வர இருக்கும் வேரும் விழுதுகளும் புத்தகத்துக்கு மதிப்பு மிகு எனது பேராசான், என்னை வழி நடத்தும் தந்தை முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்கள் எழுதிய அணிந்துரை.
ஐயாவின் கையெழுத்தில் எனது கதைக்கான அணிந்துரை... மகிழ்வுக்குச் சொல்லவும் வேண்டுமா... சிறந்த சிறுகதை எழுத்தாளன் என்று வேறு ஆரம்பித்திருக்கிறார். அவரின் பேனா என்னையும் சிறந்த சிறுகதை எழுத்தாளன் என்றாக்கியிருக்கிறது. இந்த அணிந்துரை கிடைக்க மேகலாவே காரணம். மேகலாவுக்கும் நன்றி என்று சொல்லவதெல்லாம் தேவையில்லை. அதுவும் நம்ம வீடுதான் என்பதால் சகோதரிக்கு எதுக்கு நன்றி. ஐயா, அம்மாவின் ஆசி எப்போதும் கிடைப்பது போல் இன்னும் தொடரணும் அது போதும் எனக்கு.
நகர்ந்து செல்லும் அழகிய
சித்தரிப்புக்கள்!
நல்ல சிறுகதைப் படைப்பாளனாக உருவாகிய தம்பி சே.குமார் இப்போது ஒரு வித்தியாசமான நாவல் படைத்திருக்கிறார்... 'வேரும் விழுதுகளும்' என்பது தலைப்பு. சின்னஞ் சிறிய கிராமத்து மனிதர்களுக்கு இடையே சொத்துடைமையும், சொத்துப் பிரிவினையும் எவ்வாறெல்லாம் குடும்பங்களைப் பாதிக்கின்றன என்பதுதான் மையக் கருத்து. பல்வேறு வகை மாதிரியான பாத்திரங்கள்; யாரையும் நாம் குற்றம் சொல்ல முடியவில்லை; அவரவரும் அவரவர் உரிமை சார்ந்தே பேசுகிறார்கள்; உரிமை சார்ந்து பேசும் போது அவரவரும் கூடுதலாகப் பேசுவது இயல்புதான்; பாத்திரங்கள் பேசும் போது அவர்களது பேச்சுக்களின் இடையில் வாழ்வியல் அனுபவ உண்மைகள் பளிச்சிடுகின்றன.
இராமாயணத்தில் பரதன், இலக்குவன், ஏன், கைகேயி ஆகியோர் சற்று கூடுதலாகப் பேசுவதாகவே தென்படும்; ஆனால் அவர்கள் அவர்களுடைய நிலைப்பாட்டில் பேசும்போது அப்படித்தான் பேசமுடியும். நாவலில் கண்ணதாசன், அழகப்பன், மணி, குமரேசன் மற்றும் மூத்த, இளைய மருமகள்கள், மகள்கள் - இப்படி பாத்திரங்கள் சற்று உரத்தும், எல்லை தாண்டியும் பேசுவதாகவே தம்பி குமார் படைத்துள்ளார்; அனாலும் அவரவரும் அவரவர் உரிமை எல்லைக்குள்தான் நின்று பேசுகிறார்கள்; தொடர்ந்து வாசிக்கும் போது பாத்திரப் பேச்சுக்கள் சற்று அலுப்புத் தட்டவே செய்கிறது எனினும் அவர்களது பேச்சுக்களில் அவரவர்க்கு உரிய உலகியல் தழுவிய மெய்மைகள் புலப்படவே செய்கின்றன.
கண்ணதாசனின் பேச்சு, உரையாடல்கள் விரிவானவையே, என்றாலும் குடும்பப் பாங்கும், பாசமும் தழுவியவை; நீளமாக இருக்கின்றன என்ற சலிப்பு இல்லை; "கண்ணதாசனுக்குக் கண்ணீர் தானாக இறங்கியது" என்று வரும் ஓர் இடம் படிப்பவரைச் சற்று அசைக்கத்தான் செய்யும்.
பிற பாத்திரங்கள் எல்லாரும் விழுதுகள் எனக்கொண்டால் கந்தசாமி - காளியம்மாள் இருவரும் வேர் எனக் கொள்ளலாம்; இவர்கள் இருவரையும் முதன்மைப் பாத்திரங்களாகக் கொண்டு உறவுகள் அனைவரும் சுற்றிச் சுற்றி வருகின்றன; இவர்கள் அனைவரும் சொத்து, வீடு, வாசல் என்று சொத்துரிமை பாராட்டி - உரிமைக்குரல் எழுப்பிப் பேசுகின்றனர்.
சில இடங்களில் காளியம்மாள் வழியாகவும், பெரும்பாலான இடங்களில் கந்தசாமி மூலமாகவும் வாழ்வியலின் ஆழமான மெய்மைகளை குமார் உணர்த்துகிறார். வாசகர்களும் விழுதுகள்தான் என்றும் நாம் நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
காளியம்மாள்
இறந்து போன பிறகு 'வேர்' என இருப்பவர் கந்தசாமி மட்டுமே; தொடக்கத்திலிருந்து கிளைக் குடும்பங்களுக்கு வழிகாட்டுபவராக, உறவு, சொத்து, சொத்துப் பங்கீடு
அனைத்திலும் அவரே முதன்மையாக இடம் பெறுகிறார். கந்தசாமியின் கடைசிக்கால வாழ்க்கையை
குமார் வருணித்துச் செல்லும் இடங்கள் மிகவும் மென்மையான கவிதைக்கு இணையானவை.
கண்ணதாசனுக்குக் கந்தசாமி சித்தப்பா முறைதான் என்பது தெளிவாகும் போது, அவன் காளியம்மாள் இறந்த பிறகு தங்களோடு அவரை இருக்குமாறு அழைப்பதும், விழுதுகள் எங்கெங்கோ பாவிப்பரவி இருக்கமுடியுமோ அங்கே போகட்டும், 'வேர்' ஆகிய நான் தனியே இருந்து விடுகிறேன் என்று கந்தசாமி பிடிவாதமாத் தனியே இருந்துவிட முடிவு செய்வதும் நம்மை உருக்கிவிடும் இடங்கள்.
இத்தனை விரிவாக, ஒரு கிராமியத் தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம், சொத்துக்கள், விற்பனை, பாகப்பிரிவினை என்றெல்லாம் விவாதித்து, விவரித்துவிட்டு இறுதியில் "இது நகர்ந்து போகும் வாழ்க்கை" என்று சொல்லும் இடத்தில் வாசகர்களாகிய நம்மை மிக மிக ஆழமாகவே சிந்திக்க வைத்து விடுகிறார் குமார்.
கந்தசாமி தொடங்கி, கந்தசாமியோடு நிறைவு பெறும் இந்த நாவல், ஒரு இந்திய, தமிழகத்தின் குடும்பச் சித்திரம்; வாழ்க்கை என்பது ஒரு குச்சும் அல்ல, குடிசையும் அல்ல; வேரும் அதனைச் சுற்றி நகர்ந்து நகர்ந்து செல்லும் சிறிய சிறிய ஆறும் போன்றது என்று தம்பி குமார் அற்புதம் படைத்திருக்கிறார்.
அன்புத் தம்பி சே.குமார் அவர்களது பேனாவிலிருந்து நாம் இன்னும் பல எழுத்தோவியங்களை எதிர்பார்க்கிறோம்; வாழ்த்துகிறோம்.
மு.பழனி
இராகுலதாசன்.
தேவகோட்டை.
01/01/2021.
பேரன்பும் பெருமகிழ்வும் ஐயா.
-'பரிவை' சே.குமார்.
ஆசீர்வதிக்கப்பட்டீர்கள் குமார். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசிறப்பாக இருக்கிறது அவரது அணிந்துரை. பாராட்டுகள் குமார்.
பதிலளிநீக்குதிரும்ப மு.பழனி இராகுலதாசன் அவர்களின் மிகவும் ஆழ்ந்த கவனிப்பு... வாழ்த்துகள் குமார்...
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு