வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சினிமாக்களம் (சவால் சிறுகதை)



(சற்றே 'பெரிய' சிறுகதை - படம் அருளிய கூகிளாருக்கு நன்றி)

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பின் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த அந்த நால்வருமே சினிமா ஆசையில் சென்னை வந்தவர்கள்.

"என்ன மாப்ளே... இன்னைக்கு போன காரியம் என்னடா ஆச்சு..?" என்று பேச்சை ஆரம்பித்தான் ரகு. இயக்குநராகும் ஆசையில் புதுக்கோட்டையில் இருந்து வந்தவன். நல்லா கதை எழுதுவான். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் சத்ரியனிடம் கடந்த சில மாதமாக உதவி இயக்குநராய் இருக்கிறான். அவரது தற்போதைய படம் இவனது கதைதான் என்பது அவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

"இயக்குநர் சங்கரை பல நாள் அலைச்சலுக்குப் பின்னர் இன்றுதான் பார்த்தேன்." என்று பேச்சை நிறுத்தினான் மதுரைக்காரனான சுந்தர். இவனும் இயக்குநர் ஆசையில் அதுவும் பிரமாண்ட இயக்குநர் சங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து தொழிலை கற்றுக் கொண்டு அடுத்த பிரமாண்ட இயக்குநராய் சன் பிக்ஸர்க்கு படம் பண்ண வேண்டும் என்பதை கொள்கையாய் கொண்டு சங்கர் அலுவலகத்துக்கு நடையாய் நடப்பவன்.

"என்னடா... அவரைப் பாத்தியா..? " ஆவலாய்க் கேட்டான் வசந்த், நடிகனாய் ஆகவேண்டும் என்று நெல்லையில் இருந்து வந்து சில படங்களிலும் சில மெகா தொடர்களிலும் தலை காட்டிக் கொண்டிருப்பவன்.

"இன்னைக்குதாண்டா மாப்ளே எங்கிட்ட பேசினாரு... நான் எழுதி பத்திரிக்கையில் வந்த கதையெல்லாம் காட்டினேன். அவருகிட்ட அசோசியேட்டா இருக்கவரு ஒருத்தரை பிரண்டாக்கி வச்சிருக்கேன். அவரும் சொன்னாரு... தம்பி இப்ப எந்திரன் பட ரீலீஸ் அது... இதுன்னு ரொம்ப பிஸி... இப்பக்கூட மலேசியா போறேன்... அடுத்த வாரம் வாங்க... அடுத்த ஸ்கிரிட் பற்றி டிஸ்கஷன் இருக்கு... நீங்களும் கலந்துக்கங்கன்னு சொல்லியிருக்காருடா..."

"ஹே... நம்மள்ள அடுத்த ஆளும் இணை இயக்குநராயிட்டான், அப்புறம் என்ன..." கோரஸாய் கத்தினர்.

"எப்படா பார்ட்டி... நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா?" என்றான் அந்த அணியின் பைனாஞ்சியர் ரமேஷ், இவனும் ரகுவும் சிறுவயது முதலே நண்பர்கள். பள்ளி, கல்லூரி மேடைகள் அவனை நல்ல பாடகனாக்கி வைத்திருந்தன. அதனால் பாடகனாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தவன். படித்த எம்.பி.ஏவை வைத்து நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து வந்த வருமானத்தில் நண்பர்களுக்கும் அறைக்கும் செலவு செய்து கொண்டு அப்பப்ப பெற்றோருக்கும் பணம் அனுப்பவும் செய்தாலும் பாடகன் கனவு மனதுக்குள் நிறைய விழுதுகளை விட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

"என்ன பார்ட்டின்னாலும் எங்க மூணு பேர்கிட்டயும் இப்ப சல்லிக்காசு பெயராது. நீதான் செலவு பண்ணனும்... அவனுக்கு பணம் கையில் கெடச்சதும் உனக்கு திருப்பிக் கொடுத்துடுவான் இல்லடா மாப்ளே..."

"அட ஏண்டா... நீங்க வேற... அவருகிட்ட சேர்ந்த பின்னாடி கண்டிப்பா பார்ட்டி வைக்கிறேன் மாப்ளே... அது வரைக்கும் ஆளைவிடுங்க்டா சாமிகளா... இந்த ரகு இன்னம் பார்ட்டி வைக்கலை... அதுக்குள்ள என்னைய கேக்க ஆரம்பிச்சிட்டிங்க..."

"மாப்ளே... பார்ட்டி வைக்கிறது பெரிய விஷயமில்லைடா... இப்ப எங்கிட்ட காசேயில்லைடா... எல்லாத்துக்கும் ரமேஷ்கிட்ட கேட்டா நல்லாயிருக்காதுடா...படம் எடுத்து முடிச்சதும் என்னோட கதைக்கு பணம் தர்றேன்னு சொல்லியிருக்காருடா... கிடைச்சதும் கண்டிப்பா பார்ட்டி வச்சிடலாம்... என்ன ஒகேவா..."

"அதுக்கு என்னடா இப்ப அவசரம்... நீ சீக்கிரம் படம் எடுக்கணும் அதுதாண்டா எங்க ஆசையெல்லாம்..."

"கண்டிப்பா நடக்குமுடா... நான் எடுக்கப்போற படத்துக்கான கதையெல்லாம் ரெடியாத்தாண்டா வச்சிருக்கேன். இப்ப அமையாதுடா... இன்னும் கொஞ்ச நாளாகுமுடா...பார்க்கலாம் எல்லாம் கடவுள் செயல்... நான் எடுக்கிற படத்துல கண்டிப்பா நீ பாடுறே... இவனும் நல்ல கதாபாத்திரத்துல நடிக்கிறான்... அதுல எந்த மாற்றமும் இல்லைடா..."

"நான் இல்லையா?" என்றான் சுந்தர்.

"நீதான் பெரிய பட்ஜெட் இயக்குநர்கிட்ட சேர்ந்துட்டியே... அப்புறம் என்ன பெரிய பட்ஜெட் படமாத்தான் இயக்குவே... யார்கண்டா நான் களவாணி மாதிரி படம் பண்றப்போ நீ எந்திரன் மாதிரி படம் பண்ணி எனக்கே போட்டியா நின்னாக்கூட நிப்பே" என்று சொல்லி ரகு சிரிக்க, வசந்தும் ரமேஷூம் சேர்ந்து கொண்டனர்.

"போங்கடா அங்கிட்டு... நீங்கள்லாம் இல்லைன்னா இந்த சென்னையில நான் யாருடா... கடவுள் புண்ணியத்துல நான் நல்ல நிலைக்கு வந்தாலும் வராட்டாலும் கடைசி வரைக்கும் எனக்கு எல்லாமே நீங்கதான்டா... பணம் காசு வந்ததும் குணத்தை மாத்திக்கிற சாதி நான் இல்லைடா..."

"சே... என்னடா மாப்ளே... உன்னையப் பத்தி தெரியாதா... சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னேன்..." என்ற ரகுவின் செல்போன் 'உன் பெயர் சொல்ல ஆசைதான்...' என்று அழைக்க, "மாப்ளக்கு தங்கச்சிக்கிட்ட இருந்து போன் வந்தாச்சு... இனி இப்ப படுக்க வரமாட்டான்... " என்று வசந்த் நண்பர்களிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

"போங்கடா... படுங்க வாரேன்..." என்றபடி போனை ஆன் செய்து மொட்டைமாடி கட்டைச் சுவற்றில் அமர்ந்து "ம்... சொல்லும்மா..." என்று பேச ஆரம்பித்தான்.

*****

சில வாரங்கள் ஓடிய நிலையில் படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய ரகுவை இருக்கச் சொன்னார் இயக்குநர். சரி இன்னைக்கு பணம் தருவார் நாளைக்கு மகாபலிபுரம் போயிடலாம் என்று மனதிற்குள் நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

தயாரிப்பாளருடன் பேசிவிட்டு வந்த இயக்குநர் "வா ரகு... கார்ல போகயில பேசிக்கிட்டே போகலாம்..." என்றார்.

அண்ணாசாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி போய்க் கொண்டிருந்த காரை ஓட்டியபடி "ரகு உனக்கு ஒண்ணும் வேலையில்லையே..." என்று கேட்டார்.

"இல்லண்ணே... என்ன விசயம்?"

"அடுத்த படத்தைப்பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... அதான்..."

"எங்கிட்ட எண்ணன்னே பேச இருக்கு... எப்ப ஆரம்பிக்கப் போறோம்."

"சொல்றேன்... அப்படியே பீச்சுக்குப் போயி பேசலாமா..?"

"ம்... போகலாண்ணே..." என்றபடி செல்போனை எடுத்து ரமேஷூக்கு போன் செய்து, "மாப்ளே நான் எங்க டைரக்டர் அண்ணங்கூட இருக்கேன்... லேட்டாத்தான் வருவேன் " என்று சொல்லி வைத்த போது கார் சிவாஜி சிலையில் திரும்பி பீச்சுக்குள் நுழைந்தது.

காரை பார்க் செய்துவிட்டு இறங்கி, கூட்டமில்லாத பகுதியில் நடந்து கடலோரத்தில் இருந்த ஒரு படகின் முனையில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

சிகரெட் ஒன்றை எடுத்துப் பத்தவைத்தபடி அவனிடம் பாக்கெட்டை நீட்ட அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

"சொல்லுங்கண்ணே..."

"அடுத்த படம் பண்றது தொடர்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி முன்னணி தயாரிப்பாளர் பரிசல்காரன் சார்கிட்ட பேசினேன்."

"அண்ணே அவர் பண்ற எல்லாபடமும் சூப்பர் ஹிட்டுண்ணே.... அடுத்தது அவர் படமா.... கிரேட்ண்ணே... ஆமா அவரு என்னண்ணே சொன்னார்... பண்ணலாம்ன்னு சொன்னாரா..."

"ம்... நல்லா பண்ணலாம்ன்னு சொன்னார்... ஆனா கிராமத்து சப்ஜெக்ட் வேண்டாங்கிறார்...:

"அப்புறம் என்ன சப்ஜெக்ட் வேணுமாம்... கிராமத்துக் கதையில உங்களை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு இருக்கப்போ ஏன் வேண்டாங்கிறார்."

"அவரு சொல்றதும் கரெக்ட்தான்... வரப்போற எந்திரன் தமிழ் படத்தோட டிரண்டை மாத்துதோ இல்லையோ வித்தியாசமான கதைகளை இயக்குநர்களை தேட வைக்கும் என்பது மட்டும் உண்மை. அப்ப நாம பண்ற படத்துலயும் கிராமியக்கதைக்குப் பதிலா சற்று மாறுதலா க்ரைம் கதை பண்ணினா நல்லாயிருக்குமுல்ல அப்படின்னு சொல்றாரு..."

"ஆமாண்ணே... அவரு சொல்றது சரி தானே ஒரு காதல் கோட்டை வந்தது... அதுக்குப் பின்னால பார்த்தா பார்த்து, பாக்காம, டெலிபோன் அப்படின்னு எத்தனையோ காதல்கள். ஒரு சுப்ரமண்ய புரத்துக்குப் பின்னால வட்டார வழக்கை அப்படியே வழங்கி எத்தனையோ படங்கள்... அதுமாதிரி இதுவும் டிரண்டை மாத்தலாமில்லையா..? நீங்க க்ரைம் கதை பண்ணலாமுன்னு சொல்லிட்டு வரவேண்டியதுதானே..."

"இதுல இன்னொரு பிராப்ளம் இருக்கு ரகு... சாதாரணமாக க்ரைம் சப்ஜெக்ட்டு ஒண்ணு ரெடி பண்ணிக்கிட்டு வான்னா நாம ரெடி பண்ணலாம். அவரு என்னன்னா ஒரு இங்கிலீஷ் ரைட்டரோட நாவலோட தமிழாக்கத்தை படிச்சிட்டு சில இடங்களை அடிக்கோடிட்டு கொடுத்து இருக்காரு. அதை நல்லா படிச்சுப் பார்த்துட்டு அதை தீமா வச்சு நல்ல கதை ரெடி பண்ணிக்கிட்டு வா கண்டிப்பா பண்ணலாம்ன்னு சொல்றார்..."

"ப்பூ... இவ்வளவுதானா... அதுக்கென்னன்னே நல்ல கதையா ரெடி பண்ணிடலாம்..."

"அதுக்குத்தான் உன்னைய கூட்டியாந்தேன்... இது நம்ம ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது... இப்ப பண்ணிக்கிட்டிருக்கிற கதை மாதிரி சீக்ரெட்டா இருக்கணும்..."

"அது சரிண்ணே... நான் யார்கிட்டண்ணே சொல்லப் போறேன்..." என்றபோது அவனது செல் 'உன் பேர் சொல்ல...' என்ற போது கட் செய்தான். மீண்டும் அடிக்க, "எடுத்துப் பேசு உன் பிரண்ட்ஷாத்தான் இருக்கும்" என்றார்.

"ம்... என்னடா... டைரக்டர் சார்கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்" என்றபடி பதிலுக்காக காத்திருக்காமல் கட் செய்தான். பின்னர் இயக்குநரிடம் "அண்ணே அந்த புத்தகத்தைக் கொடுங்க..."என்றான்.

"கார்ல இருக்கு... வா... தர்றேன் பாரு... எழுத முடியுமான்னு பாரு... முடியலைன்னா வேண்டான்னு சொல்லிட்டு வேற தயாரிப்பாளர்கிட்ட பேசலாம்..."

"செய்யலாம்ண்ணா....எனக்கு ஒருவாரம் டயம் கொடுங்க சூப்பர் கதை ரெடி பண்ணலாம்" என்றான் முழு நம்பிக்கையுடன்.

"இந்த நம்பிக்கைதான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சது... நாளைக்கு நீ பெரிய ஆளா வருவேடா..." என்று முதுகில் தட்டினார்.

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணா" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

இருவரும் காருக்கு வந்ததும் அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தான் அடிக்கொடிட்ட பக்கங்களின் அடையாளத்துக்கு பேப்பர் வைக்கப் பட்டிருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில் சிலவற்றை படித்துப் பார்த்தான்... பின்னர் ஒரு சில பத்திகளை மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.'

'“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'

'"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்."' புத்தகத்தை மூடி வைத்தான்.

"என்ன ரகு... முடியுமா?"

"கண்டிப்பா முடியும்... எனக்கு இந்த புத்தகம் வேணும்... இந்தக் கதைய ஒரு தடவை படிச்சேன்னா நல்ல ஐடியா கிடைக்குமுன்னு நினைக்கிறேன்...."

"எடுத்துக்க... சீக்கிரம் ரெடி பண்ணு..."

"சரிண்ணே..."

"அப்புறம்... இன்னம் பணம் வரலை... வந்ததும் பேமண்ட் வாங்கிக்க... செலவுக்கு காசிருக்கா... இந்தா இதை வச்சுக்க்க..."என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டை அவனது பாக்கெட்டில் திணித்தார்.

"வேண்டாண்ணா... அப்புறம் வாங்கிக்கிறேன்..."

"இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... வீட்டுக்குப் பொயிட்டு பரிசல்காரன் சார்கிட்ட ஒரு வாரத்துல கதையோட வாரேன்னு சொல்லிடுறேன்..."

"சரிண்ணே... என் ரூம் வந்தாச்சு...நான் இங்க இறங்கிக்கிறேன்..."

"சரி பாத்துப் போப்பா... வரட்டா"

*****

"என்னடா மாப்ளே... அடுத்தபட டிஸ்கஷனா...?" என்று கேட்டான் சுந்தர்.

"ஆமாடா..."

"மறுபடி உன்னைய கதை எழுதச் சொன்னாரா...?" கோபமாய் கேட்டான் வசந்த்.

"------"

"என்னடா... அப்ப அடுத்த கதைய நீ எழுதப் போறியா... அவன் லெட்சம் லெட்சமா சம்பாதிக்க நீ கதை எழுதிக் கொடுக்கிற... உன்னோட முதக் கதைக்கு இன்னும் ஆயிரம் ரூபா கூட தரலை அதைப்பத்தி எதாவது கேட்டியா... வேற டைரக்டர்கிட்ட டிரைப் பண்ண வேண்டியதுதானே..."

"அங்கயும் இதே கதை இருக்காதுண்ணு என்னடா நிச்சயம்? விடுங்கடா"

"நீ திருந்தமாட்டே..."

"இல்லடா... இன்னும் பணம் வரலைன்னு சொன்னாரு... வந்ததும் தர்றேன்னாருடா... சரி வாங்க சாப்பிட போகலாம்.

'உன் பேர் சொல்ல ஆசைதான்...' போன் அழைக்க...

"ம்... சொல்லும்மா..."

"எங்க இருக்கே... ரூமுக்கு வந்துட்டியா..?"

"இப்பத்தான் வந்தேன்... இன்னைக்கு உன்னோட ரெக்கார்டிங் முடிஞ்சதா?"

"அப்பா... இப்பவாவது கேக்கணுமின்னு தோணுச்சே... முடிஞ்சாச்சு"

"சாரிம்மா... காலையில இருந்து நல்ல வேலை... படம் பினிசிங்ல இருக்கதால அங்க இங்க நகர முடியலை... அப்புறம் டைரக்டரோட பீச்சுல டிஸ்கஷன் அதான்"

"என்ன அடுத்தபடத்துக்கு கதை எழுதச் சொன்னாரா... இந்தப்படத்துக்கே இன்னம் பணம் தரலையில்ல...முதல்ல பணத்தைக் குடுங்க... அப்புறம் எழுதுறேன்னு சொல்ல வேண்டியதுதானே"

"அது எப்படிம்மா... முகத்துல அடிச்சமாதிரி கேக்கிறது... வரட்டும் கேக்கலாம்... "

"சரி... நான் இன்னைக்கு ரிக்கார்டிங் தியேட்டர்ல புரடியூசர் பாலாஜிகிட்ட உனக்காக பேசினேன்... நல்ல கதையோட வரச்சொல்லும்மா... கதைய பாத்துட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு... நல்ல கதையா ரெடிபண்ணிட்டு சொல்லு... அவரைப் போயி பாக்கலாம்..."

"சரிம்மா... எங்க டைரக்டரோட வேலையை முடிச்சிட்டு நல்ல கதைய ரெடி பண்றேன்..."

"சரி.... சாப்பிட்டியா?"

"இல்ல இப்பத்தான் கிளம்புறோம்.... பாத்துக்க... குட்நைட்... நாளைக்கு பார்ப்போம்."

"ஏய்... காமினி என்னடா சொல்றா?"

"தெரிஞ்ச புரடியூசர்கிட்ட பேசியிருக்காளாம்.... கதையோட வரச்சொல்லியிருக்காராம்..."

"வாவ்.... ஹே......... கூஊஊஊஊஊ" என்று கத்தியபடி அவனை தூக்கினர்.

"மாப்ளே முதல்ல நல்ல கதைய ரெடிபண்ணு.... கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும். இந்த புத்தகத்தை ஒரு மூலையில் வைடா"

"இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்..." என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.

-'பரிவை' சே.குமார்.

குறிப்பு: நண்பர் பரிசல்காரன் அவர்கள் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கான கதைக்கான கதை இது. சிறுகதைப் போட்டி குறித்து அறிய இங்கே கிளிக் செய்து படியுங்கள்... நீங்களும் எழுதுங்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

19 கருத்துகள்:

  1. "இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்..." என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.


    .......நம்பிக்கையே வாழ்க்கை..... நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லா இருக்குதுங்க..
    இவ்ளோ அப்பாவிய இருக்குற ரகுவை, ஏமாத்தாம காசு குடுத்தா சரி தான்..

    பதிலளிநீக்கு
  4. புத்திசாலித்தனமா போட்டிக்கான வரிகளை உபயோகிச்சிருக்கீங்க.. வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. நீங்க எழுதிட்டீங்க , நான் இன்னும் எழுதலை ..
    விரைவிலேயே எழுதறேன் .. வாழ்த்துக்கள் ..!!
    கதை நல்லா இருக்கு ..

    பதிலளிநீக்கு
  6. கதை சூப்பர். இயல்பான நடையில் அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு
  7. சுவாரஸ்யமா இருக்குங்க. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. கதை படிக்க நல்லாயிருக்கு,குமார்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க சித்ரா மேடம்...
    ஆம்... நம்பிக்கைதான் வாழ்க்கை...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வாங்க சுசி மேடம்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


    வாங்க ஆனந்தி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. வாங்க முகிலன்...
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றி.
    டைமண்ட் கடத்தல், போலீஸ் என்றில்லாமல் சற்று வித்தியாசமாக யோசித்ததின் விளைவே இந்தக் கதை.

    பதிலளிநீக்கு
  12. வாங்க செல்வக்குமார்...
    கண்டிப்பாக எழுதுங்கள்...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க வானதி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வாங்க மோகன்ஜி...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ஆசியாக்கா...
    //கதை படிக்க நல்லாயிருக்கு...// அவ்வளவுதானா?
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. நம்பிக்கையோடான முயற்சி.
    வெற்றிக்கு வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  15. முயற்சி வெற்றியைதரும்
    வெற்றிக்கு வாழ்த்துகள் குமார்..

    பதிலளிநீக்கு
  16. தங்கள் கதையில் நம்பிக்கையின் ஆணிவேர் ஒன்று தெரிகிறது....

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஹேமா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க மலிக்காக்கா...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    வாங்க ம.தி.சுதா...
    நம்பிக்கைதானே வாழ்க்கை...
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. குமார் கதை ரொம்ப நல்லாருக்கு.. வித்யாசமான கான்செப்ட். நல்லாருக்கு., வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. கதை ரொம்ப நல்லாயிருக்கு. பளாட் பிடிச்சிருந்தது. நானும் எழுதியிருக்கேன்.. படிச்சுப் பாருங்க

    http://moonramkonam.blogspot.com/2010/10/tamil-short-story-saval-sirukathai.html

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி