வியாழன், 12 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வலியைக் கொடுத்த 'ஆனந்தயாழ்'

Image result for bigg boss-3 80th day losliya images
80வது நாள் காலையிலேயே 'ராஜாளி நீ காலி'ன்னு பிக்பாஸ் வீட்டுல பாட்டுப் போட்டு எழுப்பி விட்டானுங்க... சரி இன்னைக்கு ஏதோ பஞ்சாயத்து இருக்கும் போலன்னு அவனவன் மனசுக்குள்ள ஓடியிருக்கும் போல எவனும் எழுந்து ஆடவில்லை. தர்ஷனும் ஷெரினும் கிச்சன்ல நின்னுக்கிட்டு இருந்தாங்க... 

போன வாரம் ஆட்டம் போட்ட வனிதா இந்த வாரம் ரொம்பச் சாதுவாய் இருக்கிறார்... வெளிய நான் போறேன் பிக்பாஸ்... என்னை அனுப்பிடுங்கன்னு சேரன் போனப்ப கதை விட்டவர், இப்ப அமைதியாக இருப்பதுபோல் அழகான திரைக்கதை எழுதிக்கிட்டு இருக்கார். மேலும் லாஸ்லியாவுடன் ரொம்ப நெருக்கமாய் இருக்கிறார். ஷெரினுடன் சண்டை போட்டதால் வேறு துணை யாருமில்லாத காரணத்தால்தான் இந்த நெருக்கம்.

சேரன் பற்றியும் லாஸ்லியாவும் கவினும் பேசியது பற்றியும் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன் ரகசிய அறையில் இருக்கலாம் அல்லது குடும்பத்துடன் இந்த வாரம் வரலாம் என்பது லாஸ்லியாவின் எண்ணம்... வனிதாவுக்குள்ளும் அதே எண்ணம்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை பேச்சில் உணர முடிந்தது.  

மேலும் தன்னிடம் கவின் பேசும் போது எப்போதும் என்னை நிர்பந்திக்கவில்லை... விளையாடலாம் என்றுதான் பேசினோம்... இதெப்படி இப்படி அவன் நிர்பந்திக்கிறான் என வருகிறதுன்னு தெரியலை என்றார் லாஸ்லியா. சரி விடுங்க அவர் எதோ கேட்கணும்ன்னு கேட்டுட்டார்ன்னு வனிதா சொன்னாங்க. 

புரிந்து கொள்ளும் மனநிலை இல்லாதததையே தனக்குச் சாதகமாக்கி கேமராக்களுக்கு முன் உன்னை விரும்புறேன்னு தன்னோட வாயாலயே சொல்ல வைக்க முயல்கிறான் கவின் என்பதை லாஸ்லியா உணரவில்லை... ஆனால் பார்க்கும் நாமும் சேரனும் அதை நன்றாக உணர முடிகிறது.

விக்ரம் வேதா தீம் மியூசிக் ஒலிபரப்பப்பட... யாருக்கு இந்தப் பில்டப்புன்னு எல்லாரும் யோசிச்சிக்கிட்டே சிவப்புக் கதவை நோக்கி நகர, இது என்ன படப்பாட்டு என வனிதா கேட்க, விக்ரம் வேதா தீம் மியூசிக்குன்னு தர்ஷன் சொல்ல, சேரன் சார் வர்றாருன்னு சாண்டி சொல்ல, அவருக்கும் விக்ரம் வேதாவுக்கும் என்ன தொடர்புன்னு வனிதா அப்பிராணியாக் கேட்டாங்க... திரும்பி வாறேன்... அடிச்சித் தூக்கப் போறேன்னு சொல்லாமச் சொல்லத்தானே அந்த தீம் மியூசிக்.

சேரனைப் பார்த்ததும் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும்தான் என்ன சொல்வதெனத் தெரியாத நிலை. உண்மையான பாசத்துடன் சேரன் சார் என ஓடிக் கட்டிக் கொண்டது ஷெரின்தான். லாஸ்லியாவுக்கோ முள்ளும் மலரும் ஷோபா நிலை... சேரப்பான்னு ஓடினா கவின் கோவிச்சுக்குவான்... ஓடலைன்னாலும் சிக்கல்... இந்தச் சூழலை சேரன் உணர்தல் நலம். வனிதா, தர்ஷன், சாண்டி, முகன் என எல்லாரும் கட்டியணைத்து அன்பைப் பரிமாறிய பின்னே லாஸ்லியா வந்தார்.... சக்கரக்கட்டி என சேரன் கட்டிக் கொண்டதில் இனிப்பு தூக்கலாக இருப்பது போல் தெரிந்தது, சேரன் சறுக்கிய தருணம் # 1.

தர்ஷன் சேரனைத் தூக்கிக் கொண்டாட, எல்லாத்தையும் பார்த்துட்டு கேள்வியாவா கேக்குறீங்கன்னு வனிதா செல்லக் கோபம் கொண்டார். கொஞ்ச நேர அளவளாவல்... பின் உள்ளே போகும் போது கவினிடம் டேய் அப்பா... சும்மா ஜாலிக்குத்தான்டா கேள்வி கேட்டேன். அதை லேசா எடுத்துக்காம எப்படி விளக்கம் கொடுக்கிறான் எனத் தோளில் தட்டினார். நீங்க பேசியதால்தான் அப்படி ஒரு கேள்வியை முன் வைக்க வேண்டியிருந்தது என்பதைச் சொல்லியிருக்கலாம். கேலிக்காக இப்படி ஒரு கேள்வியா என்ற கேள்வி சாண்டியின் வார்த்தையில் வந்து விழுந்தது. சேரன் சறுக்கிய தருணம் # 2.

வனிதா, ஷெரினுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே இருக்காங்க... அவளை விடுறான் இல்லை... சொல்லச் சொல்லி நிர்பந்திக்கிறான்.. சினிமாவுல கூட இவ்வளவு காதலை வைக்க முடியாது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் சேரன். உங்க கூட அவ பேசுனா அவனுக்குப் பிடிக்கலையாம் என்று சொல்லி வைத்தார் வனிதா. உன்னை கவின் நாமினேட் பண்ணும் போது சொன்ன காரணம் நீயும் சாக்சியும் கக்கூஸ்ல தர்ஷனைப் பற்றிப் பேசியதாம்... அதை புரிஞ்சிக்கிட்டு விளையாடு... யாரையும் நம்பாதே... எல்லாரும் செமையா விளையாடுறாங்க... நாமதான் பின்னால இருக்கோம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். நாமினேசன் குறித்துப் பேச வேண்டிய அவசியமில்லை. சேரன் சறுக்கிய தருணம் # 3.

எல்லாரும் ஜாலியாப் பேசிக்கிட்டு இருக்கும் போது சிகப்புக் கதவைத் திறந்து கொண்டு லாஸ்லியாவின் அம்மாவும் தங்கைகளும் வர, லாஸ்லியா அழுகையோடு ஓடினார். அணைத்துக் கொண்டார்கள்... அழுதார்கள்... யார் முகத்திலும் சந்தோஷம் இல்லை.

'ஏம்மா அழுவுறீங்க..?'

'ஏனம்மா இப்படி பண்ணுறே...?'

'எல்லாத்தையும் விட்டுட்டு வாம்மா...'

'நானும் வரோன்னும்ன்னுதான் நினைக்கிறேன்... என்னால வர இயலாதம்மா...'

'ஏன் வர இயலாது... அதெல்லாம் முடியும்... எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு விளையாட்டை மட்டும் பாரம்மா..'

'என்னம்மா ஆச்சு..?'

'பக்கத்து ஆட்களெல்லாம் இப்ப என்னனென்ன கதைக்கிறா தெரியுமா..?'

'அம்மா.... சாரிம்மா...'

'எம் பொண்ணை எனக்குத் தெரியும்... நீ இப்ப மாறிட்டேம்ம்மா...'

இதில் என் பொண்ணை எனக்குத் தெரியும் என்ற வார்த்தை மட்டுமே அந்த அம்மாவிடம் இருந்து அடிக்கடி வந்து கொண்டே இருந்தது.

லாஸ்லியாவின் குட்டித் தங்கை குட்டிக்குட்டி வசனங்களில் நடைமுறையை நச்செனச் சொன்னார்.

'ரெண்டு நாட்களா இருக்க மாதிரி எப்பவும் இரு அக்கா...'

'உனக்கொரு உலகம் இருக்கு... அதில் அம்மா, அப்பா, நாங்கதான் இருக்கோம்...'

'தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வையக்கா..'

'உன்னால அப்பாவுக்கு உடம்பு முடியலை'

'எல்லாரும் அருமையா விளையாடுறாங்க... உன்னை பயன்படுத்திக்கிறாக அக்கா...'

'யாரும் யாருக்கும் விட்டுக் கொடுக்கலை'

அந்தப் பெண்களும் சேரப்பா என விளித்ததும் சேரப்பாக்கிட்ட போய் பேசலாம் வாங்க என்று சொன்னதும் லாஸ்லியாவின் அம்மா நீங்க இருக்க நம்பிக்கையிலதான் எங்க பொண்ண இங்க விட்டு வச்சிருக்கோம் என்றதும் சேரனுக்கு அந்த குடும்பத்தில் கிடைத்திருக்கும் மரியாதையைக் காட்டியது. இது சேரன் மனிதனாய் உயர்ந்த தருணம். 

சேரனுக்கு இது தேவையா என்றுதான் கவின் லாஸ்லியா காதல் விவகாரத்தில் பேசினோமே ஒழிய, யாரும் சேரன் செய்வது சரியெனச் சொல்லவில்லை... நீங்கள் செய்தது சரியே என்றது சம்பந்தப்பட்ட குடும்பம்... அதுதானே வேணும்.

அம்மாவின் அழுகையும் என் மகளைத் தெரியும் எனக்கு என்று அடிக்கடி சொன்னதும் எல்லாரிடமும் பேசிய போதும் கவினை ஒதுக்கியதும் லாஸ்லியாவுக்கு தன் குடும்பதைத் தனது காதல் எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை உணர்த்திய போதும் அவரால் அதை உணர்ந்து வெளிவர முடியாத சூழலுக்குள்தான் இருக்க நேர்ந்தது. 

அப்படியான சூழலைக் கவின் அருமையாகக் கட்டமைத்து வைத்திருக்கிறான். தன்னை ஒதுக்குகிறார்கள் என்று அவன் உணர்ந்த போது வீட்டுக்குள் தனியே அமர்ந்திருந்தான். சாக்சியுடன் காதலில் உருகியவன் லாஸ்லியாவுக்குக் கிடைக்கும் கைதட்டல்களையும் அவரின் சின்னச் சின்ன சேட்டைகளையும் பார்த்து  மெல்ல சாக்சியை உதறி லாஸ்லியாவைப் பற்றிக் கொண்டான் என்பதை அறிவோம்தானே.

லாஸ்லியாவின் குடும்பத்தைப் பேச விட்டு விட்டு எல்லாரும் உள்ளே வர, வெளியே அந்தத் தாய் 'எம் புள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும்' என கண்ணீருடன் சொல்லிக் கொண்டே இருந்தார். வேறென்ன பேச... இதே வீடாக இருந்தால் விளக்குமாறு விளையாண்டிருக்கும்... இது பொதுவெளி.. உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படும்... இங்கு வேறென்ன செய்ய முடியும்..? தன் ஆற்றாமையைக் கண்ணீராய் இறக்கிக் கொண்டிருந்தார். 

உன்னை மகளாய் நினைத்தவரை நிறையத் தடவை காயப் படுத்தினேதானே.. நீ அப்படிப்பட்ட பொண்ணு இல்லையேம்மா... ஏம்மா இப்படி மாறிட்டே... உன்னை எல்லாரும் எங்க லாஸ்லியான்னு சொன்னாங்க... ஆனா இப்ப... பக்கத்து ஆட்களெல்லாம் ஏசுறாங்கம்மா... அவங்ககிட்ட எல்லாம் எம்பொண்ண எனக்குத் தெரியும்ன்னு சொல்லிட்டேன்... எம்பொண்ணை எனக்கு மட்டும்தான் தெரியும்... என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

அதே நேரம் உள்ளே அவங்க இப்பப் பேசட்டும்... கொஞ்சம் பொறு... மெல்லப் பேசலாம் என கவினுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் சேரன்.

'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை' என நா.முத்துக்குமாரின் ஆனந்தயாழ் மீட்டப்பட்ட போது பத்தாண்டுகளாக பார்க்காத அப்பா என்னைப் பார்க்க வருகிறாரா..? இது சாத்தியமா..? கனடாவில் இருந்து வந்திருக்கிறாரா..? என்ற ஆச்சர்யங்கள் நிறைந்த அழுகையுடன் லாஸ்லியா தவித்த தவிப்பை மகள்களைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணரமுடியும்... 

பாடல் வரிகளின் முன்னே கண்கள் விரிய அம்மாவைப் பார்க்கவும் கதவைப் பார்க்கவுமாய் தவித்த தவிப்பை நீண்ட நேரம் காட்டியதில் பார்க்கும் நமக்கே பாவமாக இருந்தது. விஜய் டிவிக்கு இது டிஆர்பிக்கான வாய்ப்பல்லவா...? அழட்டுமே... இப்ப என்ன... கிளிசரின் போட்டு அரைமணி நேரம் அழற நாடகங்களை கண் கொட்டாமல் பார்க்கும் மக்கள் உண்மையான அழுகையுடன் ஒரு மகள் தன் தந்தைக்காக காத்திருப்பதைப் பார்க்கட்டுமே என அழவிட்டு வேடிக்கை பார்த்தது விஜய் டிவி... வேதனை. 

ஆகாசத்தில் இருந்தாலும் ஆனந்தயாழில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் முத்துக்குமாரா... உன் இழப்பு தமிழ்ச் சினிமாவுக்குப் பேரிழப்பு என்பதை உன் ஒவ்வொரு பாடல்களும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.. மிஸ் யூ கவிஞரே.

சேரனின் நகலென வந்தார் லாஸ்லியாவின் அப்பா... முகத்தில் மகளைப் பார்க்கும் பூரிப்பு இல்லை... அப்பாக்களுக்குத்தானே தெரியும் மகள்கள் கொடுக்கும் அன்பும் வலியும்... இங்கே வலியைச் சுமந்த ஒரு தகப்பனாய்... போற போக்கில் மகளை அணைத்து 'நீ எங்கிட்ட என்ன சொல்லிட்டு வந்தே... என்ன பண்ணிக்கிட்டு இருக்கே...' என்றபடி மற்றவர்களிடம் வந்தார்.

எல்லாருக்கும் கை கொடுத்தார்... 'உன்னை எதுக்கம்மா அனுப்பினேன்.. இதுக்கா... என்ன சொல்லிட்டு வந்தே... இப்படியாகும்ன்னு தெரிஞ்சிருந்தா அனுப்பியிருக்க மாட்டேனே... உன்னை வைத்து காசு பார்க்கவா அனுப்பினேன்... உங்கிட்ட கதைக்கப் பிடிக்கலை... எல்லாத்தையும் இறக்கிப் போட்டுட்டு உள்ளே வா...' என்றபடி சேரனை அணைத்து வாங்க நாம் போகலாம் என்றார். அப்போதேனும் மற்றவர்களுக்கு சேரனுக்கு கிடைக்கும் மரியாதை எதனால் என்பது புரிந்திருக்க வேண்டும்.

சேரன் சமாதானம் பேசினார்... 

'இல்ல சேரன் சார்... இந்தப் பொழப்புக்கு நான் பிச்சையெடுத்துப் பிழைக்கலாம்... எல்லாம் பார்த்துட்டுத்தான் வர்றேன்... என்ன பண்ணிக்கிட்டு இருக்காள்'ன்னு எனப் புலம்பினார். அவரின் வலி ரொம்பக் கொடுமையானது. தன் மகள் செய்யும் காதல் லீலைகளை உலகமே வேடிக்கை பார்க்கிறது... கேலி செய்கிறது என்பதை அறிந்த பெற்ற மனசு எவ்வளவு துடிக்கும்... அதுதான் அவரின் பேச்சில் தெரிந்தது.

வெளியில் அவர்கள் பேச, உள்ளே கவின் அழுது நான் சாரி சொல்லிடுறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க, எல்லாரும் இப்ப வேண்டாம்... அது பிரச்சினையை உன் மேல கொண்டு வந்து நிப்பாட்டிடும்... பொறு... பேசலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

அந்த நேரத்திலும் அந்த அழுகையில் உண்மை இருப்பதாய்த் தோணவில்லைதான்.... என்னமோ எங்கப்பா... அது இதுன்னு சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தார். இருப்பினும் ஒரு ஆண் மகன் தேம்பித் தேம்பி அழுதது... அது பொய்யான அழுகை என்றாலும் கூட வருத்தமாகத்தான் இருந்தது... இனியேனும் விளையாட ஆரம்பியுங்கள் கவின்.

உள்ளே எல்லாரிடமும் கோபம் தவிர்த்த அன்போடு பேசினார் லாஸ்லியாவின் அப்பா.  கவினிடம் விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள்... எல்லாரும் நண்பர்களா வெளியே வாங்க... என்றார். உங்ககிட்ட மன்னிப்புக் கேட்கணும்ன்னு சொன்னார் என சேரன் சொல்ல, மன்னிப்பெல்லாம் எதுக்கு உங்க மேல எனக்குக் கோபமில்லை என்றார். சேரனிடம் உரிமையுடன் பேசினார். மகளைத் திட்டும் போதெல்லாம் நம்ம பிள்ளையை நாமே கேவலமாப் பேசக்கூடாது... அவளாலதான் இப்ப இங்க நிக்கிறோம் என அந்த அன்னை, கணவனை தன் பேச்சால் கட்டிப் போட்டார். மெல்ல மெல்ல கோபம் குறைந்து மகள் மீதான பாசம் அவருக்குள் எட்டிப் பார்த்தது.

உள்ளே வந்த அம்மாவிடம் கவின்கிட்ட பேசும்மா என்றபோது அழகாய்க் கடந்து போனார்... எவ்வளவு வேதனை இருந்தால் இப்படி ஒருவரை ஒதுக்கிப் போக முடியும்..? சந்தோஷங்களுடன் மகனைக் காண வந்த முகனின் அம்மாவுக்கும் சங்கடத்துடன் மகளைக் காண வந்த லாஸ்லியாவின் அம்மாவுக்கும்தான் எத்தனை வித்தியாசம்..? இரண்டு அம்மாக்களுமே எங்கள் வாழ்க்கை சிறக்க இவன்/இவள்தான் காரணம் என்று அழுகையுடன் சொன்னார்கள்... சொன்ன போது அந்த அழுகையின் தரம் மனதின் தன்மையைப் பிரதிபலித்தது.

அப்பா, அம்மா, மகள் பேசிக் கொண்டிருக்க... தன் மகளின் கைகளைப் பார்த்து என்னடி உனக்கு உள்ளங்கை வேர்க்குது என்றார். சின்னப் புள்ளையிலயே வேர்க்கும்தானேப்பா... இல்லையாம்மா... என லாஸ்லியா சொல்ல, மகளின் கையைத் தன் கையுடன் வைத்து ரொம்பச் சின்னதா இருக்குடா உன் கை எனக் கொஞ்சினார்.... அப்பா சிவப்பா வந்திருக்காருல்லம்மான்னு லாஸ்லியா சொல்ல, நானா நான் கரிக்கட்டையாவுல்லடி இருக்கேன் எனச் சிரித்தார். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும் தன் தேவதைகளுக்கு நாம் எப்பவும் தேவதூதன்தான் என்பது.

கமல் சார் இந்த டிவியிலதான் பேசுவார்... நாங்க இங்கதான் உட்கார்ந்திருப்போம் எனச் சொன்னார் லாஸ்லியா. கமல் முன் கால்மேல் கால் போட்டு அமர்வதைத் தப்பெனச் சொல்லி, நான் உன்னை அப்படியா வளர்த்திருக்கிறேன் மரியாதையில்லாமல் உட்கார்றே என்றது ஒரு சாதாரண குடும்பத்து வளர்ப்பு முறையைச் சுட்டிக்காட்டியது. 

பள்ளியில் படிக்கும் போது நாங்களெல்லாம் வீட்டுக்குப் பெரியவங்க யாராவது வந்தா சேரில் அல்லது அவர்களுக்கு உயரமான படிக்கட்டில் அமர்ந்திருந்தால் கூட மரியாதை தெரியிதா... பெரியவங்க முன்னாடி ஏறிக்கிட்டு உக்கார்றாங்கன்னு அப்பா திட்டுவார். இன்றுவரை அந்தப் பழக்கம் தொடர்கிறது. 

'அப்பா மரியாதை மனசுக்குள் இருந்தாப் போதும்... காலை போட்ட என்ன தப்பு' என்றார் லாஸ்லியா. அவர் எவ்வளவு பெரிய ஆள் அவர் முன் அப்படி உக்காரக்கூடாதும்மா... தப்புத்தப்பா எழுதுறாங்கதானே என்றதும் எழுதுறவங்க எழுதத்தான் செய்வாங்க... அவங்களுக்காக மாற முடியுமா... என்றார் லாஸ்லியா. லாஸ்லியா கால் மேல் கால் போடுவது தவறில்லை... இருப்பினும் அதை ஆட்டிக் கொண்டே இருத்தல் தவறுதான்.

 கமல், சேரனெல்லாம் அவர்களுக்கு நம்மளைப் போல் அத்திவரதராய்த்தான் இருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கவும் பேசவும் கிடைத்த வாய்ப்பை தன் மகள் தவறாகப் பயன்படுத்துகிறாளே என்ற ஆதங்கமே அவர்களிடம் இருந்தது.

ஊர் பேசுது என்ற போது ஊர் பேசினாப் பேசட்டும்.. உங்க சம்மதம் எனக்குப் போதும் என்று லாஸ்லியா சொன்னதை அவரின் அப்பா சரிவிடு எனக் கடந்து போனார்... ஆனால் லாஸ்லியா காதலைக் கடக்கவில்லை என்பதையே 'உங்க சம்மதம் போதும்' என்ற வரிகள் வலிமையுடன் சொல்லின... இந்தக் காதல் இங்கு இடை நிறுத்தப்படுவதாய் காட்டப்படலாமே ஒழிய ஒரு போதும் அது தனது வலிமையை இழக்காது.

இதற்கிடையே கவின் இருக்க கோபத்தையெல்லாம் சாண்டி மீது இறக்கி வைத்தான். சாண்டி கோபமாய் கக்கூஸ்க்குள்ள போக, கவினுக்குச் சூழலை விளக்கினான் தர்ஷன்... கக்கூஸ்ல இருந்து சாண்டி வெளியே வரும்போது அண்ணன் வரும்... கோபம் தணிந்து என்னை வாரி அணைக்கும்ன்னு உள்ளே தனியா உக்கார்ந்திருந்தான் கவின். சாண்டி கண்டுக்காம போனாலும் மனசு கேக்காம திரும்பிப் போய் கூட்டி வந்தார். இதுதான் உண்மையான அன்பு... விட்டுக் கொடுக்காத நட்பு... எதற்காகவும் தூக்கியெறியாத நட்பு... ரொம்ப பிடிச்சிருந்தது சாண்டி... லைக் யூ.

எல்லாரும் அமர்ந்து பேசும் போது பொண்ணு கல்யாணத்துக்குப் போறீங்களான்னு கேட்டார்கள் என தன் வலியை மீண்டும் இறக்கி வைத்தார் லாஸ்லியாவின் அப்பா... இந்த வலியை போற போக்கில் கேலி செய்யலாம்... ஆனால் அதன் வலியை அனுபவித்திருந்தால் மட்டுமே தெரியும் அது எவ்வளவு மோசமானது என்பது... கூனிக்குறுகி தங்கள் உறவுகளிடம் நிற்கும் போதுதான் பெண்ணைப் பெற்ற அப்பனாய் வாழ வேண்டுமா என்று தோன்றும்.

லாஸ்லியாவின் உண்மையான் பெயர் பிரியங்கா என்பதும் ஊரில் மனோஜ் என்பவரைக் காதலித்ததும்... கவினுடனான லாஸ்லியாவின் காதலால் அவர் வருத்தத்தில் இருப்பதும்... அவரை ஏமாத்திட்டே எனக் கேலியாய்த் தங்கைகளும் அம்மாவும் சொன்னபோது தெரிந்து கொள்ள முடிந்தது.

காதல் தவறானதா என்றால்... இன்றைய காலகட்டத்தில் காதல் தவறொன்றும் இல்லை... காதலித்து திருமணம் செய்து கொள்வதில் சில ஜோடிகளுக்கு புரிதல் இல்லாமல் போகலாம்... ஆனால் பல ஜோடிகள் புரிதலுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

லாஸ்லியா - கவின் வெளியில் போய் பார்த்துப்போமென விளையாட்டை விவேகத்துடன் விளையாண்டிருந்தால் இந்தக் காதல் அழகானதாய் மாறியிருக்கும். எப்பவும் இருவருமாய் 'சொல்லு... இப்பச் சொல்லு... இப்பவே சொல்லு...' எனத் திரிந்ததும்... அதை மட்டுமே டிஆர்பிக்காக ஒளிபரப்பியதுமே பெற்றவர்களை அசிங்கப்படும் அளவுக்கு போய்விட்டது.

கவினுக்கு ஆதரவாய் லாஸ்லியாவின் அப்பாவைத் திட்டும் நாம் நம் வீட்டுப் பெண், அவள் அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, யாராகவோ இருக்கட்டும்... காதலில் விழுந்தாள் ஏற்றுக் கொள்வோமா..? நமக்கு வருத்தமோ வலியோ இருக்காதா..? சினிமாக் காதலை விசிலடித்து வரவேற்கும் நாம்... பிரபலங்களின் காதலுக்காக உருகும் நாம்... வீட்டில் என்று வரும் போது ரகுவரன்களாகத்தானே நிற்கிறோம் சசிக்குமார்களாக ஆவதில்லையே... பக்கத்து வீட்டில் நடந்தால் பாயாசமாகத் தெரிவதும் நம்ம வீட்டில் என்றால் பாவக்காயாகத் தெரிவதும் ஏன்..? தயவு செய்து அடுத்தவன் வலியை கேவலப்படுத்தாதீர்கள்..? அதை உணராத வரை உங்களால் அதன் தாக்கத்தை அறிய முடியாது.

இந்தக் காதலால் நாங்கள் ஒருவனை இழந்தோம்... அந்த இழப்பின் வலியை இன்னும் சுமக்கிறோம்... இன்றிருந்தால் அந்தத் தந்தை உழைக்காமல் ஓய்வில் இருக்கலாம்... ஆனால் இப்போதும் பகலெல்லாம் உழைத்து இரவெல்லாம் மகன் நினைவில் உழன்று தவிக்கும் அவருக்கு யார் ஆறுதல்..?  அவருடைய மன வலியை எங்கள் குழந்தைகள் போக்கினாலும் முழுமையாகக் கரையவில்லையே... வாழும் காலம் வரை அது இருந்து கொண்டேதானே இருக்கும். 

ஒரு நடுத்தரக் குடும்பத்தை இந்தக் காதல் எப்படிப் பாதிக்கும் என்பதை உணர்ந்திருந்தால் மட்டுமே லாஸ்லியாவின் குடும்பத்தாரின் வலியை வலியாகப் பார்க்கச் சொல்லும்... எனக்கு வலித்தது... லாஸ்லியா காதலை விடவேண்டும் எனச் சொல்லவில்லை வெளியில் போய் விவரம் அறிந்து, பிடித்திருக்கும் பட்சத்தில் குடும்பத்தின் சம்மதத்துடன் கவினை மணக்கலாம்... தப்பேயில்லை... காதல் வலிமையானது.

குடும்பத்தாரின் வலி பெரிதா..? கவின் பெரிதா..? என்ற நிலையில் லாஸ்லியா எதைப் பெரிதென்பார்..? காதல் கண்ணை மறைக்கும்... உறவைத் துறக்கும்... லாஸ்லியா 'ஆனந்தயாழை' மீட்டுகிறாரா..? இல்லை 'அழகிய அசுரா' பாடுகிறாரா..? என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

சேரன் தன் மகள் தாமினியால் பெற்ற வலியின் காரணமாகவே லாஸ்லியாவை எதாயிருந்தாலும் வெளியில் போய் பார்த்துக்கங்க எனச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அதை காதல் வேகம் தப்பாக நினைக்க வைத்தது. அவரின் பேச்சைக் கேட்டு தெளிவான முடிவோடு நகர்ந்திருந்தால் இத்தனை அசிங்கம் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் வந்திருக்காது. இவர்களை விட மோசமான வலியை ஒரு குடும்பமே சுமக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. நல்லதைச் சொன்னால் ஏற்கும் காலம் இது இல்லை என்பதால் இனி லாஸ்லியா விவகாரங்களில் சேரன் தள்ளியிருத்தலே நலம் பயக்கும்.... அதைச் செய்வாரா..? அல்லது சக்கரக்கட்டின்னு பேரைக் கெடுத்துக் கொள்வாரா...? வரும் நாட்களில் பார்ப்போம்.

வந்த இரண்டாவது வாரம் முதலே உன் பின்னாலதான் திரியுறேன்னு லாஸ்லியா கவினிடம் இரவில் பேசும் போது சொல்வார். அதைச் சேரன் நேற்று வனிதா, ஷெரினிடம் சொன்னார். சாக்சிக்கு முன்னே தனக்குள் காதல் இருந்தபோது சாக்சியிடம் நட்பெனச் சொன்னவர், இப்போது அந்தக் காதலை முறித்துக் கொள்ள நினைப்பாரா..? இல்லை தொப்புள்கொடி உறவை முறித்துக் கொள்ள நினைப்பாரா..? வரும் நாட்களில் பார்க்கலாம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

  1. ஆழமான விமர்சனப் பார்வை... நடந்த நிகழ்வுகளை தவிர்த்து, சொன்ன மற்றவைகள் எல்லாம்... என்னவென்று சொல்ல...? அருமை... அருமை குமார்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் பரிவை சே குமார் அவர்களே ...நினைவிருக்கா ..என்னை ? மிக அந்நீண்ட நாட்களுக்கு பின் ...ஒருகாலத்தில் பிளாக் நண்பர்கள். காலமாற்றம் பொறுப்புகள் ..எழுதுவதில்லை. தினமும் உங்கள் பதிவை வாசிப்பேன் அருமையாக எழுதுகிறீர்கள் உள்ளதை உள்ள படி. இறுதிவரை தொடருங்கள் முடிவு வரும் வரை ..நேரம் எடுத்து பகிரவதற்கு நன்றி ..மீண்டும் தொடர் வேன் ..சகோதரி நிலாமதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம்.
      நலமா சகோதரி?
      எவ்வளவு நாளாச்சு...
      எப்படி மறப்பேன்... என் முதல் பதிவில் இருந்து கருத்துப் பகிர்ந்தவர் தாங்கள்.
      இன்னும் என் பதிவுகளை வாசிப்பது குறித்து மகிழ்ச்சி... நன்றி.

      முடிந்தவரை எழுதுவேன்.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி