இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று கொண்டிருந்தன. கோழிக்குஞ்சுகள் குளிருக்கு இதமாக தாயின் இறக்கைக்குள் தஞ்சம் அடைந்திருந்தன. மழை தூற ஆரம்பித்தபோது காணாமல் போன மின்சாரம் இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. கருவ மரங்களுக்கு இடையே வரும் மின்சாரக் கம்பியில் எங்காவது மரம் விழுந்து கிடக்கலாம். மழை நின்றதும் போய்ப் பார்த்து சரி செய்தால்தான்... அதுவரைக்கும் மிம்சாரம் வர வாய்ப்பேயில்லை. அதுவரைக்கும் வீட்டிற்குள் மசமசவென்று எரியும் அரிக்கேன் விளக்குதான்.
'சே... இந்த மழ நசநசத்து பொழப்பைக் கெடுக்குது... வெளிய தெருவ போகமுடியுதா..?' புலம்பினாள் ராமாயி.
தொடர்ந்து மழை பெய்வதைப் பார்த்தால் இந்த வருஷம் விவசாயம் நல்லாயிருக்கும். இந்த மழைக்கே கண்மாய் நிறையக்கூடிய வாய்ப்பு இருக்கு... மழை ஆரம்பிக்கும் போதே இளந்தாரிப்பசங்க போய் பக்கத்து ஊருக்குப் போற குளக்காலை அடைத்து கண்மாய்க்கரையை வெட்டி திருப்பி விட்டாச்சு. அதனால கம்மாய்க்கு நீர் வரத்து அதிகம் இருக்கும்.
வானம் இடித்துக் கொண்டிருக்க, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ''ம்... அப்பவே அடிச்சிக்கிட்டேன்... வயல்ல முள்ளப் புடுங்கி கொழுஞ்சி பறிச்சிப் போடுங்கன்னு கேட்டாத்தானே... இந்த மனுசன் காதுல வாங்குனாத்தானே... வெள்ளயும் சொள்ளயுமா கிளம்பிப் போனா மட்டும் போதுமா... இந்த தண்ணியில எப்படி சுத்தம் பண்ண முடியும். அவனவன் மழ விட்டதும் ஏரக் கட்டப் போறான். நாம முள்ளுப் புடுங்கலாம். எல்லாம் தலயெழுத்து... நாந்தான் லோலோன்னு கத்துறேன்..." கத்தலைத் தொடங்கினாள் ராமாயி.
"எதுக்கு இப்ப கத்துறே... நாளைக்கே வெதைக்கப் போறோமா என்ன... தண்ணி வத்தினதும்தானே உழுக முடியும்... அதுக்குள்ள பிடுங்கலாம்...ஈரத்துல புடுங்க நல்லா வரும் ஒருநா வேலை" என்று சொன்ன மாணிக்கம், 'எப்ப புடுங்கினாலும் நாந்தானே புடுங்கணும்... நீ வரப்போறியா..?' மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.
வயல் வரப்பு, ஆடு மாடு என்று ராமாயி ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, எதையும் கண்டு கொள்ளாமல் புகையிலையை எடுத்து கையில் தேய்த்து வாயில் அடக்கிக் கொண்டார். மழையோடு பால் கொண்டு போனவர்கள் திரும்பி விட்டனர் என்பது வீதியில் கேட்கும் பேச்சுக்குரலில் தெரிந்தது.
"என்ன செல்லம்மா, கம்மாயில தண்ணி ஏறிடுச்சா..?" வீட்டிற்குள் இருந்து புகையிலையை குதப்பிய வாயில் இருந்து எச்சில் வழியாதவாறு கேட்டார் மாணிக்கம்.
"அந்த சனியன துப்பிட்டுத்தான் பேசுறது... " வெடித்தாள் ராமாயி.
"பெரிய முட்டு மறையிறமாதிரி இருக்கு மாமா இன்னும் சறுக்கை போகலை... குளக்கால்ல அவ்வளவா தண்ணி இல்லை..." அவரது கேள்விக்குப் பதிலாக வெளியில் இருந்து குரல் வந்தது. பெரிய முட்டு என்பது கண்மாய்க்குள் இருக்கும் ஒருசில மேடான பகுதிகளில் பெரியது. அந்தப் பகுதி தண்ணீருக்குள் அமுங்கினால் அந்த வருட நல்ல விளைச்சல் என்பது அவர்கள் வழிவழியாக வைத்திருக்கும் கணக்கு.
"எங்க ராசுப் பெரியப்பா வேற தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு கிடக்குதாம்... இந்த அடைமழக்கு போயிடுதோ என்னவோ..." புலம்பினாள் ராமாயி.
"அட ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ராமு மச்சானைப் பார்த்தேன். அவரு நல்லாயிருக்காராம். கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகட்டுமே... பொயிட்டா பாக்கவா போறோம்..."
"யாரு கண்டா... இந்த மழயில போனா எப்புடி சாதி சனத்தை இழுத்துப் போறது... எல்லாத்துக்கும் சிரமம்தானே..."
"அட... உனக்கு நல்ல பேச்சே வராதா..?" கோபமாய் அடக்கினார்.
"மாணிக்கண்ணே..." -வெளியே குரல் கேட்டது.
"என்ன ராமசாமி.. என்ன விசயம்?"
"கம்மாக்கரை உடைக்கிற மாதிரி இருக்குண்ணே... நம்ம சறுக்கைக்குப் பக்கத்துல கரை சரியில்லை... தண்ணி தளும்புது..." படபடப்பாக பேசினான் ராமசாமி.
"அடி ஆத்தாடி ராத்திரி உடைப்பு ஏற்பட்டா தண்ணியெல்லாம் போயி நம்ம தலையில கல்லு விழுந்துருமே...எல்லாருக்கும் குரல் கொடு நான் இந்தா வாரேன்." என்றபடி தோளில் துண்டைப் போட்டுக் கொணடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மழையில் இறங்கினார்.
"தலயில எதாவது எடுத்துப் போட்டுக்கிட்டு போங்க... போயி ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இளந்தாரிப்பயலுகளை வேலை ஏவிட்டு வாங்க. அதை விட்டுட்டு மழயில நனைஞ்சுக்கிட்டு மாங்கு மாங்குன்னு மண்ணை வெட்டிட்டு இங்க வந்து அது வலிக்குது இது வலிக்குதுன்னு கிடக்கப்புடாது சொல்லிப்புட்டேன்." முதுகுக்குப் பின்னால் கூவினாள் ராமாயி.
வீட்டிற்கு ஒருவர் பொதுக்காரியங்களுக்கு வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. இருந்தவர்களெல்லாம் மண்வெட்டி, கூடை, சாக்கு சகிதமாக கிளம்பி வந்தனர். .
ராமசாமி காட்டிய இடத்தில் கரை உடைப்பதற்கான அறிகுறி தென்பட்டது. "ஏம்ப்பா... ரெண்டு இளவட்டம் போயி குளக்கால்ல போட்ட அணையை உடச்சு விட்டுட்டு கம்மாக்கரைய மண்மூடை போட்டு அடச்சுட்டு வாங்க"என்று மாணிக்கம் சொன்னதும் சில இளைஞர்கள் கிளம்பினர்.
மற்றவர்கள கரையை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினர். கேலியும் கிண்டலுமாக பேச்சு மட்டும் குறையவில்லை. "பேச்சைக் குறைச்சுட்டு வேலையைப் பாருங்க... இருட்டுறதுக்குள்ள முடிக்கணும்"
"அப்பா... ரெண்டு பேரு மண்ணை வெட்டிக் கொடுங்க... ஆத்தா அதை சாக்குகள்ள நிரப்புங்க... தம்பி தூக்கி அடுக்குங்க..."
ஆளாளுக்கு வேலை பார்க்க மழையிலும் வேலை வேகமாக நடந்தது.
"என்ன எழவு சனியனோ தெரியலை... வருசா வருசம் கண்மாய் வெட்டுறமுன்னு இந்தக் கடைசியில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் ஒரே வழியா வழிச்சு... அதை அளந்து காசு பாக்குறாங்க... நல்லா வெட்டி கரையில அள்ளிப் போட்டு கரைய உயர்த்துனாத்தானே உடைக்காது... நாமளும் இந்த மழையில நனைஞ்சுக்கிட்டு மண்ணு வெட்ட வேண்டியதில்லையில்ல..."
"ஆமா வருசா வருசம் வழிச்சே கண்மாய் தாழ்ந்து வயல் உயர்ந்து போச்சு. இதுல நல்லா வெட்டவேற வேணுமாக்கும்... எதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க..."
ஒரு வழியாக அடைத்துவிட்டு வீடு திரும்பினர். அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர்.
மாணிக்கம் மழையில் நனைந்து வந்திருந்ததால் ஆத்திரமான ராமாயி "இப்புடி நனஞ்சு வந்திருக்கீகளே நாளக்கி காச்சல்ன்னு படுத்தா யார் பாக்குறது. ஆடு மாடுகதான் மனுசளை பாடாப்படுத்துதுகன்னா எல்லாந்தெரிஞ்சவுகளும் படுத்துறாக... போகயிலயே தலதலயா அடிச்சுக்கிட்டேன்... ம்... கேக்கமாட்டாங்களே... எம் பேச்சைக் கேட்டிருந்த எ இந்த தலயெழுத்து..." என்று ராமாயி அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்க, அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.
ராமாயி வாய் முகூர்த்தமோ என்னவோ காலையில் எழ முடியவில்லை இருமல்... தும்மல்... காய்ச்சல் என எல்லாம் ஒன்றாய் அவரைப் படுக்கையில் தள்ளியது...
அவரது நிலை கண்ட ராமாயி, "எனக்குன்னு வந்து வாய்க்கிதுக பாரு... நல்லா... வந்ததும் அப்படித்தான் இருக்கு... பெத்ததுகளும் அப்படித்தான் இருக்கு... இந்தா மழ விட்ட மாதிரி இருக்கு... மாடுகளை கொண்டு போய குளுப்பாட்டி கொள்ளைப்பக்கம் அவுத்து விட்டுட்டு வரலாம்... ரெண்டு நாளா கட்டுத்தொறையிலயே கிடக்குது... அதுகளும் காலாற பொயிட்டு வந்தா அதுகளுக்கும் நல்லாயிருக்கும் கட்டுத்தொறையும் கொஞ்சங் காயும்... ஆரு கொண்டு போறது... இவுகதான் சாஞ்சுட்டாகளே... ஊர் வேல பாக்க ஆள் இருக்கும்... உள்ள வேல பார்க்கத்தான் ஆள் இருக்காது... நான் என்ன சொன்னாலும் கேக்கிறதில்லங்கிறது இன்னக்கி நேத்தா நடக்குது.... முப்பது வருசமாவுல்ல நடக்குது... யாராவது மட எடுத்துக்கிச்சுன்னு சொல்லட்டும் காச்சலாவது தலவலியாவது மொத ஆளா நிப்பாக..."
அவள் பாட்டுக்கு கத்த, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்ட மாணிக்கம், 'இது பிறவிக்குணம்... சவக்காரம் போட்டுக் கழுவினாலும் மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் போகாது... ' என்று நினைத்துக் கொண்டார்.
-மீள் பதிவு
(சிறுகதைகள் வலைப்பூவில் எழுதியது)
-'பரிவை' சே.குமார்
சிறுகதைகள் தளத்திலும் வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான சிறுகதை. கூடவே பிறவிக்குணம் யாருக்கு என்ற கேள்வியும் எழுகிறது :-)
ஃஃஃஃஎதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க.ஃஃஃஃ
பதிலளிநீக்குவீட்டுக்கு வீடு மட்டும் ஒரே வாசல் படியல்ல நாட்டுக்கு நாடும் அதே கதைதான்