வெள்ளி, 15 மார்ச், 2013

பாரதி நட்புக்காக வழக்காடு மன்றம் பகுதி-II


முதல் பகுதி....

.................... 'ஆசை முகம் மறந்து போச்சா' என்று நடனமாடினார்கள் என்றால் 'ஆசைமுகம் மறக்கலையே' என்றபடி தனது உரையை தொடங்கிய நாஞ்சிலார், பாரதி நட்புக்காக அமைப்பினருக்கு நன்றி தெரிவித்து தனது இலக்கியப் பேச்சை மெதுவாக ஆரம்பித்து மெல்ல மெல்ல வேகமெடுத்து மேடைகளில் முழங்கும் வேகத்துடன் பாரதியின் பாடல்களை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி... உச்சஸ்தாயியில் கர்ஜித்து தான் ஒரு சிறந்த பேச்சாளன் என்பதை சொல்லாமல் சொல்லி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார்........................ 

முதல் பகுதி படிக்காதவர்கள் தொடர்ந்து முதல் பகுதி படிக்க.... 

இங்கே சொடுக்கவும்.

************************

படித்தவர்கள் கீழே தொடர்க....  இரண்டாம் பகுதி....

விழா முடிந்ததும் எழுத நினைத்து அலுவலக வேலை கொடுத்த அசதியில் நாளை எழுதுவோம்... என்ற நினைப்பே நீண்ட நாள் இழுத்துவிட்டது. முதல் பகிர்வாக நடுவர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களின் உரையை தொகுத்து கொடுத்துவிட்டு அடுத்த பதிவை அப்போதே எழுதியிருந்தால் என்னால் ஓரளவுக்கு நிகழ்ச்சியின் தொகுப்பை உங்களுக்குத் தந்திருக்க முடியும் ஆனால் சோர்வே வெற்றி பெற்றதால் என்ன பேசினார்கள்... எப்படி பேசினார்கள் என்பதெல்லாம் மறந்துவிட்டது. இருந்தும் பேராசிரியர் கணேசன் மற்றும் பேராசிரியர் முகமது ரபீக் அவர்கள் பேசியதில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

விழா தாமதமாக தொடங்கியது  என்று முதல் பகிர்வில் சொல்லியிருந்தேன். அதனால் இரண்டு வழக்குகள் மட்டுமே தொடுத்தார்கள். நடுவர் அவர்கள் பேசியதும் திரு.ரபீக் அவர்கள் வழக்குகளை தொடுக்க  திரு.கணேசன் அவர்கள் மறுத்துப் பேசினார். 

(பேராசிரியர். கணேசன் - திரு. நாஞ்சில் சம்பத் - பேராசிரியர். முகம்மது ரபீக்)

முதலில் ரபீக் அவர்கள் பேசியவற்றில் என் ஞாபகத்தில் உள்ளவை சிலவற்றை பகிர்கிறேன்.

"திருக்குறள்ல மூன்று பால் என்பது நமக்கெல்லாம் தெரியும். ஆனா என்னோட மாணவன் என்ன சொல்றான் தெரியுமா... திருக்குறள்ல நாலு பாலாம்... அதாவது அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால்... அப்படின்னு சொல்லி கடைசியா அமலாபால் அப்படிங்கிறான்"

"பாரதி அப்படி சொன்னார்... இப்படிச் சொன்னாருன்னு ஐயா பேசினார்... நாம பாரதியைப் பற்றி பேசவரவில்லை.. இன்றைய வாழ்க்கை முறை பற்றிதான் பேச வந்திருக்கிறோம்... பாரதி வீட்ல சாப்பாட்டுக்கே இல்லாதப்போ இருந்த அரிசியை எல்லாம்  காக்கை  குருவிக்கு போட்டார்... இன்னைக்கு சைதாப்பேட்டை சிக்னலுக்கிட்ட உக்காந்து காக்கை குருவி எங்கசாதியின்னு வீட்ல இருந்து அரிசியை எடுத்து வந்து போட்டுப் பாருங்களேன்.... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்..."

"இப்பத்தான் கரெண்ட் எப்போ வரும் எப்போ போகுமின்னே தெரியாதுல்ல... அப்படி கரெண்ட் போன ஒரு நாள் என் மனைவியை கொசு ஒண்ணு கடிக்க... அவள் அதை அடிக்கப் போனா... அடிக்காதே... உன்னைக் கடித்த கொசு என்னையும் கடித்து நமக்குள் ரத்தப் பரிமாற்றம் செய்து உறவை பலப்படுத்துகிறது என்றேன்... இந்த கிறுக்குத்தனமான பேச்சை எல்லாம் கல்லூரியோடு விட்டு விட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டாள்."

"இன்னைக்கு வயதானவர்களை யாரும் மதிப்பதில்லை... உறவு முறைக்குள் விரிசல் வரவில்லை என்றால் முதியோர் இல்லங்களே இல்லாமல் இருக்கும்."

"நாம பீச்சுக்கு எதுக்குப் போவோம்... ஆனா இன்னைக்கு மெரினா பீச் போயிப் பாருங்க... அங்கதான் காதலர்கள் என்ன என்ன அசிங்கம் பண்ணனுமோ அம்புட்டும் பண்ணுறாங்க" என இன்னும் நிறைய பேசினார்.

இவரது வாதத்தை மறுத்துப் பேசிய திரு. கணேசன் அவர்கள் பாரதியின் பாடலோடு தனது உரையை ஆரம்பித்தார்.

"பையன் அமலா பால்ன்னு சொன்னானாம்... அவரைப் பாருங்க தமிழ் வாத்தியார் மாதிரியா இருக்கார்... இவருக்கிட்ட படிக்கிற பையன் அப்புறம் எப்படியிருப்பான்..."

"என் தம்பி மகன் எங்கிட்டே ஐஸ்கிரீம் கேட்டான்... வாங்கிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக உனக்கு காய்ச்சலா இருக்கு... இப்ப சாப்பிடக்கூடாது என்று சொல்லி தடுத்துவிட்டேன். மறுநாள் காரில் போகும் போது, பெரிப்பா... வண்டிய நிறுத்துன்னு சொன்னான். ஏண்டான்னு கேட்டா, எனக்கு காய்ச்சல் இருக்கான்னு தொட்டுப்பாரு அப்படின்னான்.. நானும் பார்த்துட்டு இப்ப இல்லடா என்றேன்.. அப்ப எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு.. என்றான். அவன் நிறுத்திய இடம் ஐஸ்கிரீம் கடை... இதுலதாய்யா சந்தோஷமே இருக்கு..."

"பொண்டாட்டிக்கிட்ட போயி என்ன பாட்டுப் பாடணுமோ அதைப் பாடணும் அதைவிட்டுட்டு கொசுவை அடிக்காதே என்றால் அப்புறம் அது யாரை அடிக்கும்..."

"என் வீட்டில் என் மனைவி கேட்ட எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்... நான் ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன்..."

(விழா அரங்கில் பாரதி நட்புக்காக அமைப்பினரும் பார்வையாளர்களும்)

"முதியோர் இல்லம் வேண்டாம் என்கிறார்.... இப்ப மூணு வயசுலயே பயலை அடிச்சு பள்ளிக்கூடத்துல விட்டுடுறோம்... அவன் அப்பவே முடிவு பண்ணிடுறான்.... என்னையவா ஸ்கூல்ல விடுறேன்னு நமக்கு வயசான நாமளும் சின்னப் பிள்ளைதான் அதான் நம்மளை முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்க்கிறான்..."

"என்னவளே அடி என்னவளே... என்ன ஒரு அருமையான பாடல்" என்று சொல்லி அதை ராகத்தோடு படித்து "பீச்சுல காதலர்கள் பற்றி சொன்னார்... இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணனும்ன்னு தோணுதய்யா.." என்றதும் நடுவர் 60 வயசுல ஒருத்தர் கல்யாணம் பண்ணியிருக்காராம்... நீங்களும் ட்ரைப் பண்ணிப் பாருங்க என்றார்.

உங்களால்தான் உங்களைத் தாங்கும் ஔவை பெரிய நிலைக்குப் போக வேண்டும் என நடுவரைப் பார்த்து சொன்னதும் அவர் சிரிக்க நான் அவ்வையை சொன்னேன் என்றார்.

கடைசியில் இவர்களது வாதங்களை வைத்து தனது கருத்தை சொல்ல வந்த நடுவர் அவர்கள் சி.ஏ தேர்வில் முதலிடம் பெற்ற பாண்டிச்சேரி பெண், கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண், சிங்கப்பூர் செல்லும் போது விமானத்தில் அருகில் அமர்ந்து பயணம் செய்த கிளி சோசியக்காரர், மகன் கேமரா கேட்டது அதை பஹ்ரைனில் இருக்கும் நண்பரிடம் சொல்ல அவர் இராமகிருஷ்ணன் சாருக்கு போன் செய்து சொல்லி காலையில் கேமராவை அவருக்கு வாங்கிக் கொடுத்தது எல்லாம் சொல்லி குடும்ப வாழ்க்கைக்குள் சில கருத்துக்களை தனக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லி சில பாதகங்கள் இருந்தாலும் இன்னும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது என்று முடித்தார்.

வழக்குத் தொடுத்து அதை மறுத்து பேசியது என அடுக்கடுக்காக எழுத நினைத்தது... நேரம் இன்மை மற்றும் பனிச்சுமையின் சோர்வு காரணமாக சில கருத்துத் தொகுப்போடு மட்டுமே தர முடிந்தது...  இந்த முறை எழுதிய பகிர்வில் ஒரு முழுமை இல்லை என்பதே உண்மை. அடுத்த முறை விழா முடிந்த இரவே எழுத முயற்சிக்கிறேன்.

விழாவில் எப்பொழுதும் போட்டோ எடுப்பதற்காக மேடையில் ஒரு புரபஸனல் போட்டோ கிராபரை வைத்து நான் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த முறை விழா மேடையில் ஒருவர் பாலு மகேந்திரா போல் கேமராவில் நிஜங்களை நிழலாக சுட்டுக் கொண்டிருந்தார். யார்ரா அது புதுசா ஒரு போட்டோ கிராபர் என்று பார்த்தால்...

அட நம்ம அண்ணாச்சி... திரு. சுபஹான் அவர்கள்... 


இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் துபாய், அபுதாபி வாசிகள் தயங்காமல் அண்ணனை அழைக்கலாம்... அவரும் அழகாக படமெடுத்துத் தருவார். பணம் குறித்துப் பேச விரும்பினால் அண்ணனுக்குப் பிடிக்காது என்பதால் யோசிக்காமல் மனசு வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம். இங்கு பகிர்ந்திருக்கும் விழா போட்டோக்கள் அவர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிய விழாப் படங்கள்தான்...

நன்றி...

-'பரிவை'. சே.குமார்

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி