மனசின் முதல் தொடர்கதை
கலையாத கனவுகள் தொடர்கதை 1-ம் பாகம் படிக்க... இங்கே சொடுக்கவும்...
கலையாத கனவுகள் தொடர்கதை 2-ம் பாகம் படிக்க... இங்கே சொடுக்கவும்...
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் "ஐந்து ஐந்து ஐந்து' என்ற தலைப்பில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் சசி. "பூ' படம் மூலம் எதார்த்தம் காட்டியவர் இவர். அவர் மனம் திறக்கிறார். ""ஆண்டுக்கு ஒரு படம் கொடுக்கும் திறமை நிச்சயமாக என்னிடம் இல்லை. இதை என் இயலாமை என்று எடுத்துக்கொண்டாலும் கவலை இல்லை'' என்று சிரிக்கிறார் சசி. ""இது எனக்கு சினிமாவில் 15-வது வருஷம். இதுவரை 5 படங்கள்தான் இயக்கியிருக்கிறேன். அடுத்த வருஷத்துக்கு என் படம் வெளிவர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. ஒரு கதை என் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புரட்டிப் போட வேண்டும். தூக்கம் கலைத்து உலுக்க வேண்டும். அப்போதுதான் அந்த கதைக்குள் இறங்குவேன்'' என்னும் சசி, நம்மிடம் மனம் திறந்து பேசியதிலிருந்து...
சினிமாவில் எனக்கென எந்த இலக்கும் கிடையாது. எனக்காக எந்த ஹீரோவும் காத்திருக்கவில்லை. ""இப்படி ஒரு கதை இருக்கு, வர்றீங்களா...''ன்னு நான் போய் யாரிடமும் கேட்கவும் மாட்டேன். இது உதாசீனம் கிடையாது. என் அகம்பாவமும் இதில் இல்லை. நான் தனியன். எனக்கான எல்லை இது. எனக்கு எந்த கதை பிடிக்கிறதோ, அதைத்தான் ரசிகனுக்கு தர முயற்சிப்பேன். தரமான படத்தைத்தான் தருவேனே தவிர, தவறான படங்களைக் கொடுக்கமாட்டேன். பத்து ஆண்டுகள் கழித்து என் படங்களை பார்த்து நானே முகம் சுழிக்க கூடாது. என் பேரனும் அந்த இடத்தில் இருக்க வேண்டும். கொண்டாட்டமோ, கவலையோ எதுவாக இருந்தாலும், அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அதற்காக எனக்கு நானே போட்டுக் கொண்ட கோடுதான் இந்த இடைவெளி.
"ஐந்து ஐந்து ஐந்து' தலைப்பே வித்தியாசம் காட்டுகிறதே...?
செல்போன் நம்பரின் கடைசி மூன்று நம்பரா...? பேங்க் லாக்கர் நம்பரா...? ஹீரோவின் டூவிலர் நம்பரா...ன்னு என்னை கேள்விகள் துரத்தி வருகிறது. இது பார்க்க வெறும் நம்பராகத் தெரியும். ஆனால் அதற்குள்தான் கதை ஒளிந்திருக்கிறது. சாஃப்ட்வேர் இன்ஜினியர் எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை பார்த்து செட்டில் ஆகிவிடவேண்டும் என்கிற கனவு இருக்கும். அப்படி கனவு வளர்த்த இளைஞனுக்கு விபத்து. அவன் எதிர்காலம் சிதைகிறது. அந்த கனவு இலக்கை அடைந்தானா என்பதுதான் படம். பரத் இதற்கு பக்க பலம். இதுவரை அவர் மீதிருந்த கணிப்புகளை இது மாற்றி வைக்கும். நிச்சயம் பரத்துக்கு இது வேறு முகம். சந்தானத்தை வெறும் காமெடியனாக பார்த்து கடந்து போக முடியாது. ம்ரித்திகா, எரிக்கா பெர்னாண்ட்ஸ் என இரண்டு அழகு பதுமைகள் கவர்ச்சிக்கும், பாடல்களுக்கும் கூடுதல் ப்ளஸ்.
இது தமிழ் சினிமா பார்த்த வழக்கமான கதைகளில் ஒன்றுதானே... இருந்தும் ஏன் ஐந்து ஆண்டு இடைவெளி...?
"டார்லிங் டார்லிங்' படம் பார்த்துவிட்டு ""எப்படிய்யா சூப்பரா ஒரு கதை பிடிச்ச...''ன்னு கேட்டாராம் பாரதிராஜா. ""சார் இது உங்க "16 வயதினிலே' படம்தான். சின்ன உல்டாக்கள் செஞ்சேன்''னு சொன்னாராம் பாக்யராஜ். தகுதி இல்லாத ஒருவன் தகுதிக்கு மீறிய பெண் மீது ஆசைப்படுவான். அந்த காதல் என்ன ஆனது இதுதான் இந்த இரண்டு படங்களின் கதையும். கொடுக்கிற விதம்தான் மாறியிருக்கும். நான் கொடுக்க வருவதும் அப்படித்தான். கமர்ஷியல் சினிமாதான் இது. இதுவரை எனக்கு பரிச்சயம் இல்லாத களம். ஆனால் சிரமம் ஏற்று உழைத்திருக்கிறேன். ஹீரோயிஸத்துக்குத்தான் கதையில் முக்கிய இடம். ஆனால் அந்த ஹீரோயிஸத்தை புரிந்துக் கொள்ளவே எனக்கு ஓராண்டு தேவைப்பட்டது. ஒரு ஒப்பனிங் சாங். அந்த ஊரையே காப்பாற்றும் ஹீரோன்னு தமிழ் சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஹிட் படங்களை நான் ஒன்று கூட பார்த்தது இல்லை. ஆனால் எப்படி ஆக்ஷன் கதை கொடுத்தாலும் மனசை தொடுகிற சில விஷயங்கள் இருந்தால்தான் அது ஜெயிக்கும். அந்த ஃபார்முலாவைத்தான் இதில் வைத்திருக்கிறேன். "டைட்டானிக்' படமும் வில்லன் இருக்கிற காதல் படம்தான். அதற்குள் இருந்த அழகான காதல்தான் அந்த படத்தை கடலின் ஆழத்திலிருந்து மேலே தூக்கி வந்தது.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கலரில் கொடுப்பீங்க... ஆனால் "பூ' தந்த அனுபவம்தான், கமர்ஷியல் பாதைக்கு உங்களை திருப்பியதா...?
"பூ' இப்போது உள்ள சூழ்நிலையிலும் ஓடாது. ஒரு வேளை 25 வருஷங்களுக்கு பின்னால் வந்தால் ஓடுமா என்பதும் சந்தேகம்தான். இதுதான் உண்மை. கல்யாணத்துக்குப் பிறகும் காதலன் மேலே அன்புடன், கணவன் மேலே பாசமாக வாழ்ந்த மாரி என்கிற ஒரு பெண்ணின் வாழ்க்கைதான் "பூ'. ஆனால் அந்த மாரியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெரிய அளவில் அந்த படம் மீது நம்பிக்கை இருந்தது. மக்கள் மீது ஆழமான நம்பிக்கை இருந்தது. ஆனால் கல்யாணமான ஒருத்தி எப்படி பழைய காதலை நினைச்சுப் பார்க்கலாம்?ன்னு கேள்வி கேட்டாங்க. அங்கேதான் எனக்கு எதுவும் புரியவில்லை. சினிமா என்பது வியாபாரம் சார்ந்த கலை என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. பாலாஜி சக்திவேலாக இருந்தாலும், வசந்தபாலனாக இருந்தாலும் இதற்குள்தான் வேலை பார்க்கவேண்டும். பாலாஜி சக்திவேல் பேசும் போது கூட ""மச்சான் இந்தக் காட்சியெல்லாம் கமர்ஷியலாக இருக்குடா...''ன்னு சொல்றான். அப்படித்தான் இங்கே சினிமா பண்ண முடியும்.
அப்ப சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்...?
சமுதாயம் மாதிரி... அரசியல் மாதிரி... இந்த மக்கள் மாதிரிதான் சினிமாவும் இருக்கும். மக்கள் எப்படியோ அரசனும் அப்படியே என்று சொல்லுவார்களே அதுபோல்தான். ஒரு தலைவனை போல் கலைஞனுக்கும் பங்கு இருக்கிறது. மக்கள் விரும்பும் ஆட்சி போல, மக்களுக்கு பிடிக்கிற சினிமாக்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. இன்றைக்கு ஒரு தலைவன் போடுகிற திட்டம், 50 வருஷங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட பலனை கொடுக்கும் என்று பார்க்கும் மக்கள் இங்கு குறைவு. அது போல்தான் சினிமாவும் இருக்கிறது. சில நல்ல படங்கள் வந்ததே தெரியாமல் போய் விடுகிறது. இந்த மாற்றங்களைப் புதிதாக வருகிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளாதவர்களுக்கு எப்போதுமே தடுமாற்றம்தான். அதற்காக "ஹாரிபாட்டர்' மாதிரியான கதைகளை இங்கு எடுத்துக் கொண்டிருக்க முடியாது. இங்கு எது எதார்த்தம் என்று புரிந்துக் கொள்வதில் பிரச்னை இருக்கிறது. எதைக் காட்டினாலும் அதன் ஒரிஜினல் முகத்தை காட்ட வேண்டும். ஈரான் படமான "தி செபரேஷன்' பார்த்தால், நம்மூர் இயக்குநர்கள் மீது கோபம் வரலாம். மக்களின் வாழ்க்கையை, போராட்டங்களைக் காட்டுகிற படங்கள் ஒரு போதும் தோற்காது என்கிற நிலைமை வர வேண்டும். அப்போதுதான் எதிர்காலம் பற்றி பேச முடியும்.
நன்றி : தினமணி
-'பரிவை' சே.குமார்
மண்டையில சரக்கு இல்லாமலும் நிறையபேர் ஓடி இருக்கிறார்கள் இல்லையா...?
பதிலளிநீக்கு