திங்கள், 12 ஜூலை, 2010

காதல் அனாதைகள்


நமக்குள் நடந்த சண்டையின்
சாரலால் அமைதியானது வீடு...!

ஆளுக்கொரு மூலையில்...
நடந்ததை மென்றபடி..!
இது முதலல்ல
தொடரும் கதைதான்..!

சண்டைக்குப் பின் சமாதானம்
என்பது நமக்குள் சுலபமல்ல..

சுடும் வார்த்தைப் பிரயோகம்
இரண்டு பக்கத்திலும்...

வீசிய வார்த்தைகளின் வீரியம்
குறைய நேரம் பிடிக்குமல்லவா..?

நமக்குள் நிகழும்
சண்டைகளெல்லாம் எதற்காக..?
விடை தெரியா வினா இது..!

ஏதோ பேசி... எதிலோ முடிந்து...
வாயிலிருந்து கைக்கு மாறும்
நிலைக்கு தள்ளப்பட்டோம் நாம்..!

யாரால்..?

யோசனையின் முடிவில்
இருவரும் தான்
என்பதே விடையானது...

நமக்குள் இருந்த விட்டுக்
கொடுக்கும் மனம் மாறியதுகூட
காரணமாக இருக்கலாம்..!

நேரம் கடக்க இருவருக்குள்ளும்
விசும்பல்கள்..!
வீணாய் கரைகிறது நிமிடம்..!

தூக்கம் மறந்த விழிகள்
சிவப்பை போர்த்தியபடி...

அழுகையின்  பிரதிபலிப்பாகக்கூட
இருக்கக்கூடும்...

கோபத்தின் வீரியம் தணியும்
கட்டத்தில் மெதுவாய் உனைப்பார்க்க...
நீயும் பார்க்கிறாய்...

வார்த்தைகள் வராததால் வந்த
சைகைக்கு ஆறுதல் தேடி
அலைந்த மனம் தோளில்
சாய்ந்து விம்முகிறது..

கண்ணீரில் கரையும் கோபம்
சூடாய் தோள்களில் இறங்குகிறது...
நமக்குள் கனன்ற கோபம் மாயமாய்..!

என்ன செய்வோம் நமக்கு
ஆறுதல் சொல்ல யாருமில்லை...
இருவருக்கும்  இருவரே உறவு...

ஆம்...
நாம் காதல் அனாதைகள்...

(இது எனது நெடுங்கவிதைகள் தளத்தில் முதன் முதலாய் நான் பதிவு செய்தது... இங்கு மீள் பதிவாய்...)

-'பரிவை' சே.குமார்

13 கருத்துகள்:

  1. உணர்வுகளை அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள். சிறு சிறு சறுக்கல்களுக்கு பின் தான் நிதானமாவதுபோல் வாழ்வும் கோபத்தில் சிவந்து கண்ணீரில் கரைந்து வளம் பெறுகிறது. சண்டையிலாத வாழ்வுசுவாரசியமற்றது. மென்மையாக அழகாய் சொன்னவிதம் மிக்க் நன்று

    பதிலளிநீக்கு
  2. ///என்ன செய்வோம் நமக்கு

    அறுதல் சொல்ல யாருமில்லை...
    இருவருக்கும் இருவரே உறவு...


    ஆம்...
    நாம் காதல் அனாதைகள்///

    அடடா.. அருமை அருமை...
    அத்தனையும் உண்மைங்க..
    சூப்பர் :-))))

    பதிலளிநீக்கு
  3. Super. Uyirukul uruvaagum chinna chinna sandaikalai ethaarthamaakiya vitham arumai.
    Dr.R.Senthilkumar,
    Devakottai.

    பதிலளிநீக்கு
  4. @நிலாமதி said...
    //உணர்வுகளை அழகாய் பகிர்ந்து இருக்கிறீர்கள். சிறு சிறு சறுக்கல்களுக்கு பின் தான் நிதானமாவதுபோல் வாழ்வும் கோபத்தில் சிவந்து கண்ணீரில் கரைந்து வளம் பெறுகிறது. சண்டையிலாத வாழ்வுசுவாரசியமற்றது. மென்மையாக அழகாய் சொன்னவிதம் மிக்க் நன்று//

    உங்கள் கருத்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நிலாமதி.

    பதிலளிநீக்கு
  5. @ Ananthi said...
    ///என்ன செய்வோம் நமக்கு

    அறுதல் சொல்ல யாருமில்லை...
    இருவருக்கும் இருவரே உறவு...


    ஆம்...
    நாம் காதல் அனாதைகள்///

    அடடா.. அருமை அருமை...
    அத்தனையும் உண்மைங்க..
    சூப்பர் :-))))//

    ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஆனந்தி.

    பதிலளிநீக்கு
  6. @Senthil said...
    //Super. Uyirukul uruvaagum chinna chinna sandaikalai ethaarthamaakiya vitham arumai.
    Dr.R.Senthilkumar,
    Devakottai.//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை,லே அவுட் டிசைன் அருமை.எழுத்துப்பிழை தவிர்க்கவும்(அறுதல்-ஆறுதல்)

    பதிலளிநீக்கு
  8. //கவிதை,லே அவுட் டிசைன் அருமை.எழுத்துப்பிழை தவிர்க்கவும்(அறுதல்-ஆறுதல்)//

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!

    ஒருமுறைக்கு பலமுறை படித்து பதிவிட்டாலும் எதாவது ஒரு எழுத்து தவறாக வந்து விடுகிறது. இனிமேல் திருத்திக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான கவிதைங்க...நல்லாயிருக்கு..

    பதிலளிநீக்கு
  10. கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு ...

    நான் உங்க எல்லா பதிவையும் தொடர்ந்து படிட்சிக்கிட்டுதான் இருக்கேன்..

    என்னன்னு தெரியலை உங்க கமென்ட் பக்கம்தான் சட்டுன்னு திறக்காம
    பல நேரம் சண்டித்தனம் பண்ணுது,

    பதிலளிநீக்கு
  11. வாங்க அஹமது...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. வாங்க கமலேஷ்...

    கருத்து நன்றி...

    நீங்க சொன்ன காரணம் எனக்கும் நண்பர்களின் வலைப்பூவில் பின்னூட்டம் இடும்போது வருவதுண்டு. அப்போது ரைட் கிளிக் செய்து ஓபன் நியூ விண்டோ போய் பின்னூட்டம் இட்டுள்ளேன்... முயற்சித்துப் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதை.. வீட்டை விட்டு ஓடிவந்து திருமணம் செய்து கொண்டவர்களின் பார்வையில் வந்திருக்கும் நிதர்சனகவிதை..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி