ஞாயிறு, 27 மே, 2012

நாயகன்: நாகேஷ்

நாயகன் அப்படிங்கிற தலைப்புல முதன் முதலில் அஜீத் குறித்து எழுதினேன். அதன் பிறகு நாயகன் எழுதவில்லை... எல்லாமே ஆரம்பிக்கும் போது தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் ஆரம்பமாகிறது. ஆனால் தொடரத்தான் முடிவதில்லை. நாகேஷ் பற்றி படித்த போது அவரைப் பற்றி நாயகனில் எழுதலாமே என்ற எண்ணம் தோன்ற ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றி சில தகவல்கள் நாயகனில்...

நாகேஷ்... இந்தப் பெயரே சிரிப்பை வரவைக்கும். ஊரில் ஒல்லியாக இருக்கும் சிலருக்கு நாகேஷ் என்ற பட்டப் பெயரே உண்டு. இன்றைக்கு சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்து விட்டார்கள். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் நாகேஷ்க்கு என்று இருந்த அந்த இடத்தை யாரும் பிடிக்க முடியவில்லை. தற்போதைய நகைச்சுவை நடிகர்களில் வைகைப் புயல் வடிவேலு கருப்பு நாகேஷ் என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார்.

இன்று இருக்கும் சில நகைச்சுவை நடிகர்கள் வரும் சிரிப்பைக்கூட வரவிடாமல் செய்யும் பெரிய அப்பாடக்கர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாகேஷ், என்.எஸ்.கே, தங்கவேலு, சந்திரபாபு என இவர்கள் எல்லாம் திரையரங்கு வரும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்தார்கள்.

அபுதாபியில் திரு. நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசும் போது சிவாஜி ஒருமுறை அவரிடம் "இந்த நாகேஷ், ஆச்சியெல்லாம் நாம கொஞ்சம் ஏமாந்தாலும் தூக்கிச் சாப்பிட்டுடுவாங்க... கவனமா இருக்கணும்..." என்றாராம். அவர் பொறாமையில் சொல்லவில்லை. நாகேஷின் நடிப்பை பார்த்து வியந்ததால் அப்படி சொல்லியிருக்கிறார்.

நாகேஸ்வரன் என்ற பெயர்தான் நாகேஷ் ஆனது. 1933 ஆம் ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் தேதி தாராபுரத்தில் கன்னடர்கள் அதிகம் வாழும் கொஞ்சிவாடியில் கிருஷ்ணாராவ், ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்த நாகேஷ் பிறப்பால் கன்னட பிராமணர். நாகேசை வீட்டார் அழைக்கும் செல்லப் பெயர் குண்டப்பா. நண்பர்கள் அவரை குண்டுராவ் என்றே அழைப்பார்களாம்.(உடம்புக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்லாமல் வைப்பதுதான் நம் மறபு இல்லையா?)



கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் படிக்கும் போது அவருக்கு வந்த அம்மை நோயின் காரணத்தால் முகத்தில் தழும்புகள் தோன்றின. படிக்கும் போதே னடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். படிப்பை முடித்ததும் அப்பா ரயில்வேயில் இருந்ததால் அவருக்கும் ரயில்வே பணி சுலபமாக கிடைத்தது. ரயில்வேயில் பணி புரியும் போதும் அமெச்சூர் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை... தொடர்ந்து நடித்து  வந்தார்.

மணியன் அவர்கள் எழுதிய 'டாக்டர் நிர்மலா' என்ற நாடகத்தில் 'தை தண்டபாணி' என்ற பெயரில் 'தை... தை...' என்று சொல்லிக் கொண்டு வரும் நோயாளி கதாபத்திரத்தில் நடித்தார். அதனால் இவருக்கு 'தை' நாகேஷ் என்ற பட்டப் பெயர் உண்டானது. அதுவே பின்னாளில் மருவி 'தாய்' நாகேஷ் ஆனது.

நாடகங்களில் நடித்து வந்த நாகேஷ் 1959 ஆம் ஆண்டு 'தாமரைக்குளம்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார் வேலையை விட்டுவிட்டு வந்து நடித்த 'தாமரைக்குளம்' படத்தின் மூலம் அவருக்கு பெயரும் வரவில்லை... எதிர்பார்த்த பணமும் வரவில்லை என்பதை நாகேஷே ஒருமுறை சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தன. பேர் சொல்லிக் கொள்ளும்படியான படமாக எதுவும் அமையவில்லை. இந்த நாட்களில்தான் ஸ்ரீதரின் 'காதலிக்க நேரமில்லை' படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். படத்தின் பல காட்சிகள் நாகேஷைப் பற்றி பேச வைத்தன. குறிப்பாக பாலையா அவர்களிடன் நாகேஷ் கதை சொல்லும் காட்சி இன்று புதிதாக பார்ப்பவர்களையும் சிரிக்க வைத்துவிடும்.

இயக்குநர் கே.பாலச்சந்தரின் 'சர்வர் சுந்தரம்' படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்து தன்னால் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமல்ல குணச்சித்திர கதாபாத்திரத்திலும் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்தார். அதன் பயனாக இயக்குநர் கே. பாலச்சந்தர் தனது 'நீர்க்குமிழி' படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். நாகேஷ் தேன் கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த பெருமை நம்ம ஆச்சி மனோரமா அவர்களையே சேரும். இரண்டு பேரும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்கள் என்றால் மிகையாகாது. நாகேஷின் நடிப்பில் திருவிளையாடல் தருமியும், தில்லானா மோகனாம்பாள் வைத்தியும் பலராலும் பாராட்டப்பட்ட கதாபாத்திரங்கள் ஆகும்.



நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், கதாநாயகன் என கலக்கிய நாகேஷ் வில்லனாக அதுவும் கொடூர வில்லனாகவும் கமலஹாசனின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில்  நடித்திருக்கிறார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம் போன்ற கமலஹாசனின் படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார். தசாவதாரம் படம்தான் நாகேஷின் கடைசிப் படம் ஆகும்.

நாகேஷ் ஒரு பேட்டியின் போது "நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த என்னை ரசிகர்கள்தான் நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்" என்று சொல்லியிருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் நாகேஷ் கஷ்டப்பட்ட போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. தனக்குத் தெரிந்த பட முதலாளிகள், டைரக்டர்கள், முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு சின்ன கதாபாத்திரம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள்ளுங்கள்'' என்று சொல்லுவாராம். அவரைப் பற்றி பேசும் போது ''பாலாஜி எனக்குச் செய்த உதவிகளை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று நாகேஷ் பலமுறை கண்கலங்க சொல்லியிருக்கிறார்.

எல்லாரையும் சிரிக்க வைத்த நாகேஷால் கடைசி காலத்திலும் சொந்த வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை என்பதே உண்மை.


"வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். கலையைக் காப்பாற்றுகிறேன் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஏனென்றால் கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது என்பதை எல்லோரும் நினைத்தால் கலையும் பிழைக்கும்... நாமும் பிழைக்கலாம்" என்பது நாகேஷின் கருத்து.

நாகேஷ் என்ற மகா நடிகன் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இயற்கை எய்தினார். இந்தக் கலைஞன் வாழ்ந்து மறைந்திருந்தாலும் அவர் நடித்த படங்கள் இன்றும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது... இன்று மட்டுமல்ல இன்னும் பல காலங்கள் சினிமாவின் மூலமாக வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

தகவல் திரட்ட உதவிய தமிழ் விக்கிப்பீடியா மற்றும்  நண்பர்களின் இணைய தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

கூகிள் : படங்களுக்கு நன்றி

16 கருத்துகள்:

  1. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை நாகேஷின் புகழும் இருக்கும்....!!!

    பதிலளிநீக்கு
  2. சிறந்த கலைஞரைப் பற்றி சிறப்பான பகிர்வு. எதிர்நீச்சல் எனக்கு மிகப்பிடித்த படம்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா27/5/12, 11:06 AM

    வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

    தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    பதிலளிநீக்கு
  4. வலைச்சரம் வாங்க
    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பதிவு சார் ! பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  6. மிகநல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
  7. மறக்க முடியாத நடிகர்தான் நாகேஷ்

    பதிலளிநீக்கு
  8. இன்றுவரை நாகேஷ் அவர்களை வெல்ல யாருமேயில்லை.ஞாபகப்படுத்தினீர்கள் நன்றி ! !

    பதிலளிநீக்கு
  9. வாங்க மனோ...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க ராமஸ்க்ஷ்மி அக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க கூகிள்சிறி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க செய்தாலி அண்ணா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வந்து பார்த்து மிகுந்த சந்தோஷம் அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க தனபாலன் சார்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க சுசிக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பக்கம் வந்ததுக்கு ஸ்பெஷல் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க சென்னை பித்தன் ஐயா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க ஹேமா அக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஒரு ஒப்பற்ற நடிகர் நாகேஷ் அவரை பற்றிய தங்கள் பகிர்வு சிறப்பான ஒன்று குமார் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர்களில் அவர் முக்கியமானவர்

    பதிலளிநீக்கு
  14. வாங்க சகோ.சரவணன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. nagesh avarhal piranthathu " konjivaadi" alla " kolumjivaadi"

    பதிலளிநீக்கு
  16. வாங்க நண்பரே...
    டைப் பண்ணும் போது தவறுதலாகிவிட்டது. நானும் பார்க்கவில்லை...
    தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி