திங்கள், 1 நவம்பர், 2010

அப்பா


சொந்த ஊருக்கு போய் பல வருடங்களாகிவிட்டது. அமெரிக்கா வந்து சில வருடங்களில் உடன் வேலை பார்த்த லிசாவிடம் காதல் கொண்டு அப்பாவின் அனுமதியை எதிர்பார்த்து அது பொய்த்துப்போன ஒரு மழைநாளில் எனது நண்பர்களின் ஆதரவோடு அவளை கரம்பிடித்தேன். என் திருமணத்தை அப்பாவிற்கு தெரிவித்தபோது காட்டுக்கத்தலாய் கத்தினார்.இனி நீ எனக்கு மகனே இல்லை... இங்க சொந்தம் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு வராதே... எல்லாரும் செத்தாச்சு... என்று போனை வைத்தவர்தான் அதன் பிறகு நான் பலமுறை அழைத்தும் அவர் பேச மறுத்துவிட்டார். எனக்கு ஊர் நினைவுகளை அடிக்கடி அப்டேட் செய்பவன் எனது உயிர்த்தோழன் முருகன் தான்.

வாழ்வியல் மாற்றங்களோடு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன... எனது திருமண வாழ்க்கைக்கும் அப்பாவின் பிடிவாதத்திற்கும் ஆயிற்று பத்து வருடங்கள் ...

இந்த பத்து வருடத்தில் நான் என் ரத்த சொந்தங்களின் பேச்சைக்கூட கேட்க முடியாத பாவியாகிவிட்டேன். காதல் அவ்வளவு கொடியதா? என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. நம் மனதுக்குப் பிடித்தவளை மனைவியாக்கிக் கொள்வதை ஏன் இந்த பெற்றோர் விரும்புவதில்லை என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது... நாமும் நாளை அவர்கள் போல்தானோ என்பதும் தெரியவில்லை.

நானும் தினம் என் பெற்றோரை நினைக்காத நேரமில்லை. "ராம்... நீ வேணா ஒரு தடவை இந்தியா பொயிட்டு அப்பா, அம்மாவை பாத்துட்டு வா... உன்னைய நேர்ல பாத்தா அவங்க கோபம் மாறலாம்" என்று லிசா பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள். இருந்தும் அப்பாவின் பிடிவாதம் தெரிந்திருந்ததால் சொந்த ஊருக்குப் போய் அவமானப்பட மனதில்லாமல் மறுத்துவிட்டேன்.

என்ன செய்ய காதல் மனைவிக்காக காத்த பெற்றோரை இழந்தது தவறுதான்... அவர்களுக்காக இவளை ஒதுக்கியிருந்தால் நல்ல மனைவியை இழந்திருப்பேனே. என் அண்ணனுக்கு ஜாதகம் பார்த்து பத்துப் பொருத்தத்துடன் தான் கல்யாணம் செய்து வைத்தார் அப்பா. இருந்தும் மனம் ஒத்துப்போகாததால் விவாகரத்துப் பெற்று விட்டதாக முருகன் மூலம் அறிந்தேன். அப்படியிருக்கு மனம் மட்டுமே பார்த்த எங்கள் வாழ்க்கை நாளுக்கு நாள் அதிக அன்புடந்தானே மலர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நினைவுகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டு லாப்டாப்பை எடுத்துக் கொண்டு

"லிசா டார்லிங்..."

"என்னப்பா..."

"நான் கிளம்புறேன்... நீ பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு போறியா?"

"ஓகே... அதை நான் பார்த்துக்கிறேன்... நீ கிளம்பு..."

"ஓகே...பை..."

காரை சீரான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தவனின் செல்போன் சிணுங்கியது.

"அலோ முருகா... என்னடா இந்த நேரத்துல..."

"ராமா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... வீட்லயா... ஆபிஸ்லயா..."

"இப்பதான் ஆபிஸ் போறேன்.... என்ன விஷயம் சொல்லு...எனி திங் இம்பார்டண்ட்"

"ம்... காலையில அப்பா வந்திருந்தார்..."

காரின் வேகம் குறைந்தது... " என்ன விஷயமுடா... அவங்க உடம்புக்கு ஒண்ணுமில்லையே..."

"அதெல்லாம் இல்லடா..."

"அப்புறம் என்ன சொன்னார்... அண்ணன் வாழ்க்கைப் பிரச்சினை தொடர்பா வந்தாரா..."

"இல்லடா... உன் விஷயமா வந்தாருடா..."

"என் விஷயமா? என்னடா சொத்து தாராறாமா?" சிரித்துக் கொண்டே கேட்டான்.

"ஜோக்கடிக்கிறியா... அவருக்கு உன்னை பார்க்கணுமாம்..."

"எ... என்னடா...சொல்றே..." என்றவன் அதற்கு மேல் காரை செலுத்த முடியாமல் ரோட்டோர பார்க்கிங் பார்த்து நிறுத்தினான்.

"ம்... சொல்லுடா..."

"அதாண்டா... இப்ப அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலை... அவங்க உன்னைய பார்க்கணுமின்னு நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க... ஆரம்பத்துல மிடுக்கா இருந்த அப்பா இப்ப அம்மா சொல்றதை ஆமோதிக்க ஆரம்பிச்சிட்டார்... இன்னைக்கு காலையில வந்து தயங்கித் தயங்கி பேசினார்... உன்னைய பார்க்கணுமாம்... உடனே வரச்சொல்லுப்பா அப்படின்னு சொன்னார். நான் உங்கிட்ட அவரையே பேச சொன்னப்ப மறுத்துட்டார். "

"வந்தா பேசுவாராடா..." ஆவலாய் கேட்டான்.

"கண்டிப்பா பேசுவார்... இப்ப நீ கூப்பிட்டாலும் பேசுவார்..."

"மாட்டாருடா.... வந்தா பேசுவார்னு சொல்லு... ஆனா கூப்பிட்டா பேசமாட்டார்.... அவர் கௌரவம் தடுக்குமுடா.." பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

"இல்ல ராமா பேசுவாருடா... அண்ணன் வாழ்க்கை அப்படி ஆனதுல இருந்து அவரு மனசொடிந்து பொயிட்டாருடா... இப்பல்லாம் அவரு வெளியில கெத்தாக் காட்டிக்கிட்டாலும் மனசுக்குள்ள முழுக்க முழுக்க உன்னை சுமந்துக்கிட்டுதாண்டா இருக்காரு... நேத்து என்னை பார்க்க வந்தோப்பக்கூட நம்ம வீட்ல உன் குடும்ப போட்டாவை பெரிசா வச்சிருக்கேன்ல... அதை தடவிப்பார்த்து கண்கலங்கினாராம்... சந்தியா சொன்னா... அதோட இல்லாம அகிலாவை பார்த்து அப்படியே அப்பத்தா மாதிரியிருக்காலம்மான்னும் லாவண்யாவை பார்த்து கொஞ்சம் என்னமாதிரி இருக்கான்னும் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டாராம்".

"என்னடா சொல்றே... அப்பாவா.... சாகுற வரைக்கும் பேச மாட்டேன்னு சொன்னவருடா... அதே மாதிரி பத்து வருஷமா ஒரு வார்த்தை பேசலையேடா..." அழுகை வந்தது.

"அதைவிடு... உங்க அப்பாவோட செல் நம்பரை குறிச்சுக்கோ... அவருக்கு கூப்பிடு "

"எப்படிடா... பேசலைன்னா..."

"அவரு பேசாட்டியும்... அம்மா பேசுவாங்கடா"

"சரி சொல்லுடா" என்றவன் அவன் சொல்லச்சொல்ல பதிந்து கொண்டான்.

"சரிடா நான் இப்ப டிரைவிங்ல இருக்கேன். ஆபீஸ் போனதும் அப்பாகிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன் என்ன" என்றபடி போனை கட் செய்துவிட்டு காரை செலுத்தினான். மனசுக்குள் சந்தோஷமாய் இருந்தாலும் நெஞ்சை எதோ அழுத்துவது போல் இருந்தது.

அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக லிசாவை கூப்பிட்டான்.

"என்னப்பா... காலையில போன் பண்றே... எனி திங் சீரியஸ்"

"நோ சீரியஸ்... காலையில உங்க அண்ணன் போன் பண்ணினான்"

"யாரு முருகண்ணனா... என்னவாம்? அண்ணி, குழந்தைங்க எப்படியிருக்காங்கலாம்..."

"எல்லாரும் நல்லாயிருக்காங்களாம்... அவன் போன் பண்ணினது ஒரு இம்பார்ட்டண்ட மேட்டருக்காக..."

"பீடிகை போடாதப்பா... புராஜக்ட் மேனேஜர் வேற பக்கத்துல இருக்கான்... முறைச்சு முறைச்சு வேற பாக்குறான் கடுவன் பூனையாட்டம்..."

"ஏய் கேட்டுடப் போகுது..."

"கேட்டா என்ன அவனுக்குதான் மொழி புரியாதுல்ல.... அதானே நமக்கு அட்வான்டேஷ்... போன்ல அவனை திட்டிக்கிட்டே அவனைப்பார்த்து சிரிச்சா... அவனும் கையை உயர்த்தி சிரிப்பான். சரி நீ விஷயத்துக்கு வாப்பா"

"அப்பா அவனைப் பார்க்க வந்தாராம்"

"இதுல என்ன இருக்கு... அவரு அடிக்கடி முருகண்ணன் வீட்டுக்கு வருவாருன்னு அண்ணந்தான் அடிக்கடி சொல்லுமே"

"இரு முழுசா கேளு... அவருக்கு என்னைய பாக்கணுமாம்"

"எ... என்னப்பா சொல்றே... நிஜம்ம்ம்மா" திண்றினாள்.

"ஆமா... வரச்சொன்னாராம்"

"ஐய்யோ... உன்னோட பத்துவருஷ பரிதவிப்புக்கு பலன் கிடைச்சாச்சி.... அப்புறம் என்ன எப்பபோகலாம்?"

"நம்பர் குடுத்தான் அவர்கிட்ட பேசிட்டு முடிவெடுக்கலாம். அவரு எதாவது வேகத்துல சொல்லிட்டு அப்புறம் நாம போன் பண்றப்ப வரவேண்டான்னு சொல்லிட்டா..."

"அப்படியெல்லாம் சொல்லமாட்டரு... நீ பேசுப்பா..."

"எனக்கு நெர்வஸா இருக்கும்மா... நீ பக்கத்துல இருந்தா..."

"இங்க பாருப்பா... இதெல்லாம் தள்ளிப்போடுற மாட்டரே இல்லை. நான் இப்ப அங்க உடனே வரமுடியாது. பெர்மிஷன் கேட்டாலும் ஒன்னவர் டிராவல் பண்ணனும்... நாட் பாஸிபில்... சோ... நீயே பேசு... பேசிட்டு கூப்பிடு..."

"ஓகே... "



செல்போன் அடித்துக் கொண்டே இருந்தது யாரும் எடுக்கவில்லை. மூன்றாவது முறை எடுத்து அலோ என்றழைத்த குரலைக் கேட்டதும் அம்மா என்று தெரிந்து கொண்டார்.

"யாரு பேசுறியா... அவுக வெளிய போயிருக்காக... வந்தோடனே பேச சொல்றேன்..."

"அம்மா..." குரல் அடைத்தது.

"சந்திரா..." அம்மாவின் குரல் உடைந்தது. ராமச்சந்திரனான நான் எல்லாருக்கும் ராம் ஆனபோது அம்மாவுக்கு மட்டும் இன்னும் சந்திரன் தான்.

"அம்மா... நல்லாயிருக்கியா..?" அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டேன்.

"ம்... எப்படியிருக்கே சந்திரா... புள்ளைங்க நல்லா இருக்குங்களா?" நலம் விசாரித்த அம்மா ஏனோ லிசாவை தவிர்த்தாள்.

"எல்லாரும் நல்லா இருக்கோம்மா... அப்பா..." அதற்கு மேல் பேச வரவில்லை.

"வெளியில போனாரு... இப்ப வந்துடுவாரு..."

"சரிம்மா... அண்ணன் எப்படியிருக்கு..?"

"அவன் நிலமைதாண்டா ரொம்ப மோசம்... கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுட்டு பிடிவாதமா இருக்கான்."

"ம்..."

"இந்தா அப்பா வந்துட்டாரு... என்னங்க நம்ம சந்திரன்..."

அங்கு அமைதி நிலவ, எனக்குள் பதட்டமானது.

"அப்பா.... அப்பா... அலோ அப்பா.." கத்திக் கொண்டேயிருந்தேன்.

"சந்திரா அவரு மாறினாலும் அவரோட வரட்டுக்கவுரவம் இன்னும் மாறலை எப்ப வாரேன்னு என்னைய கேக்கச் சொல்றாரு"

"அம்மா... அப்பா பேச மாட்டாராம்மா..." அழுகை வந்தது.

"இங்க வந்தியன்னா எல்லாம் சரியாகும்... அவருதானே உன்னை வரச்சொன்னாரு... பேசாம எங்க போகப் போறாரு... சரி எப்ப வாரே..?"

"கம்பெனியில லீவு வாங்கிட்டு போன் பண்றேம்மா..." என்றவன் சில விஷயங்களை பேசிவிட்டு போனைவைத்தான். பின்னர் முருகனுக்கும் லிசாவும் போன் செய்து விஷயத்தை சொன்னான்.



அடுத்த ஒரு வாரத்துக்குள் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி இந்தியா செல்ல விமான டிக்கெட்டும் பதிவு செய்துவிட்டான். எப்ப வரும் என்று காத்திருந்த அவர்களுக்கு அந்த நாளும் விரைவில் வந்தது. அம்மா, அப்பா, அண்ணன், முருகன் குடும்பம் என எல்லாருக்கும் பாத்துப்பாத்து வாங்கிய பொருட்களுடன் சென்னை விமான நிலையத்தில் இறங்கியபோது ராமுக்கு அழுகையே வந்துவிட்டது.

"ப்ளீஸ் ராம் கண்ட்ரோல் யுவர்செல்ப்..." என்று ஆதரவாய் அவனைப் பற்றிக்கொண்டாள் லிசா.

வெளியே அவனுக்காக காத்திருந்தான் முருகன்...அவன் பின்னே அம்மா அப்பாவை தேடினான் ராம். அவர்களைக் காணவில்லை.

அவனை கட்டிப்பிட்த்துக் கொண்டவன், "என்னடா... அப்பா, அம்மாவைக் காணோம்" என்றான்.

"வீட்ல இருக்காங்க... வா போகலாம்..." என்றபடி காருக்கு அழைத்துச் சென்றான்.

"என்னடா இது... அவங்க வருவாங்கன்னு எவ்வளவு சந்தோஷமா வந்தேன். இப்படி பண்ணிட்டாங்களே..." என்று புலம்பியவன், "சாரிடா... உன் தங்கச்சி கூட போன்ல பேசியிருந்தாலும் இப்பதான் நேர்ல பாக்குறே... அறிமுகம்கூட செய்யலை..."

"எங்களுக்கு அறிமுகம் தேவையில்லை..." என்று இருவரும் ஒரே நேரத்தில் சொல்ல...

"இருந்தாலும் ஒரு முறை இருக்குல்ல... இவங்கதான் லிசா... மை டார்லிங்.... இவங்க அகிலா, அவங்க லாவண்யா... ஓகே"

"அகி, லாவ் இது உங்க மாமா முருகன்..."

"எங்களுக்கு நல்லா தெரியும்பா... இந்தியால எங்களுக்கு தெரிஞ்ச சொந்தம் எங்க முருகன் அங்கிள்தான்... "

"சரி... சரி... எதோ அறிமுகப்படுத்தினா எல்லாரும் காலை வாருறீங்களே" என்றான் ராம்.



காரை நேராக நகரின் மையப்பகுதியில் இருக்கும் பிரபல மருத்துவமனையான புனிதா மருத்துவமனைக்குள் நுழைத்தான் முருகன்.

"இங்க எதுக்குடா... யாரையாவது பார்க்கப் போறியா?"

"சாரிடா ராம்... அப்பாவுக்கு..." மேலே சொல்லுமுன்...

"அப்பாக்கு என்னடா ஆச்சு..." பதறினான் ராம்.

"ரெண்டு நாளைக்கு முன்னால கை, காலெல்லாம் இழுத்துக்கிச்சு... பேச்சும் வரலை... டாக்டர்ஸ் சரி பண்ணிடலாமுன்னு சொல்லியிருக்காங்க..."

"இதை ஏண்டா எங்கிட்ட அப்பவே சொல்லலை..." உடைந்தான்.

"பல வருஷத்துக்குப் பின்னால சந்தோஷமா வாரான்... அவனுக்கு எதுவும் தெரிய வேண்டான்னு அம்மாவும் அண்ணனும் சொல்லிட்டாங்கடா... அதான்"

"அப்ப அப்பா எங்கிட்ட பேச மாட்டாரா.... அவரு சொன்ன சொல்லு உண்மையாகிடுமா?" கதறினான். அவன் அழுவதைப் பார்த்து அனைவரும் அழுதனர்.

"இல்ல ராம்... அப்பா உங்கிட்ட பேசுவாங்க... காம்டௌன் ராம்... காம்டௌன்..." தேற்றினாள் லிசா.

அப்பா ராமான்னு கூப்பிடுவார் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு வாரகாலமாக உறங்கும் சமயம் தவிர மற்ற நேரமெல்லாம் அவர் அருகிலேயே இருந்தான்.அவன் நம்பிக்கை வீணாகாமல் இருக்கட்டும்.

-'பரிவை' சே.குமார்.

24 கருத்துகள்:

  1. அருமையான கதை.. அழகா சொல்லியிருக்கீங்க...

    பதிலளிநீக்கு
  2. வாங்க வெறும்பய அண்ணா...
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க மேனகாக்கா
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நேர்த்தியான நடையில் கதையை சொல்லியிருக்கிறீர்கள்.. அற்புதம்!

    பதிலளிநீக்கு
  4. காதலர்கள் பரிதவிப்பு பெற்றேரின் மீது ... அப்படியே தத்துருவமாக கண் முன் நிறுத்துகிறது உங்கள் கதை.. நல்ல எதிர்ப்பார்புடன் கதை முடிகிறது.. ஒரே வேகத்தில் கதை செல்கிறது.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா2/11/10, 4:32 AM

    குமார் அருமையான கதை..
    செம டச்சிங்..

    பதிலளிநீக்கு
  6. வாங்க வானதி...
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஜி...
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சரவணன்...
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க மதுரை சரவணன்...
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க பாலாஜி சரவணா...
    உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கதை மாதிரியே தெரியலைங்க.. ராமுக்காக வேண்டிக்கணும் போல இருக்கு..

    பதிலளிநீக்கு
  9. கதை மனதைப்பிழிந்து கண்களில் கண்ணீர்
    வரவழைத்து விட்டது.ஒரு தேர்ந்த எழுத்தாளரின் கதையோ என்று எண்ணுமளவு உள்ளது பத்திரிக்கைகளுக்கு எழுதி அனுப்பலாம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல கொண்டு போயிருக்கீங்க கதைய.. வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  11. நிஜ‌ம் போல் தோன்றுவ‌து தான் க‌தையின் வெற்றி.
    நிஜமெனில் க‌தை நடை அருமை. அல்ல‌ எனில்
    க‌தையும் அருமை க‌டைசி திருப்ப‌த்துட‌ன்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க இர்ஷாத்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க சுசிக்கா...
    சத்தியமா கதை தாங்க... 100% கற்பனையே...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஜெஸ்வந்தி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க asiya அக்கா...
    ரொம்ப நன்றிக்கா.... பத்திரிக்கைகளில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்து நிறைய எழுதியாச்சுக்கா... அபுதாபி வந்தும் சில பத்திரிக்கைகளில் எழுதியிருக்கேன். இப்ப அவ்வளவாக அனுப்புவதில்லை.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க கண்ணன் சார்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வாசன்...
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    100% கற்பனைக் கதைதான்...

    பதிலளிநீக்கு
  15. சிறுகதை நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. இனிய தோழா, வணக்கம். உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது? இந்த கதையை பல இடங்களில் கண்ணீருடன் படித்தேன். மென்மையான உணர்வுகளை பாசம் குறையாமல் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். மிக அழகாக எளிமையாக எழுதி அசத்துகிறீர்கள் நண்பா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  17. உணர்வு பூர்வமா இருந்ததுங்க கதை

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி