(தினத்தந்தி குடும்பமலர் (04/11.2012) இதழில் வெளியான எனது சுந்தரமாமா சிறுகதையின் முழுவடிவம் இங்கே. குடும்பமலரில் நிறைய பத்திகளாய் நீக்கி ஒரு பக்கத்தில் போட்டிருந்தார்கள். பிரசுரித்த ஆசிரியர் குழுவுக்கு நன்றி.)
குடும்ப மலரில் படிக்க ---
********************
(கதைக்கு குடும்பமலரில் போட்டிருந்த படம்)
அடிக்கடி வரும் சுந்தரமாமா இப்பல்லாம் வருவதேயில்லை. என்னாச்சு இந்த
மாமாவுக்குன்னு தெரியலை... சுந்தரமாமாவுக்கு குடும்பமெல்லாம் இல்லை... அப்பாகூட
வேலை பார்த்தாங்க அப்ப ஏற்பட்ட பழக்கத்தால அவருக்கு நாங்க உறவானோம். விடுமுறை
நாள்ல எங்க வீட்லதான் இருப்பாரு. மாமா பாக்குறதுக்கு அழகா நல்லா சிவப்பா
இருப்பாரு. ராமராஜன் மாதிரி மீசை
வச்சிருப்பாரு... நெற்றி நிறைய விபூதி வைத்து அதன் மேல் அழகாக குங்குமம்
வைத்துதான் வெளியில வருவாரு... அவரு நெற்றியில் அது இல்லாம பாத்ததில்லை. அம்மாவை
தங்கச்சியின்னு தான் சொல்லுவாரு... அப்பாவை இவனே என்றுதான் கூப்பிடுவார். அக்காவை
பாப்பான்னும் என்னைய ராஜான்னுதான் கூப்பிடுவாரு... எல்லார் மேலயும் அளவு கடந்த
பாசம் வைத்திருந்தார். மாமாவுக்கு கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் கும்பகோணம்
வெத்தலையை சிவக்கச் சிவக்க போட்டுக்கிட்டே இருக்கணும்.
மாமாவுக்கு ரெண்டு மூணு வருடத்துக்கு முன்னால பக்கத்துல வேற ஊருக்கு
மாத்திட்டாங்க. அப்பவும் வாராவாரம் வந்து எங்களைப் பாத்துட்டுத்தான் போவாரு. இப்ப
சில மாசமா போன் பண்ணுறதும் இல்லை வர்றதும் இல்லை. போன் அடித்தால் உபயோகத்தில்
இல்லையின்னு வருது. எங்க போனாரு... என்ன ஆனாருன்னு தெரியலை. அம்மா அப்பாகிட்ட
கேட்டப்போ அப்பா எங்களை எல்லாம் ஒரு பார்வை பாத்துட்டு அவன் வரலையின்னா இப்ப
என்னா... கூடப்பொறந்த பொறப்பா என்னன்னு கோபமா கேட்டாரு. அப்பத்தான் எனக்கு
மாமாவுக்கு என்னாச்சுன்னு அப்பாவுக்கு தெரிஞ்சிருக்குன்னு தோணுச்சு... யார்கிட்ட
கேக்கலாம்... அம்மாகிட்ட கேட்க முடியாது அவங்களே இப்பத்தான் டோஸ்
வாங்கியிருக்காங்க... அக்காகிட்ட கேட்டாலும் அவளுக்கு தெரியப் போவதில்லை. அது ஒரு
புத்தகப் புழு. ஆனா எனக்கு மாமா வேணும்ன்னு தோணிச்சு.... அதனால அப்பாகிட்டதான் கேக்கணுமின்னு
முடிவு பண்ணினேன்.
அன்று மாலை நான் காலேஜ்ல இருந்து வரும்போது அப்பா வீட்டுக்குப் பின்னால
தோட்டத்துல செடிகளுக்கு தண்ணி பாச்சிக்கிட்டு இருந்தாரு. அக்கா இன்னும் வரலை...
அம்மா அடுப்படிகுள்ள இருக்கிறதை அங்கிருந்து வரும் பாத்திரத்தோட சத்தமே சொன்னது.
இதுதான் மாமாவைப் பத்தி அப்பாகிட்ட கேக்க சரியான சமயமுன்னு தோண நானும் தோட்டத்துப்
பக்கம் போனேன்.
"என்னப்பா தண்ணி பாச்சுறீங்களா?"
"வா சரவணா... இப்பத்தான் வாறீயா? அக்கா வரலையா?"
"ம்... அக்காவுக்கு காலேஜ்ல ஏதோ பங்ஷன்
இருக்குன்னு சொன்னுச்சு... வர லேட்டாகுமுன்னு அம்மாகிட்ட சொல்லிட்டுப்
போச்சு..."
"சரி... ஏதாவது சாப்பிட்டியா?"
"இல்லப்பா..."
"ஏய் வளரு... தம்பி வந்துட்டான் பாரு...
அவனுக்கு சாப்பிட எதாவது கொடு... காபியிருந்தா கொண்டாந்து கொடு..." என்று
வீட்டுக்குள் இருக்கும் அம்மாவுக்கு குரல் கொடுத்தார்.
"அப்பா..." நான் மெதுவாக இழுத்தேன்.
"என்னப்பா..."
"நம்ம சுந்தரமாமா...இப்பல்லாம்
வர்றதேயில்லை"
அப்பா பதில் சொல்லாமல் என்னை கேள்விக்குறியோட பார்த்தார்.
"என்னப்பா... அவரு எங்க இருக்காரு... ஏன் இங்கு
வர்றதேயில்லை.... அவருக்கு என்னாச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு... சொல்லுங்கப்பா...
எங்ககிட்ட பாசத்தை காட்டிட்டு இப்ப அவரு வறாம இருக்கது எனக்கு ரொம்ப கஷ்டமா
இருக்குப்பா... அவருக்கும் நம்மள விட்ட உறவு இல்லதானேப்பா..."
"உனக்கு எதுக்கு இப்ப அவரைப் பற்றி கவலை...
படிக்கிறதுல இன்னும் நல்லா படிக்கணுமின்னு கவலைப்படு சந்தோஷம்... அதை விட்டுட்டு
எதுக்கு உனக்கு தேவையில்லாத கவலை" தண்ணியை செடிக்கு விட்டபடி கேட்டார்.
"அவருக்குன்னு கடைசி வரைக்கும் நாமதான் உறவுன்னு
நீங்கதானே சொன்னீங்க... அப்புறம் இப்ப ஏம்ப்பா அத்துப் பேசுறீங்க?"
"அத்துப் பேசலைப்பா... இங்க இருக்கும் வரை நாம
உறவா இருந்தோம். இப்ப அவரு வேற ஊருக்குப்
போயி ரெண்டு மூணு வருசமாச்சு... அங்க நம்மள மாதிரி அவருக்குப் புதிய உறவு
கிடைச்சிருக்கலாம்... அதான் நம்மள
மறந்துட்டு அவங்ககூட உறவாகியிருப்பாரு... இது இயற்கைதானே..."
"இல்லப்பா... நீங்க பொய் சொல்லுறீங்க...மாமா
அப்படிப்பட்ட ஆள் இல்லை... உங்களுக்கும் அவருக்கும் எதாவது பிரச்சினையா
இருக்குமோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு" எனக்கு பொறுமையில்லாமல் கோபமாக
கேட்டேன்.
அப்பா சிரித்தார். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. "என்ன பிரச்சினை...ம்... எங்க ரெண்டு பேருக்கும்
சொத்துத் தகறாரா என்ன... அட போப்பா நான்
சொன்னதுதான் உண்மை...நீ பத்தாவது வரை டான் போஸ்கோவுல படிச்சே... பதினொண்ணு
பன்னெண்டு செவன் டேய்ஸ்ல படிச்சே.. இப்ப இஞ்சினியரிங் அண்ணாமலையில படிக்கிறே...
இப்ப சொல்லு டான் போஸ்கோவுலயும் செவன் டேய்ஸ்லயும் உன் கூட படிச்சதுல எத்தனை பேரு
இன்னும் பிரண்டா இருக்காங்க... அது மாதிரித்தான் இந்த உறவும்... புரியுதா?"
அப்பா சொல்வது உண்மைதான்..பத்தாவது வரை படிச்சவங்கள்ல யாருடனும் இப்ப தொடர்பு
இல்லை... பன்னெண்டாவதுல என்னோட படிச்சதுல சாமினாதனும் பிரேமும் மட்டும்தான் என்னோட
இப்ப படிக்கிறங்க... மத்தவங்கள்ல சிலர் மட்டும் இப்ப தொடர்பில் இருக்கிறார்கள்...
இதுக்கும் மாமாவோட உறவுக்கும் வித்தியாசமில்லையா? இதோட அதை ஒப்பிட முடியுமா?
"அப்பா இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்...
அது சின்னப்பிள்ளங்க உறவு... மாமா நம்மகிட்ட அப்படி பழகலை... நம்மளை உறவாத்தான்
நினைச்சாரு... உதறிட்டுப் போறவரு இல்ல அவரு..."
"என்ன அப்பாவும் பிள்ளையும் சீரியஸா
பேசிக்கிட்டு இருக்கீங்க..." மணக்கும் காபியுடன் வந்த அம்மா கேட்க, "ஒண்ணுமில்ல...
காஞ்சுபோன ரோஜாவைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தான்... வேற செடி வாங்கி
வைக்கணுமின்னான்... அதான்.."
"ஆமாங்க நான் கூட சொல்லணுமின்னு நினைச்சேன்...
நல்ல பட்டு ரோஜா செடியா ரெண்டு வாங்காந்து வைக்கணும்... நாளைக்கு வரும்போது
வாங்கிட்டு வாங்க... சரி தண்ணி பாச்சினது போதும் ரெண்டு பேரும் வீட்டுக்குள்ள
வாங்க"
"ம்... வாறோம் போ..."
"என்ன சரவணா... அப்படி பாக்குறே...?"
"நீங்க எதையோ மறைக்கிறீங்கப்பா...அம்மாகிட்ட
நீங்க பொய் சொன்னதுல இருந்தே தெரியுது... உங்களுக்கு மாமாவைப் பற்றி
தெரியும்..."
"வா... உள்ள போகலாம்..." என் பதிலை
எதிர்பார்க்காமல் கைகால்களை கழுவிவிட்டு வீட்டுக்குள்ள போனார். நானும் பின்னால்
போனேன்.
அதன்பிறகு இது பற்றி அப்பா எதுவும் பேசவில்லை... தனது கவனத்தை தொலைக்காட்சிப்
பக்கமாக திருப்பிக் கொண்டார். சே... எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்க
இந்த அப்பாவை என்ன பண்ணலாம். எப்பவும் இந்த அப்பா இப்படி இருந்ததில்லை
பிரண்ட்லியாத்தான் பழகுவாரு...ஆனா மாமா விசயத்துல மட்டும் அவரு நடந்துக்கிறது
எனக்குப் புரியலை. பேசாமல் எனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டேன்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூடுதலாக தூங்கி எழுந்தேன். அப்பா
குளித்து சாமிகும்பிட்டு பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன்
"சரவணா...குளிச்சிட்டு சாப்பிட்டுக் கிளம்பு.. நாம வெளியில பொயிட்டு
வரலாம்." என்றார்.
எங்கே என்று கேட்க நினைத்து கேட்காமல் கிளம்பினேன். கொஞ்ச தூரம் போனதும்
"என்னப்பா... அப்பா மேல கோபமா?" என்று பேச்சை ஆரம்பித்தார்.
நீங்க மாறிட்டீங்கப்பான்னு சொல்ல நினைத்து "இல்லப்பா" என்றேன்.
"என்ன செய்யிறது... சில விசயங்களை குடும்ப நலன்
கருதி மறைக்க வேண்டியதாப் போகுது... சில விசயங்கள் மறைச்சு வைக்கிறதால மனசை
அரிக்கிறது தெரிஞ்சும் மத்தவங்களோட சந்தோஷத்துக்காக அதை தாங்கிக்க வேண்டிய
கட்டாயம்... அதனால தெரிஞ்சவங்க அதை மனசுக்குள்ளே அடைச்சிடுறாங்க... "
அப்பா சொல்வது எனக்கு ஒண்ணும் புரியலை... அவரைப் புரியாமல் பார்த்தேன். அவரே
தொடர்ந்தார். "உங்க சுந்தரமாமா எனக்கு நண்பனா வந்தான். சாதாரணமாக நம்ம
வீட்டுக்குள்ள வந்தவன் நம்மள்ல ஒருவனா ஆயிப்போனான். அண்ணன் தம்பி உறவுகள் இல்லாம
இருந்தவன் உங்கம்மாவுக்கு அண்ணனாவும் உங்களுக்கு மாமாவாகவும் மாறிப்போனான். என்ன
செய்ய எல்லா உறவும் நிலைப்பதில்லையே... அவனும் அது மாதிரித்தான்..." அப்பா
நிறுத்த எனக்கு என்ன சொல்வதுன்னே தெரியலை.
"இப்போ மாமா எங்கப்பா..?"
"அவனுக்கு என்னாச்சு... ஏன் வரலையின்னு
உங்ககிட்ட சொல்லி இருந்தா உங்க சந்தோஷம் எல்லாம்
போய் இருக்கும்... ஏன் எதையும் தாங்குற நிலையில இல்லாத உங்கம்மா இதயம்
நின்னே போயிருக்கும்... அவ எனக்கு வேணும்... உங்க சந்தோஷம் எப்பவும் போல
தொடரணும்... இது என்னோட ஆசை மட்டுமில்ல
சரவணா உங்க மாமா எனக்கிட்ட கேட்டதும் இதுதான்... அவன் பெரிய மனுசன்டா அவனுக்குள்ள
இருந்த அவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிக்கிட்டு சந்தோஷமா இருந்திருக்கிறான்...
"
நான் அப்பாவை பார்க்க, "சில மாசத்துக்கு
முன்னால டிரீட்மெண்டிக்காக இங்க வந்தவன்
என்னைப் பார்த்து ஆஸ்பிடல்ல அட்மிட் ஆனவன் உங்களை பாக்க மறுத்துட்டான்...
அதுக்கப்புறம் அவன் என்ன ஆனான்னு..." அப்பா பேசாமல் நிறுத்தினார்.
அவர் நிறுத்தினார் என்பதைவிட பெச முடியாமல் தவிக்கிறார் என்பது அவர் பின்னால்
இருந்த எனக்கு நல்லா தெரிந்தது. "அப்பா இப்ப மாமா எங்கே"" என்று
நான் கேட்பதற்கும் அப்பா சுடுகாட்டு வாசலில் வண்டியை நிறுத்துவதற்கும் சரியாக
இருந்தது.
-'பரிவை' சே.குமார்.
சிறுகதை ரொம்ப நல்லாஇருக்கு சார்.நல்ல நடை. நல்ல கருத்து
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான கதை,கடைசில கண் கலங்கிடுச்சு...
பதிலளிநீக்குகருத்துள்ள கதை .
பதிலளிநீக்குஒவ்வொரு பத்திக்கும் இடையே இடைவெளி கொடுத்தால் சிரமம் இல்லாமல் படிக்கலாம்.
வாங்க முரளிதரன் சார்...
பதிலளிநீக்குஉங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாங்க மேனகா அக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க பரமசிவம் சார்...
பதிலளிநீக்குஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்லியபடி பத்திக்கு இடையில் இடைவெளி விட்டாச்சு சார்.
உருக்கம். மிக நன்று. வாழ்த்துகள் குமார்!
பதிலளிநீக்குசிறுகதை யதார்த்தமா நல்லா இருந்துச்சு குமார்
பதிலளிநீக்குதினத்தந்தியில் சிறுகதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்
நல்ல கருத்து... முடிவில் நெகிழ்தேன்...
பதிலளிநீக்குகதை மிக அருமை......பகிர்வுக்கு மிக்க நன்றி .....
பதிலளிநீக்குநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மிக மிக மிக அருமையான கதை. நெகிழ வெச்சுருச்சு.
பதிலளிநீக்குகதை நல்லாயிருக்கு.நடை வழக்கம் போல் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் குமார் அருமையா இருக்கு சிறுகதை..
பதிலளிநீக்குஇப்போதுதான் வாசித்தேன் குமார்.வாழ்த்தும் பாராட்டும் !
பதிலளிநீக்குநல்ல கதை தம்பி..நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்..தொடரட்டும் உன் எழுத்துப்பயணம்..:)
பதிலளிநீக்கு