இந்த இறுதி வசனம் எல்லாத்தையும் சொல்லிடும்.
நிகழ்கால காதலில் தொடங்கும் படம் கடந்த கால காதல்களில் பயணித்து இறுதியில் நம்மை கலங்க வைத்துவிடுகிறது. எல்லாருக்கும் ஒரு முதல் காதல் இருக்கும் என்பதைச் சொல்வதுடன் அந்தக் காதல் ஒருவேளை வெற்றி பெறாவிட்டால் அதை தனது வாழ்நாள் எல்லாம் தூக்கிச் சுமக்கவும் செய்வார்கள் என்பதையும் பல வருடங்களுக்குப் பின் சந்தித்து நட்பைத் தொடர்ந்தால் என்னவாகும் என்பதையும், அப்படியானதொரு காதல் இருந்து அது வெளியில் தெரியும் போது மனிதர்களின் மனங்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்பதையும் சொல்லும் படம்தான் 'பிரணய விலாசம்'
அப்பா (ராஜீவன்) - அம்மா (அனுஸ்ரீ) - மகன் (சூரஜ்) என குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒட்டுதல் இல்லாத வாழ்க்கை. மகனின் விருப்பத்தை விட என் விருப்பம்தான் முக்கியம் என ஏ.ஆர்.ரகுமான் இசைப்பயிற்சிப் பள்ளியில் படிக்க நினைப்பவனைக் கல்லூரியில் படிக்க வைக்கிறார் என்பதால் அப்பாவும் மகனும் வீட்டுக்குள் கீரியும் பாம்பும் போல. அம்மாவை வீட்டில் ஒரு பொருட்டாகப் பார்க்க மாட்டார்கள் அவளது உலகம் டிவி சீரியல், கால்பந்து போட்டிகள் பார்ப்பது, தன்னை நேசிக்கும் பூனைக்கு உணவிடுவது, பக்கத்து வீட்டு பெண்ணுடனான நட்பு என வாழ்க்கையை அந்த வீட்டுக்குள் வட்டமாக்கி வைத்து வாழப் பழகிக் கொண்டிருக்கிறாள்.
மகனுக்கு ஒரு காதல், இருபத்தி மூன்று வருடத்துக்குப் பின் கல்லூரி நண்பர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணும் போது திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் தனது கல்லூரிக் காதலியுடனான நட்பைப் புதுப்பித்துக் கொள்ள, அவளுடன் தனியாகச் சந்திப்பு, சினிமா எனக் காமம் இல்லாத காதலை நட்பாய் நகர்த்தும் அப்பா. இப்படியாக நகரும் கதையில் அம்மாவின் மரணமும் அவளுக்கு ஒரு காதல் இருந்தது என்ற டைரிக் குறிப்பும் கதையை மாற்றுப் பாதையில் பயணிக்க வைக்கிறது.
அஸ்தி கரைத்தலுக்குப் பின் அவளின் விருப்பம் எதுவுமிருந்தால் அதை நிறைவேற்றுங்கள் அதுவே ஆத்ம சாந்தி எனச் சொல்லப்படுவதால் அம்மாவின் ஆசையொன்று டைரிக் குறிப்பில் இருக்க, அதை நிறைவேற்ற மகன் விரும்ப, அப்பா எதிர்த்தாலும் வழியின்றி அவனுடன் பயணிக்க, அந்த ஆசை நிறைவேற்றப்பட்டதா..? இறுதி முடிவு என்னானது..? என்பதைச் சொல்லும் படம்தான் பிரணய விலாசம்.
ஒரு சிறிய கதையை அழகான சிறுகதையாக மாற்றுவதில் மலையாளிகள் கை தேர்ந்தவர்களாகி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நிறையப் படங்கள் இப்போது இப்படித்தான் எதிர்பாராத கதைக்களத்தில் மிக அழகாகப் பயணித்துப் பார்ப்பவர்களை தம்முள் ஈர்த்துக் கொள்கின்றன.
ஆரம்பத்தில் கல்லூரி, காதல், பாடல் போட்டி, நண்பர்களுடன் குடி, முன்னாள் காதலியுடன் சுற்றல் என நகரும் கதையில் அனுவின் மரணத்துக்குப் பின் எல்லாமே மாறி விடுகிறது. அதுவரை மனைவியை ஒரு பொருட்டாக கருதாத ராஜீவன், தன் முன்னாள் காதலியிடம் அவள்கிட்ட கொஞ்ச நாளாவே பேசுறது கூட இல்லை என்று வருந்துவதும், மகனிடம் அன்பு பாராட்டுவதும் என நிறைய மாற்றங்கள். அம்மாவின் டைரியைப் படிக்கும் மகனிடம் அதைப் படிக்காதே எனச் சண்டையிட்டு விட்டு ஒரு கட்டத்தில் அடுத்து என்ன எழுதியிருக்கா என்ற ஆவலோடு மகனிடம் கேட்கும் போது அப்பன் மகனுக்குள் ஒரு நெருக்கம் வந்துவிடுகிறது. மாற்றங்களுடன் பயணிக்கும் கதையின் இறுதி நம்மை ஏதோ ஒரு வகையில் பாதிக்கச் செய்து விடுகிறது. அந்த இடத்தில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர்.
'நாம நினைக்கிறது மாதிரி யாருமில்லையில்ல' என்று மகனிடம் சொல்லும் ராஜீவனின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை எல்லார் மனதிலும் இருக்கத்தான் செய்யும் என்றாலும் யாரும் அதை வெளிச்சொல்ல விரும்பவில்லை. தான் செய்யும் குற்றத்தைக் குற்றமெனச் சொல்லாமல் மற்றவர் அதையே செய்திருந்தால் அல்லது செய்தால் குற்றமென நினைக்கும் மனிதர்களின் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது அபூர்வம்தானே.
'என்னடா உங்க வீடென்ன அனுராகக் கூடமா..?', 'அவன் என்னையக் காதலித்தபின் தெரிந்து கொண்டான், நானோ காதலிக்கிறதுக்கு முன்னாலயே அவனைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறேன்', 'இப்ப உங்களுக்கெல்லாம் ஒரு போன் போதும் லவ் பண்ண' போன்ற வசனங்கள் எவ்வளவு ரசிக்க வைத்ததோ அதேபோல் படத்தின் பல வசனங்கள் ரசிக்க வைத்தன. அத்தனை அழகான வசனங்கள். வசனகர்த்தாவுக்குப் பாராட்டுக்கள்.
'உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னால எதாவது காதல் இருக்கா' என தனது அப்பா, அம்மாவிடம் நாயகி கேட்கும் போது அதெல்லாம் இல்லை என்று சொல்லிவிட்டு இரவு படுக்கையில் தூக்கவராமல் படுத்துக் கொண்டு என்ன பண்றே எனக் கேட்க்கும் போது ஏதோ பழைய நினைவுகள் அதெல்லாம் அசை போட்டுக்கிட்டு இருக்கேன் என இருவரும் சொல்லிக் கொள்வார்கள். இன்றைய நிலையில் பலபேர் இப்படித்தான் வெளியில் சொல்லாமல் மனசுக்குள்ளயே பூட்டி வைத்து விடுகிறார்கள்.
இரண்டு தடவை பார்த்தும் இன்னும் சலிக்காத படமாக மாறியிருப்பதற்க்கு இசையும் ஒரு பெரும் காரணம். நம்ம விக்ரமனின் படங்களில் வரும் பின்னணி இசைப்போல் இதில் ஒரு இசை, குறிப்பாக அம்மாவின் காதல் திரையில் விரியும் போதெல்லாம் அந்த ராகம் நம்மை ஈர்த்துக் கொள்கிறது.
படத்தோட பெரிய பலமே நடிகர்கள் அனைவரும் அந்தந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்றி, உயிர் கொடுத்து நடித்திருப்பதுதான். அவ்வளவு நேர்த்தியான நடிப்பு. அலுவலக உதவியாளம் சதீஷ் வரையில் யாருமே சோடை போகவில்லை.
சூரஜாக நடித்திருக்கும் அர்ஜூன் அசோகன் ஆரம்பத்தில் காதலி பக்கத்தில் இருந்தாலும் பெண்களிடம் வழிவதும் அம்மாவின் இறப்புக்குப் பின் அப்பாவுடன் காரில் பயணிக்கும் போது அவரைச் சீண்டிக் கொண்டே அம்மாவின் டைரியை வாசிப்பதும், அவளின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென அப்பாவுடன் சண்டை பிடிப்பதும் என தன் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
கோபிகாவாக, சூரஜின் காதலியாக வரும் மமிதா பைஜு ரொம்ப அசால்டாக அந்தக் கதாபாத்திரத்தைக் கையாண்டிருக்கிறார். அவர் சிரித்துக் கொண்டே பேசுவது அத்தனை அழகு.
கல்லூரிக் கால அனுஸ்ரீயின் அனஸ்வர ராஜன் சண்டைக்கோழி மீரா ஜாஸ்மினைப் போல் துடுக்கான நடிப்பு. அவரின் முகபாவங்கள் கதை பேசுகிறது. அம்மா அனுஸ்ரீயாக ஸ்ரீதன்யா பாந்தமான நடிப்பு.
கல்லூரி ஆசிரியையாக, முன்னாள் காதலியாக மியா ஜார்ஜ் அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமாய் வந்து போகிறார்.
ராஜீவனாக மனோஜ் கே.யு, மனுசன் கலக்கியிருக்கிறார். காதலியைச் சந்திக்க மன்மதனாய் கிளம்புவதும், மனைவியின் இறப்பில் மனமொடிந்து நிற்பதும், அவளின் காதல் கதை அறிந்து ஆக்ரோசமாவதும், மகனுடனான பயணத்தில் கோப மிடுக்கு காட்டி, பின் பாந்தமான மனிதனாய் மாறுவதும் என அடித்து ஆடியிருக்கிறார். அந்த அசால்டான நடையில் மற்றவரை முந்தி பார்ப்பவரை ஈர்த்து விடுகிறார், இவருக்கு அடுத்தபடியாக அனஸ்வர ராஜன்.
வினோத்தாக ஹக்கிம் ஷா, சதீஷனாக சரத் சபா, ராமியாவாக உன்னிமாயா என எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரஹ்மானின் இசையும் ஷினோஸின் ஒளிப்பதிவும் பினு நெப்போலியனின் படத்தொகுப்பும் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அழகான, பசுமையான இடங்களும் படத்துக்குப் பெரும் பலம்.
கிரீன் ரூம் புரொடக்சனுக்காக சிபி சாவரா மற்றும் ரஞ்சித் நாயர் தயாரித்திருக்கும் இப்படத்தை நிகில் முரளி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, வசனத்தை ஜோதீஷ் மற்றும் சுனு எழுதியிருக்கிறார்கள். படத்துக்கு வசனம் மிகப்பெரிய பலம்.
நெகிழ்ச்சியான படம், ரசித்துப் பார்க்கலாம்.
-பரிவை சே.குமார்.
என்னிடம் இருக்கும் OTTகாலில் யதாவதொன்றில் கிடைத்தால் பார்த்து விடுகிறேன். வசனம் புரியாது. நீங்கள் சொல்லி இருக்கும் கதையை வைத்து குண்ட்ஸா புரிஞ்சிக்க வேண்டியதுதான். வசனங்களின் அழகை ரசிக்க முடியாது! நடிப்பை ரசிக்கலாம். பார்க்கிறேன்.
பதிலளிநீக்குரசனையான விமர்சனம்... அருமை...
பதிலளிநீக்குநலம் தானே குமார்...... நீண்ட நாட்கள் ஆகிவிட்டன உங்கள் பதிவுகள் படித்து..... சிறப்பான விமர்சனம். படம் பார்க்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.
பதிலளிநீக்கு@ஸ்ரீராம் அண்ணா,
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா... இங்கு வேலை செய்யும் இணையதளம் ஊரில் வேலை செய்யாது என்று நினைக்கிறேன். நான் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, வெப் சீரியல்கள் என எல்லாத்தையும் அந்த ஒரு தளத்திலேயே பார்த்திருவேன்.
Tamilyogi, tamilgun - இரண்டும் ஊரிலும் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்.
@தனபாலன் அண்ணா,
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா. நான் யாரையும் வாசிக்கவில்லை என்றாலும் தாங்கள் தொடர்ந்து எல்லாரையும் வாசித்துக் கருத்து இடுவது மகிழ்ச்சி.
@வெங்கட் அண்ணா,
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா.
நலம். நீங்க எப்படியிருக்கீங்க? நிறைய பிரச்சினைகள் எல்லாவற்றிலும் மீண்டு வர முயற்சிக்கையில் எழுத்து என்பது சுத்தமாகவே வரவில்லை என்பதே உண்மை.
அப்படியும் ஏதாவது கொஞ்சமாய் கிறுக்கித் தன் இருப்பைக் காட்டிக் கொள்ள எழுத்து தேவைப்படுகிறது.
நன்றி அண்ணா.