வெள்ளி, 1 மார்ச், 2013

பட்ஜெட் : நுனிப்புல் மேய்ந்திருக்கிறார்! - தினமணி


ஏழைகளை மேலும் பாதிக்கும் புதிய வரிகள் இல்லை. நடுத்தர மக்களுக்கு வருமானவரி விலக்கு வரம்பும் உயர்த்தப்படவில்லை. இதுநாள்வரை வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் மட்டுமே பயன்பெற்றுவந்த "பீமா யோஜனா' காப்பீட்டுத் திட்டத்தின் பலனை, கை ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள், காகிதம் சேகரிப்போர் ஆகியோருக்கு விரிவுபடுத்தியதும், "நிர்பய' நிதியம் (ரூ.1,000 கோடி) ஏற்படுத்தியிருப்பதும், மகளிர் வங்கிக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கியிருப்பதும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, தேர்தலை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும்போது கொண்டுவரப்படும் தங்கத்திற்கு ஆண்களுக்கு ரூ. 50,000 மதிப்பு வரையும், பெண்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பு வரையும் தீர்வை கிடையாது என்பதும்கூட, வாக்குவங்கியை மனதில்கொண்ட அறிவிப்புதான். வரிவிலக்குத் தொகையை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.20 லட்சமாக உயர்த்தியிருப்பதும்கூட, தேர்தலுக்கு முந்தைய சலுகைதான்!     
தூத்துக்குடி வெளிப்புற துறைமுகம் ரூ.7,500 கோடியில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தந்தாலும், இதனை அரசு - தனியார் பங்கேற்பு (பிபிபி) மூலம் நிறைவேறும்போது, அவர்கள் நிர்ணயிக்கப்போகும் மிகையான கட்டணமும், பயன்பெறப்போகும் "பினாமி'களும் கண்முன்னே தோன்றி அந்த மகிழ்ச்சியைக் குறைத்துவிடுகின்றன.
ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் (சூப்பர் ரிச்), ரூ.10 கோடிக்கு அதிகமாக வருவாய் பெறும் நிறுவனங்களுக்கு 10% கூடுதல் வரி (சர்-சார்ஜ்) விதிப்பதன் மூலமும், உயர்குடியினர் பயன்பாட்டுப் பொருள்களுக்கு வரி உயர்வும் பெரிய அளவில் வருவாய் ஈட்டித் தருவதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். பத்து லட்சம் சம்பாதிப்பவனுக்கும், பத்து கோடி சம்பாதிப்பவனுக்கும் வரிவிகிதம் ஒன்றுபோல இருக்கிறதே, அது என்ன முரண்?
கல்விக்கு ஒதுக்கப்படும் ரூ.65,867 கோடியில் (17% அதிகம்) அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்காக ரூ.27,258 கோடியும், தொடர்கல்வித் திட்டத்துக்காக ரூ.3,983 கோடியும் ஒதுக்கப்படுகிறது. பொதுமருத்துவத்தின் முக்கியத்துவம் கருதி, ரூ.37,300 கோடி (24.3% அதிகம்) ஒதுக்கினாலும், இதில் மருத்துவக் கல்வி, பயிற்சிக்காக ரூ.4,727 கோடி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்களை அதிகம் உருவாக்க வேண்டிய நிலையில், அதற்குக் குறைவாக நிதிஒதுக்கி இருக்கிறாரே, அது என்ன முரண்?
அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரிசி உற்பத்தி மேம்பாட்டுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கும் நிதியமைச்சர், அரிசி விளைவிக்கின்ற, ஆனால், அதிக விளைச்சலைக் காட்டாத, அதிக தண்ணீரை வீணாக்குகிற மாநிலங்களின் ("ஒரிஜினல் கிரீன் ரெவல்யூஷன் ஸ்டேட்') விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடிக்காக ரூ.500 கோடி ஒதுக்கி இருக்கிறார். காவிரி டெல்டாவில் இருப்போரை, மாற்றுப்பயிருக்கு மாறுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறாரா?
நாட்டுடைமையாக்கப்பட்ட 13 வங்கிகளின் நிதியாதாரத்தைப் பெருக்க மார்ச் 2013-க்குள் ரூ.12,517 கோடியும், 2013-14-க்குள் மேலும் ரூ.14,000 கோடியும் அளித்து நிதியாதாரத்தை மேம்படுத்தவுள்ளனர். அஞ்சல்துறை அலுவலகங்களை தகவல் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைக்க ரூ.4,909 கோடியும், அஞ்சல் துறையை "கோர் பேங்கிங்' வளையத்தில் கொண்டுவருவதற்காக ரூ.532 கோடியும் ஒதுக்குகிறார்கள்.
இன்றைய அவசியத் தேவை, எல்லா கிராமங்களிலும் கிளை அலுவலகம் உள்ள அஞ்சல்துறையை முழுமையான வங்கிச் சேவைக்கு மாற்றுவதுதான். இதற்குத்தான் மிக அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஏற்கெனவே நிறுவனமயமாகிவிட்ட வங்கிகளுக்கு மேலும் ஊட்டச்சத்து தேவையா?
அன்னிய நிறுவன முதலீடு (எப்.ஐ.ஐ.) அன்னிய நேரடி முதலீடு (எப்.டி.ஐ.) என்றால் என்ன என்பதற்கு இந்த பட்ஜெட் வரையறை செய்திருக்கிறது. பத்து விழுக்காட்டுக்கும் அதிகமான முதலீடு இருந்தால் அதை அன்னிய நேரடி முதலீடு என்று சொல்ல வேண்டும் என்கிறார் நிதியமைச்சர். சரி, இந்த வரையறை, இவர்கள் பெறும் சலுகைகளை வரையறுப்பதாக இல்லையே, அதற்கு என்ன சொல்கிறார்?
இந்தியாவின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாகக் காட்சியளிக்கிறது. ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளி கட்டுக்கடங்காமல் அதிகரித்திருக்கிறது. அதற்கெல்லாம் தீர்வு காணும் முயற்சியில் நிதியமைச்சர் ஈடுபடவே இல்லை. இதன் தொடர்விளைவாக, விலைவாசி ஏறப்போகிறது. அன்னியச் செலாவணி இருப்பு குறையப் போகிறது. அது அமெரிக்க ஹார்வேர்ட் பல்கலைக் கழகத்திற்குப்போய் பொருளாதாரம் படித்த நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்குத் தெரியாதா என்ன?
நாடும் பொருளாதாரமும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, தேர்தலில் வெற்றிபெற்றால் போதும் என்கிற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை இது.
பார்வைக் குறைபாடு உடையவர் ஒருவர் இருட்டில் குத்துச்சண்டை பழகிய கதைபோல, நிதிநிலைமையையும், பொருளாதாரத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகாணத் தெரியாமலோ எட்டு முறை நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருக்கும் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தவித்திருக்கிறார் என்பதை வெளிச்சம் போடுகிறது இந்த நிதிநிலை அறிக்கை!
-By தினமணி
நன்றி
-'பரிவை' சே.குமார்

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி