வியாழன், 27 ஜூன், 2013

மறக்கவே நினைக்கிறேன் - மாரி செல்வராஜ்

‘தூத்துக்குடி ஜில்லாவுல 
திருவைகுண்டம் தாலுகாவாம் 
புளியங்குளம் கிராமத்திலே... 
புள்ளி மானாய்த் துள்ளி ஆட 
நாங்கள் புறப்பட்டு வந்தோமையா!’

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவ்வளவு கூட்டம் அப்படி ஓர் ஆரவாரமாகக் கூடியிருக்கும் போது, மேளக்காரர்கள் தங்கள் தவில்களைச் சின்னக் குச்சிகளால் தட்டிக் கூட்டத்தைக் கிளர்ச்சியடையச் செய்துகொண்டிருந்தபோது, அவர்கள் ஒரு பெரிய மஞ்சள் கலர் பட்டுப் பாவாடையை எனக்குக் கட்டிவிட்டார்கள். அதன் பின் ராணி அக்காவின் ஜாக்கெட்டைப் போட்டுவிட்டார்கள். அதற்குள் இரண்டு பெரிய தேங்காய் சிரட்டைகளை அவர்களாகவே திணித்தார்கள். அதன் பின் கூட்டத்தில் முதல் வரிசையில் உட்காந்திருந்த பெண் குழந்தைகளிடம் வாங்கிய பாசிமணிகளை என் கழுத்தில் அணிவித்தார்கள். மேலும் ஒரு சிவப்பு கலர் தாவணியை எங்கிருந்தோ வாங்கி வந்து, என் உடலைச் சுற்றிச் சொருகினார்கள். பட்டறைப் பாட்டியிடம் வாங்கிய கொண்டையை ஜெகன் அண்ணன் என் தலையில் வைத்துக் கட்டி, முடியைப் பறக்க அவிழ்த்துவிட்டான். முத்து ஓடிப்போய் யாரிடமோ வளையல்களை வாங்கி வந்து அணிவித்தான். கடைசி நேரத்தில் ஊத்திக் கூடுகளைக்கொண்டு கட்டப்பட்ட சலங்கையை என் இரு காலிலும் கட்டிவிட்டார்கள். கொஞ்சம் அசைத்தால் சத்தம் நிஜமான சலங்கையை மிஞ்சிவிடும். எல்லாரும் அப்படியே சுற்றி நின்று ஒரு முறை எல்லாவற்றையும் சரிபார்த்தார்கள்.


''ஏலேய்... அப்படியே அச்சு அசல் கரிசக்குளத்தா மாரியே இருக்கே! அவ ஆட்டத்தப் பாத்துருக்கலா... அப்படியே ஆடிடு... ஆமா'' என்றான் ஜெகன் அண்ணன். நான் அந்த நொடி அந்தக் கரிசக்குளத்தாவை நினைத்துக்கொண்டேன். கரிசக்குளத்தா நிஜமாக ஒரு பெண் இல்லை. பெண் வேடமிட்டு ஆண்களோடு சரிக்குச் சமமாகத் தூசி பறக்கப் பறந்து பறந்து அத்தனை ஆண்களையும் ஆட்டு மந்தைபோல ஆட்டுவித்து ஆடும் ஒரு சம்படி ஆட்டக்கார ஆண்.

சம்படி ஆட்டம் என்பது வெறுமனே ஆண் களால் ஆடப்படும் ஒரு வகை நாட்டுப்புற ஆட்டம். அதில் மூன்று ஆண்கள் பெண்ணாகவும் நான்கு ஆண்கள் ஆணாகவும் ஆடுவார்கள். 'ஏல... வரும்போது ஏழு ஆம்பிளதான வந்தா னுவா... இப்போ இந்த மூணு பொம்பளைங்க திடுதிப்புனு எங்கிட்டுருந்தல வந்தாளுவ?’ என்று ஆட்டத்துக்கு அட்வான்ஸ் கொடுத்த பெருசுகளையே குழப்பிவிடும் அளவுக்குப் பெண்ணாக ஆடும் ஆண்கள் நயமாக வேட மிட்டு ஆடுவார்கள். அதில் அன்றைய நாட் களில் சிறுசு முதல் பெருசு வரை கிறுக்குப் பிடிக்கவைத்திருந்தவள்தான் இந்தக் கரிசக் குளத்தா. உட்கார்ந்து, எழுந்து, ஒரு காலைத் தூக்கித் தரையில் நச்சென்று ஓர் அடி அடித்து ஆடும் அவளின் ஆட்டத்துக்கு விசில் பறக்கும். தவில்காரனைப் போட்டிக்கு இழுத்து அவள் போடும் குத்தாட்டம் தவில்காரனைக் கடைசியில் மண்ணைக் கவ்வவைக்கும். ஆடிக்கொண்டு இருக்கும்போதே திடீரென்று மைக்குக்கு முன்னால் நின்றுகொண்டு, ''ஏலேய்... ஏய்... பொம்பளப் பின்னாடி நாக்கத் தொங்கப் போட்டு அலையிற பொறம்போக்கு ஆம்பிளப் பயலுவளா... எல வாங்கல, ஒருத்தன்னாலும் வாங்க... இல்ல ஒம்போது பேருன்னாலும் வாங்கல... எவனுக்கும் இந்தக் கரிசக்குளத்தா அசையவும் மாட்டா, அஞ்சவும்மாட்டா...'' என்று சொல்லி, உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கும்போது பெண் கள் கூட்டத்தில் குலவை தெறிக்கும். அப்படிப்பட்ட கரிசக்குளத்தா வேடத்தைத்தான் எனக்கு இப்போது போட்டிருக் கிறார்கள். கரிசக்குளத்தாவாக மாறியிருந்த என் உடலை, கொஞ்சம் அப்படி இப்படி அசைத்துப் பார்த்தேன். ஊத்திக்கூடுகள் குலுங்க உடல் சிலிர்த்துக் கூச்சலிடுவதைப்போல் இருந்தது எனக்கு.

கடலாடி முத்துவின் மேளம் கடவுள் வாழ்த்தோடு முழங்கத் தொடங்கியது. நாங்கள் அத்தனை பேரும் ஆடுகளத்துக்குச் செல்வதற்கு வசதியாக, கூட்டத்தைப் பிளந்துகொண்டு ஒரு வழி செய்திருந்தார்கள். அந்த வழியாக நாங்கள் வரிசையாக நடந்தோம். பெண் வேடமிட்டவர்கள் மட்டும் முகத்தை மறைத்து முக்காடிட்டிருந்தோம். கூட்டம் எங்கள் கையைப் பிடித்து இழுத்தது. கூட்டம் எங்கள் பாவாடையைப் பிடித்துக் கொண்டு கேலி செய்தது. எங்கிருந்தோ ஓடி வந்த என் அம்மா என் முக்காடை விலக்கி திருஷ்டி முறித்து, முத்தம் கொடுத்து, கொஞ்சம் கனகாம்பரம் பூவையும் தலையில் சூடிவிட்டாள். ஆடு களத்தைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றுக்குள் வந்ததும் கூட்டம் அப்படியே அமர்ந்தது. ஒரிஜினல் சம்படி ஆட்டக்காரர்கள் செய்வதைப்போலவே கூட்டத்தை வணங்கி, ஒவ்வொரு மேளக்காரரையும் தொட்டுக் கும்பிட்டு முக் காட்டை விலக்கிக் கூட்டத்தை ஒரு முறை பார்த்தபோது, உடம்பில் தீப்பற்றிக்கொண்டதைப் போல இருந்தது. இதற்கு முன் சாவு வீடுகளில், பள்ளிக்கூடங்களில் ஆடியிருக்கிறேன் என்றாலும், பெண் வேடமிட்டு இவ்வளவு கூட்டத்தின் முன் வந்து நிற்பது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.

ஆண்களாக வந்தவர்கள் அப்படி இப்படி என்று சும்மா தங்களுக்குத் தெரிந்த ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்க, பெண் வேடமிட்ட நாங்கள் கூச்சப்பட்டு நின்றோம். எல்லாரும் கத்திக் கூச்சலிட்டு எங்களை ஆடச் சொன்னார்கள். எங்கள் முகங்களை மறைத்திருந்த துணிகளைப் பிடுங்கிக்கொண்டார்கள். 'ஏய்யா முத்து... பிள்ளைய வெட்கப்படுதுளா... அந்தச் சித்தாட கட்டிக்கிட்டுச் சிங்காரம் பண்ணிக்கிட்டு பாட்ட வாசி... தன்னால அதுகளுக்கு ஆட்டம் வரும்’ என்று ஒரு பெருசு யோசனை சொல்ல, கடலாடி முத்து வாசிக்க, மேளக்காரர்கள் அடித்து நொறுக்க, ஆளாளுக்கு விறுவிறுவென ஆடத் தொடங்கினார்கள். மேளம் அத்தனை ஆவேசமாக முழங்க முழங்க... என் நாடி நரம்பு கள் முறுக்கேறுவது எனக்கே தெரிந்தது. என் கால்கள் தானாகவே ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரனின் ஆட்ட நுணுக்கத்தில் சுழன் றன. மேளம் சூடுபிடிக்கப் பிடிக்க... என் ஆட்டத் தில் வெறி பிடித்ததை என்னாலேயே உணர முடிந்தது. ஆனால், நான் அந்தக் கரிசக்குளத் தாவைப் போல ஆடவில்லை. யாரோ போல ஆடினேன். அந்த 'யாரோ’, ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரன் என்பது மட்டும் நிச்சயம் என்பதைக் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு உணர்த் தியது. என்னால் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு வேகத்துடன், விசையுடன் ஆடினேன். தானாகவே பாவாடையை இடுப்பில் எடுத்துச் சொருகிக்கொண்டு, குனிந்து நிமிர்ந்து குலுக்கி ஆடினேன். ஒரு புள்ளியில் மேளமும் நாகஸ்வரமும் உச்சத்தில் இருந்தபோது ஓடிச் சென்று அமர்ந்து, நான் காலைத் தூக்கித் தரையில் நச்சென்று ஊன்றி அப்படியே    உடலைத் திருப்பி ஒரு வட்டம் போட்டு, நிமிர்ந்து நெளிந்து ஆடியபோது கூட்டம் வாய் பிளந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. என் காலில் கட்டியிருந்த ஊத்திக் கூடுகள் அடித்து ஆடியதில் சிதறித் தெறிக்க, கூட்டம் கூடிக் குவிந்து குலவையிட... மேளக்காரர்கள் அடித்து ஓய்ந்தார்கள். இப்போது ஒரு கூட்டம் ஓடி வந்து என்னை அள்ளிக்கொண்டது!

''எம்மா... பாப்பா மவன் எப்படி ஆடிட்டான் பாரு! அப்படியே கரிசக்குளத்தாவைக் கொன்னுப் புட்டான் ஆட்டத்துல!' என்று ஆளுக்காள் கூச்சலிடும்போதுதான் கூட்டத்தில் அதுவரை எனக்குத் தெரியாத ஓர் உண்மையை யாரோ ஒருவர் சொல்லக் கேட்டேன். 'அப்பன் செல்வராசு ஆடுன ஆட்டத்த, அவன் மவன் அப்டியே வாங்கி ஆடிப்புட்டானே! சும்மாவா சொன்னா னுவா 'கை எடுக்க எடுக்கக் களையும் வளரும்... கால் எடுக்க எடுக்கக் கலையும் வளரும்னு’ என்று யாரோ சொன்னபோதுதான் எனக்குத் தெரிந்தது என் ஆட்டத்தில் தெரிந்த அந்த 'யாரோ’ ஒரு சம்படி ஆட்டக்காரனின் நேர்த்தி, என் அப்பாவுடையது என்று! ஆம்... என் அப்பா ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரர்.
அன்று இரவே ஊத்திக்கூடுகள் குத்திக் கிழித்த என் கால்களைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு மருந்திட்ட அப்பாவிடம் கேட்டேன். ''நீங்க நிஜமாவே ஒரு சம்படி ஆட்டக்காரராப்பா?'' அதற்கு அப்பா மிச்சம்கிடந்த ஊத்திக் கூடுகளை எடுத்துக் கையில்வைத்து, ஒரு குலுக்குக் குலுக்கி, ''ஆமா... எல்லாருக்கும் பிடிச்ச ஒரு நல்ல சம்படி ஆட்டக்காரன்!'' என்று சொல்லிவிட்டு, அந்த ஊத்திக் கூடுகளைத் தன் காலில் கொஞ்ச நேரம் கட்டிக்கொண்டு அப்படி இப்படி கொஞ்ச நேரம் அசைத்துப் பார்த்தார். அப்புறம் அப்படியே எழுந்து உறங்குவதற்காகச் சென்றுவிட்டார். அதன் பிறகு, அப்பாவிடம் எதையும் நான் கேட்கவில்லை. அவரால் அதைச் சொல்ல முடியுமெனில் நான் கேட்காமலேயே சொல்லியிருப்பார். அப்பாவோடு சேர்ந்து சம்படி ஆட்டம் ஆடிய சுப்பு சித்தப்பா, பெருமாள் பெரியப்பா, ஆறுமுகம் மாமா போன்றவர்களைத் தேடிப் பிடித்துக் கேட்டேன்.

ஊரே பசியும் பட்டினியுமாகப் பஞ்சத்தில்கிடந்த காலமாம் அது. சாப்பாட்டுக்கு அரிசி இல்லாமல் குளத்தின் அடியில் இருக்கும் தாமரைக் கிழங்குகளைப் பிடுங்கி, அதற்கு உள்ளே சிவப்பு நிறத்தில் அரிசி போலிருக்கும் விதைகளை எடுத்துச் சோறாக்கித்தான் சாப்பிடுவார்களாம். ஒருநாள் வெளியூரில் போய் யாருடனோ கூத்தாடிவிட்டு வந்த ஆறுமுகம் மாமா ஒரு பை நிறைய அரிசியோடு வந்திருக்கிறார். அவர் கொண்டுவந்த ஒரு பை அரிசிதான், அப்பாவை, சுப்பு சித்தப்பாவை, பெருமாள் பெரியப்பாவை எல்லாரையும் சம்படி ஆட அழைத்துப்போயிருக்கிறது. பெருமாள் பெரியப்பாவும், சுப்பு சித்தப்பாவும் கொஞ்சம் பரவாயில் லாத நிறத்தில் இருந்ததால், அவர்களுக்குப் பெண் வேடம் கொடுத்திருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல், 'மூணு செவத்த பொம்பளைக்கு மத்தியில ஒரு கறுத்த பொம்பள கண்டிப்பா வேணும்’ என்று நல்ல கறுப்பான அப்பாவுக்கும் பெண் வேடமே கிடைத்திருக்கிறது. பெண் வேடம்தான் இனி என முடிவான அன்றே அப்பா மீசையை மழித்துவிட்டார். அதோடு, தன் தலைமுடியைப் பெண்களைப் போலச் சுருட்டிக் கொண்டை போடும் அளவுக்கு வளர்த்திருக்கிறார்.

''ஏல... என்ன அந்தக் கருவாச்சி இன்னைக்கு வரல போலிருக்கு?''     

''அட, குருட்டுப் பயலே... நல்லா பாரு அந்தா மேளக்காரனுக்கு அந்தப் பக்கம் இடுப்ப ஆட்டிக்கிட்டு நிக்கா பாரு நம்ம கருவாச்சி!''

இப்படி அப்பா ஆடப்போகிற ஊர்களில் அப்பாவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது. என்னதான் அரிசிக்காகவும் கேப்பைக்காகவும் ஆடினாலும் சலங்கையைக் கட்டிக்கொண்டு துள்ளிக் குதித்து ஆடஆட, அண்ணன், தம்பிகளுக்கு அந்த ஆட்டம் அவ்வளவு பிடித்துப்போய்விட்டதாம். இப்படியாக இனி கொட்டோ கொட்டென மழை கொட்டித் தீர்த்தாலும், பரணி வெள்ளம் புரண்டு ஓடினாலும், காடு கரை எல்லாம் பச்சச் சேலை கட்டி, வா... வா... என்று ஆடினாலும், அணைத்துவிட முடியாத ஒரு பெரும் தீ வீட்டு அடுப்பில் எரிந்து, பாயாசமாகச் சோறு கொதித்தாலும்... இனி சம்படி ஆட்டம்தான் என முடிவுசெய்து சந்தோஷமாக ஆடி வந்திருக்கிறார்கள்.

அப்படியான சூழலில் ஓர் ஊரில் அப்பா, சித்தப்பா எல்லாரும் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். நல்ல கூட்டம் இருந்திருக்கிறது. அதனால் ஆர்ப்பரிப்பும் விசில் சத்தமும் அன்றைக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருந்த தாம். அப்பா, சுப்பு சித்தப்பா, பெரியப்பா எல்லாரும் தங்களை மறந்து ஆடியிருக்கிறார்கள். அப்பா ஒரு பெண் மானைப் போலத் துள்ளிக் குதித்து ஆடியிருக்கிறார். அப்படி ஆடும்போது, அப்பாவின் கால் திடீரென்று சுளுக்கியிருக்கிறது. அதனால், அப்பாவைக் கூட்டத்தில் ஒரு ஓரமாக உட்காரவைத்துவிட்டு ஆட்டம் நிற்காமல் நடந்துகொண்டிருந்திருக்கிறது. எல்லாரும் ஆட்டத்தையே வேடிக்கை பார்க்க, மூன்று உள்ளூர் இளைஞர்கள் ஆள் இல்லாத இருட்டுக்குள் அப்பாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அப்பா எவ்வளவோ கத்திக் கூச்சல் போட்டும் யாருக்கும் கேட்காததால், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அப்பா தன் பாவாடையை மடித்துக் கட்டிக்கொண்டு, கீழே கிடந்த பெரிய கம்பை எடுத்து அந்த மூன்று பேரையும் வெறி பிடித்த மாதிரி அடித்திருக்கிறார். அடி தாங்க முடியாமல் அந்த மூன்று பேரும் அலறி அடித்து ஓடிவந்ததைப் பார்த்ததும் கூட்டத்துக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அந்த மூன்று இளைஞர்களையும் பிடித்துக்கொண்டு வந்து ஆட்டம் நடந்த மைதானத்தில் முட்டி போடவைத்திருக்கிறார்கள் ஊர் மக்கள்.

''ஏம்மா... பயலுவ நீ பொம்பளனு நினைச்சிட்டானுவோ போலிருக்கு. வாம்மா... இப்படி வந்து அத்தனையும் கழட்டிக் காட்டும்மா. அந்தப் பயலுவலுக்கு மூளை தெளியட்டும்!'' என்று மொத்த ஊருக்கும் முன்னால் அப்பாவிடம் பெண் வேஷத்தைக் கலைக்கச் சொல்லியிருக் கிறார்கள். அப்பா நடுநடுங்கிக்கொண்டே கூச்சத்துடன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழட்டக் கழட்ட... ஊர் கைத் தட்டி யிருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு அப்பா தன் உடலுக்குள் கையைவிட்டு இருதயம், நுரையீரல் என ஒவ்வொன்றாக எடுத்து அனைவர் முன்னும் பாவமாக வைப்பதுபோல இருந்ததாம். அனைத்து ஆடைகளையும் அவிழ்த்த பிறகு, 'எதற்கும்’ பயன்படாத ஒரு திடகாத்திரமான கறுத்த ஆண் அப்பாவிடமிருந்து வெளிப்பட்டதைப் பார்த்து, 'இங்க பாருடி... இந்தக் கருவாச்சி எப்படிப்பட்ட ஆம்பிளையா இருக்கான்னு’ என்று மொத்த ஊரும் வாயைப் பிளந்து நின்றிருந்திருக்கிறது. ஆனால், அப்பாவோ தோலை உரித்த கோழி யாட்டம் கூனிக் குறுகி உடல் நடுங்க நின்றிருந் தாராம்.

''அதான்... அத்தனையையும் ஊருக்கு மத்தியில அவுத்து, 'நான் பொம்பள இல்ல... ஆம்பிள’னு அப்பட்டமாக் காமிச்சிட்டியே, அப்புறம் எப்படி நீ இன்னும் பொம்பளையா ஆட முடியும்!'' என்று அதன் பிறகு அப்பாவைப் பெண்ணாக ஆட யாரும் அனுமதிக்கவில்லையாம். ஆணாக சும்மா துணைக்கு அவ்வப்போது ஆடச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அப்படி ஆடிக்கொண்டிருக்கும்போது ஒருநாள், 'ஏலே... அங்க பாருல கருவாச்சி எப்படிக் கருவாயனா மாறிட்டான்னு!’ என்று சில இளவட்டங்கள் கேலி பேசியிருக்கிறார்கள். அவ்வளவுதான். அப்பா எப்போதும் ஆடிக்கொண்டிருந்த, ஆடத் துடித்த, ஆட அழைத்த, ஆடக் கெஞ்சிய, தன் கால்களை வலுக்கட்டாயமாக அதட்டி, மடக்கி, ஒடுக்கி வெறுமனே நடக்கும், ஓடும், நிற்கும், நீட்டும் கால்களாக மட்டும் மாற்றிக்கொண்டாராம்.

இப்போதும் சொல்கிறேன்... எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எத்தனையோ சாவு வீடு களில், பள்ளியில், பொங்கல் விழாக்களில், கட்சிக் கூட்டங்களில், கல்லூரி கலாசார விழாக் களில், கடைசியாக சென்னை ஸ்டார் ராக் பப் என எல்லா இடத்திலும் என் அப்பாவைப் போலவே, ஒரு துளி சாராயம் கலக்காமல் வியர்வை சிந்த நான் ஆடிய ஆட்டம் அத்தனையும் என் அப்பா அடக்கி, ஒடுக்கி, ஆடாமல்வைத்திருந்த சம்படி ஆட்டம்தான்.

ஏனெனில், நான் ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரனின் மகன். ஒரு நேர்த்தியான சம்படி ஆட்டக்காரன்!

படம் : ஸ்யாம்
நன்றி : ஆனந்த விகடன்

-'பரிவை' சே.குமார்

3 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே, போட்டியில் நீங்களும் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி, உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் செய்தால் FAILURE NOTIFICATION வருகிறது, bsrinivasanmca@gmail.com என்ற எனது முகவரிக்கு மெயில் அனுப்ப முடியுமா நன்றி....

    பதிலளிநீக்கு
  2. விகடனிலும் வாசித்திருந்தேன். அருமையான, மனதைத்தொடும் தொடர்..

    பதிலளிநீக்கு
  3. மனதை நெகிழ வைத்தது

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி