செவ்வாய், 23 ஜூலை, 2019

மனசு பேசுகிறது : வேண்டாமும் மரப்பாலமும்

'பிக்பாஸ் மட்டுமே எழுதுகிறானே..?' என்றோ 'பிக்பாஸூக்கெல்லாம் எழுதுகிறானே..?' என்றோ என் நட்பு வட்டத்தில் நினைக்கலாம். எதுவுமே எழுதாமல் கிடந்த 'மனசு'க்குத் தினமும் தீனி போடுகிறது பிக்பாஸ்...  நல்லதொரு வரவேற்பும் பகிரும் தளங்களில் எல்லாம் கிடைக்கிறது என்பதும் உண்மையே.

தூங்கிக் கிடந்த தளத்தில் ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாதத்தில் 15க்கும் மேற்பட்ட இடுகைகளை எழுத முடிந்திருக்கிறது என்றால் பிக்பாஸூம் வேலை இல்லாமையும்தான் முக்கிய காரணிகள்... 

ஆம் கடந்த சில தினங்களாக அலுவலகத்தில் வேலை ஒன்றும் இல்லாது அமர்ந்திருக்கும் நிலையில்தான் அதிகம் எழுத முடிகிறது... கதைகள் எழுதத் தோன்றவில்லை... ஏனோ தெரியவில்லை. ஒருவேளை வேலை வரும் பட்சத்தில் எழுதுவது குறையலாம் அல்லது எழுதாமலும் போகலாம். 

பிக்பாஸ் பதிவுகள் பலரைச் சென்றடைந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் பிக்பாஸ் மட்டுமே எழுதுவதால் அடுத்த பிக்பாஸ் பதிவுக்கு முன் கொஞ்சமாய் சில விஷயங்களைப் பேசலாம்.

தென் தமிழகத்தில் தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால் போதும் பொண்ணுன்னு வைப்பாங்க... அதுக்கு அப்புறம் ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் நாராயணபுரத்தில் தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தால் 'வேண்டாம்' என்று பெயர் வைப்பார்களாம். அப்படிப் பெயரிடப்பட்ட பெண், இன்சினியரிங் படித்துக் கொண்டிருக்கிறார். அவரை ஜப்பான் நிறுவனம் பல லட்சம் ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுத்திருக்கிறது என்பதுடன் 'பெண் குழந்தைகளைக் காப்போம்... கற்பிப்போம்' திட்டத்தின் சிறப்புத் தூதராக கலெக்டர் மகேஸ்வரி நியமித்திருக்கிறார்... வாழ்த்துக்கள். இப்படியான பெயரைத் தாங்கி அந்தப் பெண் எத்தனை வேதனையைச் சுமந்தாளோ..? இனிமேலேனும் பெண் குழந்தைகளுக்கு இப்படிப் பெயர் சூட்டுவதை நிறுத்துங்கள். பிறக்கும் குழந்தையில் ஆண் என்ன... பெண் என்ன... வளர்க்கும்... வளரும் சூழலே ஒருவரைத் திறமைசாலி ஆக்கும். சந்திராயன் விண்ணில் ஏவப்பட்டதில் இரண்டு பெண்களும் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள் என்று மகிழும் போது இது போன்ற போதும்... வேண்டாம் போன்ற பெயர்கள் எல்லாம் அறியாமையின் அறிவிலித்தனமின்றி வேறென்ன..?

துரையில் ஒரு ஆசிரியை, தன் கணவனால் பசங்க முன்னிலையில் வகுப்பறையில் வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமான பிரிவுக்குப் பின்னர் கொலை செய்யும் அளவுக்குப் போயிருக்கிறான் அந்தக் கணவன். கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளலாம்... அப்படித் தீர்க்க முடியாத பட்சத்தில் விலகியிருக்கலாம். ஒரு உயிரை எடுக்கும் உரிமையை மனிதர்களுக்கு யார் கொடுத்தது..? எத்தனை கனவுகளோடு அந்த ஆசிரியை திருமணம் செய்து கொண்டிருப்பார்..? எத்தனை கனவுகளோடு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்...? ஒரு சிறு முள் உயிரை எடுக்கும் வரை சென்றிருக்கிறதே.... கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் அந்த ஒரு நிமிடத்தில் ஏன் கொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் இருவரின் வாழ்க்கையும் நன்றாக இருந்திருக்கும்... இறந்த ஆசிரியையின் ஆன்மா சாந்தியடையட்டும்.

ஷார்ஜா புத்தக கண்காட்சி-2019க்கு அமீரக எழுத்தாளர் குழும ஒருங்கிணைப்பாளர் ஆசிப் அண்ணனின் முயற்சியில் வெளிவர இருக்கும் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து அணிந்துரை கிடைக்காத சூழலில் என் கதைகளை வாசித்து தன் கருத்தை தனிப்பட்ட முறையில் என்னுடன் விவாதிக்கும் நண்பனும் இந்தப் புத்தகம் வர வேண்டும் என விரும்பிய ஆசிப் அண்ணனும் என இரண்டு அணிந்துரைகள் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சி. அணிந்துரைகள் இரண்டும் அன்புக்காக வரவில்லை... அவர்கள் மனதில் என்ன தோன்றியதோ அப்படியேதான் வந்திருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி.

காதல் முன்னேற்றக் கழகம் அப்படின்னு ஒரு படம் பார்த்தேன்... தயவு செய்து யாரும் பார்த்துடாதீங்க...

ஃக்லூன்னு ஒரு படம் ZEE5 OTT முறையில் இணையத்தில் வெளியிட்டிருக்கிறது... கண்டிப்பாகப் பாருங்கள்.. ஒரு கேன்ஸர் நோயாளியின் வேதனை, வலி, இயலாமை, நிலையில்லாமை என எல்லாம் அஞ்சு குரியனின் நடிப்பில் அருமையாய்... ஒரு தளத்துக்கு இதன் விமர்சனம் எழுதியிருக்கிறேன்... அந்தத் தளம் இழுத்து மூடப்பட இருப்பதாக ஒரு அறிவிப்பு காலையில் மின்னஞ்சலாய் வந்தது. அங்கு பகிரப்படாத பட்சத்தில் இங்கு பகிர்வேன்.

முடிவு உறுத்தலாய் இருந்தாலும் ஒரு வீட்டுக்குள் இரு மனிதர்களை வைத்து இரண்டு மணி நேரம் போரடிக்காமல் நகர்த்திய 'ஹவுஸ் ஓனர்' பார்க்கலாம்... பழுதில்லை.

முகிலினிக்குப் பிறகு வாசிக்க ஆரம்பித்திருக்கும் மரப்பாலமும் செய்திகள் நிறைந்த நாவல்தான். செய்திகளை அதிகம் தாங்கி கதைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத பல பெரிய நாவல்கள் பாதிக்கும் மேல் கடக்கும் போது அயற்சியைக் கொடுக்கும் என்றாலும் முகிலினி போல் மரப்பாலமும் விறுவிறுவென வாசிக்கச் சொல்கிறது. மிகச் சிறப்பான எழுத்து... கரன் கார்க்கியின் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் அடுத்து பிக்பாஸ் பதிவுதான் வரும்... :)
-'பரிவை' சே.குமார்.

4 கருத்துகள்:

  1. எதுவாகினும் ஓரே சிந்தனையில் பயணித்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என்பது என் கருத்து...

    உங்கள் மனம் தொடருங்கள், பகிருங்கள்...

    பதிலளிநீக்கு
  2. இக்லு படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. போதும்பொண்ணு, வேண்டா பெயரெல்லாம் நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆண்பிள்ளையாய் இருந்தால் வேம்பு என்று பெயர் வைப்பார்கள். ஒருகட்டத்தில் பெண்குழந்தைகளை கொன்றதற்கு இன்று பயன் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். மாப்பிள்ளைகளுக்கு சட்டென மணப்பென்கிடைப்பதில்லை.

    ஆசிரியை சம்பவம் கொடூரம்.

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியை சம்பவம் கொடுமை. அதைப் பார்த்த குழந்தைகளின் மனம் எவ்வளவு பாதித்து இருக்கும் என நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி