திங்கள், 4 அக்டோபர், 2010

கிராமத்து நினைவுகள்: தேரோட்டம்

 
 கண்டதேவி கோவிலும் தேரும்
 
எங்கள் ஊருக்கு மிக அருகில் இருக்கும் கண்டதேவியில் வருடா வருடம் ஆனி மாதத்தில் வரும் கேட்டை நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.

நாங்கள் படிக்கும் காலத்தில் தேரோட்டம் என்பது எங்களுக்கெல்லாம் குதூகலத்தை வரவழைத்த ஒரு அற்புதமான திருவிழா. சுற்று வட்டாரத்தில் இருக்கும் அத்தனை மக்களும் மாட்டு வண்டியிலும்... காரிலும்... நடந்தும்... வந்து கூடி களிக்கும் ஒரு இனிய திருவிழா. அந்த தினத்தில் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

தேரோட்டத்துக்கு காப்புக்கட்டி பத்து நாட்கள் விழா நடக்கும். முதல் எட்டு நாட்கள் வம்சம் படத்தின் கிளைமாக்சில் காட்டப்படுவது போல் தினம் ஒரு மண்டகப்படியும் அதனைத் தொடர்ந்து நாடகம் அல்லது திரைப்படம் என எதாவது ஒரு கலை நிகழ்ச்சியிருக்கும்.



எங்கள் ஊரில் இருந்து பத்து நிமிடத்திற்குள் வந்துவிடலாம்... கலை நிகழ்ச்சி பார்ப்பதற்காக அம்மாவிடம் அழுது சம்மதம் வாங்கி கூட்டமாய் கிளம்பி வெளிச்சமில்லாத அந்த இருட்டில் நடந்து வருவோம். சில சமயங்களில் அம்மாவும் வருவதுண்டு. அதிகம் படம் பார்க்க மட்டுமே செல்வோம், நாடகம் பார்க்க நாட்டமிருப்பதில்லை. கம்பை ஊண்டி திரைகட்டி இரண்டு படம் ஓட்டப்படும். முதலில் படம் சரியாக வருகிறதா என்பதை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆரின் பாடலான 'கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்...' என்ற பாடல் போடுவார்கள்.

சில சமயங்களில் நாங்கள் நடந்து வரும்போதே ஆரம்பித்து விடுவார்கள். டவுசரை கையில் பிடித்துக் கொண்டு ஓடி வந்து இரவு முழுவதும் விழித்திருந்து படத்தை பார்த்து அதிகாலையில் சாமி புறப்பாடு பார்த்து கிளம்பிச் செல்வோம். அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் போய் தூங்கியதும் உண்டு.... போகாமல் மட்டம் போட்டதும் உண்டு.

இடையில் கதவடை என்ற நிகழ்ச்சியும் பாரி வேட்டை என்ற நிகழ்ச்சியும் நடைபெறும் அப்பொழுதெல்லாம் தவறாமல் சென்று விடுவோம். அதற்காக பள்ளியில் கடைசி பாடவேளை அனுமதி பெற்று வீட்டுக்கு வந்து வேகவேகமாக கிளம்பிச் செல்வோம். வரும் போது பொரி உருண்டை தின்றபடி பேசிக்கொண்டு வருவோம்.

பெரிய தேர் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்னர் கம்புகள் கட்டும் பணி ஆரம்பித்து தேரோட்டத்துக்கு முதல்நாள் அலங்கரித்து அழகாக நிற்கும். நாங்கள் பள்ளிவிட்டு வரும்போது எங்கள் கண்மாய்கரையில் ஏறியதும் மரங்களுக்கு இடையே தூரத்தில் காற்றில் பறக்கும் கொடியுடன் தனது உச்சியை காட்டிக் கொண்டிருக்கும் தேரைப் பார்த்து 'டேய் தேரை கட்டிட்டாங்கடா...' என்றும் 'அங்க பாருடா... பெரிய தேரு...' என்று கூவியும் சந்தோஷித்து மகிழ்வோம்.

தேரோட்டத்தன்று பள்ளிக்கெல்லாம் விடுமுறை... வீட்டில் சொந்த பந்தங்களுச் சொல்லி கிடாயோ, கோழியோ அறுத்து விருந்து வைத்து சந்தோஷமாக சாப்பிட்டு மாலை மூணு மணிக்கெல்லாம் கோவிலுக்கு சென்று விடுவோம். கூட்டம் அலை மோதும்... போனதும் தேர் அருகில் செல்லாமல் எங்க சொந்தங்கள் வந்து நிற்கும் இடங்களைத் தேடிச் செல்வோம். அஞ்சோ பத்தோ தேரோட்டக் காசு கிடைக்கும் அதை விட மனசு வருமா அதற்காகத்தான். அதை வாங்கி மாம்பழமோ சுவிட்டோ வாங்கி சுவைக்கலாம் அல்லவா?

தேர் நல்ல உயரத்தில் அழகாய் அலங்கரிக்கப்பட்டு முன்னர் பொம்மைக் குதிரைகளைத் தாங்கி நிற்கும். அதன் மேலே மேளக்காரர்கள், ஐயர்கள், முக்கியஸ்தர்கள் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் மேலே ஏறுவதற்கு தோதாக தேரின் நிலை அருகே மாடிப்படி போல் கட்டி உள்ளார்கள்.

தேரின் முன்னே நான்கு வடங்கள் நீளமாக போடப்பட்டிருக்கும் பத்துப் பதினைந்து கிராமங்கள் இணைந்து ஒரு நாடு என்று அழைக்கப்படும். நான்கு நாட்டாரும் வந்ததும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு தேர் இழுக்க ஆயத்தமாவார்கள். தேருக்கு முன்னே நிறுத்தப்பட்டிருக்கும் சப்பரத்தை சிறுவர்கள் இழுக்க, அது முதலில் செல்லும் அதற்கு முள்ளுப் பொறக்கி சாமி என்று பெயர். அதன் பின் தேர் நான்கு நாட்டார்களால் இழுக்கப்படும் அப்போது அது குலுங்கி... அசைந்து ஓடத்துவங்கும் அந்த அழகை பார்த்து ரசித்தலே எங்களுக்கு பரம சந்தோஷம். பின்னர் சிறிது தூரத்திற்கு ஒருமுறை கட்டை போட்டு நிறுத்தி தீப ஆராதனை பார்க்கப்படும். அதன் பிறகு 'ஊய்' என்ற சத்தத்துடன் தேங்காய்ப்பூ துண்டுகள் சுழல மீண்டும் இழுக்கப்படும்.

பெரிய தேர் வீதியின் முனையில் திரும்பியதும் சின்னத் தேர் என்று அழைக்கப்பட்ட அம்மன் தேர் இழுக்கப்படும். இது கடகடவென்று ஓடிவரும். இதுவும் இடையில் நிறுத்தப்பட்டு தீப ஆராதனை பார்க்கப்படும். நான்கு வீதிகளிலும் சுற்றி வரும் தேரைக்காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருப்பர்.

நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் நான்கு வீதிகளில் முதல் வீதியின் முடிவில் ரைஸ்மில் அருகில் வரும் போது கவனமாக திருப்பாவிட்டால் ரோட்டை விட்டு இறங்கிவிடும். பின்னர் பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் ரோட்டில் ஏற்றப்பட்டு வலம் வரும். சில சமயங்களில் மூன்றாவது வீதியின் முடிவில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருக்கும் பொட்டலில் இறங்குவதுடன் பதுங்கியும் மின்சாரவயரில் மாட்டிக் கொண்டும் நிற்கும். அப்போது எடுக்கப்படும் முடிவுகள் பலன் தராமல் போகவே, அவசரமாக நாட்டார்கள் கூடி மறுநாள் வந்து இழுப்பது என்று முடிவு செய்து செல்வார்கள். அடுத்த நாள் வந்து மீண்டும் இழுத்து அது கிளம்பிய இடத்தில் நிறுத்திய நாட்களெல்லாம் உண்டு.

தேர் நல்லபடியாக வந்து அதன் நிலையில் (நிலக்குத்துதல் என்று வட்டார வழக்கு) நின்றதும்தான் கூட்டம் நிம்மதியாய் கிளம்பும். ஊருக்குள் சென்றதும் கோவிலுக்கு வரமுடியாமல் இருக்கும் பெரியோரும் பெண்களும் கேட்கும் முதல் கேள்வி 'தேர் நிலக்குத்திடுச்சா' என்பதே. தேர் நிலைக்கு வந்ததும் மேலிருந்து மாம்பழம் கூடை கூடையாக வீசப்படும். அதை எடுத்தால் கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் ஆகுமெனற கதையும் உண்டு. மாம்பழங்கள், பொறி உருண்டை என எல்லாம் வாங்கிக்கொண்டுதான் வீடு திரும்புவோம்.

தேரோட்டம் முடிந்த அடுத்த நாள் நடத்தப்படும் சத்தார்னம் என்ற நிழ்வுடன் தேரோட்ட திருவிழா இனிதே முடியும்

பின்னர் கால மாற்றத்தில் ரோடுகள் விஸ்தாரமாக போடப்பட்டதால் தேர் விரைவாக நிலையை அடைந்தது. வடங்கள் திரித்து கயிருபோல் பயன்படுத்திய காலம் போய் நான்கு வடங்களும் சங்கிலியாய் மாறின.


ஆனால் மனிதர்களுக்குள் சமாதானம் தழைக்காததாலும் அரசியல் அல்லக்கைகளின் ஆதிக்கத்தாலும் தேரோட்டம் நின்று சில காலமாகிவிட்டது. அரசியல் மாற்றங்களின் போது இடையில் சில காலம் நடத்தப்பட்ட தேரோட்டம் இப்போது நடத்த முடியாத நிலையில்...

பிரச்சனைகளை தீர்க்க முடியாத சிவகங்கை சமாஸ்தான ராணியார் அவர்கள் கும்பாவிஷேகத்திற்கு கோவிலை தயார் படுத்தச் சொல்லிவிட்டார்கள். இரண்டு வருடமாக வர்ணம் பூசும் பணி நடப்பதால் தேரோட்ட பதற்றமோ, போலீஸ் குவிப்போ இல்லாமல் இருக்கின்றது.

அடுத்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா என்பதோ.... இனிமேல் நடக்குமா என்பதோ தெரியாமல் அப்பகுதி மக்கள் தவிப்பில் இருக்கிறார்கள். இனிமேல் மீண்டும் நடத்தப்பட்டாலும் எங்களுக்கு சிறுவயதில் கிடைத்த சந்தோஷம் இன்றைய சிறுவர்களுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.

-'பரிவை' சே.குமார்

32 கருத்துகள்:

  1. //இனிமேல் மீண்டும் நடத்தப்பட்டாலும் எங்களுக்கு சிறுவயதில் கிடைத்த சந்தோஷம் இன்றைய சிறுவர்களுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.
    //

    சரியா சொன்னிங்க குமார்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. சாதிபிரசினை மிகுந்த இந்த கோவிலின் தேரோட்டம் நடக்காமல் இருப்பதே நல்லது ...

    பதிலளிநீக்கு
  3. குமார்...எனக்கும் ஊர் ஞாபகம் வருது.ஆனால் இப்பல்லாம் முந்திப்போல திருவிழாக்கள் நடப்பதில்லை என்று அம்மா சொல்லுவா.இராணுவக் காவல் சுவாமிக்கும்!

    பதிலளிநீக்கு
  4. அருமை! எனக்குள்ளும் கொசுவத்தி பத்த வச்சிட்டுது!

    பதிலளிநீக்கு
  5. குமார்,மண் சார்ந்த பதிவு,மேலும் லே அவுட்டும் அருமை.இதற்காக மெனக்கெட்டு ஃபோட்டோ எடுத்து ஸ்கேன் பண்ணி நிறைய ஹோம் ஒர்க் பண்ணி இருக்கீங்க ,வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. தேரோட்டம் பார்த்ததே இல்லை - உங்க பதிவைப் படிச்சு ரசிச்சேன்.

    கண்ணன் பிறந்தான் - நல்ல பாட்டு. எம்.ஜி.ஆர் பாட்டா, தெரியவே தெரியாதே! இது போல பாட்டுக்கள் பொதுவா சிவாஜி ஜெமினி பாட்டா இருப்பதாலே, கொஞ்சம் கூட ஐடியா இல்லை. நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் திருவிழா விவரனையில் லயித்துப் போனேன்.மனதைத் தொட்டது..

    பதிலளிநீக்கு
  8. தேரோட்டம் பார்த்த திருப்தி வந்ததுங்க.. ;-))
    நல்ல பகிர்வு..

    பதிலளிநீக்கு
  9. ஊரில் இருந்த போது திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். இப்ப அதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நல்ல பதிவு, குமார்.

    பதிலளிநீக்கு
  10. தேரோட்டம் பலத்த போலீஸ் காவலுடன் நடக்கும்! மருத்துவக் குழுவுடன் நான் சென்றிருக்கிறேன்! பெரிய ஊரணி !

    பதிலளிநீக்கு
  11. இனிய தோழமைக்கு, வணக்கம். உலகின் எந்த மூலையில் தமிழன் வசித்தாலும்...., பிறந்த மண்ணின் வாசனையில் தான் உயிர்த்திருக்கிறான் என்கிற பசுமையான நினைவை பகிர்ந்திருக்கிறீர்கள். உங்கள் தேரின் பின்னால் என் நினைவு ஓடுவதை தவிக்க முடியவில்லை. அருமை...அருமை நண்பா, உங்கள் நினைவும்..., எழுத்து நடையும். தேரோடும் வீதியில் இன்னமும் என் மனம் சுற்றித் திரிகிறது. கடைசியாய் சொன்ன "இன்றைய அவலங்கள்" மனதை பிசைகிறது தோழா.., அன்றிருந்த குடும்ப பாசம், ஒற்றுமை, சமூக ஒற்றுமை....... இன்று இல்லாமல் போனதற்கு....... நம்முடைய அரசியல் வெறியாட்டங்கள் முக்கிய காரணம் என்பது சரியான அலசல். மீண்டும் திரும்புமா....? அந்த நாட்கள்...நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மீண்டும் நடத்தப்பட்டாலும் எங்களுக்கு சிறுவயதில் கிடைத்த சந்தோஷம் இன்றைய சிறுவர்களுக்கு கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்.

    கண்டிப்பாக குமார்
    நானும் சிறு வயதில் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருக்கிறேன் நிறைய இப்போது நினைத்தால் ஏக்கம் தான் வருகிறது

    பதிலளிநீக்கு
  13. வாங்க சுசி மேடம்...
    உண்மைதானே... இப்ப உள்ள சிறுவர்களை வீடியோ கேமும் கணிப்பொறியும் கட்டிப் போட்டதுடன் மற்றவற்றை மழுங்கடிக்கச் செய்துவிட்டனவே...

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. வாங்க மேனகா மேடம்...
    வாங்க வித்யா மேடம்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஹேமா...
    இங்கே போலீஸ் காவலில் தெய்வங்கள் தெருவினில் அனாதையாக்கப் படுகின்றன.
    அங்கே ராணுவத்துக்கு இடையே அல்லல்படுகின்றன.
    விழாக்கள் குறைந்து வருவதால் சந்திப்புக்களும் குறைகின்றன.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வாங்க இலா...
    கொசுவத்தியை நல்லா எரிய விட்டுடுங்க...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க சி.பி.செந்தில்...
    அதெல்லாம் ஒண்ணுமில்லங்க... நாளு வலையை ஒண்ணாக்கியாச்சுல்ல... அதான் சில மாற்றங்களை சிரத்தையுடன் செய்ய வேண்டியுள்ளது.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க அப்பாத்துரை...
    முதலில் சாரிங்க... வேலைப்பளூவால் உங்கள் தளத்திற்கு வரவில்லை என்றாலும் தவறாது கருத்துக்களை பதிவிடுறீங்க... அடுத்த வாரம் சரியாகும்ன்னு நினைக்கிறேன்... உங்கள் தளம் வருகிறேன்.
    கண்ணன் பிறந்தான் எம்.ஜி.ஆர். பாடல்தான்... நல்லாயிருக்கும்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க மோகன்ஜி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஆனந்தி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க வானதி...
    உண்மைதான்.... நான் இங்கு வந்தபோதும் இதுவரை எங்கள் ஊர் அம்மன் திருவிழாவுக்கு போய் வருகிறேன்... அந்த சந்தோஷத்தை அனுபவிக்க...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க தேவன் சார்...
    ஆமா... நீங்க கண்டதேவி வந்திருக்கிங்களா? கோவிலின் பின்னே எந்த நேரமும் நிறைந்திருக்கும் பெரிய ஊரணி... அதில நாங்க போடாத ஆட்டமா? நீச்சல்ல இந்தக் கரையில இருந்து அந்தக் கரை வரைக்கும் போனதெல்லாம் உண்டு.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க பயணமும் எண்ணங்களும்...
    முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றிங்க.

    வாங்க தமிழ்க்காதலன்...
    உங்கள் கருத்து முற்றிலும் உண்மை நண்பா.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க சரவணன்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. சிறுவயதில் நெல்லையிலிருந்து ஆழ்வாற்குறிச்சி தேரோட்டத்துக்கு அழைத்துச் செல்வார்கள் வீட்டில். அந்த நினைவுகள் வந்து விட்டன. அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  24. //
    ஆனால் மனிதர்களுக்குள் சமாதானம் தழைக்காததாலும் அரசியல் அல்லக்கைகளின் ஆதிக்கத்தாலும் தேரோட்டம் நின்று சில காலமாகிவிட்டது. அரசியல் மாற்றங்களின் போது இடையில் சில காலம் நடத்தப்பட்ட தேரோட்டம் இப்போது நடத்த முடியாத நிலையில்...
    //
    உண்மைதான் குமார். எனக்கும் அந்த பெரிய தேர் ஊர் சுற்றி வருவதைப் பார்க்க மிகவும் ஆசைதான். ஆனால் சாதிப்பிரச்சனை. வருத்தம் மேலிடுகிறது. அருமை. நம்ம வழக்கு அப்படியே வந்திருக்கு!

    பதிலளிநீக்கு
  25. நான் கல்லல் தேரோட்டம் அடிக்கடி பார்ப்பதுண்டு... அருமையான தருணங்கள்...

    பதிலளிநீக்கு
  26. வாங்க ராமலெஷ்மி அக்கா...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க கயல்...
    நீங்க கண்டதேவி தேரோட்டத்துக்கு வந்திருக்கிறீர்களா?
    சாதிப்பிரச்சினைக்கு எப்போ தீர்வு கிடைப்பது? எப்போ தேர் ஓடுவது... எல்லாம் அந்த சொர்ணமூர்த்தீஸ்வரரின் கையில்தான் இருக்கிறது... பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ரோஸ்விக்....
    தேரோட்ட நினைவுகள் எப்பவுமே ஆனந்தம் தரும் நினைவுதான்.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சமாதானம் நிலவட்டும்....


    நல்ல நினைவுகள் குமார் .
    அருமையா எழுதி இருக்கீங்க..

    (உங்க தளம் திறக்க எனக்கு மிக நேரமெடுக்கிறது.டெம்ப்ளேட் மற்றும் எக்கசக்க விட்ஜெட்கள் இருக்ககறது காரணமா இருக்கலாம்)

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி