ஞாயிறு, 26 மார்ச், 2023

புத்தக விமர்சனம் : காற்றின் நிறம் சிவப்பு

 'காற்றின் நிறம் சிவப்பு'

ஒரு தொடரை - நாவல் - பலர் சேர்ந்து வாரம் ஒருவர் என எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அகம் மின்னிதழ் நண்பர்கள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று கலக்கல் ட்ரீம்ஸ் மூலமாக 2018-ல் புத்தகமாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

இது போன்ற ரிலே-ரேஸ் வகைக் கதைகளுக்கு முன்னோடி குமுதம் என்றும் அவர்கள் ஆரம்பித்து வைத்த பின்தான் மற்ற பத்திரிக்கைகள் பல எழுத்தாளர்களை ஒன்றிணைத்துத் தொடர்களை வெளியிட ஆரம்பித்தன என்றும் அப்படி நாமும் நமது முகநூல் களமான 'அகம் மீடியா பிரைவேட் லிமிடெட்'டை மின்னூலாக, இணைய இதழாக மாற்றும் போது வாசகர்களைக் கவரும் வண்ணமாக ஒரு புதிய முயற்சி செய்தால் என்ன என்று நண்பர்களிடம் கேட்டபோது இதெல்லாம் சரிவருமா என யோசித்துப் பின் நீயே முன்னெடு எனச் சொன்னதால் நான் இதில் இறங்கினேன் என்பதாய் தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் கலக்கல் ட்ரீம்ஸின் தசரதன் (ராஜி).

2016 பிப்ரவரி 19 ஆம் தேதி அறிவித்த போட்டியில் மொத்தம் 21 பேர் கலந்து கொள்வதாகப் பின்னூட்டமிட, காலம் தாழ்த்தாமல் பிப்ரவரி 26ஆம் தேதியே போட்டியின் முதல் அத்தியாயம் பகிரப்பட்டது. எழுதுவதாகச் சொல்லியிருந்தவர்களில் இருவர் சில காரணங்களால் எழுத முடியாமல் போக, அதையும் தசரதனே எழுத, பத்தொன்பது பேரின் (பிப்ரவரி 19-ல் அறிவித்ததால் 19 பேர் எழுதும்படி ஆனதோ என்னவோ) எழுத்தில் மிகச் சிறப்பான தொடராக, இன்றைக்கும் என்றைக்குமான முக்கியப் பிரச்சினையாக கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு விவசாயிகளின் வயிற்றில் அடித்ததைப்  பற்றிப் பேசியிருக்கிறது 'காற்றின் நிறம் சிவப்பு' என்னும் இந்நாவல்.

முகநூல் குழுக்களில் சிலவற்றைத் தவிர பல குழுக்கள் ஒரு காலகட்டத்துக்குப் பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் முடங்கிப் போயிவிடுவதுண்டு. அப்படித்தான் அகமும் முடங்கிப் போனது. அதன்பின் கலக்கல் ட்ரீம்ஸ் ஆரம்பிக்கும் வேலைகளில் தீவிரமாக இயங்கிய தசரதன், இதைப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணத்தில் இதில் எழுதிய அனைத்து நண்பர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களுடன் பேசி, மிகச் சிறப்பான புத்தகமாகக் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக அனைத்து எழுத்தாளர்களையும் குறித்த விபரங்களுடன் அவர்களின் தொடர்பு மின்னஞ்சலையும் இறுதியில் சில பக்கங்களை ஒதுக்கிப் பகிர்ந்திருப்பது சிறப்பு.

இரு வேறு கதைக்களத்தில் பயணிக்கும் நாவல் இறுதியை எட்டும்போது ஓரிடத்தில் இணைகிறது. அது இணையும் இடத்தில் இருந்து அரசியல்வாதிகள், காவல்துறை, அரசு அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் எனக் கதை பயணப்படும் போது வாசிக்கும் நம் மனதுக்குள் பாதிக்கப்பட்ட அந்தக் கிராம மக்களுக்கு நல்லது நடந்து விடாதா என எண்ண வைக்கும் எழுத்து. அவர்களுக்குத் தீர்வு கிடைத்ததா என்றால் நம் அரசியல்வாதிகள் அரசியல் வியாதிகளாய் இருக்கும் வரை தீர்வு என்பது கானல் நீர்தான் என்பதாய் முடித்திருக்கும் போது உண்மையிலேயே மனசுக்குள் ஒரு பாரமே மிஞ்சி நின்றது.

அப்பாவின் இறப்புக்குப் பின் அவர் பார்த்த வேலைக்கு வேண்டா வெறுப்பாய் போகும் திலீபன், அப்பாவைப் பற்றி மெல்ல உணரும் போது மக்களுக்கு நன்மை செய்யும் தொழிற்சாலை என்ற போர்வையில் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களில் பதித்து விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் தனியார் தொழிற்சாலையைப் பற்றி அறிந்து, அதனை எதிர்க்கும் பலரை இணைத்து ஒரு குழுவாக எதிர்க்க ஆரம்பிக்கிறான். அதேபோல் விவசாயியான தன் கணவனை இந்தக் குழாய் பாதிப்பால் இழந்த செல்வி, இனி ஒருவர் தனது கிராமத்தில் தற்கொலை செய்து கொள்ளக்கூடாதென தனது கணவனின் பிணத்துடன் ஆட்சியாளர் அலுவலகம் முன் போராடி, அரசியல்வாதி போடும் எலும்புக்கு வாலாட்டும் அரசு அதிகாரிகள், காவல்துறையால் அடிவாங்கி போராட்டத்தைக் கைவிட, இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் இணைந்து இப்போராட்டத்தினை பல பிரச்சினைகளைச் சந்தித்து மக்கள் முன்னிலையில் வைக்கிறார்கள்.

இன்றைய இணைய உலகில் நமக்கு எல்லாமே டிரண்ட்டுதானே.... கோணங்கியின் கோணங்கித் தனத்தை மறந்து, எஸ்.ராவின் கதைத் திருட்டைக் கடந்து, பத்திரிக்கையாளர்களின் வீடியோக்களில் கொஞ்சம் ஆர்ப்பாட்டம் செய்து, ஆயிரம் ரூபாய்க்கு நீ நல்லவளா, கெட்டவளா என மீம் போட்டு மாறி மாறிப் பயணிக்கும் நமக்கு எந்தப் போராட்டத்தின் வலியும் தெரிய வாய்ப்பில்லை. என்ன செய்தாலும் அது சரியே எனத் தூக்கிக்கிட்டு வந்து முகநூலில் சண்டை போடவே நமக்கு நேரம் சரியாக இருக்கும் போது. அதாவது அது எப்படியிருந்தாலும் கண்களைக் கட்டிக் கொண்ட ஆதரவு நிலையிலேயே பயணித்துப் பழகிவிட்டோம். அதனால்தான் எதாவது ஒரு பிரச்சினை விஸ்வரூபமெடுக்கும் போது வேறொரு சப்பையான பிரச்சினையை நம்மை வைத்தே டிரண்டாக்கி எதைப்பற்றிப் பேசணுமோ, எதைப் பற்றி யோசிக்கணுமோ அதைவிடுத்து தேவையில்லாத ஒன்றை எடுத்துக் கொண்டு கம்பு சுற்ற வைத்து அவர்கள் தங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

அப்படித்தான் நீட், கெயில், மீத்தேன், எட்டுவழிச்சாலை என எல்லாவற்றையும் மறந்துவிட்டு இப்போது அஜீத்தின் அப்பாவின் இறப்புக்கு - அந்த மனுசன் ஒரு அறிக்கையின் மூலம் சிறப்பாய் செய்தது மகிழ்ச்சியே - ஒரு ரசிகனும் மொட்டை போடலையே என்ற மொக்கை மீம்ஸைப் போட்டுக் கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். இறந்தவனின் வீட்டுக்கு கேமராவுடன் போய் ஏதோ திருமண நிகழ்வு போல நடந்து கொள்ளும் பத்திரிக்கை, தொலைக்காட்சி, முகநூல் சேனல்கள் முக்கியப் பிரச்சினைகள், வங்கிப் பணம் கட்ட முடியாமல் தற்கொலை பண்ணிக் கொண்ட விவசாயிகள், கெயில் குழாய் பதிப்புக்காக உயிரைத் துறந்தவர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. இதுதான் எப்போதும் தொடரும் அப்படியிருக்க ஏழைகளுக்கு எது தீர்வு..?

பத்தொன்பது பேர்... அதுவும் அன்றைய தேதியில் அத்தனை பிரபலமில்லாத எழுத்தாளர்கள். இவர்களின் எழுத்தில் ஒரு நாவல் தொய்வில்லாமல் போவதென்பது கடினமே, ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு எழுத்து நடை இருக்கும் அதனால் கண்டிப்பாக வாசிக்கும் நம்மை பத்தொன்பது விதமான எழுத்து நடையில் நாவல் கொஞ்சம் திணற வைக்கத்தான் செய்யும் என்ற நினைப்போடு வாசித்தவனை அடித்துத் தூக்கிப் போட்டது எல்லாரும் ஒரே மாதிரி பயணித்த எழுத்து நடை. சிறப்பு... அருமை. நாம் இன்னமும் முதல் வரிசையில் சிலரை வைத்து இவர்கள் மட்டுமே தமிழின் எழுத்துப் பிதாமகர்கள் என துதிபாடிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இதில் எழுதிய அனைவருமே எழுத்துப் பிதாமகர்கள்தான். அத்தனை நேர்த்தியாய் நாவலை எடுத்துச் செல்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். இதில் இப்போது எத்தனை பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை, இப்போதும் எழுதிக் கொண்டிருந்தால் கண்டிப்பாக தொடர்ந்து எழுதுங்கள்.

கடந்த நான்காண்டுக்கு மேலான கலக்கல் ட்ரீம்ஸூடனான பயணத்தில் தசரதனின் எழுத்தை வாசிக்கும் பாக்கியம் பெற்றவன் என்பதால் அவரின் எழுத்து என்னை எப்போதும் கவர்வதைப் போல் இதிலும் கவர்ந்தது. கவிஜியின் எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன். மற்ற பதினேழு பேரின் எழுத்துக்களைம் வாசித்ததில்லை. அத்தனை பேரும் அருமையாக, கதையின் போக்கு மாறாமல் கதையை நகர்த்தியிருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இதில் முதல் அத்தியாயத்தை கண்ணன் ராமசாமி ஆரம்பித்து வைக்க, அவரைத் தொடர்ந்து ஆ.இளையபாரதி, தசரதன் (3, 15,16 அத்தியாயங்கள்), துவாரகா சுவாமிநாதன், மு.முகமது பாட்ஷா, ஹரீஸ் கணபதி, கலைக்கூத்தாடி, உமையாள் சிவா, சசிக்குமார் தங்கவேல், த.ராஜன், நிர்மலா கணேஷ், செந்தில்குமார் நாகராஜன், லி.ஸி. முத்துசாமி, லை போயம்ஸ் (கலையரசன்), செல்வகுமார் சங்கரநாராயணன், அகராதி (கவிதா), கவிஜி, ராம்போ குமார் மற்றும் வினையன் எழுதியிருக்கிறார்கள்.

நல்லதொரு முயற்சி, மிகச் சிறப்பான புத்தகம்.

-------------------------------------
காற்றின் நிறம் சிவப்பு
கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம்
முதல் பதிப்பு : 2018
விலை ரூ. 150/-
kalakkaldreams@gmail.com
www.kalakkaldreams.com
------------------------------------

-பரிவை சே.குமார்.

2 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி