாறேன்..."
"ரா.. ராம்... ராமகிருஷ்ணன் மு... முழுப்பேரு..." சொல்வதற்குள் முகமெல்லாம் வேர்த்தது.
"அழகா டிரஸ் பண்ணித்தானே முன்னாடி நிக்கிறேன்... பேயைப் பார்த்த மாதிரி குழறுது....ம்ம்... ஓகே... நான் புவனா... பர்ஸ்ட் மாத்ஸ்... சரி பார்க்கலாம்...பை..." என்றபடி கிளம்பினாள். அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வகுப்பை நோக்கி நடந்தான்.
"மாப்ளே... என்னடா... என்ன பேசினா... எதோ சொன்னா நாங்க பார்த்தோமே..." அண்ணாத்துரை அவசரமாக கேட்டான்.
"ஒண்ணும் சொல்லலைடா... ஐயா ஒரு போட்டிக்குப் போகச் சொன்னார். அம்புட்டுத்தான் வெளிய வந்ததும் பாக்கலாம்ன்னு சொல்லிட்டுப் போனா...."
"அப்புறம் என்ன அடிக்கடி பார்த்துட வேண்டியதுதானே....?"
"போங்கடா... சும்மா கேலி பண்ணாம..."
"ம்.... தேவதை தேடி வந்திருக்கா... அப்புறம் என்ன காரைக்குடி பயணம்... பாண்டியன்ல படம்... ம் கலக்குடா மச்சான்..."
"அட போங்கடா.... ஐயா கூட்டியார சொன்னதால கூட்ட வந்திச்சி... இனி அதுக்கும் நமக்கும் என்ன இருக்கு..."
"சரி... பார்ப்போம்... என்ன இருக்குன்னு... ஆமா இம்புட்டு அழகியா இருக்காளே... யார் இவ... மொதல்ல விசாரிக்கணும்டா..." என்ற பழனி, "என்ன டிபார்ட்மெண்டுன்னு சொன்னால..." என்றான்.
"இல்லடா... பேசவே இல்லை அதெல்லாமா கேப்பாங்க..." அப்பாவியாய் சொன்னான்.
"எப்படியும் நாளைக்கு அவ என்ன கிளாஸ்ன்னு கண்டுபிடிக்கிறோம்... " அண்ணாத்துரை அழுத்தமாக சொல்ல, மீண்டும் தனது கச்சேரியை ஆரம்பித்த சேவியர் "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..." எனப்பாட மற்றவர்கள் சந்தோஷமாய் தாளமிட ஆரம்பித்தார்கள்.
ராம்கி மனசுக்குள் மஞ்சள் தாவணி லாவணி பாடியது.
(தொடரும்)
(அடுத்த வாரம் முதல் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்கதை பதிவு செய்யப்படும்)
-'பரிவை' சே.குமார்.
பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பிச்சுடுச்சு,ஹ!ஹ!!ஹா!!!
பதிலளிநீக்கு