செவ்வாய், 8 டிசம்பர், 2009

கல்லூரிக்காலம் - III

முதலாம் ஆண்டு கல்லூரி வாழ்க்கை சந்தோஷம் , சங்கடம், அடிதடி, ஸ்டிரைக், ஐடிசி என கரைந்தது. விடுமுறைக்குப் பின்னர் இரண்டாம் ஆண்டில்... என்ன ஒரு சந்தோஷம் என்றால் அரியர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நட்பு பிரியாமல் ஒரே வகுப்பறையில்... (பள்ளிக்கூடத்தில் அப்படியில்லாமல்தான் பல நட்புகளை இழக்க நேரிடுகிறது இல்லையா?)

எனது நண்பர்கள் அண்ணாத்துரையும், சேவியரும் கல்லூரிக்கு அருகில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் சமைத்து சாப்பிட்டனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அறையில்தான் நான். (ஐயோ... சத்தியமா சாப்பாட்டுக்காக இல்லைங்க...) . தங்கும் அறையை அண்ணாத்துரை அந்த இடத்தில் எடுக்க வரலாற்றுச் சிறப்புமிக்க காரணம் ஒன்று உண்டு. அது அவனது காதலி தங்கிப் படித்த அக்கா வீட்டின் அருகில் என்பதே. (இப்ப இருவரும் குடும்ப பாரத்தை சுமக்கிறார்கள். வேறு வேறு குடும்பத்தில்...)

எனக்கும் வகுப்பறை தோழர்களுடன் மற்ற துறையிலும் தோழர்கள் கிடைத்தனர். இயற்பியல் துறையில் அம்பேத்கார் (இப்ப எம்சிஏ முடித்துவிட்டு பெங்களூரில் இருப்பதாக கேள்வி), இளையராஜா (உள்ளூரிலே கடை வைத்திருப்பதாக நண்பன் ஒருவன் சொன்னான்) , சுபஸ்ரீ, கனிமொழி (ஐயா இல்லத்தில் உருவான நட்பால் கிடைத்த நல்ல தோழியர்) , விலங்கியல் துறையில் பிரபாகரன், தமிழ்த்துறையில் சங்கர், ரவி(தற்போது ஆசிரியர்) , ஜஸ்டின் (தற்போது ஆசிரியர்) ,ரவி, முருகன் (தற்போது பேராசிரியர்) , சிவகுமார், ஆங்கிலத்துறையில் ரமேஷ் (ஆசிரியர்), சூசை மாணிக்கம் (நல்லா பாடுவான். கல்லூரியில் இவன் குரலுக்கென்று ரசிகைகள் உண்டு) , கண்ணன் (என் நண்பன் ஆதியால் கிடைத்த நல்ல நண்பன்) வணிகவியல் துறையில் சில நண்பர்கள். இதில் முருகன் தவிர மற்ற நண்பர்கள் தொடர்பில் இல்லை.

எங்கள் வகுப்பறை முதல்வர் அறைக்கு அருகில் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கில பாட வேளைகளில் எங்களுடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை மாணவர்களும் கலந்து விடுவர். அரட்டைக்கு கேட்கவா வேண்டும்.

தமிழ்த்துறையில் இருந்து எங்களுக்கு பாடம் எடுக்க வந்தவர்களில் ஆறுமுக ஐயா, நகைச்சுவை என்று எதாவது சொல்லி அவரே சிரிப்பார். நாங்கள் அனைவரும் ரொம்ப சீரியஸாக அவரையே பார்ப்போம். உடனே சிரிப்பை நிறுத்தி எங்களைப் பார்த்து சிரிப்பு வரலை என்று கேட்பார். அவர் சீரியஸாக பாடம் நடத்தும் போது திடீரென எல்லோரும் சிரிப்பார்கள். இது தினமும் தொடரும்.

சுந்தரமூர்த்தி ஐயா, இவர் பாடம் எடுக்கும் போது லண்டன் என்று யாராவது கத்தினால் போதும் மனுசனுக்கு கோபம் வரும் பாருங்க. அப்பா... ஒரே ருத்ரதாண்டவம்தான் போங்க. (எங்க முன்னோடிகள் சொல்லிச் சென்றார்கள். நாங்கள் தொடர்ந்தோம்... எதுக்கு கோபம் கொள்கிறார் என்பது யாருமே அறியாத சிதம்பர ரகசியம்)

சுப்பிரமணியன் ஐயா (RMS என்று சொல்லுவோம். பெயர் சரிதானா என்பது தெரியவில்லை) , இவரை பாடமே எடுக்க விடமாட்டார்கள். இவருக்கு தலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முடி இருக்கும். ஒருநாள் அவர் சிரத்தையுடன் பாடம் எடுக்கும் போது ஒருவன் எழுந்து உங்க தலை முடியெல்லாம் எங்கய்யா என்று வினவ, கோபத்தில் வீட்டிலிருந்து கல்லூரி வரும் வழியில் புறா பொறக்கி தின்னுருச்சு என்றாரே பார்க்கலாம் வகுப்பில் எழுந்த சிரிப்பொலி அடங்க அதிக நேரம் ஆனது. அது முதல் அவரது பெயர் புறா பொறக்கியானது. (கல்லூரி சுவர், வகுப்பறை எல்லா இடங்களிலும் கல்வெட்டாய்...)

பழனி ஐயா, மற்ற துறை மாணவர்களிடம் எப்படியோ தெரியவில்லை. எங்கள் வகுப்பறையில் பாடத்துடன் பொது அறிவும் கலந்து கொடுத்து மாணவர்களை கட்டிப் போட்டிருந்தார் (ஐயா பற்றி இன்னும் நிறைய இருக்கு).

சிங்காரவடிவேலன் ஐயா, நல்ல கவிஞர். நம்ம குடும்பத்தில் ஒருவர் போல நடந்து கொள்வார். நல்லா நடத்துவார். சில காலம் முதல்வராகவும் இருந்தார்.

தேனப்பன் ஐயா, நல்ல இலக்கியவாதி, நகைச்சுவையுடன் பாடம் நடத்தும் கலை அறிந்தவர்.

எல்லோரிடமும் வகுப்பறையில் மாணவர்களாக (நாங்களெல்லாம் வாயே திறப்பதில்லை) நடந்து கொண்ட விதம் மோசமாக இருந்தாலும் பாடம் நடத்துவதிலோ பழகும் விதத்திலோ எங்கள் பேராசிரியர்கள் என்றைக்குமே எவரெஸ்ட்டாய்தான் இருந்திருக்கிறார்கள். (நம்ம அனுபவிக்கும் போதுதான் அவங்க கஷ்டம் நமக்கு புரியுது) .

ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் பெரிய திருவடி, வாசுதேவன், தண்ணீர்மலை என எல்லா பேராசிரியர்களுமே நல்லா நடத்தினார்கள். இன்றைக்கும் என் பேராசிரியர்களை மனதில் மரியாதையுடனதான் வைத்துள்ளேன்.

என் நண்பன் முருகன் தமிழ்த்துறை என்பதால் பழனி ஐயாவிடம் நல்ல நட்பு உண்டு. அவன் மூலமாக ஐயாவுடன் பழகும் வாய்ப்பு கிட்டியதுடன் அவர் வீட்டில் அவரது பிள்ளைகளில் ஒருவனாய் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே ஏற்கனவே ஒரு கூட்டம் இருந்தது. அந்த ஜோதியில் நானும் ஐக்கியாமானேன்.

கல்லூரிக்காலம் - IV ல் சங்கமிப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி