ரத்தசாட்சி-
எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதை அதன் தரத்தைக் குறைக்காமல் திரைப்படமாக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில். அதற்காக அவரை வாழ்த்தலாம்.
கதையின் களம் தர்மபுரி, காலம் 1980 என்பதாகக் காட்டப்படுவதால் அப்போது வந்த படங்களைப் போல் அழுத்தமில்லாத ஆரம்பக் காட்சிகள் இருந்தாலும் யானையோடு வரும் நாயகனுக்குப் பின் படம் அழுத்தமான ஒரு திரைக்கதையை நோக்கி நகர்கிறது.
அடிமைத்தனத்தில் சிக்கி தங்கள் உழைப்புக்கு ஊதியம் கூட பெறாமல் தவிக்கும் மக்களைக் காக்க வர்க்கப் போராட்டத்தில் குதிக்கும் ஒரு மாவோயிஸ்ட் இளைஞன் அதில் வெற்றி பெற்றானா..? இல்லையா..? என்பதைச் சொல்லும் படம்தான் இது.
போராளி என்பவன் மக்களுக்காகப் போராடி, அவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்பவனாக, அதற்காகத் தன் உயிரைக் கொடுப்பவனாக இருக்க வேண்டுமே ஒழிய போராடுகிறேன் பேர்வழி என ஒரு உச்சகட்ட நிகழ்வை நிகழ்த்திவிட்டு அதன்பின் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒழிவதெல்லாம் அழகல்ல, தனக்காக ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது நியாயமல்ல என்பதை உணர்ந்து அவன் எடுக்கும் முடிவே படத்தின் இறுதிக்காட்சி.
நாயகனின் அம்மா சமைத்துக் கொண்டிருக்கும் போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி, வெளியில் படுத்திருக்கும் அப்பாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்து தன் பின்னே நிற்கும் மகனைத் திடீரெனத் திரும்பிப் பார்க்கும் போது படக்கெனத் தூக்கிப் போடும் அந்த ஒரு விநாடியை நடிப்பில்லாமல் எதார்த்தமாய்ச் செய்திருப்பார். அப்படித்தான் எல்லாருமே எதார்த்தமாய் நடித்திருப்பது சிறப்பு. நாயகனைக் காதலிக்கும் பெண் மட்டும் 80களின் நாயகி போல் பேசுவது படத்தோடு ஒட்டவில்லை.
மிருக குணம் கொண்ட ஆயுதப்படை போலீசாரில் மனித மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களால் என்ன செய்ய முடிகிறது என்பதையும் இப்படம் சொல்லத்தான் செய்கிறது என்றாலும் பார்க்க வேண்டிய படம் என அழுத்தமாய் சொல்லும் அளவுக்கு காட்சிகளில் அழுத்தமில்லை, மற்றபடி பார்க்கலாம் வகைதான்.
நாயகனான கண்ணா ரவி கைதி படத்தில் போலீஸாக நடித்தவராம், பிக்பாஸ் விக்ரமனைப் போலிருக்கிறார். இளங்கோ குமாரவேல், சார்லஸ் வினோத், டான்ஸ் மாஸ்டர் கல்யாண், ஆறுமுகம் பாலா, ஹரிஸ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவும் பிரகாஷ் கருணாநிதியின் படத்தொகுப்பும் படத்துக்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசையில் ஜாவேத் ரியாஸ் கலக்கியிருக்கிறார். ஆஹா தமிழ் ஓடிடி மற்றும் மகிழ் மன்றம் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.
-பரிவை சே.குமார்.
விமர்சனம் அருமை...
பதிலளிநீக்கு