ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : சுவராஸ்யமில்லாத சனி

Image result for biggboss 31st august 2019 kamal images
பிக்பாஸில் கமலின் வருகைக்கு முன் மேடைக்கு வந்த இந்த வாரம் நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக் கொடுத்து, எங்களைவிட திறமையாகச் செய்தீர்கள் எனத் தரச் சான்றிதழ் கொடுத்த கலைஞர்கள் நாட்டுப் புற பாடலுடன் 'போற்றிப் பாடடி' பெண்ணே என கமலின் புகழும் பாடினார்கள்.

வந்தார் கமல்... ஏனோ நடையிலும் முகத்திலும் உற்சாகமில்லை... கமலுக்கே உரித்தான கம்பீரக் குரல் இல்லை... சோர்வாகவே இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்புக் கொடுக்கும் அயற்சி போலும். அப்போதே தெரிந்தது இன்றைக்கு நிகழ்ச்சியில் மொக்கைதான் போடுவார்கள் என்பது.

கலைஞர்களை வாழ்த்தி தன்னுடைய படங்களில் எப்பவுமே நாட்டுப்புறக் கலைஞர்களைப் பற்றிப் கொஞ்சமாவது தொட்டுச் செல்வதாகவும்... கலாச்சாரம் கலாச்சரம் என்று பேசுகிறோம் அதுலயே கலையும் இருக்கு பாருங்க அதுதான் கலாச்சாரம்... இன்று இருக்கும் சினிமாவுக்கெல்லாம் இவர்கள் மூதாதையர்கள்... என்றெல்லாம் பேசி வெள்ளிக்கிழமைக்குள் போனார்.

69ம் நாள் காலை பத்துமணி 'மேலே ஏறி வாரோம்' பாடல் திருப்பள்ளி எழுச்சியாய்... முகன், லாஸ்லியா, சாண்டி என எப்பவும் போல ஆட்டம், வனிதாக்காவையும் இழுத்து வந்தார்கள்... அக்காவும் ஒரு ஆட்டத்தைப் போட, படுத்துக்கிட்டே பார்த்துக் கொண்டிருந்த சேரன், ஆஹா எல்லாரும் ஆடுறாங்க நாமளும் சீனுல இல்லைன்னா ஏய்யா நீ ஆடலைன்னு கமல் சார் கேட்டுட்டாருன்னான்னு வேகவேகமா ஓடியாந்து ஒரு ஆட்டத்தைப் போட்டார். கவின் மட்டும் இப்பல்லாம் ஆடுவதில்லை... பின்னே ஆத்துக்காரி ஆடுறதை ரசிக்கணுமோ வேண்டாமோ... காலையில இல்லாள் நானே எல்லாத்தையும் பண்றேன்... எனக்குத்தானே வந்திருக்குன்னு ஆடுறதை விட கண்ணுக்கு அழகா ஆடுறதைப் பார்ப்பதில் ஒரு தனி சுகம்தானே.

ஆட்டம் முடிந்த பின்னர் ஷெரின் கக்கூஸ்லில் ஆடிக் கொண்டிருந்தார் கூடவே சாண்டியும். எப்படியும் நாம போயிருவோம்ங்கிற நம்பிக்கையா இல்லை ஒன்பது வாரம் நாமினேசனில் வராமல் கின்னஸ் ரெக்கார்ட் இருக்கு... இந்த வாரம் கண்டிப்பா மக்கள் அனுப்பமாட்டாங்கன்னு தன்னம்பிக்கையான்னு தெரியலை... ஆனாலும் ஷெரின் கவினைப் போல் பயந்து அனத்திக்கிட்டு இருக்காமல் ,ஊரில் சொல்வது போல் 'வந்தா மலை போனா மயிரு'ன்னு ஷெரின் எப்பவும் போல் செம ஜாலியாக இருந்தார்.

அப்புறம் ஷெரின், கவின், சாண்டி, தர்ஷன் பேசிக்கிட்டு இருந்தாங்க... நாங்க இன்னைக்குப் போயிருவோம்ன்னு கவினும் ஷெரினும் சொல்ல, அய்யோ இவனுக சாவடிக்கிறானுங்களேன்னு தர்ஷன் கத்தினார்... கவினைப் பொறுத்தவரை நான்தான் இலக்கு என்பதை நாமினேசன் ஆன மறுநொடியே மனதில் பதிய வைத்துவிட்டதால்தான் லாஸ்லியாவிடமிருந்து 'ஐ லவ் யூ' என்ற வார்த்தையைப் புடுங்க சிவாஜி ஆகியிருக்கிறார். 'சுவாமி' என்றோ 'பிராணநாதா' என்றோ லாஸ்லியா இதுவரை சொல்லாததால் புன்னகை மன்னன் கமலாக சோகமாகத் திரிகிறார்.

கவின், லாஸ்லியா, ஷெரின் மூவரும் சிறைக்கு அருகே மழைக்குச் சூடா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க... அப்ப ஷெரின் தன்னோட் பஜ்ஜியில் பாதியைக் கொடுத்து நீ இப்ப இதைச் சாப்பிடு அப்புறம் எனக்குத் திருப்பிக் கொடு எனச் சொல்லிக் கொடுக்க, லாஸ்லியாவுக்குள்ள நெருப்பு... தன் கண் முன்னே அவ கொடுக்கிறதை வாங்கித் திங்கிறதான்னு கடுப்பு... இந்தா இதை முழுசா எடுத்துச் சாப்பிடுன்னு கொடுத்துட்டு தர்ஷனை வேற கூப்பிட்டுக் (ஷெரினை சூடாக்குறாங்களாம்) கொடுத்துட்டு எனக்குப் பிடிக்காது அதான் என வேறு சொன்னார். அரை பிளேட் பஜ்ஜி அல்ரெடி காலியாகி இருந்தது. மேலும் கவினுக்கு யார் பஜ்ஜி இல்லைன்னு சொன்னது நான் போய் கொண்டு வாரேன்னு கிளம்ப, இது நடக்கும்ன்னு தெரிஞ்ச ஷெரின் சாரி மச்சான்னு சொல்லிட்டுப் பொயிட்டாங்க.

தொத்திக்க ஒரு கிளை கிடைத்தால் பத்தாதா குரங்குக்கு அடுத்தடுத்த மரங்களுக்கு அப்படியே தாவிப் போயிரும்தானே... லாஸ்லியாவின் கடுப்பை தனக்குரிய கிளையாக்கி தன் வேலையை ஆரம்பித்தார் கவின், உனக்குள்ள உனக்கு மட்டுமே நான் சொந்தம்ங்கிற எண்ணம் வந்தாச்சுல்ல... அதுதான்... அதேதான்... இதுக்குப் பேருதான்... இப்ப நாம எதிருக்கு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கலாம்.. நம்ம மகன் இந்த பிக்பாஸ் சீசன் 23ல கலந்துக்கும் போது நாம அதைப் பார்த்து ரசிப்போமுல்ல... அப்ப உன்னோட அன்பெல்லாம் என்மேலயா... நம்ம மகன் மேலயான்னு பிராண்ட ஆரம்பிச்சாச்சு... இப்பல்லாம் லாஸ்லியா முகத்தைக் காட்டினாலே அடுத்த காட்சி எப்போது வரும்ன்னு மனசு கேக்க ஆரம்பிச்சிருது... இவங்க ரெண்டு பேரும்தான் இப்போது ரொம்ப எரிச்சலூட்டும் மனிதர்கள்.

தனது உடமைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் ஷெரின்... அருகிருந்து அவரைக் கேலி செய்து கொண்டிருந்தார்கள் தர்ஷன், சேரன் மற்றும் சாண்டி. எல்லாவற்றையும் சிரிப்போடும் போலி அழுகையோடும் ஏற்றுக் கொண்டு தர்ஷனுடன் துணியைத் தூக்கிப் போட்டு பிடிச்சாப்பிடி பிடிக்காட்டிப் போவென விளையாடிக் கொண்டிருந்தார் ஷெரின். உடைகளை அடுக்கணும்... பெட்டி கட்டணுமுல்லன்னு சேரன் வேறு சீண்டினார். சேரனைப் பொறுத்தவரை லாஸ்லியாவைவிட எல்லாமும் பேச பிக்பாஸ் இல்லத்திற்குள் கிடைத்திருக்கும் ஒரே ஜீவன் ஷெரின்தான். எனக்குக் கூட யார் பிரபலம் என்ற வரிசையில் சேரன் ஷெரினுக்கு ஆறாவது இடம் ஏன் கொடுத்தார் என்றே தோன்றியது... ஆனாலும் சேரனின் விளக்கம் தெளிவாக்கியது... ஆமா என்ன விளக்கம்... அப்புறம் சொல்றேன்.

அதன் பிறகு ஷெரின், சாண்டி, கவின், தர்ஷன் நால்வரும் வெளியே போனதும் கேட்கப்படும் கேள்வி, அதற்கான பதில் என ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஷெரின் பொயிட்டா எனக்கு யார் முடிவெட்டுவது என சாண்டி சொல்ல, அவர்கள் பேசிக்கொண்டிருந்த சில நிமிடங்கள் கவின் லாஸ்லியா காட்சிகள் கொடுத்த கடுப்பை கரைத்துச் சிரிக்க வைத்தது.

விளக்கணைத்ததும் கடலைக் கோஷ்டி கிச்சனில் நின்றது... அப்போது சாண்டி பேசியது அருமை...நீ இங்க நடந்துக்கிற விதம் எப்படிப்பட்ட மனநிலையை உங்க அம்மா அப்பாவுக்குக் கொடுத்திருக்கும் என்பதை உன்னால் இப்போது உணர முடியாது... அவங்க இதை ஏற்றுக் கொள்வார்களா இல்லையா... இதனால் வரப்போகும் பிரச்சினை என்ன... என்பதெல்லாம் வெளியில் போனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்... இதைதான் அவனுக்கிட்டயும் சொன்னேன்... எப்பவும் நீங்க ரெண்டு பேருமே திரியிறதை நிறுத்துங்க... பேச்சைக் குறைங்க... விளையாட்டில் கவனம் செலுத்துங்க என லாஸ்லியாவிடம் அறிவுரையாக இல்லாமல் அன்பாய்ச் சொன்னார். ஆனால் லாஸ்லியா இப்ப என்ன அவரு கூட பேசக்கூடாதுங்கிறே அதானே... நாளையில இருந்து பேசலை என்றார். பேச வேண்டாம்ன்னு சொல்லலை குறைச்சிக்கன்னு சொல்றேன் என்றார் சாண்டி. காதல் கண்ணை மறைக்கும்ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க.

அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார் ஆண்டவர் நாட்டுப்புறக் கலைஞர்களை அருகில் வைத்துக் கொண்டு...

இவர்களில் யார் கலையை சிறப்பாக செய்தார்கள் என்று கேட்டதற்கு, சாண்டி என்ற பெரியவர் அவர் அர்பணிப்புடன் செய்தார்... மீசையெல்லாம் எடுத்தார் என்றார்... ஆமா சாண்டி எப்பய்யா மீசை வைத்திருந்தார்..? ரெண்டு நாள் சேவிங்க் பண்ணலைன்னு பண்ணியிருப்பார்... உடனே அர்ப்பணிப்புன்னு சொல்லிட்டாங்க... கமல் கூட நானும் மீசை எடுத்துட்டேன் எனக் காட்டினார். 

ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒருவரி சொன்னார் பெரியவர் விஸ்வநாத ஐயா... அது...

சாண்டி - கோபுரமா நிக்கிறாரு அழகான சொலவடையால்...

கவின் - திங்கிறவன் தின்னுட்டுப் போக திருப்பத்தூரான் தண்டம் கட்டினான்...

முகன் - ஒரு கரண்டி மாவுல ஊருக்கெல்லாம் தோசை...

வனிதா - வாக்கப்படவும் ஆசை... வளவி போடவும் ஆசை... கொண்ட உன்னக் காக்கையில கொடலைப் புரட்டுது...

ஷெரின் - ஒட்டடைக் குச்சிக்கு பட்டுக்குஞ்சம்...

தர்ஷன் - ஊராளும் மகராசாவுக்கு வாராறாம் சொம்பு தூக்கி...

சேரன் - ஊரும் சபையோரே... உலக சபையோரே ஒண்ணாக் கூடுனா ஏ அறிவு கூடும்...

லாஸ்லியா - கூத்து நடக்கப் போகுது... உங்க குடும்பக் கதையைப் பற்றி நீங்க பேசாதீங்க...

எல்லா வரிகளுக்கும் விளக்கம் கொடுத்தார் பெரியவர். அப்புறம் கமல் வில்லுப்பாட்டுப் பாடினார்... கமலின் மய்யத்தின் கிராமசபைக் கூட்டத்துக்கு வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் மூலமாக ஒரு விளம்பரமும் தேடிக் கொண்டார் கமல்.

கலைஞர்கள் போனதும் நான் ஏன் வெற்றியாளனாய் இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும் என்பதை சக போட்டியாளர்களிடமும் மக்களிடமும் சொல்வதற்கான வாய்ப்பு மீண்டும்.. முகன் தன் அப்பாவைப் பற்றி பேசியதும் தான் ஏன் வெற்றி பெற வேண்டும் எனச் சொன்னதும் அருமை...  கவின் நானில்லை என் நண்பர்கள் வெற்றிபெற்றாலும் மகிழ்வேன் என்றார். மற்றவர்கள் எல்லாம் பேசினார்... ஆம் பேசினார்கள் அவ்வளவே... சேரன் பேசியது சற்றே அதிகமாகத்தான் தெரிந்தது...இருந்தாலும் அவரின் பார்வை சரியானதே... நீட்டி முழக்கிப் பேச வேண்டிய அவசியமில்லை.

அடுத்து தலைவர் பதவிக்காய் நம்பர் போட்டது குறித்த பேச்சில் சேரன், இங்கு ஒவ்வொருத்தரும் தனியா ஒரு இடத்தைப் பிடிக்கத்தான் வந்தாங்க... அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணனும் இவங்களுக்குச் சப்போர்ட் பண்ணனுங்கிறதைவிட நான் வரணும்ன்னு ஒரு எண்ணம் வரணும் அதான் எனக்கு நானே முதலில் கொடுத்துக் கொண்டேன். ஷெரினுக்கு ஆறாவது கொடுத்ததைப் பற்றிச் சொல்லும் போது ஷெரின் நேர்த்தியாகவும் அன்பாகவும் இருக்காங்க... போட்டியில் மட்டும் யாருக்காவது சப்போர்ட் பண்றாங்க அதனாலதான் அந்த இடம் என்றார். முகனுக்கு முதல் எட்டு வாரத்தில் கவனம் சிதறியிருந்ததால் அந்த இடம், தன்னோட இடத்தை வேறு பாதைக்கு மாற்றிக் கொண்டு அதிலிருந்து அவர் மீளாததால் கவினுக்கு எட்டாவது இடம் என்றார். சேரனின் பார்வையை கமலும் பாராட்டினார்.

வெளியில் கிடைத்திருக்கும் பிரபலத்தை நீங்க எப்படி அறிந்து கொண்டீர்கள் எனக் கமல் கேட்டதும் இந்த இடத்தில் நான் இயக்குநர் என்பதை சொல்லிக்கிறேன் சார் எனச் சேரன் சொன்னதும் எங்கயும் சொல்லலாம்... தில்லியிலிருந்து சென்னை வரைக்கும் கூட நீங்க சொல்லலாம் என்றார் கமல். வெளியில இருக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை இவங்க கூட அருகில் இருந்து பார்க்கும் போது நான் தெரிந்து கொண்டேன் சார் என்ற சேரனிடம் அதானே இவங்க யாரும் கைதட்டி காட்டிக் கொடுக்கலையே... ஏன்னா இவங்களோட கைதட்டலில் வித்தியாசமிருக்கும் என்றார்.

முகன் எட்டுதான் சார் பெரிசு அதான் அக்காவுக்கு கொடுத்தேன் என்றார்... ஓஹோ எட்டுத்தான் பெரிசு இல்லையா என்றார். வனிதாவிடம் பேசும் போது ஒரு எட்டு வச்சி வாங்க என்றார்  நகைச்சுவையாய் கமல். வனிதா பின்னால் இருந்து பாருங்க சார்... அதிகமாக இங்க பர்னிச்சர் உடைக்காத ஆட்களைப் பின்னால் சொல்லியிருக்கிறேன் என கதைவிட்டார்.

அடுத்து யாரை வெளியேற்றுவீர்கள் என்ற போது கவின்,முகன்,சாண்டி, தர்ஷன் நால்வரும் வனிதா என்றார்கள். ஷெரினும் லாஸ்லியாவும் அவங்கதான் சமைச்சிப் போடுறாங்க... அவங்களும் பொயிட்டா பூவாவுக்கு என்ன பண்ணுவீங்கன்னு ஆதரவா நின்னாங்க.... வனிதா, லாஸ்லியா தங்களையே சொல்லிக் கொள்ள, ஷெரினும் சேரனும் கவினைச் சொன்னார்கள்... லாஸ்லியாவின் முகம் மழைகானாத இராமநாதபுரத்து வயல் போலானது.

அடுத்ததாய் பொம்மலாட்டப் பொம்மையை வைத்து வெளியே போக இருப்பவர்கள் உள்ளிருப்பவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்கன்னு கமல் கேட்க, முகன் எல்லாருக்கும் சில வரிக்கள் ஜாலியாய்ச் சொன்னார். சேரனைத் தன் தந்தையுடன் ஒப்பிட்டு சேரனின் தன்னம்பிக்கை பிடிக்கும் என்றார். 

ஷெரின் பேசும் போது வனிதா திரும்ப வந்தது மகிழ்ச்சின்னாங்க... தர்ஷனைப் பார்த்து தர்ஷ் என்று சொல்லி நிப்பாட்ட, சேரன் அவ்வளவுதான் சார் நிகழ்ச்சி முடிந்தது... இப்படித்தான் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருப்பாங்க... பேசமாட்டாங்க எனச் சொல்ல, ஏண்ணே போட்டு விடுறே என்றார் தர்ஷன். சேரனிடம் இங்கு நான் அதிக விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது உங்களிடம்தான்... வெளியில் என் தோழிகளுடன் பேசியதைவிட இந்த 70 நாளில் உங்களிடம் பேசியிருக்கிறேன் என்றார்.

வனிதா பேசும் யாருக்கும் தனியாக எதுவும் சொல்லாமல் மொத்தமாக ஒரு சின்ன உரையே நிகழ்த்தினார். அவர் ஆத்தி முடித்ததும் பாருங்க... இப்பக்கூட அவங்க பொம்மையைப் பேசவிடலை என கிரேஸி டச்சைக் கொடுத்தார் கமல்.

கவின் சாண்டிக்கு மட்டும் வெற்றிபெற ஒரு பாடலைப் பாடினார். சாண்டியும் எதிர்ப்பாட்டு பாடினார். லாஸ்லியாவுக்கு ஒன்றும் சொல்லாமல் போனதில் சின்ன வருத்தம் என்பது முகத்தில் தெரிந்தது.

சரி வெளிய போனதுல யாரை உள்ள கொண்டு வரணும்ன்னு நினைக்கிறீங்க... இது விளையாட்டுத்தான் என கமல் சொன்னதும் நைனாவுக்கு பசங்க குடை பிடிக்க, ஷெரின் சாக்சி வேண்டுமென்றார்... லாஸ்லியா அபியே போதுமென்றார். வனிதா யாருமே வேண்டாம்... நான் வந்தது பத்தாதா... என்னய வெளிய அனுப்பிடுங்க சார் என்றார். சேரனை மதுவைச் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது... அது மட்டும் காட்டப்படவில்லை.

வனிதாவை பேச விடாமல் கத்த, பாருங்க சார்... உங்ககிட்ட பேச விட மாட்டேங்கிறாங்க... உங்ககிட்ட பேச ஒரு வாரம் காத்திருந்தேன்... எங்கிட்ட பேச நீங்க விரும்புறீங்க.. அதை நான் விரும்புறேன் என்றெல்லாம் பேசினார். முன்னால் ஒரு பதிவில் சொன்னது போல் கமல் வீட்டுக்குள் புயல் வீசாமல் விடாது போல வனிதாக்கா... கமலும் பதிலுக்கு எமதர்மராஜா... எட்டு பெரிசு... எட்டு வச்சி வாங்க... இப்பத்தான் பேசுறாங்க... என வச்சிச் செஞ்சார்.

கமல் போனதும் பிரியாணி வந்தது... ஒரு பிடி பிடித்தார்கள்... ஷெரின் மட்டும் பிரியாணி தவிர்த்து ப்ரூட்டி குடித்தார்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. // மேலே ஏறி வாரோம்.. நீ ஒதுங்கி நில்லு.. கீழ இறங்கச் சொன்னா.. அட எகிறும் பல்லு... //

    யக்கோவ் வனிதாவிற்கு சொன்ன பாடலை தவிர, வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால்...

    கமல்...! இரு கைகளிலும் பெல்ட்...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா... அப்ப அது யுவன் பிறந்தநாளுக்காக இல்லையா...
      ஆமா.... கமல் கலக்கவில்லை... ரொம்ப மொக்கையான கமலின் எபிசோட் அண்ணா.
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. நான் பிக்பொஸ் பார்க்காவிட்டாலும்
    தங்கள் பிக்பொஸ் பற்றிய அவதானிப்புகளை
    மகிழ்வோடு படிக்கிறேன்.
    அருமையான பதிவுகள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி