ஞாயிறு, 14 ஜூலை, 2019

பிக்பாஸ் : கணக்குத் தீர்த்த கமல்

Image result for bigg boss tamil 13th july 2019
பிக்பாஸ் - கமலஹாசன் வரும் இரண்டு நாட்கள் எப்பவுமே சிறப்பானவைதான்... நிறைய விஷயங்கள் பேசுவார்... கொஞ்சம் குழப்பினாலும் நிறைவாய்ப் பேசுவார். நேற்றைய நிகழ்ச்சியிலும் வரும் போதே தீர்க்கப்படாத கணக்குகள் நிறைய இருக்கு... இன்னைக்கு எல்லாத்தையும் தீர்த்திடலாம்... என்றபடியே வந்தார்.

எந்த விஷயத்திலும் முடிவை எட்ட மாட்டேன் என்கிறார்கள். பிரச்சினையை ஆரம்பிப்பவரும் சரி எதிர்ப்பவரும் சரி நின்று பேசுவதில்லை. வீட்டில் அப்பா சத்தம் போடும் போது பிள்ளைகள் அதைக் கவனிக்காதது போல வேறு எதாவது செய்வது போல் பலர் இருக்கிறார்கள். இன்னும் சிலரோ காதில் விரலை வைத்து அடைத்துக் கொண்டு வேறு பாட்டுப் பாடி அப்பாவின் திட்டைக் கேட்காத மாதிரி நடிப்பதைப் போல் நடிக்கிறார்கள். ஒருத்தர் சண்டை ஆரம்பித்ததும் சாமி கும்பிடப் போய் விடுகிறார் என்றெல்லாம் பேசி வீட்டு நிகழ்வுகளைப் பாருங்க எனப் போய்விட்டார்.

'சொடக்கு மேல... ' பாட்டோட, சின்னக் குத்தாட்டத்தோட விடிந்தது வெள்ளிக்கிழமை காலை, வனிதா மழலையர் பள்ளி ஆசிரியராகப் பாடம் நடத்தினார். சாண்டியின் சேட்டைகள் ரசிக்க வைத்தது. தினமும் ஆட்டத்துக்குப் பிறகு இப்படி ஒரு இத்துப்போன டாஸ்க் வேற... இது எதுக்குன்னே தெரியலை... இருந்தாலும் அதையும் ரசிக்க வைத்தது சாண்டியின் நகைச்சுவை.

சமையலில் தீவிரமாய் சரவணனும் கவினும் மற்றவர்களும்... மது சும்மா அதெப்படி.. இதெப்படி என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பின் அவர் வைத்த சாம்பாரை மோகனும் கவினும் புகழ்ந்து தள்ள, மதுவுக்கு முகமெல்லாம் பல்லாய் பூரிப்பு.

மாமியா உடைச்சா மண் குடம் மருமக உடைச்சா பொன் குடம்ன்னு ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க, அப்படி ரேஷ்மாவும் வனிதாவும் மதுவுக்கு தமிழ்ப்பொண்ணுங்கிற பற்று இருக்க அளவுக்கு சமையல்ல ஒண்ணும் தெரியலை... கூமுட்டை எனப் பேச, வனிதா உடனே நேரே வந்திடுறாங்க... சமையல் சொல்லிக் கொடுக்கும் டீச்சரைப் போல... அந்த இடத்தில் சரவணன் சமயோகிதமாய் மதுவிடம் யாரப்பற்றியும் கவலைப்படாம உன்னோட வேலையை மட்டும் பாரு மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்ல, அங்கு உடைபட்டது வனிதாவின் மூக்கு என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள்.

பாவம் இந்த லாஸ்லியா, நல்ல புள்ளையாத்தான் இருந்துச்சு... கவினை லவ்வுறேன்னு சும்மா சோகமா முகத்தை வச்சிக்க ஆரம்பிச்சிருச்சு. அவன் வேற 'இங்க பாருடா மச்சான்' அப்படின்னு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிடுறான். அடேய் முதல்ல இந்த மச்சானை விடுங்கடா... முடியலை.

சாப்பிடும் போது சாம்பார் சரியில்லை... புளி நிறையச் சேக்கலைன்னு ரேஷ்மா, சாக்சி மற்றும் வனிதா பேசுறாங்க... அதுல ஒருபடி மேல போயி சிக்கன் காலையில நல்லாயிருந்து இப்ப நல்லாயில்லை பாத்தியா.... சூட்டோட நக்குனா நல்லாத்தான் தெரியும்... ஆறினதும்தான் எப்படி இருக்குன்னு தெரியும் என வனிதா சாப்பாட்டுக்குள் மதுவை நிறுத்தி, மல்லுக்குத் தயாரானார். வனிதா தொடரும் பட்சத்தில் சாப்பாட்டுப் பிரச்சினைக்காக இந்த வாரத் தலைவரான சாக்சி மண்டை உருளக்கூடும்.

எப்பவும் சாப்பிடச் சொன்னா உடனே சாப்பிட்டுருவா... இப்ப என்னன்னா எனக்குப் பசிக்கலைன்னு சொல்றா என லாஸ்லியா குறித்து கவினிடம் ஒரு தகப்பனாய் கவலைப்பட்டார் சேரன். அதுக்காக லாஸ்லியா தோள்ள கை போட்டு அணைச்சி... சேரன் மகளாக இருந்தாலும் பொதுவெளி என்றாகும் போது தகப்பனாய் இருத்தல் நலம்.

தர்ஷனுடன் மீராவுக்கு கிரஷ்ஷாம்... ஸ்ஸ்ஸ்... அப்பா... என்ன நடக்குதுன்னே புரியலை... இவங்க பேசும் போது லாஸ்லியா குறுக்க வந்தாராம். அதுக்கு அப்புறம் புறம் பேசினாராம்... மீரா தன்னோட சண்டைக் கிண்ணத்தில் லாஸ்லியாவை அமுக்க, தர்ஷனோ அவள் சின்னப்பிள்ளை என்க, லாஸ்லியாவுக்கு கோபம் வந்தாச்சு... எதாயிருந்தாலும் எங்கிட்ட பேசு... மத்தவங்கக்கிட்ட கதைக்காதேன்னு ஒரு தென்றல் புயலாகியது.

மறுநாள் 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடலுடன் விடிய, லாஸ்லியா குறித்த புகாரை சாக்சியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மீரா... சாக்சி தலைவராக இல்லாமல் தன் காதலனை வளைத்துப் போடத்துடிக்கும் லாஸ்லியாவின் எதிரியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார். கவினும் சாண்டியும் கமல் குறித்த பாடலைப்பாட முகின் தாளமிசைத்தார்.

அகம் டிவி வழியே அகத்துக்குள் போனார் கமல்... அங்கே புல் மேக்கப்பில் தொடை தெரியும் உடைகளில் பெண்களும் எப்பவும் போல் உலர்ந்த முகத்துடன் ஆண்களும் அமர்ந்திருந்தனர். கொலைகாரி டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்த வனிதா மற்றும் முகினைப் பாராட்டி, நகைச்சுவை என்பது ஒரு கலை, அது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை என்று சொல்லி வீட்டுக்குள்ளும் வெளியிலும் எல்லாரையும் சிரிக்க வைக்கும் சாண்டியைப் பாராட்டினார்.

சாண்டியும் கவினும் கமலைப் பற்றி பாட்டொன்று எழுதி வைத்திருப்பதாக சேரன் சொல்ல, (அந்தப் பாடல் முன்னரே வந்தது - மேலே சொல்லியிருப்பேன்) கமலஹாசன் தெரியாது போல் அப்படியா எங்கே பாடுங்களேன் என்று சொல்ல, அண்ணாத்தே ஆடுறார் மெட்டில் செமையாப் பாடுனாங்க... 'வாரத்துல ரெண்டு நாளு வருவாரு... எல்லாரையும் டார்டாரா கிழிப்பாரு', 'கலைத்தாயின் மூத்தபிள்ளை... தமிழ்நாட்டின் தத்துப்பிள்ளை...' என செமையான வரிகள்... இதில் தத்துப்பிள்ளைக்குப் பதில் செல்லப்பிள்ளையின்னு இருந்திருக்கலாம். நார்நாராக் கிழிப்பேன்னு தெரிஞ்சிருந்தும் அதை மறந்துட்டுத்தானே பேசுறீங்க என கமல் சிரித்தார்.

பேச வேண்டிய இடத்தில் பேசலாமே என லாஸ்வியாவிடம் கொக்கியைப் போட வனிதா - தர்ஷன் சண்டையில் தர்ஷன் அண்ணா செஞ்சது சரிதான் என்பதால் நான் பேசவில்லை. எதற்கு மன்னிப்புக் கேட்டாய் எனவும் கேட்டேன்.  என்றார். மேலும் நீங்க ஜெயிலுக்குப் போறேன்னு நிற்கக் காரணம் என்றதும் 'சேரன் அப்பாவுக்காகவும் மேலும் எனக்கு பிக்பாஸ் எதுவும் சொல்லவில்லை என்றாலும் மதுவையும் சேர்த்துக் கொண்டு நான் கொஞ்சம் காரியங்கள் செய்தேன். அது நல்லதா கெட்டதான்னு தெரியாததால அதுக்காகவும் ஜெயிலுக்குப் போக நினைத்தேன். யாரும் என்னைக் கதைக்க விடலை' என்றார். அப்போது வனிதா விளக்கம் அளிக்கும் விதமாகப் பேச, ஆனாலும் நீங்க அந்த நேரத்தில் உன்னைய நல்லவளாக விடமாட்டேன்ன்னு சொன்னீங்கதானே. எத்தனை பேர் கவனிச்சாங்கன்னு தெரியாது என்றார் கமல்.

அதன் பின்னர் லாஸ்லியாவின் மைனாம்மா கதையைச் சொல்லச் சொன்னார். மைனா வளர்த்த கதையைச் சொல்ல ஆரம்பித்த போது சக பயணிகளில் குறிப்பாக பெண்கள் முகத்தில் இவ கதை சொல்லி... என்ற இகழ்ச்சி தெரிந்தது. மைனா கதைதானே... நாமல்லாம் வளர்க்கலையா என்ன என எனக்கும் தோன்றியது... கதை சொன்ன விதம் மெல்ல ஈர்த்தது என்றால் முடிவின் சோகம் மனதை வாட்டியது. பார்வையாளர்களில் ஒருவர் கலங்கிய கண்ணைத் துடைத்தார் என்பதை ஒரு நொடி கடந்து சென்ற கேமராவில் எத்தனை பேர் பார்த்தார்கள் என்பது தெரியாது என்றாலும் நான் பார்த்தேன்... என் கண்ணும் கலங்கியிருந்தது.

அபிராமி - மது பேச்சுக்குறித்து குறிப்பாக சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது குறித்துப் பேசியவர், அபிராமி பேசியது சரியே...  ஆனாலும் இங்கு கொடுத்த விளக்கத்தை அங்கு கொடுக்கவில்லை... கொடுத்திருக்க வேண்டும் என்றார். மேலும் மதுவின் பழமைவாதக் கொள்கைகளைச் சாடியதுடன் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றார். மது அப்படியில்லை சார்... இப்படி என்ற போதும் கமலின் பேச்சும் உடையை வைத்தோ அல்லது இதற்கெல்லாம் பெண்கள்தான் காரணம் என்றோ சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார். அருமையானதொரு பேச்சு இது.

இதில் குறுக்கிட்ட வனிதாவிடம் நீங்கள் ரெண்டு பேரும் சொன்னதைச் செவி வழி கேட்டவர்கள் நான் பார்த்தவன் என்று சொல்லி உங்கள் குரலே ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. மற்றவர்களையும் பேச விட வேண்டும் என்றார். என்னைக் கொன்றவள் அபிராமிதான் அவளைப் பலி வாங்குவேன் என்று கொலையாளி டாஸ்கில் சபதம் செய்த சாக்சியிடம் இவர்தான் கொன்றிருப்பார் எனக் கொதித்த உங்களிடம் வனிதாதான் கொலைகாரி என்ற போது அந்தக் கொதிப்பு இல்லையே ஏன்..? என கிடுக்குப்பிடி போட, அவரோ கவின்தான் கொன்றிருப்பான் என்பதால் மச்சான் உன்னைய பலி வாங்குவேன் என்று சொன்னதாகச் சொல்ல, இது மச்சான் பற்றி அல்ல மச்சினி பற்றி என அடித்தாரே பார்க்கலாம். சாக்சிக்கு சங்கடம்... அபிராமிக்கு தான் தவறு செய்யாதவள் என்ற மகிழ்ச்சி.

மீன் மார்க்கெட் பிரச்சினையையும் பேசி எனக்கு மீன் மார்க்கெட் ரொம்பப் பிடிக்கும் என்ற கமல் எந்த விஷயத்தையும் பேச ஆரம்பித்து பிரச்சினை என்றாகும் போது அங்கிருந்து நகரும் அபியையும் லேசாக ஒரு பிடி பிடித்தார்.

தர்ஷன் - வனிதா பிரச்சினையைப் பேசும் போது தர்ஷன் தன் பக்க நியாயத்தை மீண்டும் எடுத்துச் சொல்ல, அரங்கத்தில் கைதட்டல் அடங்க நேரமானது. வனிதாவோ தன் நியாயத்தைச் சொன்னார். மோகனும் நான் நீச்சல்குளத்தைச் சுற்றிச் சுற்றி ஓடினேன் சார் என பஞ்சாயத்துக்குள் வந்தார். வனிதா பேசும் போது குறுக்கிடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார் எனவே அப்போது எதுவும் பேசுவதில்லை... அதன் பின் சொன்னால் கேட்டுக் கொள்வார் என சேரன் பூசி மெழுக, அப்படியே விட்டால் எப்படி... அப்புறம் அவரை யார்தான் சொல்லித் திருத்துவது... வீட்டில் என்றால் பரவாயில்லை... நூறுநாளில் அப்புறம் சொல்வோம் எனத் தள்ளிப்போட்டால் தான் செய்வதை யாருமே தட்டிக் கேட்கவில்லை அப்ப நான் சரியானவள்தான் என்ற எண்ணத்தை அல்லவா எடுத்துச் செல்வார் என்றவர் உங்கள் வாய்ஸே உயர்வாய் இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்... மற்றவர்கள் பேச்சுக்கு செவி கொடுங்கள் என்றார்.

தர்ஷன் பிரச்சினையில் வனிதா 'நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்' என்று சொன்னதைப் பற்றிப் பேசிய போது சின்னப்பையன் என்ற அர்த்தத்தில் சொன்னேன் என்ற வனிதாவிடம் 'தழல் வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ..?'எனப் பாரதி பாடலைப் பாடி விளக்கம் கொடுத்தார். தர்ஷன் நான் அக்காவெனத்தான் அழைத்துச் சண்டை போட்டேன் என்றான். வனிதாவும் தன் தவறை உணர்ந்து அமர்ந்திருந்தார். மன்னிப்புக் கேட்டேன் என்பதையும் சொன்னார்கள் இருவரும். போன வாரத்தில் தர்ஷன் பேசலைன்னு சொன்னா நான்தான் மன்னிப்புக் கேட்கணும் என்றார்.

தர்ஷனைப் பின்னால் பாராடியவர்களையும் குட்டத் தவறவில்லை உலகநாயகன். 

இந்த வார வெளியேற்றம் சற்றே வித்தியாசமாய் என வீட்டுக்குள் வைக்கப்பட்ட வெளியேற்றக் கவரை சாண்டியை எடுத்து வரச் சொல்லி, அவரையே பிரிக்கவும் சொன்னார். அதற்கு முன்னர் வெளியே போறவங்க உள்ள இருக்கவங்களுக்கு என்ன சொல்றீங்கன்னு கேட்டதும் ஆளாளுக்கு அறிவுரை.. மதுமிதா, மோகனெல்லாம் கொஞ்சம் ஓவராய்... வனிதா மட்டுமே உள்ளதை உள்ளபடி போட்டுக் கொடுக்கவும் தயங்காதீங்க என்றார். அப்பத்தானே வீட்டுக்குள் பத்திக்கும்... பத்திக்காத வீடு பிக்பாஸூக்கு எதுக்கு... 

சாண்டி பிரிக்க அதில் மோகன் வைத்யா பெயர் வர, ஆளு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதுடன் பெண்களைக் கட்டிப்பிடித்து... எப்பா... முடியலை... என்ன இப்பத்தான் இப்படியிருங்க... அப்படியிருங்கன்னு அறிவுரை சொன்னீங்க... சந்தோசமாப் போவேன்னு சொன்னீங்க... இப்ப அழுறீங்க... என்றவர் நீங்க வீட்டில் தொடருவீங்க என்றதும் ஆர்ப்பாட்டம் செய்தார் மோகன். எங்கே இது உள்ள இருக்கத்தானே எனக் கேட்டுக்கிட்டே இருந்த மது காட்டிக் கொடுத்துருவாரோன்னு பார்த்தேன் என்றும் கமல் சொல்ல... மோகனின் பேச்சும் நடிப்பும் சுத்தமாக பிடிக்கவில்லை... மோகன் காப்பாற்றப்பட்டதில் 12 கோடி வாக்குகள் என்று கமல் சொன்னதில் பங்கு இருக்கோ இல்லையோ விஜய் டிவிக்கு முக்கியப் பங்கிருக்கு... ஏனென்றால் மோகனைப் போன்ற பிரச்சினைகளைத் தூக்கிச் சுமக்கும் ஆண்கள் அங்கில்லை. இவர் வேண்டும் பிக்பாஸ் டிஆர்பிக்கு.

வனிதா, சரவணன், மீரா, மது  வெளியேற்ற வேண்டியவர்களில் இதில் மது காப்பாற்றப்படுவார்... சரவணன் வீட்டுக்குள் வேண்டும்... மீராவா வனிதாவா என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்கும் என்றாலும் வனிதா வெளியேற்றப்பட்டார் என்ற செய்திகள் வருவது  எந்தளவுக்கு உண்மையின்னு தெரியலை... வனிதா போவதை பிக்பாஸ் விரும்புவாரான்னு தெரியலை. பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

  1. பிக் பாஸ் - உங்களுக்கு நல்ல நேரம் போகிறது எனத் தெரிகிறது. பாருங்க பாருங்க!

    என்னால் பார்க்க இயலாது. பார்க்கவும் விருப்பமில்லை குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் கருத்துக்கு நன்றி.

      விரும்பிப் பார்த்தல் என்பதில்லை... இப்ப அலுவலகத்தில் வேலை இல்லை... அது போக அறையிலும் சினிமாவோ வேறேதாவது தூக்கம் வரும்வரை பார்க்கணும். விளக்கு அமத்திய பிறகு வாசிக்க முடியாது. வாசிப்பு காலையில் அரைமணி நேரம்தான்.

      என்னோட வலைப்பூவும் எதுவும் எழுதாமல் கிடந்தது... அதுக்கும் தீனி போடணும்... என்னோட எழுத்துக்கும் பயிற்சி வேணும்... எப்படியும் இப்ப பரபரப்பா இருக்க பிக்பாஸ் எழுதினா வாரத்துக்கு 3,4 பதிவு எழுதலாம்... வலைப்பூவும் மீண்டும் புத்துணர்ச்சி பெரும் என்பதாலே பிக்பாஸ்... வேறொன்றும் இல்லை. அது முழுக்க முழுக்க எழுதப்பட்ட கதைதான் என்பதும் தெரியும்... சும்மா எழுதுவோம்... எத்தனை நாள் என்று தெரியலை... வேலை வந்தா அப்புறம் எழுதமுடியாது.
      இங்கு பெரும்பாலான கம்பெனிகளின் நிலை சரியில்லை... எங்களுக்கு எல்லாம் இப்போ ப்ராஜெக்ட் இல்லை.

      நீக்கு
  2. மிகவும் விரிவாக ரசித்துப் பார்த்து எழுதி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி