புதன், 13 ஜனவரி, 2010

இளமைப் பொங்கல்


பொங்கல்... நினைத்தாலே தித்திக்கும் ஒரு திருநாள்... பட்டணத்தில் வசிப்போருக்கு எப்படியோ என்னைப் போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பொங்கல் ஒரு மகிழ்வான திருநாள். அந்த இனிய திருநாளை கடந்த இரண்டு வருடமாக கொண்டாட முடியாமல் அரபு நாட்டில் பணம் என்னும் மோசக்காரனின் வலையில்...

ம்... இந்த தினத்தில் என் பொங்கல் அனுபவங்களை எழுதலாமே என்று நினைத்து திரும்பிப் பார்த்ததன் விளைவே இந்த கட்டுரை. இதை எழுத உட்கார்ந்த போது உடன் பிறப்புகள் மற்றும் ஊர் சொந்தங்களுடன் பொங்கல் கொண்டாடிய மகிழ்ச்சி.

பொங்கல் என்றால் பள்ளிக்கு குறைந்தது மூன்று நாட்கள் விடுமுறை கிட்டும். விடுமுறைக்கு முதல் பள்ளியில் மாலை மாவுருண்டை, முறுக்கு எல்லாம் சத்துணவு மூலம் கொடுப்பார்கள். நல்லாயிருக்கோ இல்லையோ நாளை பொங்கல் என்ற தித்திப்பில் இனிக்கத்தான் செய்யும்.

முதல் நாள் இரவே மறுநாள் பொங்கல் வைக்க இருக்கும் அடுப்பு, பானைகள், வீடு முழுவதும் அக்கா, அம்மா எல்லோரும் கோலம் போடுவார்கள். அவர்களுடன் அவர்களுக்கு இணையாக கோலம் போட்ட சந்தோஷம் இன்னும் மனசுக்குள் உதட்டில் ஒட்டிய பொங்கச்சோறாய்..!

காலையில் எழுந்து குளித்து ரெடியாகும் போது அப்பா, 'தம்பி வயலுக்கு போய் நெல்மணியும் அருகம்புல்லும் பறிச்சுக்கிட்டு வாடா' என்றதும் சிறுவயதில் வயலுக்கு ஓடி பறித்து வந்த சந்தோஷம் இன்னும் குற்றாலச் சாரலாய்..!

அருகம்புல் பிள்ளையார் பார்வையில் நெல்மணியை பானையின் கழுத்தில் கட்டி வீட்டு வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் வைத்தபோது பால் பொங்கிவரும் சந்தோஷம் மனசுக்குள் இன்றும் பொங்கியபடி..!

கேலி முறைக்காரர்கள் (அத்தை மாமா பசங்க) 'என்ன பால் பொங்குச்சா... கால் வீங்குச்சா...' என்று கேட்கும் அந்த சந்தோஷ வார்த்தைகள் இன்னும்
மனசுக்குள் இளமையாய்..!

தை முதல் நாள் வீட்டுப் பொங்கல் முடிந்து மறுநாள் நமக்காக வாழ்வை அர்ப்பணிக்கும் உயிரினங்களான மாட்டுப் பொங்கல். அப்பா... எங்கள் கிராமத்தில் மட்டுமல்ல எல்லா கிராமத்திலும் மாட்டுப் பொங்கல் சிறப்பான சந்தோஷமான திருநாள்.

எங்கள் ஊர் கருப்பர் கோவில் எதிரே ஊர் மொத்தமும் கூடி பொங்கல் இட்டு மகிழும் அந்த சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. காலையில் கண்மாயில் அனைத்து வீட்டு மாடுகளும் குளிப்பாட்ட கூடி நிற்கும். மாட்டை குளிப்பாட்டி புது மூக்குக்கயிறு, பிடிகயிறு போட்டு கொம்பில் காவி அடித்து உடம்பு முழுவதும் பொட்டு வைத்து கரும்பு, பனங்கிழங்கு கட்டி பொங்ககுழிக்கு கொண்டு செல்ல தயார் செய்வோம்.

தற்போது டிராக்டர்கள் மற்றும் அறிவியல் வளர்ச்சியாலும் வைத்து பார்க்க முடியாத காரணத்தாலும் பல வீடுகளில் மாடுகள் இல்லை.

காலை பத்து மணிக்கு பொங்கல் வைக்கும் இடத்தை சுத்தம் செய்ய கிளம்புவோம். மண்வெட்டி, அருவாள் எடுத்துக் கொண்டு பாதை சுத்தம் செய்து பொங்கல் குழி தயார் செய்து இருபுறமும் கம்பு நட்டு வைக்கோல் பிரி விட்டு மாவிலை, வேப்பிலை சொருகி கட்டி வைப்போம். பின்னர் பொங்கல் வைக்கும் இடத்தின் மேலபுறத்தில் கட்டம் போட்டு வைப்போம். அதற்கு வீடு என்று பெயர்.

பின்னர் அனைவரையும் கிளப்பி வரிசையாக கருப்பர் கோவில் நோக்கை பயணிப்போம். அங்கு பொங்கலிட்டு இறக்கி வைத்து விட்டு மாடுகளை பிடித்துக் கொண்டு வர வீட்டிற்கு வருவோம். அப்போது புதுத்துணி அணிந்து கொள்வோம்.

மாடுகளை மரங்களில் கட்டிவிட்டு கருப்பருக்கு அலங்கார வேலை நடக்கும். பின் மரக்காப் படியில் புறமடை (கண்மாயில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கட்டப்பட்டிருக்கும் மதகின் பின்புறம்) தண்ணீர் எடுத்து அதில் எல்லார் வீட்டு பொங்கலிலும் கொஞ்சம் எடுத்துப் போட்டு எங்கள் பெரிய ஐயா சீனி எதோ மந்திரம் சொல்லி மந்திரிப்பார். அவர் இறப்புக்குப் பின்னர் எங்க அப்பா அந்த பணியை செய்கிறார். என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் எல்லோரும் நல்லா இருக்கணுமுன்னு சொல்லுவேன் என்பார்.

முன்பு தயார் செய்த வீட்டில் நாலு மூலையிலும் பரங்கிப்பூ வைத்து உள்ளே பறங்கி இலை போட்டு எல்லார் வீட்டுப் பொங்கலும் எடுத்துப் போட்டு பரங்கிக்காய், அவரைக்காய் எல்லாம் போட்டு தயார் செய்த கறியை கொட்டி கிளறி வைத்துவிட்டு மாடுகளுக்கு திட்டிக்குழி சோறு தீட்ட கிளம்புவோம்.

சித்தப்பாவும், வேறு ஒருவரும் மந்திரித்த தண்ணீரை எடுத்துக் கொள்ள, நெருப்பு போட்ட மண்பானையை இளையர் வீட்டு ஐயா எடுத்துக் கொள்வார். "பட்டி பெருகப் பெருக... பால் பானை பொங்கப் பொங்க... பொங்கலோ பொங்கல்..." என்று கத்தியபடி மாடுகளுக்கு சோறு தீட்டப்படும்.

மூன்று சுத்து முடித்து திட்டிக்குழியின் அருகில் பானை உடைக்கப்படும் அனவரும் விழுந்து கும்பிட்டு விட்டு திட்டிக்குழி சோறு வாங்கி கேலிக்காரருக்கு தீட்டுவது உண்டு. நிறைய மிளகாய் இருக்கும் அதை அப்படியே முகத்தில் தேய்த்து.... அப்பா... அது ஒரு சந்தோஷ தருணம்.

வருடா வருடம் ஓட்டு வீட்டு மாமாதான் எல்லோரிடமும் அதிகம் மிளகாய் பூச்சு வாங்குவார். பின்னர் சந்தோஷமாக சாமி கும்பிட்டு வீட்டுக்கு வருவோம்.

சாப்பிட்டதும் அருகில் நடக்கும் மஞ்சு விரட்டு அல்லது எருதுகட்டு பார்க்க குழுவாய் சைக்கிளில் பயணம்.

இனிப்பின் முடிவில் ஆதங்கம்:

படிக்கும் காலத்தில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை ஒருவருக்கு ஒருவர் அனுப்பி, தபால் காரரின் வருகைக்காக காத்திருந்து வாங்கி பிரித்துப் படித்து அடைந்த சந்தோஷம் செல்பேசியில் வரும் ஒற்றை வரி வாழ்த்திலோ இணையத்தில் அனுப்பப்படும் வாழ்த்து மெயில்களிலோ கிடைக்காமல் போய்விட்டதே.

எல்லோரும் கூடி கொண்டாடிய பொங்கல் வேலை நிமித்தம் தனித்தனியே குக்கரில் கொண்டாடப்படும் ஒரு நாளாகிவிட்டதே.

விளைத்துச் செழித்த வயல்களெல்லாம் கருவேல மரங்கள்...
நிறைந்து கிடந்த கண்மாய் வெடிப்புக்களோடு...

இளமைப் பொங்கல் மீண்டும் வர... எலோரும் இன்புற்றிருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

-சே.குமார்.

6 கருத்துகள்:

  1. தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி துபாய் ராஜா. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. எங்கள் கிராமம் மனசில்.. பொங்கலுக்கு போய் திரும்பியதும் அந்த இனிய அவஸ்தை மறைவதற்குள் உங்கள் இடுகை பார்த்து மீண்டும் தாவி விட்டது கிராமத்திற்கு..

    பதிலளிநீக்கு
  4. இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்,

    நல்லதொரு இடுகை.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரிஷபன். வெளிநாட்டு வாழ்க்கை எல்லோருக்கும் இழப்புகளை மட்டுமே அதிகம் அளிக்கும் என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி