ஞாயிறு, 27 ஜனவரி, 2013

வட்டியும் முதலும் - ராஜுமுருகன்

 
(ஓவியம் : ஹாசிப் கான்) 

"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூ, உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்...'' - சினிமா டைரக்டராகப் போவதாக நான் அறிவித்தவுடன் என் தாத்தா சொன்ன பொன்மொழி இது. அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை ஒவ்வோர் உதவி இயக்குநரும் அனுதினமும் அறிவோம். 'கனவுத் தொழிற்சாலை’ என்ற பதத்தைக் கண்டுபிடித்தவனைக் கண்டுபிடித்து மண்டையில் பூசணி உடைக்க வேண்டும். அவ்வளவு பொருத்தம். கனவுகள் பெருகும் இந்தத் தொழிற்சாலையில், நிராசைகளும் காத்திருப்புகளும் கண்ணுக்குத் தெரியாத கழிவுப் பொருட்களாக எங்கெங்கும் குவிந்திருக்கின்றன.

 சமீபத்தில் தம்பி ராமையாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது சொன்னார், ''தம்பி... பாதி வயசுல பாஸ் ஆனவன் நான். என்னென்னவோ பண்ணிப் பாத்தும் கடவுள் என் கழுத்துல காலவெச்சு மிதிச் சுட்டே இருந்தான். அவனுக்குக் கால் வலிச்சு எடுத்தான் பாருங்க... விருட்டுனு நான் எந்திரிச்சு மேல வந்துட்டேன்...'' எனச் சொல்லிவிட்டுப் பகபகவெனச் சிரித்தார். அந்த காமெடிக்குப் பின்னால் எவ்வளவு டிராஜடி இருக்கிறது என்பதை அறிவேன். இது ஒரு விசித்திரமான வேதியியல். ஏகப்பட்ட படங்கள் வேலை பார்த்து, உலகப் படங்களில் ஊறி, இலக்கியம் படித்து, டிஸ்கஷனில் எந்தக் கதைக்கும் எகிறி சீன் பிடித்து ஆச்சர்யப்படுத்தும் எத்தனையோ உதவி இயக்குநர்கள் 40 ப்ளஸ் ஆகியும் படம் பண்ணாமலே இருப்பார்கள். ''ரெண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணிருக்கேன் சார்...'' எனக் காலையில் வந்து கதவு தட்டிய பையன், அடுத்த மாசம் வடபழனி சுவர்களில் புதுப் பட போஸ்டர் ஒட்டியிருப்பான். ''அவன்ட்ட செம ஸ்க்ரிப்ட் இருக்கு பாஸ்...'' என ஒரு கதையைப் பற்றி நாலைந்து வருடங்களாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அந்த ஸ்க்ரிப்ட்டுக்குச் சொந்தக்காரன், ''ஆபீஸ் போடப்போறேன் தலைவா... டெஸ்ட் ஷூட் போறேன் தலைவா...'' எனப் பார்க்கும்போது எல்லாம் சொல்வான். ''நைட்டு ஒரு லைன் தோணுச்சுஜி... ஓப்பன் பண்ணா...'' எனப் பாடாவதி கதை ஒன்றைச் சொன்னவனுக்குக் கொஞ்ச நாள் கழித்து போன் பண்ணினால், ''கும்பகோணம் பக்கம் ஷூட்ல இருக்கேன்ஜி... அதே கதைதான்... சந்தானம் டேட்ஸ் அஞ்சு நாள் கேட்ருக்கோம். இல்லேன்னா, சூரி போயிரலாம்ல...'' என ஆச்சர்யப்படுத்துவான். ''இவரு கூத்துப்பட்டறைங்க... ஒரு படம் ஹீரோவா பண்ணிட்டிருக்காப்ல.  மைண்ட்ல வெச்சுக்கங்க...'' என அரை தாடிப் பையனை கணேஷ் பேக்கரி வாசலில் அறிமுகப்படுத்துவார்கள். அடுத்த வருடம் அதே பையனிடம் கதை சொல்லக் காத்திருக்க வேண்டும். படம் ஹிட் அடித்து, நாலைந்து கமிட்மென்ட்களுடன், ''சார்... எனக்குக் கதைல இன்னும் புல்-அப் பண்ணிங்கன்னா நல்லாருக்கும்... ரொமான்ஸ் ஏத்துங்கஜி...'' எனச் சொல்வதைக் கேட்க வேண்டும். 30 வருடங்களாகப் பஞ்சாயத்து சீன், காமெடி சீன்களில் எக்ஸ்ட்ரா டயலாக்குகள் பேசும் முகங்களை, துணை நடிகர்கள் சங்க வாசலில் பசித்த கண்களுடனே பார்க்க வாய்க்கும். ''ஃபர்ஸ்ட் படம் பெருசாப் போகலையே தவிர, ரசனையாப் பண்ணிருந்தாரு. ஏன்னே தெரியல... அப்புறம் ஆளையே காணோம்...'' என கோடம்பாக்கத்தில் வருடத்துக்கு 50 ஒரு பட டைரக்டர்கள் முகவரி அழிக்கப்படும். ''மூணு படம் தொடர்ந்து ஃப்ளாப்பு... இப்ப இன்னொரு புரொடியூஸர மடக்கிட்டான்யா... இதுல இவனே ஹீரோ வேற... என்னா கான்ஃபிடென்ட்... என்னதான் பண்றாய்ங்கன்னு தெரியலையே...'' என தினத்தந்தி விளம்பரம் பார்த்து டென்ஷன் ஆவார்கள். ''ஒரு பாட்டுக்கு மட்டும் ஆறு கோடி செலவாம்... என்கிட்ட குடுத்தா, மூணு உலகப் படம் எடுத்துருவேன்...'' என யாராவது புலம்பிக்கொண்டே இருப்பார்கள். ''அந்தப் படத்துல வொர்க் பண்ணப்போ, டான்ஸரா வந்த புள்ளப்பா இது... இப்ப விஜய் வரைக்கும் ஹீரோயினுக்குத் தேடுறாங்க. ஆடியோ பார்ட்டியில நம்மளக் கண்டுக்கவே மாட்டேங் குது...'' எனக் குமுறுவார்கள். அருண் சாருக்கு மைசூர் காட்டில் டிஸ்கஷனில் இருந்தபோது, அவரின் அப்பா தவறிப்போனார். வந்து சேர்வதற்குள் சாம்பல்தான் கிடந்தது. மலேசியாவில் சாங் எடுக்க இணை இயக்குநராகப் போயிருந்தபோது, அம்மா இறந்துபோனார். அதற்கும் கொள்ளி போட முடியவில்லை. ''நான் எடுக்கப்போற சினிமாவப் பாக்க அவங்க இல்லங்கறத விடு... கடைசியா அவங்களப் பாக்கவே நான் இல்லையே... போடா...'' என்ற அவரது வார்த்தைகள் அழியவே அழியாத வாய்ஸ் ஓவர். திரை தொடாத எத்தனையோ கதைகள், இழந்த உறவுகள், சிதைந்த மனங்கள், மீளாத கனவுகள் என எவ்வளவோ இருக்கின்றன. ஆனாலும், ஐ லவ் சினிமா!

இவ்வளவு இருந்தும் சினிமா என்ற கலை வடிவத்தின் மீதான காதல் குறையவே இல்லை. நாலாவது படிக்கும்போது முதல்முறையாக கும்பகோணம் விஜயா தியேட்டருக்கு சுப்பிரமணி தாத்தா என்னைப் படம் பார்க்க அழைத்துப்போனார். சிவாஜி-அம்பிகா நடித்த 'வாழ்க்கை’ படம். ஒண்ணாம் நம்பர் சோகக் காவியம். எனக்கு மேத்ஸ் க்ளாஸில் இருக்கிற மாதிரி திகிலடித்தது. ஒரு காட்சியில், தொழிற்சாலையில் வேலை பார்க்கிற சிவாஜி மெஷினுக்குள் கையை விட, கை துண்டாகிவிடும். இதைப் பார்த்ததும் உச்சகட்டப் பயத்தில் அலறி, தியேட்டரைவிட்டு தெறித்து ஓடிவந்தேன். வீடு வரைக்கும் அழுகை. ''ந்தா... சின்னப்பயலப் போயி இந்தப் படத்துக்கெல்லாம் அழைச்சுட்டுப் போயிருக்க... நீ வாடா நாளைக்கு உன்னைய ஒளவையாருக்கு நல்ல படமா அழைச்சுட்டுப் போறேன்...'' என்ற ஆத்தா, அடுத்த வாரம் என்னை அழைத்துப்போன படம் 'துலாபாரம்’. அது இன்னும் படுபயங்கரம். படம் முழுக்கப் பல பேர் அழுதுகொண்டு இருக்க, 'இனிமே சினிமாவுக்கே வரமாட்டேன்...’ என உறுதியெடுத்தேன். ஸ்கூலுக்குக் கிளம்ப லேட்டானால், 'இப்பக் கிளம்புறியா... இல்ல சினிமாக்குக் கூட்டிப்போவா..?’ என வீட்டில் மிரட்டுகிற அளவுக்குப் பயம். கூடுதலாக தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமை மதியங்களில் போடப்படும் ப்ளாக் அண்ட் வொயிட் பெங்கால் படங்களில், வெள்ளை பைஜாமாக்களில் ஆண்களும், முக்காடுகளில் பெண்களும் காரை பெயர்ந்த வீடுகளிலும் குளக்கரைகளிலும் திரிவதை அண்ணன் ரசித்துக்கொண்டு இருந்தது பல்ஸ் கூட்டியது. ஞாயிறு சாயங்காலங்களில் பஞ்சாயத்து போர்டில் தமிழ்ப் படம் பார்க்கக் கூட்டம் கட்டி ஏறும்போதுகூட, போவது இல்லை. ஏழாவது படிக்கும்போது, ''தம்பி... உனக்கு ஒரு படம் காட்றேன். பயம்லாம் இல்ல... செம காமெடியா இருக்கும் வா...'' என அண்ணன் அழைத்துப்போய் ஒரு படம் காட்டினான். அது சார்லி சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்’. அந்தப் படத்தைப் பார்க்கும்போது, பொசுக்கென்று தொண்டைக்குள் உருண்ட பரவசப் பந்து, இப்போது வரை உருண்டுகொண்டே இருக்கிறது. அது ஒரு கெமிஸ்ட்ரி. நமக்குப் பிரியமான ஓர் கனவை நாம் கண்டுபிடித்துக்கொள்கிற தருணம். அதன் பிறகு சினிமா என்ற கலை, தீராத காதலாகவும், துயரமாகவும், கருணையாகவும் துரத்திக்கொண்டே இருக்கிறது.

'அவள் அப்படித்தான்’ க்ளைமாக்ஸில் கமலின் கார் தூரத்தில் போக, பீச் ரோட்டில் நிற்கிற ஸ்ரீப்ரியாவைப் பார்த்து வழிந்த கண்ணீர் காயவே இல்லை. 'பசி’ பட க்ளைமாக்ஸில் பிளாட்ஃபார்மில் இறந்துபோயிருக்கிற ஷோபாவைப் பார்த்ததும் திடுக்கிடும் விஜயனின் கண்கள் எனக்குள் உறைந்துவிட்டன. 'உதிரிப்பூக்கள்’ இறுதியில் ஆற்றங்கரையில் ஓடும் அந்தப் பிள்ளைகளின் மேல் இழையும் 'அழகிய கண்ணே...’ ஈரம் பூத்திருக்கிறது எப்போதும். 'சந்தியாராகம்’ கிழவர் தயங்கி நின்று ரிக்ஷாவில் ஓடிப்போய் ஏறுகிற ஒரு ஷாட், 'மெட்டி’யில் வடிவுக்கரசியின் நெற்றிப் பொட்டை அழித்தபடி சரத்பாபு பேசுகிற, 'இந்தப் பொம்பளைங்களுக்கு பொட்டுதான் உலகமா... அடுத்த கல்யாணம் பண்ணிக்கும்போது வெச்சுக்கிட்டாப் போச்சு’ என்கிற வசனம், '16 வயதினிலே’ படத்திலே கோவணத்தோடு சட்டை- பேன்ட்டை சுருட்டி டாக்டரின் முகத்தில் வீசி சப்பாணி காறித் துப்புகிற ஒரு காட்சி, 'அரங்கேற்றம்’ படத்தில் 'ஆம்பளைங்கன்னாலே மரத்துப்போச்சு’ என பிரமிளா பேசுகிற தொனி, 'நாயகன்’ சரண்யாவுக்கு கமல் தாலி கட்டுகிற ஷாட், 'புவனா ஒரு கேள்விக்குறியில்’ சுமித்ராவுக்கும் தனக்கும் நடுவில் உள்ள திரைச்சீலையை இழுத்துவிட்டபடி ரஜினி தருகிற ஒரு கோணல் புன்னகை, 'மகாநதி’யில் கல்கத்தாவில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு கிளம்பும்போது 'எங்கேயோ திக்குத்தெச’ என ஒலிக்கும் கமலின் குரல், 'பிதாமகன்’ ஹோட்டலில் வைத்து 'வெட்டியான வெளியப்போகச் சொல்றா’ என்றவனை விக்ரம் அடிக்கும் ஒரு அடி, 'வழக்கு எண்’ பெண்ணின் சிதைந்த முகத்தைப் பார்த்து அவன் காதலில் கலங்கும் கணம், 'சில்ரன் ஆஃப் ஹெவன்’ பள்ளி வாசலில் மூச்சிரைக்க நிற்கிற அந்தக் குட்டிப் பெண், 'கலர் ஆஃப் பேரடைஸ்’ படத்தில் கீழே விழுந்த குருவிக் குஞ்சைத் தூக்கி கூட்டில் வைக்கிற பார்வையற்ற சிறுவன், 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’லில் சுடப்படுவதற்கு முன் மகனுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக ஜோக்கரைப் போல நடந்து போகும் அப்பா, 'தி வே ஹோம்’ பேரனின் புறக்கணிப்பைச் சலனமே இல்லாமல் வாங்கிக்கொள்ளும் அந்தக் கிழவியின் கண்கள், 'ஈ.டி’-யில் அந்தச் சிறுவனை 'எலியட்’ என விநோதப் பிராணி அழைக்கும்போது வரும் ஆச்சர்யம், 'ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’ நாஜிக்கள் வதைக் களத்தில் அதிரவைக்கிற மனித நிர்வாணம்... என எத்தனை எத்தனை பரவசத்தையும், பயங்கரத்தையும், காதலையும், மனிதத்தையும், கோபத்தையும், அரசியலையும் எனக்குத் தந்திருக்கிறது இந்த சினிமா.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான சினிமாக்கள் நமது உணர்வுகளை, நினைவுகளைக் கிளறடிக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சினிமாக்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து இருக்கும். லிங்குசாமி சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது, கும்பகோணத்தில் டிஸ்கஷனில் இருந்தோம். ஒருநாள் காலையில் பாலாஜி சக்திவேல் சார் சென்னையில் இருந்து வந்தார். ''டேய் லிங்கு... இங்க கும்பகோணம் பக்கத்துல ஒரு டாக்டர் இப்பிடி ஒரு லெட்டர் எழுதிருக்காரு... அவரைப் போய்ப் பாக்கலாம்னுதான் வந்தேன். வர்றியா..?'' என்றார். 20 பக்கத்துக்கு மேலுள்ள லெட்டர் அது. 'கல்லூரி’ படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு டாக்டர் தனது வாழ்க்கையையும் நினைவுகளையும் அந்தப் படம் எவ்வளவு பாதித்திருக்கிறது என எழுதியிருந்தார். அவரைப் பார்க்கக் கிளம்பிப் போனோம். பக்கத்திலேயே ஒரு கிராமத்தில் அவர் வீடு. எங்களைப் பார்த்ததும் பயங்கர சந்தோஷமானார். பெல்பாட்டம், நீளக் கிருதா, சுருட்டை முடி என அவர் ஆள் பார்க்கவே ஈஸ்ட்மென் கலரில் இருந்தார். ''சார்... இது வரைக்கும் 100 தடவைக்கு மேல உங்க படத்தைப் பார்த்துட்டேன் சார்... எனக்கு என்னென்னவோ ஞாபகத்துக்கு வருது... டெய்லி ரெண்டு தடவ பார்த்திருவேன் சார்...'' என்றார் பரவசமாக. காபி கொடுக்க வந்த அவரது மகன் எங்களிடம் மெதுவாக, ''சார்... நான் அந்தப் படத்தை இன்னும் ஒரு தடவகூடப் பார்க்கலை... இவராலேயே பார்க்கலை. டெய்லி டி.வி.டி-ல இதைப் போட்டுக்கிட்டு உக்காந்துர்றாரு... டார்ச்சர் தாங்க முடியலை'' என்றான் டென்ஷனாக. அப்போதுதான் அந்த டாக்டரை மார்க்கமாகப் பார்த்தேன். ஏதோ ஒரு பழைய படத்தைச் சொல்லி, ''அதையும் இப்பிடித்தான் சார் வருஷக்கணக்குல ரெகுலராப் பார்த்துட்டு இருந்தேன்... அப்புறம் இந்தப் படத்தைத்தான் பார்க்கிறேன்...'' என படத்தைப் பற்றி பிரித்துப் பிரித்து அலசிக் காயப்போட்டார். ஏதேதோ பேசினார். வரும்போது பாலாஜி சார் சொன்னார், ''டேய்... ஒரு மனுஷனை ஒரு படம் எவ்வளவு பாதிக்குது பாரு... இந்தப் படம் பெருசாப் போகலை. ஆனா, எவனோ ஒருத்தனை அது இவ்வளவு பாதிச்சுருக்குன் னாலே, அதுல உண்மை இருக்கு. அதான் கலையோட அற்புதம். இந்த சந்தோஷத்துக்காகத்தான் படம் எடுக்கணும்.''

உண்மைதான். இப்படி நான் 'கடலோரக் கவிதைகள்’ படத்தை 50 தடவைக்கும் மேலாகப் பார்த்திருக்கிறேன். டீச்சரைக் காதலிக்காத யாராவது இருக்கிறோமா..? திருவாரூர் நீலகண்டன் அய்யா 'பராசக்தி’ படத்தை 200 தடவைக்கும் மேல் பார்த்திருக்கிறார். அவரது உடல் மொழியே சிவாஜி போலாகிவிட்டது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அமெரிக்காவில் இருந்து அவரது மகன் வந்துவிட்டார். ''டாக்டர் தாங்காதுன்னு சொல்லிட்டாங்க... அவரு ஆசப்படுறதக் குடுங்க...'' என்றார் மாமா. மகன், ''என்னப்பா வேணும் ஒனக்கு..?'' எனக் கேட்டபோது அவர் சொன்னார், ''தம்பிபுள்ள... ஒன் கம்ப்யூட்டர்ல 'பராசக்தி’ டி.வி.டி. போடேன்டா... பார்த்துக்கறேன்.'' கோவிந்தன் மாமா 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்திருப்பார். ''தலைவர் மேல வெறி மாப்ள... அதுவும் அந்தப் படத்தை அப்ப ரிலீஸ் பண்ணவுடாம ஏகப்பட்ட கரச்சலக் குடுத்தாய்ங்க. ஆனா, பேய்க் கூட்டம்ல பாத்துச்சு...'' என்பவர், இப்போதும் டி.வி-யில் அந்தப் படப் பாடல்கள் போட்டால், கண்கள் மின்னப் பார்ப்பார். மும்பையில் வேலை பார்க்கிற முரளி, 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே’வை வெறித்தனமாகப் பார்த்தான். தினமும் தியேட்டருக்குப் போய் பலப் பல முறை. அவனிடம், ''லூஸுப் பயலே... ஏன்டா அந்தப் படத்தை இப்பிடிப் பாக்குற?'' எனக் கேட்டதற்குச் சொன்னான், ''மச்சான்... அந்தப் புள்ள அப்பிடியே காஜல் சாயல் மச்சான். கொஞ்சம் கலர் கம்மி... மத்தபடி பேச்சு, சிரிப்பு எல்லாம்...'' என்றான். சாவித்திரி முதல் லட்சுமி மேனன் வரைக்கும் இப்படித் தன் காதலிகளின் சாயல் களை சினிமாக்களில் தேடிக்கொண்டேதானே இருக்கிறோம்.

டி.டி-யில் இருந்து டி.வி.டி. வரை வந்து, இப்போது டி.டி.ஹெச்-ல் வீட்டுக்குள் ரிலீஸ்ஆகிறது சினிமா. முதல்வர்களை உருவாக்கிய கவர்ச்சிகர சினிமா, நாம் காணவே காணாத எளிய மனிதர்களின் கதைகளைப் பேச வந்துவிட்டது. தேனிப் பக்கம் போனால், ''நாலு பட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கு பாஸ்... அந்தப் பக்கம் போகாதீங்க...'' என மக்கள் வேலையைப் பார்க்கிறார்கள். காலம் ஒவ்வொரு கலையையும் இப்படித்தான் அழைத்துச் செல்லும். காதல், அரசியல், சமூகம் என எல்லாத் திசைகளிலும் இனி புதிய புதிய சிந்தனைகள் வரும். இது மாற்றத்தின் காலம். சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. சினிமா தரக்கூடிய உணர்வுகளும் கதைகளும் எப்போதும் தீரவே தீராது. கதைப் பஞ்சம் என்பது பெரிய உட்டாலக்கடி.

'தி பேட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ்’ என்ற மறக்க முடியாத உன்னத சினிமாவை எடுத்தவர் கில்லோ பொன்டேகார்வோ. அவரிடம் ஒரு பேட்டியில், ''திரைக்கதையில் மொத்தம் எத்தனை வகை இருக்கிறது..?'' என்று கேட்கிறார்கள். அவர், ''இந்த உலகத்தோட மொத்த மக்கள்தொகை எவ்வளவு..?'' எனக் கேட்கிறார். ''சுமார் 700 கோடி...'' உடனே அவர் சொல்கிறார், ''அப்படின்னா 700 கோடி வகை இருக்கு!''

அப்படியென்றால், நம்மால் எடுக்கப்படாத சினிமாக்கள் இன்னும் எத்தனை எத்தனை இருக்கின்றன?

நன்றி : ஆனந்த விகடன்.

-'பரிவை' சே.குமார்

4 கருத்துகள்:

  1. புத்தகம் படிக்கத் தூண்டி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு!நன்றி குமார்!!!///இதொண்ணும் விஸ்வ............... க்கு வக்காலத்து இல்லியே?

    பதிலளிநீக்கு
  3. ராஜீ முருகன் எழுத்தை ஆனந்த விகடனில் படித்திருக்கிறேன். மிக அற்புதமாக இருக்கும். கனவுத்தொழிற்சாலைப் பற்றிய இந்த கட்டுரையும் அருமை. பகிர்வுக்கு நன்றி ,குமார்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு.
    விகடனில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி.
    திரு ராஜு முருகனின் வட்டியும் முதலும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி