'எங்கே இசை இருக்கிறதோ
அங்கே வார்த்தைகளுக்கு அவசியமில்லை...
எங்கே இசை இருக்கிறதோ
அங்கே கோவிட் இருக்காது...'
என்பதைச் சொல்லித்தான் ஆரம்பித்தார் இசைஞானி துபை எக்ஸ்போ இசை நிகழ்ச்சியில்...
இதைக் கூட்டம் கடைபிடித்ததா என்றால் தமிழனுக்கு தனித்த குணம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக ஒரு சாரார் முன்னால் எழுந்து நின்று பின்னால் இருப்பவர்களுக்குச் சுத்தமாக மேடையை மறைத்துக் கொண்டார்கள்... கொன்றார்கள். இதனாலேயே நிகழ்வின் இறுதிவரை இசைஞானியை பார்க்க விடாமல் நின்றதால் பின்னாலிருந்து 'உக்காரு.. உக்காரு' என்ற குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. சிலர் காலி தண்ணீர் பாட்டில்களையும் வீசினார்கள் என்றாலும் இசைஞானி அலைகடலெனத் திரண்டிருந்த கூட்டத்தை மனதில் கொண்டு ரொம்பச் சாந்தமாகவே, சிரித்தபடியே நிகழ்ச்சியை நடத்திச் சென்றது சிறப்பு. நம்மாளுக திருந்துவானுகங்கிறீங்க... அதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.
மூன்று மணி நேரத்துக்கு மேல் நடந்த இசை நிகழ்ச்சியில் ஒரு நிமிடம் கூட உட்காராமல் இந்த வயதிலும் நின்றபடியே நிகழ்வை நடத்துவதெல்லாம் சாதாரண விஷயமல்ல, தொழில் மீதான பக்தியே அவரை அப்படி நிற்க வைக்கிறது. மனுசனைப் பார்த்ததும் கோவில்ல சாமியைப் பார்த்த மாதிரி அத்தனை பேரும் கையைத் தூக்கி கும்பிட்டபடி நின்றார்கள்.
இசைஞானி மேடைக்கு வரும் போது 'குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர...' கோரஸாக ஒலித்தது. அதன் பிறகு மூன்று மணி நேரத்தில் மொத்தம் 26 பாடல்கள் பாடப்பட்டன - இதில் குரு பிரம்மா மற்றும் சில வரிகள் மட்டும் பாடப்பட்ட ஆத்தா ஆத்தோராமா வாரியாவும் அடக்கம்.
எல்லாப் பாடல்களும் நாம் தினமும் கேட்டு ரசிக்கும் பாடல்கள்தான் என்பதால் பாடல்கள் குறித்து விரிவாச் சொல்ல ஒண்ணுமில்லை, நாம் எஸ்.பி.பி, யேசுதாஸ், ஜானகி, சித்ரா குரல்களில் ரசித்த பாடல்களை இங்கு அவர்களுக்கு அடுத்த தலைமுறை - மனோ தவிர்த்து - பாடியது, எஸ்.பி.பியின் சேட்டைகளையும் யேசுதாஸின் மென்மையையும் பாடல்கள் இழந்திருப்பதை உணர முடிந்தது. அதை இசை அடித்துத் தூக்கி நம்மை இசைஞானியை இறுக அணைத்துக் கொள்ள வைத்துவிட்டது, ராசா என்றைக்கும் ராசாதான்.
பாடல்களுக்கு இடையில் அவர் என்ன சொன்னார் என்பதைப் பற்றி மட்டும் பேசினாலே நிறையப் பேச முடியும், அதேயே இங்கே பேசலாம்.
'ஜனனி... ஜனனி... ஜகம் நீ அகம் நீ...' பாடலை அவர் எப்போதும் ரொம்ப அமைதியான சூழலில் பாடவே விருப்பப்படுவார். இங்கு அது வாய்க்கவில்லை என்றாலும் எப்பவும் போல் அதே அமைதியுடன் பாடி முடித்தார். அதன்பின் 'நிலாவே வா...' பாடலை எஸ்.பி.பி. சரண் பாடி முடித்ததும் தனது நண்பன் பாலு இங்கு வராதது எனக்கு ரொம்ப வருத்தம் - நமக்கும்தான் - என்று சொல்லி நண்பனுடனான இளவயது நினைவுகளைப் பகிர்ந்தார். சின்ன வயதில் எல்லாருமாய் இந்திய அளவில் பாடச் சென்றது. டிக்கெட் எடுக்காமல் இரயிலும், மாடுகளை ஏற்றிச் சென்ற வண்டிகளிலும் பயணித்துப் பாட்டுக் கச்சேரிகளில், அதுவும் ஆர்மோனியப் பெட்டியும் சில இசைக்கருவிகளையும் மட்டுமே வைத்துக் கொண்டு பாடியதைக் குறித்துப் பேசும் போது நண்பனின் நினைவில் உணர்ச்சி வசப்பட்டார்.
'அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை...' அப்படின்னு நீ பாடுன வரியை இன்னைக்கு உன்னோட பிள்ளை உனக்காகப் பாடியிருக்கிறான் பாலு. பாலு இங்க இருப்பான்... அவனோட ஆசி சரணுக்கு இருக்கும்...' என்று சொன்னார். எத்தனை பேர் என்ன என்னவோ செய்தாலும் அந்த நட்புக்குத்தான் தெரியும் அதன் பலமும் பலவீனமும். நண்பனுக்காகச் சரணைத் தன்னுடன் இணைத்துள்ளார். ராஜாவுடன் இதுதான் சரணுக்கு முதல் மேடையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எஸ்.பி.பி.யின் சின்னச் சின்ன சேட்டைகள் இல்லையென்றாலும் அவரின் குரலை ஒரளவுக்கு நம் காதுகளுக்குக் கொடுத்தார். சரண் இன்னும் சிறப்பாகப் பயணப்படுவார்.
'மடை திறந்து...' பாடலைப் பாடிய கார்த்திக், 'புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே' என்ற வரிகளை முதலில் அப்படியே பாடி, அடுத்தை 'புது ராகம் படைப்பதாலே நீங்களும் இறைவனே' என்று இசைஞானியைப் பார்த்துச் சொன்னபோது கூட்டத்தில் விசிலும், 'ஓ'வென்ற சப்தம் எழுந்து அடங்கியது.
'சின்னச் சின்ன வண்ணக்குயில்...' பாடலை விபாவரி பாட வரும் முன், 'இவங்க பாடுற பாட்டையெல்லாம் கூடவே சேர்ந்து பாடிக்கிட்டு வாரீங்க... அதனால எனக்கு இந்தக் கச்சேரி உங்களோடதான் நடக்குது, இவங்களோட நடக்கலை. அதனால இந்தப் பாட்டை யாரும் பாடாமக் கேளுங்க... உங்களுக்கெல்லாம் எல்லாப் பாட்டும் மனப்பாடம்ன்னு எனக்குத் தெரியும், நான் தப்புப் பண்ணுனா நீங்க அதை அங்கிருந்தே சரியாச் சொல்லலாம் ஏன்னா நான் தப்புப் பண்ணுவேன், தப்புப் பண்ணுறதை தெரிஞ்சிக்கிட்டே கூட தப்புப் பண்ணுவேன். இப்ப கொஞ்சம் அமைதியா இருந்து இந்தப் பாட்டைக் கேளுங்க, இதுல பல விஷயங்கள் இருக்கு அதை அப்புறமாச் சொல்றேன்' என்று சொன்னார். விபாவரியின் குரல் எல்லாரையும் ஈர்க்கும். 'சின்னச் சின்ன...'வை மெல்ல ஆரம்பித்து வசீகரிக்கும் குரலால் கூட்டத்தைக் கட்டிப் போட்டார். இசைஞானி சொன்னதை கேட்ட கூட்டம் அப்படியும் பாடலில் வரும் ஹம்மிங்கின் போது பின்பாட்டைத் தொடரத்தான் செய்தது. ராஜ இசையின் மயக்கம் அது.
பாடல் முடித்ததும் 'இவங்க மராட்டி, ஒரு அட்சரம் கூட தமிழ்ல தெரியாது...ஆனாவும் தெரியாது பானாவும் தெரியாது... தமிழ் படிச்சித் தெரிஞ்சிக்கிட்டு பாடுறாங்க' என விபாவரி குறித்துச் சொன்னார். அடுத்து 'இராஜராஜ சோழன் நான்...' பாடலைப் பாட இருந்த மதுபாலகிருஷ்ணனை அழைக்கும் போது 'மதுபாலகிருஷ்ணனை கொஞ்சம் கூப்பிடுறியா... அவன் வந்திருக்கானா வரலையான்னே தெரியலை' எனச் சிரிப்போடு சொல்லிவிட்டு, 'நீங்க இடையில கொஞ்சம் பாடுனீங்க இல்லையா... அதுல கொஞ்சம் சுருதி சேரலைன்னு நினைக்கிறேன், சுருதின்னா நீங்க இந்தச் சுருதின்னு நெனச்சிடாதீங்க, ஏன்னா ஆர்க்கெஸ்ட்ராவுல பல பேரு இந்தச் சுருதின்னு நெனச்சிக்கிறாங்க' என கையை உயர்த்திக்காட்ட, கூட்டத்தில் சப்தம் அடங்க நேரமெடுத்தது. யேசுதாஸ் இடத்தில் மது பாலகிருஷ்ணன் என்று ஒரு காலத்தில் சொன்னதுண்டு, அந்த மதுவா என்றுதான் தோன்றியது ராஜராஜனைக் கேட்டபோது.
அந்தப் பாடல் முடித்தபோது 'உக்காரு... உக்காரு...' ஒலி அதிகமாக, 'என்னது ஒன்ஸ்மோரா... ஐய்யய்யோ, ஒன்ஸ்மோர் கதை தெரியுமா..?' என அவர் பல இடங்களில் சொன்ன கதையான, பாகவர் பாடும்போது ஒன்ஸ்மோர் எனப் பார்வையாளர்கள் தொடர்ந்து கேட்க, அவரும் அதே பாடலைப் பலமுறை பாடியும் அவர்கள் ஒன்ஸ்மோரிலேயே நிற்க, இந்தப் பாட்டு அவ்வளவு பிடிச்சிருக்கா என்று கேட்டதற்கு 'நீ முதல்ல இந்தப் பாட்டை ஒழுங்காப் பாடு... அப்புறம் அடுத்த பாட்டைப் பாடலாம்' என்று சொன்னதைச் சிரித்தபடிச் சொல்லி, 'அது மாதிரி ஒன்ஸ்மோரா' என மது பாடியதில் குறை இருந்ததை ரொம்ப நாசுக்காக கதை வழி சொல்லி, 'இப்ப நீங்கள்லாம் கோரஸாப் பாடினா எப்படியிருக்கும்' என்று சொல்லியதும் கூட்டம் ஆஹா நம்மளை எல்லாம் பாட வைக்கப் போறாரு - என்னமோ மற்ற பாடல்களை எல்லாம் சேர்ந்து பாடாத மாதிரி - என ஆர்ப்பரிக்க, 'அதைக் கடைசியில வச்சிக்கலாம், இப்ப என்னோட கோரஸ் பாடுறதைக் கேளுங்க' என்றார்.
'நான் பொறந்து வந்தது இராஜவம்சத்துல...' என்ற பாடலை வாயால் இசைத்தபடி மிக அருமையாகப் பாடினார்கள்... செம. கமலின் நம்மவரில் இப்படி ஒரு பாடல் இருக்கும். கலக்கலாய் இருந்தது, கூட்டமும் சப்தத்தை மறந்து அமைதியாக ரசித்தது.
'காதல் ஓவியம்...' பாடலை விபாவரியுடன் சேர்ந்து பாடும் போது முதல் சரணத்தை ஆரம்பிக்கும் 'தேடினேன்... ஓ... என் ஜீவனே' வரியில் சிறிதாய் தவறு செய்தார், ஒருவேளை ஆரம்பத்தில் சொன்னது போல் வேண்டுமென்றே செய்தாரோ என்னவோ... இது குறித்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் பாடல் முடிந்ததும் அப்படியே 'மாட்டே மந்த்ரமோ...'வெனத் தெலுங்கில் பயணித்தார்.
முகேஷ் 'தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்' பாடலைப் பாடி முடித்ததும் 'உன் கண்ணைத் திறந்து எக்ஸ்போவுல கொண்டு வந்து விட்டிருக்கு...' எனச் சொல்லிவிட்டு, 'ஆமா இது ஓந்தண்ணித் தொட்டியா... ஏந்தண்ணித் தொட்டியா' எனக் கேட்டுச் சிரித்தார். பெரிசோட அலப்பறை கொஞ்சம் அதிகமாத்தான் இருந்துச்சு.
அடுத்து பின்னணி இசையில் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிச் சொல்லியவர், ஹேராம் படத்தை எடுத்தபின் கமல் கொடுத்த ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு, இங்க பாட்டு வரும் என்று சொன்னதாகவும் இங்க எப்படிங்க பாட்டு... இங்க எதுவும் வராதுன்னு கமல் சொன்னதாகவும் சொல்லி அந்தக் காட்சியை நீங்க பாட்டில்லாமப் பாருங்க எனத் திரையில் ஓடவிட்டார். அதுக்குப் பின்னர் அதே காட்சியை திரும்ப ஓடவிட்டு மேடையில் 'இசையில் தொடங்குதம்மா...' பாடலைப் பாடவைத்தார்.
இந்தப் பாடலை சரத்தும் வாசுவும் மிகச் சிறப்பாகப் பாடினார்கள். படக் காட்சியில் அம்பு விட்டு ராவணனை எரிப்பதையே ஆதாரமா வச்சிக்கிட்டு நான் வசந்தம் வந்ததம்மா என எழுதியிருந்தேன், நான் எழுதியிருந்த இரண்டாவது வரியான இசையில் தொடங்குதம்மாவை முதல் வரியா வைக்கலாமென கமல் சொன்னதும் அவரையே பாடல் எழுதச் சொன்னேன். இந்தப் பாடலை படத்தில் அஜய் சக்கரவர்த்தி பண்டிட் பாடினார். அதை இருவரும் இப்போதி அருமையாப் பாடுனாங்க, அவங்களை உங்க கைதட்டல் மூலம் பாராட்டலாம் எனச் சொல்ல, கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. அதேபோல் புன்னகை மன்னனில் கமல் ரேவதியிடம் ஆடும் நடனத்தை ஓடவிட்டு பின்னணி இசையை இசைக்க வைத்தார். செம.
அடுத்த பாடலாய் 'ஜானே துனா...' என்ற இந்திப் பாடல் ஒலித்து முடித்தும் 'இந்தப் பாட்டு கன்னடப் படத்துக்காக போட்டிருந்த 'சோதேயலி' பாட்டு... இது பிடிச்சிப் போன பால்கி, இதை இந்தியில போட்டுத்தான்னு சொன்னப்போ மறுத்ததாகவும் அவர் வற்புறுத்தவே அதைத்தான் ஜானே துனா எனப் போட்டதாகவும் சொன்னவர் இந்தப் பாடலை கன்னடத்தில் பாலுதான் பாடியிருப்பார் அவர் இல்லாதது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. சரி நாம இருக்கோமுல்ல கச்சேரியை தொடர்வோம் என நண்பனை நினைத்து வருந்திவிட்டு, அடுத்த பாடலுக்குள் போனார்.
'வளையோசை...' பாடல் முடிந்ததும் இந்தப் பாடலின் டியூன் நான் 'நத்திங் பட் விண்டுக்காகப் போட்டு வைத்திருந்தது. இதையே கமல் வைத்துக் கொள்ளலாம் எனச் சொன்னதுடன், லதாஜிதான் இந்தப் பாடலைப் பாடுறாருன்னு வேற சொன்னாரு. அவங்க தமிழ் வாசிக்க கஷ்டப்படுவாங்கன்னு வார்த்தைகளைத் திருப்பிப் போட்டு எழுதலாம்ன்னு வாலிக்கிட்ட சொன்னதும் எங்கே ட்யூன் சொல்லு என்றார், நானும் பாடிக்காட்ட, என்னய்யா இது டுடுட்டுடுன்னு போட்டிருக்கே என்றார். அண்ணே இந்த கலகல, சிலசில இப்படிப் போடுங்கன்னு சொன்னதும் அட இதை இலக்கியத்துல ரெட்டைக்கிளவிம்பாங்கய்யா என்று சொல்ல, அது எதுவாவோ இருக்கட்டும் நீங்க போட்டுத்தாங்கன்னு சொன்னதும் அவர் எழுதிக் கொடுத்ததுதான் இந்த வலையோசை கலகல எனச் சொன்னதுடன் ஃப்ளூட்டுல -புல்லாங்குழல் - அதை வாசித்த நெப்போலியன் - அருண்மொழி - அது குறித்து பல மேடைகளில் சொன்னதை இங்கும் சொல்லச் சொன்னார்.
அவர் ஆரம்பிக்கும் முன்னர் கூட்டத்தில் இருந்து விசில் வர, 'அதில்லை ஃப்ளூட்...' எனச் சொல்லி அமைதி காக்கச் சொல்லிவவிட்டு நெப்போலியனைப் பேசச் சொல்ல. 'இந்தப் பாட்டை சார் எழுதி வச்சிருந்தாங்க... மறுநாள் காலையில நான் வந்து பாத்துட்டு வாசிச்சப்போ இப்படி வாசிச்சேன்' என வாசித்துக் காட்டிவிட்டு, அப்புறம் சார் இப்படியில்லை கொஞ்சம் அழுத்தம் கொடுக்கணும் என்பதைக் கையை ஆட்டிச் சொன்னதும் இப்படி வாசித்தேன் என அழுத்தம் கொடுத்து வாசித்துக் காட்டிவிட்டு, அவர் சொன்னதை அதில் செய்தபோது அந்தப் பாடலின் வசீகரமே மாறிவிட்டது என்றார். கூட்டத்தில் சப்தம் அடங்க நேரமானது. இசைஞானியுடனே பல வருடமாய் இருந்தாலும் இப்படித்தான் இருந்தது என்பதை அவர் முன் சொல்ல பட்டபாடு இருக்கே... அருண்மொழியின் குரல் அத்தனை இனிமையாய் இருக்கும், ஒரு பாடலைப் பாடியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் நான் பாடுவதை நிறுத்திவிட்டேன் என அவர் ஒரு பேட்டியில் சொன்னது ஞாபகம் வந்தது. இருந்தாலும் பாடியிருக்கலாம்.... அதுவும் அந்த ஒத்த ரூவா தாரேன் பாடலை என்று நினைத்துக் கொண்டேன்... திரும்பி வரும்போது நான் நினைத்ததைப் போலவே சிவமணியும் நாட்டுப்புறப் பாடல் படத்தில் இருந்து ஒரு பாடல் பாடியிருக்கலாம் என்று சொன்னார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இசைஞானி, இந்தப் பாடலை எழுதும் போது இப்படித்தான் வரவேண்டும் என கீழே சொல்லியிருந்தேன்... மேலே எழுதியிருந்தால் அது வேற மாதிரி போயிருக்கும், ஆனா அவருக்குக் கொடுத்ததுல அது இல்லாம இருந்ததால எப்பவும் போல் வாசிச்சார், நான் அப்பவே கையாலயே சொன்னதும் அவர் மாற்றிக்கிட்டார், அதுதான் இசைப்பவர்களின் தனித்திறன் என்று சொன்னவர், நான் ஒரு பாடலை எழுத முப்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்வேன், விதிவிலக்காக 'சுந்தரி கண்ணால்...' பாடலுக்குத்தான் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆச்சு, அதுவும் கூட கோரஸெல்லாம் சேர்த்து 90 பேர். இதைப் படியெடுக்க அவங்க ஒரு மணி நேரம் எடுத்துப்பாங்க.
இப்படித்தான் இன்னொரு பாட்டுக்கு இசையமைக்கும் போது அப்போதுதான் புதிதாக வந்திருந்த பொசஸ்க்கியில் வாசிக்க வேண்டும், சதானந்தம் வாசிக்கும் போதெல்லாம் 'டங்கடங்க'ன்னுதான் போகுது. நான் எதுவும் சொல்லலை, அவர் அப்படியேதான் வாசிச்சிக்கிட்டு இருக்கார். அவரே மாற்றிப்பார் என முடிவு செய்து கொண்டு ஜானகிக்கு பாடலைச் சொல்லிக் கொடுக்க, அவங்க 'ஆஆஆ' என ஆரம்பிக்க அந்த டங்கடங்க மெல்லக் குறைந்து பாட்டுக்குத் தக்க மாறுது, அதுதான் இசைப்பவரின் திறன் எனச் சொல்லி 'காற்றில் எந்தன் கீதம்...' பாடலை அவரே பாட ஆரம்பிக்க, கோரஸ் பின் தொடர்ந்து பாட ஆரம்பித்தார்கள். அப்படியே பாடல் நகர, சுர்முகி ராமன் தனித்துத் தொடர - அந்தக் குரலில் அத்தனை ரம்மியம் - கூட்டம் ரசிப்பதை உணர்ந்த இசைஞானி கோரஸில் இருந்து மேடைக்கு வந்து பாடச் சொன்னதுடன் பாடல் முடிந்ததும் இந்தப் பாடலுக்கு நாங்க ஒத்திகையெல்லாம் பாக்கலை, இசை எப்படி எழுதுறேன்னு சொல்லப் போயி உங்க ஆர்வத்தைப் பார்த்துத்தான் பாட வைத்தேன்... இதுதான் ரசனை, ரசனை இல்லைன்னா ஒண்ணுமேயில்லை... அதை ரசிக்கிறீங்க பாருங்க, எந்தப் பாட்டை ரசிக்கணும்ன்னு உங்களுக்குத் தெரியும் என்றதும் கூட்டத்திலிருந்து ராஜா கையை வச்சா எனக் குரல் வர, அது ராங்காப் போகாதுய்யா என்று சிரித்தார்.
'ஓ பிரியா... பிரியா' பாடலைத் தெலுங்கில் சரணும் ஸ்வேதாவும் பாடி முடித்ததும் அந்த பாடலுக்கான பின்னணி இசை குறித்து விளக்க, ஒவ்வொரு இசைக் கருவியையும் தனியே வாசிக்க வைத்து, கோரஸையும் ஆண், பெண் எனத் தனித்தனியாகப் பாட வைத்து பின்னர் எல்லாத்தையும் மொத்தமாகப் பாடவைத்தது சிறப்பு.
இந்தப் பாடலைப் படியெடுக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கிட்டே என பிரபாகரிடம் கேட்டு, அவரையே பேச வைத்தார்... அத்தனை இசைக்கலைஞர்களையும் கட்டுப்படுத்தும் அந்த மனுசருக்குப் பேசவே பயம்... இங்க வாய்யா... இங்க வந்து பேசு என்றார். படியெடுக்க ஒரு மணி நேரம் ஆகும் என்றவரிடம் இதே பாடலை இப்ப கச்சேரிக்கு ஒத்திகை பண்ண எத்தனை நாளாகும் எனக் கேட்க, எங்களுக்கு எல்லாப் பாடலுமே புதுசாத்தான் இருக்கும்... எப்படியும் மூனு நாலு நாளாகும்ன்னு சொன்னவர், இதுலயும் சார் தப்பைக் கண்டுபிடிப்பார் என்று சிரிக்க, எனக்குத் தவறுகள்தான் கண்ணுக்குத் தெரியும், சரியாப் பண்ணுனா கண்டுக்கமாட்டேன், இதெல்லாம் தேர்ந்த குழந்தைகள்... வீட்டுல பாருங்க தப்புப் பண்ணுற பிள்ளைங்களைத்தான் திட்டுவாங்க... நானும் அப்படித்தான் எனச் சிரித்தார். நமக்கும் தப்புத்தான் முதல்ல தெரியும் அதுனாலதானே என்னவோ நிறைய நட்புக்களின் எழுத்துக்களைத் திருத்தும் பணி இன்று வரை என்னைத் தொடர்கிறது.
கடவுள் படைத்ததுலயே இசைதான் புனிதமானது. ஒரு தெய்வத்தை எடுத்துக்கங்க... இப்பச் சரஸ்வதின்னு வச்சிக்கங்க, அந்த வார்த்தைக்கு ஒரு உருவம் வரும், 'ஊனும் உயிருமாகி' என்ற திருநாவுக்கரசர் பாடலைச் சொல்லி, ஒரு நாமமும் உருவமுமாக இருக்கும் இந்த உலகத்தில், அது இல்லாமல் வெறும் சப்தம் மட்டுமே என்றால் கடவுளே இல்லை, நாம கோவில்ல போயி நின்னு... தொழுகிற இடத்தில் நின்னு... கும்பிட்டாலும் உங்க மனசு வெளியில சுத்திக்கிட்டு இருக்கும். நீங்க ஒரு பாடலை பாட வேண்டாம், அதை நினைத்தாலே போதும் மனசு வேற எங்கயும் போகாது என விளக்கம் சொல்லி அதனால்தான் என்னை இதுலயே கிடடான்னு இறைவன் போட்டு வைத்திருக்கிறான் என்றவர் 'நமக்கு ஒரு மலையாளப் பாட்டு கேக்கலாமா..? சேட்டன் இவட உண்டுல்ல' 'எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டு - எங்களுடனும் ஒரு சேட்டன் இருக்காருன்னு நாங்க ஆசிப் அண்ணனைக் காட்டினோம் - சுர்முகியை அழைத்து 'தும்பி வா' பாடலைப் பாட வைத்தார்.
பொதுவாக எம்மனசு தங்கத்தின் முடிவில் 'ஆத்தா ஆத்தோரமா வாரியா...' என இசைஞானி ஆரம்பித்து வைக்க, எல்லாரும் பாட ஆர்பாட்டத்துடன் நிகழ்ச்சி முடிந்தது.
'இதெல்லாம் உங்களுக்குப் பத்தாது... அதனால அக்டோபர்ல வர்றேன்... விடிய விடிய கேளுங்க... பாடிக்கிட்டே இருக்கேன்' எனச் சொல்லி அவர் இறங்கிப் போக, தெய்வ தரிசனம் முடிந்ததைப் போல் உயர்த்திக் கும்பிட்ட கைகள் அப்படியே சில நிமிடங்கள் நின்றன. பாலாஜி அண்ணன் அப்படியே தூக்கிய கையுடன் உக்கார்ந்திருந்தார்.
திவ்விய தெய்வ தரிசனம்.
நிகழ்வில் கண்டது...
* எஸ்.பி.பி. சரணை மனோவுடன் சேர்ந்து பாட வைத்தது, அவரை மெருகேற்றும் வேலையாக இருக்கலாம் எனத் தோன்றியது.
* மனோவின் குரல் எல்லாம் போய் ரொம்ப நாளாகிவிட்டது... எஸ்.பி.பியின் பாடல்களில் ரொம்பவே சிரமப்பட்டார்.
* எங்களின் அருகில் இருந்த குழந்தை 'ராஜா அங்கிள்... லவ் யூ' எனக் கத்தியதைக் கேட்டு அவர் கையசைத்ததும் அக்குழந்தை அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை.
* ஆட்டம் போட வைக்கும் பாடலுக்கெல்லாம் ஒரு இரண்டு வயதுக் குழந்தை நடனமாகிக் கொண்டிருந்தது.
* வீடியோ எடுத்தவர் 'நம்மட ஸ்வேதா'ன்னு நினைச்சிட்டார் போல, ஸ்வேதாவுடன் யார் பாடினாலும் திரையில் சுவேதா மட்டுமே தெரிந்தார்.
* சில பாடல்களைப் பாடிய சூப்பர் சிங்கர் பாடகிகள் அருமையாகப் பாடினார்கள்.
* எங்களுக்கு முன்னே ராஜ இசையின் போதையை ஏற்றும் முன்னரே போதையுடன் வந்திருந்தவர் கிளம்பும் வரை 'நிலா அது வானத்து மேலே' பாடலை பாடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். அந்தாளோட எங்களுக்குத் தனி பஞ்சாயத்து வேற ஓடிக்கிட்டு இருந்துச்சு. ராஜாராம் வேற 'யோவ் உக்காருய்யா....'ன்னு சாமி வந்த மாதிரி கத்திட்டாரு... எங்க எலுமிச்சை டீ கதை ஆயிருமோன்னு கதக்குன்னு இருந்துச்சு... ஆனாலும் தன்னையே அடக்கிக்கிட்டாரு.
*அவ்வளவு நேரமும் மேடையில் நின்ற இசைஞானி இரண்டு முறை டீ/காபி/சுடுதண்ணீர் - இதில் ஏதோ ஒன்றைக் குடித்தார். அவ்வளவுதான்.
***
அபுதாபியில் இருந்து எங்களுடன் வந்த பிரதோஷ் பாஷாவைக் கூப்பிட அவர் வீட்டிற்குப் போனபோது ராசாவின் இசையுடன் அருமையான சமோசா, ஜாங்கிரி மற்றும் டீ கொடுத்தார், அதற்கும் நன்றி.
வரமாட்டேன் எனச் சொன்னவனை இழுத்துச் சென்ற ராஜாராமுக்கு நன்றி.
பால்கரசு ஊரில் இருப்பதால் அவர் எங்களுடன் இந்நிகழ்ச்சிக்கு வரமுடியாதது வருத்தமே...
அந்த மனுசனைப் பார்க்க கிட்டத்தட்ட ஏழு மணி நேரத்துக்கு மேல் அரங்கின் முன் காத்திருந்ததற்கு தரமான நிகழ்ச்சி...
பார்த்தாச்சு...
ரசிச்சாச்சு...
இனி எப்பவும் போல் வேலையை விரட்டிச் செல்ல அவரின் பாடல்களோடு பயணிப்போம்.
நன்றி.
படம் : நானும் பாலாஜி பாஸ்கரன் அண்ணனும் (அண்ணனுக்கு நன்றி)
-'பரிவை' சே.குமார்.
அருமையான தொகுப்பு. நானே இருந்து அனுபவித்தது போல உணர்வு. கொடுத்து வைத்தவர்.
பதிலளிநீக்குபடிக்கும் பொழுது நிகழ்வுகள் அனைத்தும் கண் முன்னே வருகின்றன ...
பதிலளிநீக்குஇனிமையான நேரம் ..
ரொம்ப நல்லா விவரிச்சிருக்கீங்க குமார். வாசிக்கும் போதே அப்படியே கற்பனை செய்து கொண்டேன் நீங்க சொன்ன விவரணக் காட்சிகளை.
பதிலளிநீக்குகீதா
விவரிப்பு அருமை. எல்லாம் நினைவு வைத்து எழுதியிருக்கிறீர்கள். நாங்களே நேரில் கண்டது போன்ற உணர்வு
பதிலளிநீக்குதுளசிதரன்
மிகச் சிறந்த தொகுப்பு. நேரில் கேட்ட உணர்வு.
பதிலளிநீக்கு